தலைப்பு

புதன், 7 டிசம்பர், 2022

ஸ்ரீ B V ராஜா ரெட்டி | புண்ணியாத்மாக்கள்

அகத்திலும் புறத்திலும்… சுவாமியை நெருங்கி வாழவும், சேவைகள் புரியவும் மிக மிக அத்தியாவசியமான செயல்  நமது அகங்காரத்தை நாமே துடைத்தெறிவது ஆகும். பல ஜென்மங்களாகத் தொடரும் பயிற்சிகளாலன்றி, உண்மையான பணிவுடன்கூடிய நடத்தையினாலன்றி… அவ்வளவு சுலபமாக அகன்றுவிடாதது அகங்காரம்.  ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்ற அகங்காரம் அழிவதற்கான சிறந்த உபாயம், "தவ தாஸோஹம்" ( நான் உங்கள் அடிமை ) என்கின்ற பாவனையே! இந்த பாவனையில் தான் அரிஷ்டத்வர்கம் என்று சொல்லப்படுகின்ற காமம், க்ரோதம், லோபம், மோகம், மதம் மற்றும் மாச்சர்யம்  எளிதில் அழிந்து போகும். மேற்கண்ட உபாயத்தை சொன்னவர் ஸ்ரீ போரிகிலமண்ட வெங்கட ராஜா ரெட்டி அவர்கள். புத்தகங்களில் கற்றோ, பண்டிதர்கள் அல்லது குருக்களின் வார்த்தைகளைக் கடன் வாங்கியோ சொன்ன விஷயமல்ல அது. புண்ணியாத்மா திரு. B.V. ராஜா ரெட்டி அவர்கள், மற்ற பக்தர்களுக்கும் சேவகர்களுக்கும் தனது சொந்த அனுபவத்திலிருந்து எடுத்துச் சொல்லும் உயரிய சத்தியம் அது!

 

"இறைவனுக்கு நான் அடிமை" என்கின்ற சொற்றொடர் வேண்டுமானால் இனிமையான எளிமையான வாக்கியமாக காணப்படலாம். ஆனால் தனக்கென்று எந்த சொந்தக் கருத்தையும் வைத்துக்கொள்ளாமல் சுவாமியின் வார்த்தைகளை அப்படியே கடைபிடிப்பதென்பது சுலபமான காரியமே அல்ல. அதிலும் சுவாமியின் அருகிலேயே தங்கியிருந்து, அவரின் அன்றாட அலுவல்களிலும் பங்குகொண்டு, மற்றவர்களுக்கும் தனக்கும் எந்தவித துன்பம் ஏற்படாமல் வாழ்வதென்பது நிச்சயமாக ஒரு ஈடுஇணையற்ற தவவாழ்வே ஆகும். அப்படிப்பட்ட தவ வாழ்வை ஏறத்தாழ 25 ஆண்டுகள் வாழ்ந்தவர் திரு B.V. ராஜா ரெட்டி அவர்கள். அவரது நேர்த்தியான உருவம்... ரம்மியமான முகம்... தூய வெண்ணிற வேஷ்டி-குர்தா, நிமிர்ந்து நடந்து வருகின்ற தன்மை இவைகளை பக்தர்களும் ரசிப்பார்கள். சுவாமிக்கு சேவையாற்ற பின்னாளில் வந்துசேர்ந்த பல பக்தர்கள், திரு ராஜாரெட்டி அவர்களை ஒரு ஆதர்ச தொண்டராகக் கண்டு ஆனந்தித்தார்கள்.


🌷பாபாவுடனான முதல் பரீட்சயம்:

ஆந்திராவின் சித்தூர் நகரத்தில் ஒரு பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்து, அங்கேயே நடுநிலைப் பள்ளிவரை  பயின்றார். தன்னுடைய ஒன்பதாம் வயதில் தனக்குக் கிடைத்த ஷீரடி பாபாவின் திருவுருவப் படமே, தெய்வீகத்துடனான தனது முதல் சந்திப்பாகக்  கருதினார். தன்னுடைய தாயாரிடம் அப்படத்தைக் கொடுத்து அன்றுமுதல் பூஜையறையில் வைத்து வழிபட்டு வந்தனர். ராஜாரெட்டிக்கு ஆன்மிகம் மற்றும் கடவுள் விஷயங்களில் அதிக ஆர்வம் இருந்தது, சிறுவயதில் இருந்தே அவருக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு பூஜை , ஜபம் , தியானம்  மற்றும் ஆன்மிக நூல்களைப் படித்தலே ஆகும் .அவர் முதலில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் பக்தராகவும், சுவாமி விவேகானந்தரை ஆதர்ஷமாக எண்ணியவராக இருந்தார். பின்னர் ஸ்ரீ சத்யசாயி பாபா பற்றிய புரிதலும் பக்தியும் அந்த குடும்பத்திற்கு ஏற்பட்டது. மேல்நிலை பள்ளிக்கென சென்னைக்குச் சென்று தியாசபிகல் சொசைட்டி பள்ளியிலும் அதைத் தொடர்ந்து லயோலா கல்லூரியில் B.A. Honorsம்  பயின்றார் ராஜாரெட்டி. அந்த சமயத்தில் ஸ்ரீ சத்யசாயி பாபா சென்னைக்கு (டிரான்ஸ்போர்ட் கமிஷனர் ஹனுமந்த ராவ்  இடத்திற்கு) வந்திருப்பதாகவும், சென்று சந்திக்குமாறும் ராஜா ரெட்டி அவர்களுக்கு தாயாரிடம் இருந்து அறிவுறுத்தல் வந்தது.

மேற்கத்திய கலாச்சாரத்தை ரசிக்கத் துவங்கியிருந்த ராஜா ரெட்டி, டக்-இன் செய்த பாண்ட்-ஷர்ட்டுடன் சுவாமியை சந்திக்க மிடுக்காக சென்றிருந்தார். சுவாமியை நேரில் கண்ட அவர்… சுவாமி தன்னுடைய விரல்களால் காற்றில் எழுதுவதையும் திறந்த வெறும் கைகளைக் காற்றில் மெதுவாக சுழற்றுவதையும் கண்டார். நேரடியாக சுவாமியிடமே சென்று, ‘ஏன் நீங்கள் கைகளை அப்படி அசைகிறீர்கள்?’ என்று கேட்டார். உடனே சுவாமி, "சரி, நீ எதற்கு இப்படி  டக்-இன் செய்துள்ளாய் ?" என்று கேட்டார். அதற்கு ராஜாரெட்டி ‘இது காலேஜ் தர்மம்/வழக்கம் என்றார். சுவாமியும் "அதேபோல இதுவும் என்னுடைய வழக்கம்" என்று பதில் கொடுத்தார். இந்த சம்பாஷனையைத் தொடர்ந்து சுவாமியின் சுந்தர ரூபத்தை, அசைவுகளை, அவரின் மிருதுவான மதுரமான பேச்சினை ரசிக்கத் தொடங்கி… அந்தநொடி முதலே அவரின் மனம் சுவாமிக்கு அடிமையானது. பின்னர் 1956ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி புட்டபர்த்தியில்  முதல் மருத்துவமனையான 'ஸ்ரீ சத்ய சாய் பொது மருத்துவமனை'  திறந்து வைக்கப்பட்ட நிகழ்ச்சியில் ராஜா ரெட்டி கலந்து கொண்டார்.  பகவானின் தெய்வீக ஈர்ப்பு அவரை முழுவதுமாக ஆட்கொண்டது, சிறிது காலத்திலேயே புட்டபர்த்தி இறைவனின் அருகாமையிலேயே  நிரந்தரமாக குடியேறினார். ராஜாரெட்டியின் ஆன்மீக பயிற்சிகள் மற்றும் பஜன் பாடுவதில் உள்ள ஆர்வத்தை மெச்சிய பாபா, அவருக்கு பிரசாந்தி மந்திரில் தினமும்  பஜனை பாடுவதற்கு வாய்ப்பளித்தார்


🌷அணுக்கத் தொண்டும் அபூர்வ அனுபவங்களும்:

அணுக்கம் என்ற பதத்தின் உண்மைப் பொருளுக்கேற்ப மிகமிக அருகிலே சுவாமிக்கு சேவையாற்றிய புண்ணியவான் ஸ்ரீ ராஜா ரெட்டி அவர்கள். 1956ம் ஆண்டு பிரசாந்தி நிலையத்தில் குடியேறிய அவர் சுவாமியின் தனிப்பட்ட உதவியாளராக, சுவாமி எங்கு சென்றாலும் அவருடன் மிக நெருக்கமாக இருந்தபடி தொண்டாற்றும் பாக்கியத்தைப் பெற்றார்.  "சனாதன சாரதி” இதழின் முதல் பதிப்பாளர் இவரே, ஸ்வாமியின் கார் ஓட்டியும் இவரே. மந்திரில் காலை மாலை இருவேளையும்  பஜனைகளை முன்னின்று நடத்தியவரும் இவரே. இவருடைய பஜனைகளும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளும் ஈடுஇணையின்றி உன்னதமான முறையில் திகழ்ந்தன. மேலும் சுவாமியின் அறையில் அவருடைய  கட்டிலுக்கு அருகிலேயே தரையில் தூங்கினார். அதிகாலையில் எழுந்து அங்கேயே தியானம் செய்வார். அந்த தியானங்களில் மகிமை நிறைந்த பல அனுபவங்களைப் பெற்றார். சில சமயம்,மூலாதாரத்தில் இருந்து அலையலையாக ஆனந்தம்  மேல்நோக்கி எழுவதை அனுபவித்தார். தமக்குள்ளாக ஓம்கார நாதத்தை கேட்டுணர்ந்தார் . சிலசமயங்களில் சுவாமி, "இப்போது தேவர்கள், தேவதைகள் வருகிறார்கள்" என்று அறிவிப்பார்; உடனே அங்கே அதியற்புதமான வாசனை பரவுகின்ற அதிசயங்களையும் அனுபவித்தார். மற்றொருமுறை, சூரியனில் பாதியளவு ஒளிக்கிரந்தம்  தன்முன்னர் விரிவதாக உணர்ந்தார்.

 


🌷மாயமாய் திரும்பிவந்த நகைகள்:

புட்டபர்த்தியில்...ஆரம்ப காலத்தில் பாங்க்/வங்கி வசதிகளோ, விலையுயர்ந்த பொருட்களை வைப்பதற்கான பாதுகாப்பு பெட்டகங்களோ கிடையாது. வசதியுள்ள குடும்பங்கள் தங்கள் நகைகளை சுவாமியிடம் கொடுத்து வைப்பர். சுவாமியும் தனது அறையின் பீரோக்களில் வைத்திருந்து தேவைப்படும்போது அவரவர்க்கு எடுத்துக் கொடுப்பதுண்டு. ஒரு சமயம், பிரஷாந்திக்கு வேலைக்கு வந்த ஒரு அந்நியன் நகைகள் சிலவற்றைத் திருடிச் சென்றுவிட்டான். சுவாமி ராஜ ரெட்டியிடம் இதனைக் குறித்துத் தெரிவித்தார்; எடுத்துச் சென்ற நபர், எடுத்துச் சென்ற விதம் இவைகளைக் குறித்து சுவாமி விரிவாகக் கூறினார். அப்படி விளக்கிக் கொண்டிருந்தபோதே சுவாமி தனது கைகளை விரித்துக் காட்ட, காற்றிலிருந்து (ஒரு கைக்குட்டையில் சிறிய மூட்டையாக முடியப்பட்டிருந்த ) நகைகள் கையில் வந்து விழுந்தது. பிரம்மித்தபடி பார்த்து மகிழ்வதைத் தவிர ராஜா ரெட்டிக்கு செய்வதற்கு வேறெதுவும் இல்லை.

 

🌷என்ன செய்தால் நம்புவாய்?

சில சுவாரஸ்யமான, (சுவாமியின் அற்புதங்களை) சந்தேகித்த சம்பவங்களும் உண்டு. ஒருமுறை திரு. ராஜா ரெட்டி அவர்களுக்கு சுவாமியின் ஊட்டிப் பயணத்தில் சுவாமியோடு தங்கும் வாய்ப்பு அமைந்தது.  ஓர் தனிமையான இரவுப்பொழுது சுவாமி இவரிடம், "இங்கே பார்! உனது  இதயப் பகுதியில் ஒளிவந்தால் நீ நாராயண பக்தன், நெற்றியில் ஒளி வந்தால் நீ சிவ பக்தன் என்றார்". கொஞ்ச நேரத்தில் ராஜ ரெட்டியின் இதயப் பகுதியில் ஒளி வந்தது; அவரும் அதிசயித்துப் போனார். சுவாமியோ   புன்னகைத்தபடி அங்கிருந்து நகர்ந்து விட்டார். சுவாமி சென்றபின் ராஜரெட்டி, அந்த ஒளி வந்தவிதம் எவ்வாறு? என்று பிரம்மித்தார். தன்னிடம் இருந்த (5 செல்) பேட்டரி லைட்டை போர்வைக்குள் வைத்து இதயப்பகுதியில் வெளிச்சம் தெரியும்படி ஆன் செய்து, அதேபோல் ஒளிவருகிறதா எனப் பார்த்தார். அந்தத் தருணத்தில் சுவாமி அறையினுள் மீண்டும் வந்தார்; இவர் செய்துகொண்டிருக்கும் ஆராய்ச்சியைப் பார்த்து, "என்ன செய்தால் உனக்கு நம்பிக்கை வரும்?" என்று சொன்னார். இந்த சம்பவத்தை பின்னாட்களில் நினைவுகூர்ந்து, சுவாமியின் அளவில்லா கருணையை, பொறுமையை நினைவுகூர்ந்து சிலாகிப்பார் திரு. ராஜ ரெட்டி அவர்கள்.

 

🌷நமக்குப் பிரிவென்பதேது?

எல்லா அனுபவங்களும் அன்பு தோய்ந்த தெய்வீக சம்பவங்கள் என்று சொல்ல முடியாதபடி  ஒரு சில வித்தியாசமான அனுபவங்களும் கண்டவர் ராஜாரெட்டி. ஒருமுறை பெங்களூரில் சுவாமியுடன் தங்கியிருந்த சமயம், ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் சுவாமியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக உணர்ந்தார் . உடனே தனது உடைமைகள் சிலவற்றை எடுத்துக்கொண்டு  தன்னுடைய ஊரை நோக்கி கிளம்பிவிட்டார். அந்தப்பயணத்தில் ஓரிடத்தில் உணவுக்காக பயணம் நிறுத்தப்பட்ட போது, அங்கொரு உணவகத்தில் அமர்ந்த ராஜாரெட்டிக்கு வார்த்தைகளால் விவரித்து சொல்ல முடியாத மனவேதனை ஏற்பட்டது. ஒரு ஈரத்துண்டு பிழியப்படுவது போல மனத்தினின்று வேதனை கசிந்தது. உடனே கிளம்பி சுவாமியிடமே திரும்பிச் சென்றார். தயக்கத்துடன் சுவாமியின் அறைக்குள் நுழைந்தபோது சுவாமி தனது கட்டிலில் அமர்ந்து யாருக்கோ கடிதமெழுதிக் கொண்டிருந்தார். இவரைக் கண்டதும், "எங்கே போவாய் என்னை விடுத்து?" என்றார் சாதாரணமாக!. அப்போது ஒருவிஷயம் ராஜாரெட்டிக்கு நன்றாகக் புரிந்தது, ‘இந்த சாயி தெய்வம் ஹ்ருதயவாசி! இவர் அனுமதியின்றி அருகில் வரவும் முடியாது ... விட்டு விலகவும் முடியாது! 


சுவாமியைப் பரிசோதிக்க அல்லது பகுப்பாய்வு செய்வதற்கான நமது அகக்கருவிகள் முழுமை பெறாதவை, பண்படாதவை. உண்மையைச் சொல்வதானால், ஆராய்ச்சி என்பது… நம்மைக் குறித்து நிகழவேண்டும். நான் யார்? என்னுடைய நிஜ ஸ்வரூபத்தை நான் ஏன் உணர முடியவில்லை? இறைத்தன்மையை எனக்குள் நான் உணரமுடியாததற்கு காரணம் என்ன? இன்னும் என்னென்ன செய்து என்னை நான் இறைத்தன்மைக்கு உயர்த்திக்கொள்வது? - என்பதாக, நம்மைப்பற்றி நாம் இடைவிடாது ஆராய வேண்டும். ஆனால் மக்கள் சுவாமியைக் குறித்தும் மகிமைகளைக் குறித்தும் தீராத ஆராய்ச்சி செய்வதையே இயல்பாகக் கொண்டுள்ளனர் . சுவாமியை நாம் ஆராய்ந்து அறிந்துகொள்ள இயலவே இயலாது. ஆயினும் அவரை அனுபவிக்க முடியும் ஆனந்திக்க முடியும். திரு. ராஜா ரெட்டி அவர்கள் சுவாமியின் மகிமைகளை, அன்புப் பொழிவினை அனுபவித்து ஆனந்தித்தது குறித்து பகுதி-2ல் மேலும் காணலாம்.
🌷அனந்த பத்மநாபருடைய அற்புத லீலை:

சுவாமியுடன் பத்ரி யாத்திரை செல்லும் ஆனந்த அனுபவத்தையும் திரு.ராஜா ரெட்டி அவர்கள் பெற்றிருந்தார். “சுவாமி புருஷோத்தமானந்தா அவர்களுக்கு பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா அளித்த தெய்வீக அனுபவம்”, சாயி பக்தர்களாகிய நாமனைவரும் அறிந்ததே. புருஷோத்தமானந்தாவின் குகைக்கு பாபாவுடன் இரண்டுமுறை சென்ற பேரதிர்ஷ்டம் திரு. ராஜாரெட்டிக்கு உரித்தானது.

முதல்முறை அந்தக் குகையில் சுவாமியின் கட்டளைக்கேற்ப  பஜன் பாடல்களைப் பாடினார். அதைக் கேட்ட புருஷோத்தமானந்தா பாbaவ-சமாதிக்குள் அமிழ்ந்தார். பின்னர் பாபா, "புருஷோத்தமானந்தா! புருஷோத்தமானந்தா!" என்று அவரை எழுப்ப, அவர் எழுந்து  பாபாவை அன்போடு தழுவியபடி , ‘ரொம்ப சந்தோஷம்! ரொம்ப சந்தோஷம்! கடவுளே உங்களை அனுப்பி இருக்கிறார்’ என்று கூறினார். அதற்கு சாயி, "கடவுளே உன்னிடம் வந்திருக்கிறார்" என்று பதில் சொன்ன அந்த தெய்வீக உரையாடலை நேரில் கண்ட பெரும் பாக்கியம் இவருக்கு கிடைத்திருந்தது. அதே குகைக்கு இரண்டாம்முறை சென்றபோது, சுவாமியே அபூர்வமான  தியாகராஜ கீர்த்தனை பாடி எல்லோரையும் பரவசத்தில் ஆழ்த்தினார். அதுமட்டுமல்ல இந்த சம்பவங்களுக்கு சிலகாலம் கழித்து, புட்டபர்த்தியில் ஒரு சிவராத்திரியின்போது சுவாமி, உப்பஃப்…!  என்று விபூதியை ஊதினார். அதற்கான காரணமாக, "புருஷோத்தமானந்தா உடலை உகுத்ததாக" அறிவித்தார். அந்த சம்பவத்தையும் கண்ணுறும் பாக்கிய மும் இவருக்குக் கிடைத்தது.

 

🌷ஆபத்பாந்தவரின் அதிசய செயல்கள்:

ஆரம்ப காலங்களில்,  தனது உடலை விடுத்து அடிக்கடி  ட்ரான்ஸ் நிலைக்கு செல்வது சுவாமியின் வழக்கம். நெருக்கமாக இருந்தபடியால் திரு.ராஜா ரெட்டி அவர்களும் அந்த லீலைகளைப் பலமுறை பார்த்து வியந்ததுண்டு. சிலசமயம் யாரையாவது (ஆபத்து/விபத்து/ஆபரேஷன் சமயங்களில்) காப்பாற்றி அந்த இரத்தக்கரை சுவாமியின்  கரங்களில் காணப்படுவதுண்டு. சிலசமயங்களில் சுவாமி விபூதியை உப்பஃப்…! என்று ஊதுவதுண்டு. சில சமயங்களில் சுவாமியின் கரங்களில், பாதங்களில் இருந்து விபூதி வெளிப்படும். அப்படி ஒருமுறை டிரான்ஸில் சென்றபோது,

வினோதமான முறையில் சுவாமி தன்னுடைய தலைமுடியை ஒரு கையளவு பிடுங்கி விழுங்கிவிட்டார்; சைகையின் மூலம் கட்டளையிட்டு, ராஜாரெட்டியிடம் தண்ணீரும் வாங்கிப் பருகினார். இதுபோன்ற நிகழ்வை ராஜா ரெட்டி கேள்விப்பட்டதில்லை. டிரான்ஸிலிருந்து வெளிவந்த சுவாமி... சிறிது நேரம் கழித்து, "என்ன..நான் முடி ஏதும் விழுங்கினேனா?" என்று கேட்டார். இவரும் பதட்டத்துடன், ‘ஆமாம் சுவாமி நிறையவே விழுங்கினீர்கள்’ என்றார். உடனே சுவாமி தன் அங்கியின் பட்டனை மட்டும் அவிழ்த்து நெஞ்சின் மேல்பகுதியிலிருந்தே அவர் விழுங்கியிருந்த முடிகளை மொத்தமாக எடுத்தார். இது போன்ற புரிதலுக்கு அப்பாற்பட்ட சம்பவங்களைக் காணும் அவகாசத்தையும் பெற்றார்.

 

🌷மணிகாஞ்சன் யோகா:

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த புகழ் பெற்ற பாடகர் தம்பதிகளான பாண்டுரங்க திக்ஷித் மற்றும் வினோதினி தீக்ஷித்தின் மகளான ஜ்யோத்ஸ்னா தீக்ஷித்தை, ராஜாரெட்டிக்கு மணமுடித்து வைக்க சுவாமி திருவுளம் கொண்டார். இந்த நாராயண் தீக்ஷித் என்பவர் சாதாரணமானவர் அல்ல, அவருடைய தாயார் 1915ல் கருவுற்று  இருந்தபோது ஷீரடி சென்றிருந்தார். அப்போது பாபா, " இந்த முறை உனக்கு ஆண் குழந்தை பிறக்கும்ஒரு கலைஞனாக வருவான்" என்று சொல்லி ஆசீர்வதித்துருந்தார். அதேவண்ணம் நாராயண் தீக்ஷித் வளர்ந்து பின்னாளில்... ஓவியம், திரைப்படக்கலை, கவிதை, இசை அமைப்பு என்று பல கலைகளிலும் தேசிய அளவில் சிறப்புற்று விளங்கினார். 


1955ம் வருடம் வெளிவந்த, ஷீரடி சாயிபாபா குறித்த முதல் மராத்தி திரைப்படத்தில்… திரைக்கதை, வசனம் பாடல்களில் பங்களித்ததோடு அந்தத் திரைப்படத்தின் இசை அமைப்பாளராகவும் இருந்தவர் அவர். இதில் கூடுதல்  தகவல் என்னவென்றால், அந்தத் திரைப்படத்தில் தன் மகள் ஜ்யோத்ஸ்னாவை ஜிப்ரி என்ற ஹரிஜனப் பெண் கதாபாத்திரத்தில் நடிக்கவைத்திருந்தார். அவருடைய மனைவி வினோதினி திக்ஷித்தும் பிரசித்தி பெற்ற பாடகி. அவர் முறையான சங்கீதம் கற்றலில் தங்கப்பதக்கத்தோடு  தேர்ச்சி பெற்றவர்..

சுவாமியின் தெய்வீகத் திட்டத்தின் விளைவாக அந்தக் குடும்பமும் ஓர்நாள் புட்டபர்த்தி வந்துசேர்ந்தது. பாம்பாயின் ப்ரின்ஸ்டன் கல்லூரியில் சமஸ்கிருதத்தை சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்தவர் ஜ்யோத்ஸ்னா தீக்ஷித். அதுவரை பாடுவதில் ஆர்வமில்லாதிருந்தவர் சுவாமியின் வார்தைக்குப் பணிந்து பாட ஆரம்பித்தார். சாதாரணமாக அல்ல… மாபெரும் பஜன் பாடகியாக, பஜன் பாடல்கள் இயற்றுபவராக மாறினார் ஜ்யோத்ஸ்னா தீக்ஷித். 1973ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…ஒருநாள் ஜ்யோத்ஸ்னா தீக்ஷித்தின் கனவில் வந்த சுவாமி, ஹார்மோனியம் வாசித்துக்கொண்டிருந்த  திரு. ராஜாரெட்டியைக் காண்பித்து... “இவருக்குத் தான் உன்னைத் திருமணம் செய்து வைக்கப் போகிறேன்” என்றார். “வைட்ஃபீல்டில் மணிகாஞ்சன் யோகாவில் உங்கள் திருமணத்தை நடத்துவேன்” என்றும் அதே கனவில் கூறினார்.

 

🌷திருமண ராஜ வைபவம்:

அதே (1973) ஆண்டு டிசம்பர் மாதம், தீக்ஷித் குடும்பத்தை வைட்ஃபீல்டுக்கு வரவழைத்தார் சுவாமி. டிசம்பர் 10ம் தேதி வைட்ஃபீல்டு வந்து சேர்ந்த அவர்களை மறுநாளே  இன்டெர்வியூ ரூமிற்குள் அழைத்துச் சென்ற சுவாமி, "நாளை (12 டிசம்பர் 1973) உங்கள் திருமணத்தை நடத்திவைக்கிறேன்" என்றார். அதற்கு சற்று முன்பாக ஜ்யோத்ஸ்னாவை இன்னொரு இன்டெர்வியூவிற்கு சுவாமி அழைத்திருந்தார். அங்கே திரு ராஜா ரெட்டி அவர்களும் அவரது தாயாரும் இருந்தனர். சுவாமி ஜ்யோத்ஸ்னாவைக் காட்டி, இது தான் உங்கள் மருமகள்எப்படி இருக்கிறாள்?" என்றார் . ராஜரெட்டியின் அம்மாவோ ,"எனக்கு மிகவும் பிடித்துள்ளது... ஆனால் சுவாமி தெலுங்கே தெரியாத இந்தப் பெண்ணிடம் நான் எப்படிப் பேசப்போகிறேன்?" என்றார். உடனடியாக சுவாமி ஜ்யோத்ஸ்னாவின் அருகில் சென்று தனது திருக்கரத்தை தலையின் மீது ஒரு ஆசிபோல வைத்துவிட்டு, "இப்போது தெலுங்கு வரும்ரஷியன் கூட வரும்!" என்று சொன்னார். சுவாமியும்  ராஜாரெட்டியின் தாயாரும் தெலுங்கில் பேசிக்கொண்ட அந்த விஷயங்களை ஜ்யோத்ஸ்னாவுக்கு புரியும்படி மொழிபெயர்த்தும் சொன்னார். அன்றே பாண்டுரங்க தீக்ஷித்திடம் சுவாமி, இது வெகுகாலத்திற்கு முன்பே உன் மகளுக்கென நான் சங்கல்பித்த திருமணபந்தம் என்று கூறினார்.


மறுநாள் இன்டெர்வியூ அறையில் மணமக்கள் இருவரும் சுவாமியின் திருமுன்னார் மாலை மாற்றிக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து சுவாமி, “உங்கள் சொந்த பந்தங்களுக்காகவும் பொதுமக்களுக்காகவும் திருமண வைபவத்தை புட்டபர்த்தியில் வெகுவிமரிசையாக நிகழ்த்தப் போகிறேன்” என்றும் கூறி ஆசீர்வதித்தார்.  அதே டிசம்பரில் 19ம் தேதி திருமண வைபவம் புட்டபர்த்தியில் நிகழ்ந்தது. திருமணத்திற்கு முன்பாக சுவாமி பலரிடமும் அதைக்குறித்தே பேசினார். "நம் ராஜாவின் திருமணம் புட்டபர்த்தியில் நடக்கவிருக்கிறதுஅவசியம் வாருங்கள்" என்றவாறு பலரையும் விழாவிற்கு அழைத்திருந்தார். சுவாமி காண்பித்த ஆர்வமும் அன்பும் கருணையும் அளவிட முடியாமல் வெளிப்பட்டது. மண்டப அலங்காரம் முதல் அனைத்து விஷயங்களிலும் சுவாமியே நேரடியாக ஈடுபட்டு வெகுசிறப்பாக திருமண வைபவத்தை நிகழ்த்தி முடித்தார். பின்னர் அவர்களை இன்டெர்வியூ ரூமிற்கு அழைத்துச் சென்று, தாமே போட்டோக்களையும்   எடுத்தார். புடவைகள், நகைகள் மற்றும் பாதநமஸ்காரங்கள் வழங்கி தம்பதிகளை ஆனந்தத்தில் ஆழ்த்தினார். பின்னர் புதுமணப் பெண்ணிற்கு ஏறத்தாழ ஒருமணிநேரம், புகுந்த வீட்டில் நற்பெயர் எடுக்கும்படியான அறிவுரைகளை வழங்கினார்.

 

🌷பாபா பணக்காரர்களின் கடவுளா?

ஒருமுறை ராஜாரெட்டியின் மனைவி  ஜ்யோத்ஸ்னாவுக்கும் இன்னும் சிலருக்கும் கிடைத்த சுவாமியின் பேட்டி ஒன்றில் ஒரு முக்கிய படிப்பினை பெற்றனர். அன்றைய தினம் பேட்டியறையில், சுவாமியைச் சுற்றி சில செல்வந்தர்கள் இருந்தனர். சுவாமியும் அவர்களுடன் தீவிரமான சம்பாஷணையில் இருந்தார். அப்போது ஜ்யோத்ஸ்னாவின் மனதில்,  ‘சுவாமி பணக்காரர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறார்! எனும்படியான ஒரு மங்கலான எண்ணம் தோன்றியது. அந்த நொடியே சுவாமி  அவள் பக்கம் திரும்பி, " ...ஏனென்றால்இவர்களுக்குக் கீழே நிறைய பேர் வேலை செய்வார்கள்இவர்களின் தெய்வீக உயர்மாற்றத்தால் அவர்களும் பயனடைவார்கள்!" என்று கூறினார். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், வசதி, அதிகாரம் உள்ளோர்களை ஈர்த்து, அவர்களில் ஒரு நல்மாற்றத்தைக் கொண்டுவர முயற்சிக்கிறார் சுவாமி. அதன்மூலம், அனைத்து மக்களும் உயர் மாற்றத்திற்கு உள்ளாவார்கள் என்ற பேருண்மை அன்று விளங்கிற்று.

 

🌷அந்தர்யாமியோடு ஐக்கியம்:

ஸ்ரீ ராஜா ரெட்டி தன் வாழ்வின் பிற்பகுதியில்... தனது இல்லத்தை மும்பைக்கு மாற்றி, ஆண்டுக்கு இரண்டு முறை தரிசனத்திற்காக புட்டபர்த்திக்கு வரத் தொடங்கினார். பிரஷாந்தியிலேயே தங்குவதற்கும் அவ்வப்போது தரிசனம் செய்வதற்கும் ஏதாவது வித்தியாசத்தை உணர்கிறீர்களா? என்ற கேள்விக்கு, திரு.ராஜா ரெட்டி பின்வருமாறு பதிலளித்தார், ‘எந்த வித்தியாசமுமில்லை...  கடந்த ஆண்டுகளில்நான் பாபாவுடன் இருந்தேன்இப்போது பாபா என்னுடன் (என்னுள்) இருக்கிறார்! அப்போது நான் அவருடைய சரீர அருகாமையில் இருந்தேன்இப்போது பாபா என் அகத்தில் இருக்கிறார்!  இப்போதெல்லாம் என்னிடம் பகவான் பாபா அதிகம் பேசுவதில்லைஎனக்கு அது தேவையுமில்லை.  ஒவ்வொரு நாளும் என்னுள் அந்தர்யாமியாக இருந்துகொண்டு என்னை வழிநடத்துவதை நான் உணர்வதனால் முற்றிலும் மகிழ்ச்சியோடிருக்கிறேன்!

 

Bhajans by BV Raja Reddy

சுவாமியின் அந்தரங்க உதவியாளர், பிரசாந்தி மந்திரின் முன்னணிப் பாடகர், புட்டபர்த்தியிலும் வெளியூர்களிலும் சுமார் முப்பது ஆண்டுகள் சேவையாற்றியவர் என்பதாக தனது வாழ்க்கையை புனிதப்படுத்திக் கொண்ட உண்மையான சாதகர் திரு.B.V.ராஜா ரெட்டி அவர்கள். தத்துவஞானியும் ஆழ்ந்த ஆன்மீக சிந்தனையாளருமாய் விளங்கிய அந்த புண்ணியாத்மா  இறுதியாக  2009ம் ஆண்டு பகவான் பாபாவின் தாமரை பாதங்களில் இணைந்தார்.

 

(குறிப்பு: திரு ராஜா ரெட்டி அவர்களின் பஜன் பாடல்களைப் போலவே திருமதி. ஜ்யோத்ஸ்னா ரெட்டி அவர்களுடைய பாடல்களும் இன்றைக்கும் பிரசித்தமானவை.மேலே ▶️ இருக்கும் பிளே பட்டனை கிளிக் செய்து அவர்களின் பஜன்பாடல்களை கேட்டு மகிழுங்கள்.)


 மூலம் : சாயி இலக்கியங்கள் மற்றும் இணையம்

✍🏻 கவிஞர்.சாய்புஷ்கர், பர்த்தி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக