தலைப்பு

செவ்வாய், 27 டிசம்பர், 2022

தெய்வப் பெயர்கள் உள்ளிருக்கும் ஆழமான ஆன்மீக உண்மை? மற்றும் ஏன் இந்திய தேசத்தை பாரத தேசம் என அழைக்கிறோம்?

நாராயணன் என்றால் நார-நயன்! நீர் நிறைந்த கண்ணே நார நயனம்! அதாவது பிரேம பக்தியின் உள்ளுருக்கம் கண்ணீராகப் பெருகும் போது எந்த திவ்ய அனுபவத்தை நீங்கள் பெறுகிறீர்களோ அதுவே நாராயணன்! 

கஸ்தூரி திலகம் லலாட பலகே வக்ஷஸ்தலே கௌஸ்துபம் 

நாஸாக்ரே நவமௌக்திகம் கரதலே வேணும் கரே கங்கணம் |

ஸர்வாங்கே ஹரிசந்தநம் ச கலயன் கண்டே ச முக்தாவளிம் 

கோபஸ்த்ரீ பரிவேஷ்டிதோ விஜயதே கோபால சூடாமணி:|| 


என ஸ்ரீ கிருஷ்ணருக்கான வர்ணனை மந்திரத்தில்...கண்ணன் நெற்றியில் கஸ்தூரி திலகம் இருப்பதற்கான காரணம் தெரியுமா? புருவ மத்தியில் உள்ள ஞானக் கண்ணின் கருவிழி தான் கஸ்தூரி திலகம்! இதயத்தில் கௌஸ்துப மணி என்றால் ஸ்ரீ கிருஷ்ணரின் இதயத்தில் உள்ள கருணை ஒளி! பாற்கடலில் கடைந்து வந்தவற்றிலிருந்து கௌஸ்துபம் , லட்சுமி இரண்டையும் இறைவன் மார்பிலேயே தரித்துக் கொள்கிறார்! அன்பைக் கடைந்து எடுத்த கருணையும், ரட்சணையுமே அவை! ஸ்ரீ கிருஷ்ணரின் நாசி நுனியில் முத்துபுல்லாக்கை அணிந்திருப்பதன் காரணம்... அவரின் சக்தி அம்சத்தை (ஸ்ரீ - பெண் அம்சத்தை) உணர்த்தவே! 

தியானத்தில் கண் முழுக்க மூடாமலும், முழுதும் திறக்காமலும், மூக்கு நுனியை கவனிக்க முக்தி கிடைக்கும் என்பதை உணர்த்தவே முத்து புல்லாக்கு!


காதலே வேணு(புல்லாங்குழல்) , ஆகவே ஸ்ரீ கிருஷ்ணர் உள்ளங்கையில் வேணு எனும் புல்லாங்குழல்! 

கரே கங்கணம் - மணிக்கட்டில் கங்கணம்... அதாவது ஒரு நற்செயலை செய்தே தீர வேண்டும்! என்று கங்கணம் கட்டிக் கொள்வது போல் சாதுக்களை காத்து துஷ்டத்தனத்தை அழிப்பேன் என ஸ்ரீ கிருஷ்ணர் கட்டிக் கொண்ட கங்கணம் அது! 

"வேறு சிந்தனை இன்றி சரண் அடைந்தோர்க்கும்... சகல தர்மம் விடுத்து தன் பாதத்தில் புகல் அடைந்தோர்க்கும்... சம்சாரக் கடலிலிருந்து விடுதலை தந்து மோட்சம் அருள்வேன்!" என்கிற கங்கணம்.. இதை கீதையிலும் உங்களுக்கு உணர்த்தி இருக்கிறார்!

தனது எல்லா அங்க அவயங்களில் அவர் சந்தனம் பூசியிருப்பது... குளிர்ந்த எண்ணங்களை உங்கள் மேல் அள்ளித் தெளிப்பதற்காக...! வேணு கானம் கொண்டும் கீதை ஞானம் கொண்டும் உங்களுக்கு முக்தி வழி காட்டவே ... ஸ்ரீ கிருஷ்ணர் கழுத்தில் முத்துமாலை! மாயை அறிவு  ஆத்மாவின் முன் மங்கியும் அது எளிமையாக திகழ்வதாலேயே கோபி'யாகிறது! மாயா சிருஷ்டியை ஸ்ரீ கிருஷ்ணரே காப்பதால் அவரே கோபால சூடாமணி ஆகிறார்! மற்றும் கோ என்றால் இந்திரியம், உலகம்... ஆக இதனை பாதுகாப்பதிலும் கோபால சூடாமணி ஆகிறார்! 


அதுபோல்...சரஸ்வதியின் அன்ன வாகனம் என்பது ஹம்ச வாகனம் என்கிறோம்! மூச்சின் கதியான ஸோஹம்  என்பது ஹம்ச என்பதும் ஒன்றே! சீரான சுவாசமே ஸோஹம்! மூச்சிலிருந்தே பேச்சு... ஆகவே வாக்தேவி என அழைக்கப்படுகிற ஸ்ரீ சரஸ்வதி ஹம்ச (சுவாச) வாகனத்தில் வீற்றிருக்கிறார்!


அது போல் ஹிமம் என்றால் பனி, அசலம் என்றால் அசையாதது , அதுதான் ஹிமாச்சலம் (இமய மலை)! ஜீவனின் மனம் அன்பில் குளிர்கிறது , மனத் தூய்மையே பனி... ஞான சாத்வீகமே அசலம்... ஆக ஆன்மீக லட்சியத்தில் பிறழாமல் நிலைத்தால் அங்கே சிவம் என்கிற மங்களம் குடி கொள்கிறது!


அது போலவே...பரத சக்கரவர்த்தி ஆண்டதால் தான் இந்திய தேசம் பாரதம் என அழைக்கப்படுவதாக மக்கள் தவறாக புரிந்திருக்கிறார்கள்... பாரத மாதா எனும் பெயர் அதனாலும் வரவில்லை... பரதனுக்கெல்லாம் முற்பட்ட ஆதிநூலான வேதத்திலேயே குறிப்பிட்ட பெயர் 'பரத'... பராசக்தியானவள் காயத்ரி , பாரதி (சரஸ்வதி) , சாவித்ரியாக உலகம்,  வானம் , பாதாளம் ஆகியவற்றை அக்னியாக திகழ்ந்து பரிசுத்தம் செய்கிறாள்! கேட்பது, கேட்பதை சிந்திப்பது, சிந்திப்பதை அனுபவிப்பது ஆகிய மூன்று அம்சங்ஙளுக்கும் பாரதியே காரணம்! இந்த மூன்று அம்சங்களையும் பேணிய நாடு என்பதாலேயே இது பாரதம்... அதாவது பாரதி அம்சமே இந்த பாரதம்! 

ப - பா'வம் (ஞானம்) | ர - ராகம் (அன்பு) | த - தாளம் (சீர் தவறா அளவுகோல் - தர்ம ஒழுக்கம்)

ஆக ஞானம், அன்பு, தர்மத்தின் அதிதேவதையாக திகழும் பாரதியை  (அன்னை ஸ்ரீ சரஸ்வதி) வழிபடும் மக்கள் பாரதீயர்கள்... அவர்கள் வாழ்கிற தேசம் பாரத தேசம் என அழைக்கப்படுகிறது!


(ஆதாரம் : ஆறிவு அறுபது | பக்கம் : 210 | ஆசிரியர் : அமரர் ரா‌.கணபதி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக