தலைப்பு

வியாழன், 15 டிசம்பர், 2022

ஏற்கனவே பெயர் வைத்த குழந்தைக்கு பெயர் வைக்க சொன்ன பக்தையிடம் பாபா என்ன சொன்னார்?

பேரிறைவன் பாபா அறியாதது ஏதும் இல்லை... எந்த மறைத்தலுமின்றி மனித செயல்கள் யாவும் வெளிப்படையாக அறிகிறார்... மனித ரகசியம் அனைத்தும் அறியும் இறை அதிசயம் பாபா ஒரு குழந்தைக்குக் காட்டிய கருணை சுவாரஸ்யமாக இதோ...


அவர்கள் பெயர் ராஜம்... பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் தீவிர பக்தை...இதயத்தில் நிரம்ப நிரம்ப பாபா அனுபவங்கள் பெற்றவர்... சித்ராவதி மணல்படுகையில் அவர் கண்ட பேரதிசயங்கள் பல... பாபா அனைவரையும் பிக்னிக் கூட்டிச் சென்ற போது உடனிருந்த பாக்கியம் பெற்றவர் ராஜம்... பாபா சிருஷ்டிகளை இதயத்தாலும் இதழாலுமே ருசித்தவர்... ஆகாயத்திலிருந்து பாபா சிருஷ்டித்த தனது புகைப்படங்களைப் பெற்ற பரம பாக்கிய பக்தை‌ ராஜம்... பாபாவை தரிசிப்பதற்கு முன்பு அவருக்கிருந்த பிரசவ சிக்கல்.. அதற்குப் பிறகு விலகி விட்டது என்கிறார்... பிள்ளைப் பேறு என்பது பேரிறைவன் பாபா தருகிற வரம்.. ஆகவே தான் அதனை பேறு (பாக்கியம்) என அழைக்கிறோம்! ஆக பக்தை‌ ராஜம் சுகப்பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்க.. பாபாவே அதற்குப் பெயர் வைக்க வேண்டும் என காத்திருக்கிறார்... இறைவனுக்காக ஆனந்தமாய் காத்திருப்பதை விட அப்படி வேறெதில் சுகம் இருக்கிறது பக்தர்களுக்கு!?


அப்படிக் காத்திருக்கையில் அந்த 2 ஆவது மாதத்தில் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாத போக.. மருத்துவமனையில் காட்டுகிற போது.. அவர்கள் குழந்தைக்கு என்ன பெயர் எனக் கேட்கிறார்கள்... காரணம் அது அரசு மருத்துவமனை... ரெஜிஸ்டரில் குறிப்பிடப்பட வேண்டும்... பாபா பெயரிட காத்திருந்த பக்தைக்கு அதிர்ச்சி.. சரி இப்போதைக்கு "சாயிநாத்" எனக் கூறிவிடலாம் என்று முடிவெடுத்து அந்தப் பெயரையே கொடுக்கிறார்...ஆக சாயிநாத் என்ற பெயரே சீட்டில் குறிக்கப்படுகிறது! பிறகு பாபாவிடம் கேட்டு வேறொரு பெயர் வைத்தூவிடலாம் என நினைத்துக் கொள்கிறார்!


6 மாதங்களுக்குப் பிறகு புட்டபர்த்தி வருகிறார்... குழந்தை தாயின் கையில்... தரிசனத் தாய் அசைந்து வருகிறார்... அந்த பிரபஞ்சத்தாயிடம் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் எனக் கேட்கிறார் ராஜம் என்கிற இந்தப் பாசத்தாய்! "சுவாமி! குழந்தைக்கு பெயர் வைக்க வந்தேன் !" என்கிறார் ராஜம்! "பெயரா? அதான் வைத்தாகிவிட்டதே!" என்கிறார் பேரிறைவன் பாபா! "இல்லை! இப்போது தான் வந்தேன் சுவாமி!" என்கிறார் ராஜம்! "இல்லை பொய் சொல்கிறாய்!" என்கிறார் பாபா! "சத்ய சாயியிடமே அசத்தியம் பேச முடியுமா?"

 

என்று ராஜம் சொல்கிற போது பாபா சிரித்தபடி "நீ ஆஸ்பத்திரியில் வைத்த பெயர் என்னாயிற்று?" எனக் கேட்கிறார்! "நீ அன்று கொடுத்த பெயர் நன்றாகத்தான் இருக்கிறது! அது என்னுடைய பூர்வ அவதாரப் பெயரான ஷிர்டி சாயி பெயர்" என்று பாபா புன்னகைத்துக் கூறிக் கொண்டே குழந்தையை தாய்மையோடு வாங்குகிறார்... பாபாவினுடைய அருள் முடி அந்தக் குழந்தையை மூடுகிறது.. அது கார்மேகம் மூடுகிற வானமாய்... ஆலாபனை மூடுகிற ராகமாய்... சிப்பி மூடுகிற நிலத்திலமாய் அந்தப் பேரன்புக் காட்சி இதயத்திலும் இருவிழியிலும் இதமாகிறது...! பக்தி இதயத்திற்குள் பதமாகிறது!


(ஆதாரம் : ஸ்ரீ சத்ய சாயியின் இனியவை 400 | பக்கம் :60 | ஆசிரியர் : சாயி சரஜ் (சரோஜினி சாயிராம்)


பேரிறைவன் பாபாவுக்கு தெரியாததேதும் இல்லை... அவர் அறியாத ஒரு விஷயமும் புவியில் நிகழ்வதில்லை! எழுதி இயக்குகிற இயக்குநரிடமே நாம் கதையை சொல்வது போல் தான் இதுவும்... இறைவன் பாபாவிடம் நாம் பிரார்த்தனையிலோ நேரிலோ ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும் என்பது கூட அவசியம் இல்லை! அனைத்தும் பாபா அறிவார்! எதனால் நிகழ்கிறது என்பதன் காரணமும் உணர்வார்! வெறும் சுழலும் பம்பரமே நாம்... அந்தச் சாட்டை பாபாவின் கரங்களாலேயே எப்போதும் இயக்கப்படுகிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக