தலைப்பு

புதன், 21 டிசம்பர், 2022

இறைவனிடம் ஒரு பக்தர் எதைப் பிரார்த்தனை செய்ய வேண்டும்?

இறைவனை அன்றி வேறெதையும் அறவே நாடாமல் இருப்பதே உண்மை பக்தனின் தலையாய லட்சணம்! வேறு எது எதற்காகவோ இறைவனை நாடுவதே பக்தரென்று நினைத்துக் கொண்டிருப்போரில் மிகப் பெரும்பாலோரின் 'லட்சணமாக' இருக்கிறது!

அனைத்தும் துறந்து அரங்கனிடமே (திருமால்) கலப்படமற்ற பக்தி புரியும் உயர்வை கூரேசர் (கூரத்தாழ்வார்) என்ற பக்தரிடம் பூரணமாக நாம் பார்க்கிறோம்! 


ஸ்ரீமத் ராமானுஜர் காலத்தில் காஞ்சிபுரம் அருகில் உள்ள கூரம் எனும் சிற்றூரில் கிராம அதிகாரியாக இருந்தவர் கூரேசர்! ஸ்ரீவத்ஸாங்கர் என்பது அவரது இயற்பெயர்! ஊர் பெயரால் கூரேசர் என அழைக்கப்பட்டார்! மிகப்பெரிய செல்வந்தர்! விசிஷ்டாத்வைதத்தை ஏற்று ஸ்ரீமத் ராமானுஜர் வழியை பின்பற்ற ஆரம்பித்ததில் இருந்தே அவரது போக்கு முற்றிலும் மாறுபட்டது! தம்முடைய நில புலன், வீடு வாசல் எல்லா பொருட்களையும் தியாகம் செய்கிறார்! ஆண்டாள் (திருப்பாவை ஆண்டாள் அல்ல) என்ற தன்னுடைய தர்ம பத்தினியோடு காவேரி சூழ் ஸ்ரீரங்கப் பட்டிணத்துக்குப் புறப்பட்டார்... (ஸ்ரீரங்கம் வைணவ தலங்களில் முதல் இடம் பெறுகிறது)


செல்லும் வழியில்... அடர்ந்த காட்டின் வழியே பயணம் செய்ய வேண்டி இருந்தது... "திருடர்கள் இருப்பார்களோ?" என பயம் கொண்டாள் கூரேசர் மனைவி.. "அதைப் பற்றி நாம் ஏன் பயப்பட வேண்டும்? நம்மிடம் என்ன இருக்கிறது திருடர்கள் அபகரித்துச் செல்ல? "? எனக் கேட்கிறார்! 

"நாதா ! மன்னிக்க வேண்டும்.. மனம் கேட்காமல் ஒரு தங்க பஞ்ச பாத்திரத்தை மட்டும் (சந்தியா வந்தனம் செய்ய பயன்படுத்தும் பாத்திரம்) எடுத்துக் கொண்டு வந்துவிட்டேன்!" எனச் சொல்ல..

"எங்கே அதைக் காட்டு!" என கூரேசர் கேட்க... 

அந்த கும் இருட்டிலும் பள பளக்கிறது பஞ்சப் பாத்திரம்... சற்றும் சலனமின்றி அதை தூக்கி கண் காணா தூரத்தில் வீசி எறிகிறார் கூரேசர்! பிறகு புனிதப் பயணம் தொடர்கிறது! கூரேசர் மனைவிக்கு கொஞ்சம் தொற்றிக் கொண்ட பயமும் இப்போது இல்லை! 


ஸ்ரீரங்கம் நெருங்கியது... மூன்று நாட்கள் பயணத்திலேயே கழித்ததால் ஒரே களைப்பு.. ஒரே பசி... கோவில் வரை செல்ல இயலாமல் ஒரு சத்திரத்திலேயே மயங்கி விழுந்தார் கூரேசர்! அப்போது கூரேசர் மனைவிக்கு கோவில் தீபாராதனை மணியோசை கேட்டது! கோபமோ அவளுக்கு பொங்கி வந்தது... "இங்கே உன் பக்தர் பட்டினியால் வாடி வதங்கி மயக்கத்தில் இருக்க... உனக்கு மட்டும் வாய்க்கு ருசியாக நெய்வேத்யம் கேட்கிறதா?" என அவளது மன சிங்கம் உள்ளேயே கர்ஜித்தது!

சில நிமிடங்களில்...கோவில் நிர்வாகிகள் ஒவ்வொருவரும் வரிசையாக அந்த சத்திரம் நோக்கி விரைகின்றனர்... கையில் ஏராளமாய் நெய்வேத்ய பொருட்கள்... "இங்கே கூரேசர் எனும் பெயர் கொண்ட பக்த சிகாமணி யார்? எங்கே இருக்கிறார்? ஸ்ரீ ரங்கநாதர் அவருக்கு அமுது சேவிக்கும் படி அசரீரியாக கட்டளையிட்டார்" என நடந்ததை விளக்க...

கூரேசரும் மயக்கம் தெளிந்து... நடந்ததை கேள்விப்படுகையில் அவருக்கு மகிழ்ச்சியோ நன்றிப் பெருக்கோ ஏற்படவில்லை! மாறாக 

"பிரபோ! என்றோ ஒரு நாள் துறக்க வேண்டியதும், அநாத்மா (ஆன்மா அற்ற) என்று இன்றே புறக்கணிக்க வேண்டியதுமான உடலையும் , உடலுக்கான உணவையுமா நான் விரும்பினேன்? களைத்து விழுந்தாலும் அப்படியே உயிர் நீங்கி உன்னை அடையத் தானே வேண்டினேன்? எனக்கு தேவையில்லாததை, நான் பிரார்த்தனையே செய்யாததை எப்படி நீ எனக்கு தரலாம்? நான் பிரார்த்தித்து வேண்டும் உன்னை எப்படி நீ தராது போகலாம்?" என்றே கேட்கிறார்! சுற்றி இருந்தவர்கள் பேராச்சர்யப்படுகின்றனர்!


கோவிலிருந்து வந்திருந்தவர்கள் வற்புறுத்த ஓரிரு கவளம் பிரசாதம் உண்கையில் கூரேசர் "நீ தான் இப்படி ஏதாவது வேண்டி அபச்சாரம் செய்தாயா?" என வருந்திய படியே கேட்க.. 

"நாதா! நான் தங்களுக்கு உணவு தரும்படி சுவாமியிடம் வேண்டவே இல்லை! இங்கே உன் பக்தர் பசியோடு மயங்கி இருக்க.. உனக்கு மட்டும் நெய்வேத்தியத்தை ஏற்றுக் கொள்ள எப்படி மனம் வந்தது?" என்று மட்டுமே தான் கேட்டதாக கூரேசரின் மனைவி அகம் திறந்து கண்கலங்கிப் பேசுகிறார்!


(ஆதாரம் : அறிவு அறுபது / பக்கம் : 189 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக