தலைப்பு

ஞாயிறு, 25 டிசம்பர், 2022

மேரி மாதாவாக சென்று Dr. லேலியாவின் கருவை காத்த சாயி மாதா!

இயேசுவைத் தவிர நான் வேறு யாரையும் வணங்க மாட்டேன் என்று சொன்ன ஒரு வெளிநாட்டு குடும்பத்திற்கு ஏற்பட்ட ஒரு சுவாரசிய சுவாமி அனுபவம்.... 


திரு ஹரிஹர கிருஷ்ணன் அவர்கள் அன்பும் நற்குணங்களும் நிறைந்த மிக உன்னத மனிதர். கல்வியில் சிறந்து விளங்கிய ஹரிஹர கிருஷ்ணன் தமது 23ம் வயதிலேயே பட்டைய கணக்காளர் தேர்வில்(CA) அகில இந்திய தரவரிசையில் தேர்ச்சி பெற்றவர்.

வேலை நிமித்தம் இவர் பம்பாய் சென்றபோது உறவினர்களின் வற்புறுத்தலால் சுவாமியை முதன் முதலாக சந்தித்தார். தேனீக்கள் தேனை நாடிச் செல்வதுண்டு ஆனால் தேனே தேனீயை நாடி சென்றது போல சுவாமி தானாக வந்து இவரை ஆட்கொண்டார். சில காலத்திற்குப் பின் இவர் பஹ்ரினில் NCR நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். 

இவர் பக்ரைனில் இருந்த போது நமது சுவாமி இவருக்கு கனவுகளில் அருள் பாலிக்க தொடங்கினார். இவருக்கு வரப்போகும் மனைவியையும் பிறக்க போகும் குழந்தைகளையும் கனவுகளில் முன்கூட்டியே சுவாமி காட்டினார். யாவும் அதன்படியே நடந்தன. ஹரிஹர கிருஷ்ணன் சுவாமியின் பிரியத்திற்குரிய பக்தர் ஆனார்.


தனது உழைப்பாலும் நேர்மையாலும் இளம் வயதிலேயே மத்திய கிழக்கு நாடுகளில் செயல்பட்டு வந்து NCR நிறுவனத்தின் பொருளாதார திட்டமிடுதல் துறை தலைவரானார். இத்துடன் NCR நிறுவனத்தின் ஆப்பிரிக்க மண்டல பிரிவு இணைக்கப்பட்டது. தலைமையம் ஸைப்ரஸ் நாட்டில் அமைக்கப்பட்டது.


NCR Head Quarters, Georgia, USA

இந்த இணைப்பு வேலைக்காக ஆப்பிரிக்க மண்டல தலைவரான திரு அந்தோணி சத்சியாஸ் தனது அதிகாரிகளுடன் பஹ்ரின் வந்திருந்தார். ஹரியும் நண்பர்களும் அந்தோணி சத்சியாஸை டோனி என்றழைப்பார்கள்.இந்த இணைப்பு பணி கடுமையானதாகவும் சவாலாகவும் இருந்தது.முதல் நாளே அந்தப் பணி இரவு 11 மணி வரை நீண்டது. ஹரி தனது வீட்டிற்கு செல்லும் வழியில் டோனி தங்கி இருந்த ஷெரட்டன் ஹோட்டல் இருந்ததால் டோனியை காரில் அங்கு இறக்கிவிட்டு ஹரி தனது வீட்டிற்கு சென்றார் .


மறுநாள் அலுவலகத்தில் தொலைபேசியில் வெளிநாட்டிற்கு பலமுறை டோனி பேசுவதை ஹரி கவனித்தார். ஏதோ பிரச்சனை காரணமாக ஆழ்ந்த கவலையுடனும் பதற்றத்துடனும் டோனி இருப்பது தெரிய வந்தது. இரவு 11 மணியளவில் டோனி ஹரியிடம் நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள் நான் இங்கேயே இருக்கிறேன் என கூறிவிட்டார். டோனியின் தவிப்பை உணர்ந்த ஹரி டோனியிடம் என்ன பிரச்சனை? என்று அன்புடன் கேட்டார். தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனைகளை பகிரும் அளவுக்கு நாம் இன்னும் பழகவில்லை என்று டோனி நாசூக்காக மறுத்துவிட்டார். இருந்த போதிலும் ஹரி நமது சுவாமியின் படத்தை எடுத்து மேஜையின் மீது வைத்து இவரை நாங்கள் கடவுளாக வழிபடுகிறோம். உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் இவர் தீர்ப்பார் என்று கூறினார். அதற்கு டோனி நீங்கள் இந்தியர்கள். குரங்குகளையும் பாம்புகளையும் வழிபடுவீர்கள் .


இப்போது ஒரு மனிதரை வழிபடுகிறீர்கள்.இவரை கடவுளாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. நான் இயேசுபிரானை மட்டும் தான் வழிபடுவேன். இவரால் எனக்கு எந்த ஒரு பயனும் கிடைக்கப் போவதில்லை என்றார். ஹரி உடனே நீங்கள் அப்படி சொல்லாதீர்கள் இவர் கடவுள் இவரால் முடியாதது எதுவும் இல்லை என்றார். அப்படியானால் நல்லது, நீங்கள் சொல்வது போல் எனக்காக இவர் ஒரு அதிசயத்தை நிகழ்த்து வாரானால் நான் இவரை இயேசுபிரான் என்று ஏற்றுக் கொள்கிறேன் என்றார் டோனி. அந்தப் படத்தை அங்கேயே வைத்து விட்டு அமைதியாக ஹரி வீட்டிற்கு கிளம்பிச் சென்றார். மறுநாள் ஹரி அலுவலகத்தில் டோனியை சந்தித்தபோது டோனி அமைதியாக காணப்பட்டார். அவரது பதட்டம் வெகுவாக குறைந்து இருந்தது. டோனி ஹரியிடம் எதுவும் கூறவில்லை. அடுத்து இரண்டு நாட்களில் வேலைகள் முடிந்து விட்டபடியால் டோனி ஸைப்ரஸ் கிளம்பிச் சென்றார். 


டோனி கிளம்பும்போது ஹரியிடம், ஹரி நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். பாபாவின் இந்த படத்தை நான் என்னுடன் ஸைப்ரஸ் எடுத்துச் செல்ல நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்றார். ஹரி அவரை பரவசத்தோடு பார்த்தார். டோனி மேலும், இந்த பாபா சாதாரண மனிதர் இல்லை. ஆனால் இவரை கடவுளாக இயேசுபிரானாக நான் ஏற்றுக் கொள்ள இன்னும் சில காலம் ஆகும். அதுவரை என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். நேரம் வரும்போது நானே உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறி பகவானின் படத்துடன் ஸைப்ரஸ் சென்றுவிட்டார்.


1985 நவம்பர் மாதம் இது நிகழ்ந்தது. இதற்குப் பிறகு 1986 ஆம் ஆண்டு ஜூலை மாதம் டோனியை சந்திக்க நேர்ந்தது. டோனி ஹரியின் கைகளை மென்மையாக பற்றி கொண்டு ஹரி இந்த பாபா இயேசு பிரான் தான் மனித உருவில் வந்துள்ள கடவுள் இவர் என்று உணர்ச்சி பொங்க கூறி மேலும் அதற்கான சம்பவங்களையும் பகிர்ந்து கொள்ள தொடங்கினார்.

பல் மருத்துவரான எனது மனைவி Dr லேலியா நான் பஹ்ரின் வந்திருந்த போது கர்ப்பிணியாக இருந்தார். அப்போது அவருக்கு உடலில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக அவர் சிகிச்சைக்காக சைப்ரஸிலிருந்து லண்டன் சென்றார். அங்கு ஸ்கேன் மற்றும் சில பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள் இறுதியில் லேலியாவிடம் உங்கள் வயிற்றில் இருக்கும் கருவை உடனடியாக கலைக்க வேண்டும் இதை செய்யவில்லை என்றால் உங்கள் உயிருக்கு ஆபத்து என்று கூறி விட்டனர் நிலைமையை பஹ்ரினில் இருந்த என்னிடம் தொலைபேசியில் என் மனைவி கூறிய போது நாங்கள் இருவரும் மிகுந்த கவலையும் வேதனையும் அடைந்தோம். செய்வதறியாது திகைப்பில் நான் இருந்த அந்த தருணத்தில் தான் நீங்கள் என்னிடம் பாபாவின் புகைப்படத்தை அளித்து, இவர் கடவுள்! உங்களது பிரச்சனை எதுவானாலும் இவரால் தீர்க்க முடியும் என கூறினீர்கள். அதை ஏற்க மறுத்த நான் ஏதேனும் இவர் அதிசயம் நிகழ்த்துவார் என்றால் இவரை நம்புகிறேன் எனக் கூறி விட்டேன். மறுநாள் என் மனைவிக்கு கருக்கலைப்பு நடப்பதாக இருந்தது. கருக்கலைப்பு நடப்பதாக இருந்த அன்று விடியற் காலை என் மனைவி ஒரு வினோதமான கனவை கண்டதாக கூறினார். 


அன்னை மேரி கனவில் வந்து உனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும். கருவை கலைக்க வேண்டாம் என்று கூறியதாக தெரிவித்தார்.முதல் நாள் இரவு நீங்கள் பாபாவின் படத்தை கொடுத்து கூறிய வார்த்தைகள் என் நினைவுக்கு வந்தது. உடனே நான் என் மனைவியிடம் அனைத்து பரிசோதனைகளையும் மீண்டும் ஒருமுறை செய்து கொள்ளும்படி கூறினேன் . லேலியாவும் அதன்படி மருத்துவர்களிடம் மீண்டும் அனைத்து பரிசோதனைகளையும் செய்து பிறகு தான் கருக்கலைப்பு செய்து கொள்வேன் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். 


மருத்துவர்கள் மீண்டும் அவளுக்கு அனைத்து பரிசோதனைகளையும் செய்தனர். அனைவரும் ஆச்சரியப்படத்தக்க வண்ணம் பரிசோதனையின் முடிவுகள் அவள் உடல் நிலை ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தன. குழம்பிப் போன மருத்துவர்கள் மூன்றாம் முறையாக மீண்டும் பரிசோதனைகள் செய்து அவள் நல்ல நிலையில் இருப்பதை அறிந்து அவளை வீட்டிற்கு செல்லலாம் என கூறிவிட்டனர் அவளும் சைப்ரஸ் வந்துவிட்டாள் 


எனது மனைவியும் கனவில் கண்டவாறு 1986 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அழகான ஒரு ஆண் மகவை ஈன்றெடுத்தார். ஹரி நான் உறுதியாக சொல்கிறேன். பாபாவும் இயேசு பிரானும் ஒருவரே பாபா இறைவனே என்று உணர்ச்சிகரமாக கூறினார் டோனி. அதன்பின் டோனி எங்களது சாய் பஜனைகளிலும் தவறாமல் கலந்து கொண்டார். அவர்கள் அந்த குழந்தைக்கு ஹர லம்போஸ் சத்சியாஸ் என பெயரிட்டு ஹரி என்ற பெயராலேயே அழைத்து வந்தனர்.

Dr.லேலியாவுடன் சிறுவன் ஹரலம்போஸ் (இடமிருந்து முதல்)

உண்மையில் சுவாமி ஒரு பக்தன் விரும்பும் வடிவிலேயே சென்று தன்னை வெளிப்படுத்தி அவனுக்கு அருள் பாலிக்கிறார். நாமங்கள் பலவானாலும் வடிவங்கள் வேறானாலும் அனைத்தும் ஒன்றே. ஏனென்றால் அவர் சர்வ தேவதா அதீத ஸ்வரூபா சாய் ஆவார். 


ஒரு தாயின் (லேலியாவின்) வேதனையை நம் சாய் மாதா அறியாதவரா? தஞ்சைபாபனாசம் அருகே திருகருகாவூர் என்று அழைக்கபடும் திருதலத்தில் வீற்று (கருகாத்தநாயகி என்று பக்தர்கள் போற்றும்) அருள்பாலிக்கும் அருள்மிகு கர்பரக்க்ஷாம்பிகை அன்னையாக லேலியாவையும் குழந்தையையும் காத்தருளிய கருணை தெய்வம் நம் சாய் மாதா அவரே மேரியாகவும் கர்பரக்ஷாம்பிகையும் லேலியாவிற்கு அருள்பாலித்தவர்

ஜெய் சாய்ராம்


எழுத்தாக்கம்: S ரமேஷ் Ex. கன்வீனர், சேலம் சமிதி

மூலநூல்: சாயியுடன் ஒரு பயணம் ஆன்மீக விழிப்புணர்வூட்டும் கனவுகளும் அனுபவங்களும் by S.R. ஹரிஹர கிருஷ்ணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக