தலைப்பு

வியாழன், 1 டிசம்பர், 2022

ஓங்காரத்தில் அப்படி என்ன சிறப்பு? அதை ஏன் 21 முறை உச்சரிக்க வேண்டும்?

அசையாத ஒன்று அசையும் போது சப்தம் பிறக்கிறது! ஓம்கார சப்தத்தின் தனிப்பெருமை என்னவெனில்... அசையாத பிரம்மம் அதனுள்ளேயே தோன்றிய சங்கல்பத்தில் அசைந்தபோது ஏற்பட்ட முதல் சப்தம் அதுவே என்பது தான்! அதன் பின்பே , அதிலிருந்தே பிரபஞ்ச சிருஷ்டித்தான இதர இயக்கங்கள் தோன்றின... ஆகையால் பிரபஞ்சத்திலுள்ள ஜீவன் பிரம்மத்துக்குத் திரும்பவும் அதுவு நுழைவாயிலாக உள்ளது! அனைத்துப் படைப்புக்கும் அஸ்திவாரமான அதுவே ஜீவனின் விமோச்சனத்துக்கும் வழியாக உள்ளது!

பிரணவம் என்ற சொல்லுக்கு பொருள் : ஆதி முதற் சப்தமாயினும் என்றும் புதுமை குன்றாதிருப்பதால் பிர - முதல், நவம் - புதுமை 

உயிருக்கு மூலமாக இருக்கும் பிராணனும் அதிலிருந்தே பிறந்தது! ஆதலாலும் அது பிரணவம்!

பிராண சக்தி சுவாசமாக இயங்குகிற போது இயற்கையாகவே ஓம் ஒலி உண்டாகிறது! சுவாச கதியை 'ஹம்சம்' என்பர்! மானஸரோவரில் (இமாலய நதி) ஹம்ஸம் (அன்னப்பறவை ) செல்வது போல் மன ஓட்டத்தில் மூச்சு செல்கிறது! 'ஹம்' எனச் சொல்கிற போது மூச்சுக் காற்று நம் உட்சென்று தங்கும்! 'ஸ்' என உச்சரிக்கும் போது தங்கிய மூச்சு வெளிப்படும்! ஸ என்கிற போது மூச்சு வெளியே விரியும்! இவ்வாறு மூச்சு உட்செல்கிற பூரகம், தங்குகிற கும்பகம், வெளிப்படுகிற ரேசகம்... இவையே பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) ஹம்ச என்பதற்கு ஹம் - நான் |  ச - அதுவே (பிரம்மம்)! நானே அது...

இதில் அதுவே நான் என்பதே மிகவும் பொருத்தம்! 


ஸ என்பது சமஸ்கிருதத்தில் ஸோஹம் என்பது பொருளாகும்! சாந்தமான மன ஓட்டம் எனும் மானசரோவரில் மூச்சாகிய அன்னம் எப்படி இயல்பாக இன்பமாக மிதந்து வருவது என்பதை நீங்கள் கவனித்தீர்களானால் அது 'ஸோஹம் ஸோஹம்' என்றே ஒலி எழுப்பி வருகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்! இதை ஹம்ஸ காயத்ரி மஹா மந்திரம் என்பார்கள்! புத்தி கொண்டும் வாய் கொண்டும் ஜபிக்காமல் இயல்பாய் இயங்கும் இந்த ஜபத்தை அஜபா மந்திரம் என்பார்கள்! 


"ஓம் ஹம்ஸ ஹம்ஸாய வித்மஹே 

பரம ஹம்ஸாய தீமஹி

தந்நே ஹம்ஸ ப்ரச்சோதயாஆத்"

--- ஹம்ஸ காயத்ரி மஹா மந்திரம் 


ஸோஹம் என்பதில் ஸ'வும் ஹ'வும் உயிர்மெய் ஒலிகள்! உயிரெழுத்து தவிர மற்றவை விக்ருதி(செயற்கையானவையே) ஆக பிரக்ருதி (இயற்கை) சப்தங்களை கொள்வதற்காக ஸ'வையும் ஹ'வையும் கழித்தால் ஓம் எனும் ஆதி ஒலியே மிஞ்சுகிறது! 

ஆக சகல சப்தங்களும், அட்சரங்களும் பிரணவத்திலேயே அடங்குவதால் வேதங்களின் மந்திர சக்தி, வேதாந்தத்தின் ஆத்ம போதனை தருகிற ஞானம் இவற்றை ஓம்கார ஜபம் ஒன்றாலேயே நீங்கள் பெற்றுவிடலாம்! 

"இந்த ஒன்றை அட்சரம் பிரம்ம ஸ்வரூபமே! - ('ஓம் இதி ஏகாக்ஷரம் பிரம்மம்' ) என்கிறான் கண்ணன்! அட்சரம் என்றால் அழிவில்வாதது! சரம் என்றால் அழிவது! ஆக அட்சரம் நித்தியமானது!


அ - உ - ம என்ற மூன்று சப்தங்கள் சேர்ந்து 'ஓம்' என்ற அட்சரமாகியுள்ளன.. அ எனும் போது வாய் அகன்று அதனை சொல்கிறீர்கள்... உ எனும் போது வளைந்தும்... ம் எனும் போது வாய் மூடிக் கொண்டும் விடுவதால் ...ஓம் எனும் என்பதில் வாக்கூ முழுவதும் அடக்கம் என்பதனை அறியலாம்! அ'காரத்தைத் தொடங்கி, உ'காரமாக வளைத்து , ம்'மில் முடித்து ஓம்காரம் ஜபிக்க வேண்டும்! அ உ கலந்த ஓ என்பதின் ஒலிப் பரிமாணத்தை நிதானமாக ஏற்றுக் கொண்டே போய் , ஏறிய அதே நிதானத்தில் இறக்கி மௌனத்தில் கரையும் வரையில் ம்'மை நீட்டி முடிக்க வேண்டும்! ம் ரீங்கரித்து முடிக்கும் வரையில் உங்கள் இதய குகையில் சென்று சேர்ந்து எதிரொலிக்க நீங்கள் அவகாசம் தர வேண்டும்!

இவ்வளவு நேரம் மூச்சுப்பிடிக்க முடியாது என விட்டுவிடக் கூடாது! இடைவிடாத பயிற்சி அதனை முடியுமாறு செய்துவிடும்! 


அ ,உ ,ம , அநுஸ்வாரம் ஆகிய நான்கு ஒலிகள் விழிப்பு, கனவு, உறக்கம் , துரீயம் (சமாதி) ஆகிய நான்கைக் குறிப்பவை! 

ஆக பிரம்மமே உங்களை தனக்குள் அடக்கி இருக்கிறது எனும் பாவனையுடன் தினந்தோறும் பிரம்ம முகூர்த்தில் (சூரிய‌ உதயத்திற்கு முன்) 21 முறை ஓம்காரம் செய்யுங்கள்! கண்,காது,சர்மம்,மூக்கு ,நாக்கு (பேசுவது) ஆகிய ஞானேந்த்ரிய ஐந்தில்.. கை,கால்,கருக்குழி, எருக்குழி, நாக்கு(உண்பது) ஆகிய கர்மேந்த்ரிய ஐந்தும்... உடல், சுவாசம், மனம் , புத்தி, ஆன்மா ஆகிய ஐந்தோடு, அன்ன-பிராண-மன- விஞ்ஞான- ஆனந்த மய கோஷங்களான ஐந்தோடு - 20 (5+5+5+5) இந்த ஓங்காரம் இணைய 21! நீங்கள் உச்சரிக்கும் ஒவ்வொரு ஓம்காரமும் உட்புகுந்து உங்களைப் பூர்ணமாகப் பரிசுத்தப்படுத்துவதாக பாவனை செய்கிற போது நீங்களே உணர்வீர்கள்! 


பஞ்சபூதங்களை உங்களின் ஒவ்வொரு ஓம்காரமும் தூய்மை செய்வதாக பாவனை செய்யுங்கள்! இவ்வாறு 20 ஓம்காரம் ஆனபின் எஞ்சிய ஒன்றை 21 ஆவது ஓம்காரத்தை அனைத்தும் பிரம்மமாக உணர்ந்து ஓதுங்கள்!

எப்படிக் குழந்தைகள் மூன்று சக்கர நடைவண்டியைப் பிடித்து நடக்கப் பழகுகிறதோ அது போல் நீங்கள் மூன்று அட்சரங்களாகிய அ உ ம என்பதோடு கூடிய ஓம்காரத்தோடு உங்கள் ஆன்மீக சாதனையை ஆன்மீக சாதகக் குழந்தைகளாகிய நீங்களும் பயிற்சி செய்ய ஆரம்பியுங்கள்! எனது ஆசீர்வாதங்கள்!


(ஆதாரம் : அறிவு அறுபது / பக்கம் : 202 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக