தலைப்பு

புதன், 21 டிசம்பர், 2022

மாயாவதார பாபாவை புரிந்து கொண்ட 4 வயது குழந்தை மாயா!!

இறைவன் பாபாவை புரிந்து கொள்வது அத்தனை எளிதல்ல..‌அதற்கு கள்ளம் கபடமற்ற உள்ளம் வேண்டும்! சரணாகத பக்தி வேண்டும்... மேதைகளாலும் புரிந்து கொள்ள முடியாத பாபாவை எவ்வாறு ஒரு சிறு குழந்தை புரிந்து கொண்டு என்ன பேசியது? சுவாரஸ்ய அனுபவம் இதோ...


இறைவன் பாபா பல லட்சணக்கான பேர்களுக்கு நேர்காணல் வழங்கி இருக்கிறார்... அவர் அந்த சிறு அறையில் கொடுத்தது மட்டுமே நேர்காணல் அல்ல.. சதா பக்தர்களையே சிந்தித்துக் கொண்டிருக்கும் இறைவன் பாபா நம் இதயத்தில் இருப்பதால் அவர் புரிவதோ நமது வேர்காணல்... வேர்காணல் புரிகிற பாபாவுக்கு நேர்காணல் தர வேண்டும் என்பது அவசியமே இல்லை... அதில் பக்தர்களின் மனநிறைவும் அடங்கி இருந்ததால் அதனையும் அள்ளி வழங்கினார்!


அப்படி ஒரு பக்தைக்கு நேர்காணல் வழங்குகிறார்! அவர் பெயர் மங்களம் குருநாத்! அந்த அறையில் சில உபதேசமும் வழங்குகிறார்... பாபா வழங்குகிற எந்த உபதேசமும் நமக்காகத்தானே தவிர அவருக்கானது அல்ல! நம் அக மாற்றமே பாபாவுக்கு எப்போதும் முக்கியம்! பாபாவை பார்த்த.. அவர் பேசிய பரவச பொழுதில் தன் மனதில் கேட்க நினைத்ததை மறந்துவிடுகிறார் மங்களம்... பாபாவே அதனை நினைவுப்படுத்தி "உனக்கு என்ன வேண்டும் ?" எனக் கேட்கிறார்! ஒரு பரிபூர்ண நிறைவு நமாமுன்னே உனக்கு என்ன வேண்டும் எனக்கேட்கிற போது.. குறை யாவுமே மறந்து போய்விடுகிறது! குறை என்பது எப்போதும் மனதளவில் பதிந்திருக்கிற மாயக்கசடு.. அதில் ஆழமே இல்லை! ஆன்மா எப்போதும் நிறைவானது! ஆகவே பாபா கேட்டபிறகும் மௌனப் புன்னகையே வீசுகிறார் மங்களா.. மீண்டும் பாபாவே நினைவுப்படுத்துகிறார்! "உனக்கு என்னிடமிருந்து பாத நமஸ்காரம் வேண்டாமா?" பாபா கேட்கிறார்! தலை ஆட்டியபடியே அருகே செல்லும் மங்களாவை பாபா தடுத்து... "உன் கணவரோடு" என்கிறார்! அது தான் இறைவன் பாபா! இல்லற தர்மத்தை கணப்பொழுதும் இல்லறவாசிகளுக்கு நினைவூட்டியபடியே பாபா திகழ்கிறார்! 


"குழந்தைகள் எங்கே? ஓடு.. போய் கூட்டிட்டு வா!" என உத்தரவிடுகிறார் பாபா! பாபா ஒருவருக்கு மட்டும் ஆசீர்வதிப்பதில்லை ஒட்டுமொத்த குடும்பத்தையே ஆசீர்வதிக்க வேண்டும் என்றே தனது பேரன்பை பரவவிடுகிறார்! குடும்பமே பாபா சொல் வழி திகழ்ந்தால் மட்டுமே அந்தக் கொடுப்பனையும் அந்தக் குடும்பத்திற்கு வாய்க்கிறது! பாபா உத்தரவிட்ட உடனே மங்களாவின் இரண்டு குழந்தைகளும் ஓடி வருகின்றன...முதல் குழந்தையிடம் "உன் பெயர் என்ன?" எனக் கேட்கிறார்... பாபாவுக்கு தெரியாதா? ஆனாலும் பல பேரிடம் கேட்பார்.. சில பேர் சொல்வதற்கு முன்பே அவர்களின் பெயர்களை சொல்வார்.. இப்படி அளகிலா விளையாட்டுடையார் தான் இறைவன் பாபா! 

பாபா பெயர் கேட்ட உடன் "ஷாலினி" என்றது! 

அடுத்த குழந்தை .. அதற்கு நான்கே வயது ... அதனிடம் பாபா "உன் பெயர் என்ன ? எனக் கேட்கிறார்... அதுவும் பெயர் சொன்னதா? அது தான் இல்லை...அது சொல்லிய சொல்லே போதுமானது... பாபாவை எந்த அளவுக்கு அது புரிந்து வைத்திருக்கிறது என... 

"As if you don't know?" (ஏதோ உங்களுக்கு தெரியாதது போல கேட்கிறீர்கள் ) என மறுகேள்வி கேட்டது! அந்தக் குழந்தைகளின் வாய்வழியே வந்த கேள்வி தோய்ந்த பதில் மூன்றடியால் அளந்த இறைவன் பாபாவையே தனது ஒரே பதிலால் அளந்து விடுகிறார்! அந்தக் குழந்தைக்கு தெரிந்திருக்கிறது பாபாவுக்கு எல்லாம் தெரியும் என்பது! அதுதான் தூய பக்தி! தூய பக்தி ஞானத்தை நோக்கி எளிதாய் நடந்து விடுகிறது! 


அந்தக் குழந்தைக் கேட்ட கேள்விக்கு பாபா "ஜகத்மாயா ஜகத்மாயா" என அந்தக் குழந்தையை கட்டி அணைக்கிறார்! அவர் அழைத்த பெயரில் இரண்டு பொருள்.. ஒன்று அந்தக் குழந்தையின் பெயர் மாயா.. இன்னொன்று இப்படி நான் கேட்டதற்கு காரணம் நான் உங்களோடு விளையாடும் உலக (ஜகத்) மாயையே!" 


பாபா அந்தக் குழந்தையை கட்டிப்பிடித்ததோடு விடவில்லை "very happy very happy" (ரொம்ப சந்தோஷம் ரொம்ப சந்தோஷம்) என்கிறார்... தூய பக்தியை கண்டு இறைவன் பாபா உருகாமலா போய்விடுவார்! 


ஆதாரம் : ஸ்ரீ சத்ய சாயியின் இனியவை 400 | பக்கம் : 26 | ஆசிரியர் : சாயி சரஜ் (சரோஜினி சாயிராம்)


குழந்தைத்தனம் (அறியாமைப் பிடிவாதம்) வேறு.. கள்ளம் கபடமற்ற குழந்தையாய் இருப்பது வேறு! அந்தக் குழந்தை கள்ளம் கபடற்று இருந்ததில் இறைவன் பாபாவை தனது இதயத்தில் ஆழமாய்ப் பதிவு செய்திருக்கிறது! ஆகவே தான் பாபாவிடம் நமக்காக நாம் எதையும் கேட்க வேண்டியதே இல்லை... தாய்க்கு என்ன தரவேண்டும் ஒரு குழந்தைக்கு என்பதைக் காட்டிலும் தெள்ளத் தெளிவாய் நம்மை உணர்ந்து வைத்திருப்பவர் பாபா! நமக்கு நிகழ்வது எதுவுமே நம் நன்மைக்கே பாபா அரங்கேற்றுகிறார்! துன்பம் என்பது துன்பமே இல்லை அது அகமாற்றத்துக்கான சிகிச்சை! பாபாவே நம் கனவிலோ வேறு வகையிலோ வந்து "உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டால்?" "எனக்கு நீ என்ன தந்தாலும் தராவிட்டாலும்.. எனக்கு நீயே போதும் சுவாமி!" என்று பக்தியே அப்படி பதில் சொல்லும்! அப்பேர்ப்பட்ட பக்தியை நாம் அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்!


   பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக