தலைப்பு

வெள்ளி, 16 டிசம்பர், 2022

சித்ராவதி மணலை ரவையாக்கி படுகையை அவையாக்கி பாபா அளித்த ரவாலாடு!

காணக்கிடைக்காத பாபாவின் இளமைக் கால மகிமைகள் கேட்டாலே இனிக்கும்.. வாசித்தாலே சிலிர்க்கும்.. கண்ணனே தான் என்பதை கணப்பொழுதும் வாழ்ந்த ஸ்ரீ சத்ய சாயி கண்ணனின் அதிசய லீலைகளின் ஒன்று இதோ...


18 வயது பால பாபாவுக்கு நிரம்பிய போதே உடுமலை பாலபட்டாபி முதல் சில பக்தர்கள் பாபாவை தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றிருந்தனர்... பால் வடியும் முகம் பாபாவுக்கு என்று சொல்வது விட அமுதம் வடியும் வதனம் என்றே சொல்ல வேண்டும்.. காரணம் பாபா மனிதன் அல்ல இறைவன்!

அந்தக் காலத்தில் பாபாவை தரிசிக்க வரும் பக்தர்கள்.. எப்போது மாலை நேரம் ஆகும் என்று காத்திருப்பார்களாம்... மாலை நேரத்து மயக்கம் இல்லாமல் மாலை நேரத்து லீலைக்கான காத்திருப்பு அது! புட்டபர்த்தி அப்போது குக்கிராமம்! நேரடி கடிதப் போக்குவரத்து கூட கிடையாது! மீடியா இல்லை வீடியோ எடுக்க... வந்திருந்த அத்தனை பக்தர்களின் கண்களும் பால பாபா நிகழ்த்திய லீலைகளை விண்மீன்களாய் கண்டு ஜொலித்தன...!


மாலையும் வந்தது... மாலை வந்தாலே லீலை தான்! சித்ராவதி நதி மணல் கொடுத்து வைத்திருந்தது! கங்கைக் கரையில் கூட சிவபிரானாக பாபா அத்தனை அதிசயங்களை நிகழ்த்தியதில்லை... ஆனால் கலியில் அதிலும் சித்ராவதி மணல் படுகையில் எத்தனை விசித்திரங்கள், விநோதங்கள்! வேறொரு உலகமே சித்ராவதி மணலாய் சுருங்கிவிட்டது போலவே தெய்வீக உணர்வு மேலெழும்! அந்த நதி ஆனந்தமாய் ஓடியது காற்றோட்டத்தால் அல்ல கடவுள் சாயியின் கருணையோட்டத்தால்...!

வைரம் விற்கும் கடைகளில் கூட்டம் எப்போதுமே குறைவு.. அதிலும் பாபா நட்சத்திரங்களையே பரிசளிக்கும் இறைவன்! ஆக குறைந்த பக்தர்களே அந்தக் காலத்தில் வந்திருந்தனர்... ஒருநாள் மாலை 5 மணி... அப்போது பாபா காவி அணியவில்லை... ஆனால் அந்தி நிறமோ காவி அணிந்து இறைவன் பாபாவின் சித்ராவதி விஜயத்திற்காக காத்திருந்தது! நதிமணலில் பாபா நடுநாயகமாக அனைவரும் பாபாவை சூழ்ந்திருக்கின்றனர்... 


"இப்போது மணி 5, டவுனில் இருந்தீர்கள் என்றால் ஓட்டலுக்குச் சென்று விதவிதமாக பலகாரம் சாப்பிட்டிருப்பீர்கள்... இந்தக் காட்டில் என்ன கிடைக்கும்? " என்று சிரித்துக் கொண்டே மணலை எடுத்து உருட்டினார்.. ஒரே ஆச்சராயம்... அது வெண்ணெய் ஆக உருமாறியது... இறைவனால் ஒரு பொருளை உருவாக்கவும் முடியும் அழிக்கவும் முடியும், மாற்றவும் முடியும், மறைக்கவும் முடியும்... ஆக இறைவன் பாபா ஐந்தொழிலான்... அதன் sample தான் வெளி உலகம் உணர நிகழ்ந்து கொண்டிருந்தது! 

அந்த வெண்ணெயை எடுத்து ஸ்ரீ சத்ய சாயி கண்ணன் ஒருவர் கையில் கொடுக்கிறார்! துவாபர யுகத்தில் சுவாமி வெண்ணெயை எடுத்தாரே அன்றி கொடுத்ததில்லை... யுக மாற்றம் இறைவனுக்கே உருவாக்கி இருக்கிறது அக மாற்றம்!!!

மறுபடியும் மணலை எடுத்து பாபா கையில் பிறு பிறு என திரிக்கிறார்‌... அது ரவையாகிறது... சர்க்கரை ஆகிறது... இரண்டையும் சேர்த்துக் கட்டி கையால் உருட்டுகிறார்... அது ரவா லடு ஆகிறது! ஒரே ஒரு லவா லாடு... அதைத் தன் கரத்தால் கொடுக்கக் கொடுக்க அது வளர்ந்து அனைவருக்கும் தலா ஒரு ரவா லாடு... இப்படி 30 ரவா லாடு! அதைச் சாப்பிடும் பேறு பெறுகிறார்கள் வந்திருந்த ஆதி காலத்து பக்தர்கள்.. அதில் உடுமலை பாலபட்டாபியும் கொடுத்து வைத்த பக்தர்... அவர் தனது உள்ளத்துப் படகால் பாபாவைச் சுமந்து தன்னையே முக்திக்கரைக்கு செலுத்திய குகனாய் திகழ்கிறார்! குருவாய் அருள்வாய் குகனே என்பதற்கு பாலபட்டாபி வாழ்வும் ஓர் உதாரணமே! ஆதிகாலத்து பக்தர்கள் எவ்வாறு பாபாவிடம் பக்தி செலுத்த வேண்டும் என்பதில் நமக்கு குருவாக திகழ்கிறார்கள்! 

அந்த ரவா லாடு ருசி அற்புத ருசியாம்! இருக்காதா?  தாங்கள் அனுபவிக்க முடியவில்லையே என தேவர்கள் கூட பொறாமைப்படும் அளவிற்கு பூமியில் சாயி கண்ணன் நிகழ்த்திய லீலை ஒன்றா? இரண்டா?


ஆதாரம் : ஸ்ரீ சத்ய சாயியின் இனியவை 400 / பக்கம் : 18 / ஆசிரியர் : சாயி சரஜ் (சரோஜினி சாயி ராம்)


பாபா இறைவன் என உணர்ந்து விட்டால்... பாபாவின் இறைத்தன்மை ஒவ்வொரு அணுவிலும் வெளிப்படுகிறது என்பதை எளிமையாக உணர்ந்து கொள்ளலாம்! பாபாவின் சிருஷ்டிகள் மினியேச்சர் போலவே காரணம் அவர் பிரபஞ்சத்தையே சிருஷ்டித்த பரம்பொருள்! ஆக பாபா சதா தன் கருணையை வெளிப்படுத்துகிறார்.. அதை நாம் லீலைகள் , மகிமைகள், அற்புதங்கள் என ஒவ்வொரு பெயர் சொல்லி அழைக்கிறோம்! அந்த ரவா லாடு பசிக்காக பாபாவால் பக்தர்களுக்கு அளிக்கப்பட்டது தான்! பாபா இறைவன் என்பதால் மணலில் இருந்து மட்டுமல்ல ஆகாயத்திலிருந்தும் எதையும் எடுத்துத் தர இயலும்...! இறைவன் பாபா சிருஷ்டித்துத் தருவது ஆச்சர்யமே இல்லை.. ஆனால் நமக்கும் கருணையோடு அதைத் தருகிறாரே என்பது தான் இன்றளவுக்கும் ஆச்சர்யம்!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக