தலைப்பு

திங்கள், 12 டிசம்பர், 2022

இராமலிங்க அடிகளார் உணர்த்திய அருட் பெருஞ்ஜோதியை பாபாவிடம் உணர்ந்த வள்ளலார் பக்தர்!

வெவ்வேறு மகான்கள் வெவ்வேறு வடிவிலான போதனைகள் ஆனால் அவர்கள் காட்டிய வழிமுறைகள் யாவும் ஒரே பரப்பிரம்மத்திடமே கொண்டு சேர்க்கிறது.. அத்தகைய பரப்பிரம்மமான பாபாவின் மகிமைகள் ஓரிரண்டு சுவாரஸ்யமாக இதோ...


15 வயதில் இருந்தே இன்பக்கவி கோவிந்தராஜன் வள்ளலாரின் சன்மார்க்க சங்கத்தில் சேர்ந்து வள்ளலார் நெறி ஏற்றவர்! ஜாதி பேதமற்று கொல்லாமை பின்பற்றி இறைவன் ஜோதி வடிவமே என்பதை உணரும் உன்னத மார்க்கம் வள்ளலார் மார்க்கம்! முதியவரான அவர் 1000 சொற்பொழிவுகளுக்கும் மேல் வள்ளலார் நெறியை பரப்பி கொண்டிருக்கிறார்! இப்படிப்பட சன்மார்க்க நெறியாளரான பெரியவர் இன்பக்கவி கோவிந்தராஜன் நூலாசிரியரிடம் தன் இதயம் திறந்து அருட்பெருஞ்ஜோதி இறைவனான ஸ்ரீ சத்ய சாயி பற்றி இதயம் திறந்து பேசுகிறார்...


"என் வீட்டில் ஒரு அறை நிறைய அலமாரிகள் முழுவதும் திரு அருட்பா முதலிய புத்தகங்கள் முழுவதும் அடுக்கி வைத்திருக்கிறேன்! அம்மா ... (நூலாசிரியரை நோக்கி) இவைகள் எல்லாம் படித்தேன்... 1000 க்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை நிகழ்த்தி இருக்கிறேன்...ஆனால் உனக்கு தெரியுமா? இவைகள் எல்லாம் வெறும் ஏடுகளாக தங்க மலர்களாகவே இருந்தன... பகவான் பாபாவை அறிந்த பின்னரே , அந்த இனிமையால் கருணையால் இந்தத் தங்க மலர்கள் இனிய மணம் பெற்றதையே உணர்கிறேன்! " எனச் சிலிர்க்கிறார்!


எவ்வளவு கல்வி அறிவு பெற்றிருந்தாலும், சாயி என்ற இனிய இறைவனை உணர்ந்த பின்னரே அவ்வறிவு மணம் பெறுகிறது என்பதை நம்மால் உணர முடிகிறது!  பெரியவர் கோவிந்தராஜனின் மனதில் இனிய இறையியல் ஊட்டப்பட்டப் பின்னர் தான் திரு அருட்பா எனும் தங்க மலர் மணமே பெற்றதாக அவர் உணர்கிறார்...அதை அவர் தத்ரூபமாக கண்முன் கண்டதே கண்டபின் உணர்ந்ததே உணர்ந்தபின் அனுபவித்ததே அதற்குக் காரணம்! 


"மண்ணிலே உடலெடுத்து வந்த பிறப்பிலே நான் படித்ததிலோ, அறிந்ததிலோ, அறியப்போவதிலோ இந்த பாபாவை போல படைப்பிற்கு இனிமையூட்டும் இப்படி ஒரு இனிய அற்புதப் பிறப்பை நான் கண்டதே இல்லை!" என்று அந்தப் பெரியவர் முத்தாய்ப்பாய் பேசி முடித்தது நூலாசிரியருக்கே புல்லரிக்கச் செய்கிறது! தினசரி "அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை" என மந்திரம் போல் அதைச் சொன்ன அந்தப் பெரியவர் பாபாவை தரிசன மாத்திரத்திலேயே நேருக்கு நேராக உணர்ந்து அனுபவித்தது தான் இதற்கெல்லாம் அடிப்படை காரணமாக திகழ்கிறது! 


இப்படி பல்வேறு நூதன அனுபவங்களை நூலாசிரியர் பதிவு செய்வதில் அவரின் பெரிய உழைப்பும் பக்தியும் அடங்கி இருக்கிறது! அது போல் நூலாசிரியர் ஒருமுறை கணேஷ் கேட் அருகே பூக்கடையில் பாபாவுக்காக ரோஜாப்பூ வாங்கிக் கொண்டிருந்த போது திடீரென "தேவுடு தேவுடு" என பலர் உடல் சிலிர்க்க அதனால் குரல் சிலிர்க்க திரும்பிப் பார்க்கிறார்.. பாபா நூலாசிரியர் வாங்கிய அதே சிகப்பு ரோஜாப்பூக் கலர் காரில் தரிசனம் தர வந்த வண்ணம் இருக்க.. அந்த பூக்காரம்மா தன் கூடைப் பூவை அப்படியே பாபாவின் கார் மேல் பரவசமாய் அள்ளி வீச... புல்லரிக்கிறது நூலாசிரியருக்கு... காரணம் சில உன்னத பக்தர்கள் பணத்திற்காக பூ விற்பனை செய்யவில்லை... பாபா மேலான பக்திக்காக பூ விற்பவர்கள் அவர்கள்!


பிரசாந்தி சேவைக்கு நூலாசிரியர் அடிக்கடி சென்று வருவார்... அது 2002 ஆம் ஆண்டு.. அப்படி செல்லும் மகிளா சேவாதளர்களுக்கு பாபா தன் கையால் சேவையின் இறுதி நாளில் குங்கும பிரசாதம் வழங்குவார்.. இதைப் பல முறை பெற்றிருந்த போதும்... அந்த முறை நூலாசிரியர் மறந்துவிடுகிறார்... அவரது மகள் வேறொரு குங்குமம் தந்த போதும் திருப்தி ஏற்படவில்லை... தவறிவிட்டோமே என்ற உணர்வோடு இல்லம் வருகிறார்‌.. ஒரு மாதம் செல்கிறது... அதனை மறந்தே விடுகிறார்... ஒரு கவர் பிரசாந்தி நிலையத்திலிருந்து வருகிறது... பிரிப்பதற்கு முன்பே குங்கும மணம்... அதைப் பிரிக்கிற போது ... குங்குமமாய் சிவந்து போகிறது நூலாசிரியர் இதயக் கனிவு...பாபா அனுப்பி வைத்த குங்குமம் அது.. பக்தர்கள் மறக்கலாம்... ஆனால் பக்தர்க்கானதை இறைவன் எதையும் என்றும் மறப்பதே இல்லை!


பாபா நிகழ்த்தி வைக்கிற கல்யாணத்திற்கு அழைப்பு வருகிறது... நூலாசிரியர் செல்கிறார்...அவரது சிநேகிதி ராஜா குடும்பத்து இந்திரா ராஜு... அப்போது தான் பிரசாந்தா சேவையில் இருந்து இல்லம் திரும்பிய நூலாசிரியர் 2 நாள் கூட இல்லாமல் மீண்டும் பர்த்திக்கு கல்யாண கோஷ்டியோடு பயணம் மேற்கொள்கிறார்... பழைய மந்திரம் தற்போது கல்யாண மண்டபம்... அதில் பாபா தலைமையில் திருமணம்! பாபா மிக அருகே நூலாசிரியரின் எதிரே அமர்கிறார்! திருமாங்கல்யம் மஞ்சள் கயிறோடு மற்றும் மஞ்சள் அட்சதையும் சிருஷ்டித்து பாபா ஆசீர்வாதம் வழங்கிய திருமணத்தை இரு விழியால் கண்டு ஆனந்தம் அடைகிறார்... பாபாவின் சிருஷ்டி மஞ்சள் அட்சதை நூலாசிரியர் தலைமேலும் விழாமலா இத்தனை நூல் எழுத்துச் சேவையை அவரால் புரிந்திருக்க இயலும்!!


(ஆதாரம்: ஸ்ரீ சத்ய சாயியின் இனியவை 400 | பக்கம் : 38 -51 | ஆசிரியர் : சாயி சரஜ் (சரோஜினி சாயிராம்)


இறைவன் பாபாவின் சிருஷ்டியை காண்பதும்... சிந்தையில் காண்பதும் பேரானந்தமே! அவரின் கர சிருஷ்டி வர சிருஷ்டி அது வெறும் விபூதியை மட்டுமல்ல விரிந்த பிரபஞ்சத்தையே உருவாக்கியது! வெறும் மஞ்சள் அட்சதை மட்டும் தூவவில்லை நம் மேல் அவருக்கான பக்தியையும் அதுவே தூவியது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக