தலைப்பு

வியாழன், 22 டிசம்பர், 2022

தனது பிரேம சாயி அவதாரத்தை 1970'களிலேயே உரைத்த பாபா!

காலம் மூன்று... அதைக் காணும் கண்கள் மூன்று... அவை தரிசிக்கும் சாயி அவதாரங்கள் மூன்று... என்கிற ஆழமான உணர்வில் பக்தர்கள் இப்போதிருக்க... அதனை 1970 களில் பிரசாந்தி நிலையத்திலேயே பாபா தனது பிரேம சாயி அவதாரத்தை பதிவு செய்திருக்கிறார் எனும் நெகிழ் நிகழ்வு சுவாரஸ்யமாக இதோ...


ஆதிகாலத்து பக்தர்கள் சூழ்ந்திருக்க பாபா பாத மந்திரத்தை விடுத்து பிரசாந்தி நிலையத்தில் ஆழ்ந்திருக்கிறார்... பாத மந்திரம் என்பதற்கு பழைய மந்திரம் என்று பொருள்.. இடம் சிறிதே ... ஆனால் அதில் பாபா நிகழ்த்திய மகிமைகள் உணர்த்திய சத்தியம் எண்ணிக்கையில் அடங்காதது! வாமன வடிவ மந்திரத்தில் பாபா உணர்த்திய விஸ்வரூப லீலைகள் அநேகம்... போகிற போக்கில் அவர் உதிர்த்த பிரபஞ்ச சத்தியம்... சிலருக்கு புரிந்தது... பலருக்கு ஆச்சர்யமே விளைந்தது! ஒரு சக தோழனாக... சக மனிதராக பால பாபா அந்த பக்தர்களோடு பழகியது நம்புவதற்கு அரிய காலங்கள்...

வயதானவர்களுக்கு பால பாபா ஒரு குழந்தை.. ஒரே வயது கொண்டவருக்கு அவர் தோழன்... இப்படி ஒரு காலம் மீண்டும் வருமா? என்கிற அளவிற்கு அருள் மழையில் தொப்பலாக நனைத்தனர் கொடுத்து வைத்த அந்த ஆதி காலத்து பக்தர்கள்! அவற்றை வாசிக்கவாவது இப்போது இயல்கிறதே என்கிற நெகிழ்வோடு இறைவன் பாபாவுக்கு நன்றி சொல்லவேத் தோன்றுகிறது! அதிலிருந்து பிரசாந்தி நிலையம் அமைத்த பிறகு பாபாவின் தன்னலமிலா தூய மனித குல சேவை பரந்து விரிந்தது... 1963 ஆம் ஆண்டு தானே சிவசக்தி அம்சம் என பாபா எடுத்துரைத்த குரு பூர்ணிமா பொழுதுகள்... கேட்பவரின் கண்களில் கண்ணீர் விழுதுகள்‌.. பிறகு 7 ஆண்டுகள் கடந்து போகின்றன...


அது 1970'துகள்... ஒரு நாள்... இறைவன் பாபா ஆழ்ந்திருக்க.. பக்தர் சூழ்ந்திருக்க...அப்படி ஒரு சமயம்... ஒரு வயதான பெண்மணி... வேறு யாருமல்ல கண்ணம்மா என்கிற கர்ணாம்பா ராமமூர்த்தியின் தாயார் தான் அவர்... இந்த பரமபக்தை கர்ணாம்பா ராமமூர்த்தியே "ஸ்ரீ சத்ய சாயி ஆனந்ததாயி" எனும் பாபா பற்றிய மிக முக்கிய நூல்களில் ஒன்றின் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது! ஆக.. அந்த கண்ணம்மாவின் தாயார் முகத்தில் கவலை ரேகை! 

எதையோ நினைத்துக் கவலைப்படுகிறார் என பிறர் நினைக்க.. எதை நினைத்து கவலைப்படுகிறார் என்பதை பாபாவே அறிகிறார்... அப்போதல்ல இப்போதும் அவ்வாறே... பக்தர்களின் ஆழமான இதய உணர்வுகளை துல்லியமாக உணர்ந்து வைத்திருப்பது இறைவன் பாபா ஒருவரே!

ஆகவே அந்த பெண்மணியின் அருகில் சென்று தன்னைச் சுட்டிக்காட்டி


“இந்தப் பழம் எதிர்காலத்தில் மைசூர் ராஜ்யத்தில் சன்னப்பட்டனா என்ற ஏரியாவில் பிறக்கும். நீ ஏன் கவலைப்பட்டுக் கொண்டேயிருக்கிறாய்? உன் இரண்டு குழந்தைகளையும் காப்பது என்னுடைய பொறுப்பு. நீ இறந்தால் உனது சொத்துக்களை அவர்கள் இருவருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுப்பேன். இனி நிம்மதியாக இரு”

 என்கிறார் மிகக் கருணையோடு பாபா! 


சிறிது நேரம் கழித்து, “நாமகிரியம்மா, ராதாம்மாவும், கண்ணம்மாவும் யாருடைய குழந்தைகள்?” என்று கேட்டார். அதற்கு அவர், “என் குழந்தைகள்” என்றார். அதற்கு உடனே பாபா "என்ன உன் குழந்தைகளா...? ஓ?" என மறுவினா தொடுக்கிறார்... இறுதியில் பாபாவே "ஓஹோ...‌அப்படியா....?அவர்கள் என் குழந்தைகள் என்றுதானே நினைத்திருந்தேன்!" என்கிறார்... அதைக் கேட்ட அந்தப் பெண்மணிக்கு கண் பரப்பில் கண்ணீர் நிறைகிறது... பாபாவின் கருணையை எண்ணி உருகுகிறார்! ஒரே நிகழ்வில் தன் அடுத்த அவதாரம் பற்றிய சத்தியத்தையும்... எல்லாம் தனது குழந்தைகளே.. ஆகவே உறவுகளிடம் பற்றில்லாமல் இரு! எனும் ஆன்ம ஞானத்தையும் அந்தப் பெண்மணிக்கு அளிக்கிறார்! 


3/12/2001 அன்று  நூலாசிரியர் 5 மணிக்கு எழுந்து வெளியே நடை பயிற்சிக்குச் செல்கிறார்... அப்போது 80 வயது பெரியவர் ஒருவர்.. நல்ல உயரம்.. திடகாத்திர தேகம்... நூலாசிரியரின் அருகே வந்து... "தங்கம்" என்று சொல்லி கையை நீட்டுகிறார்... நூலாசிரியர் சில சில்லறைக் காசுகள் தர.. ஆசிவழங்கி விட்டு... சென்று கொண்டிருக்கும் ஒரு சைக்கிளில் ஏறி அமர்ந்து கொள்கிறார்... 2 நொடி கூட கடந்திருக்காது... அப்படியே அவர் நூலாசிரியரின் கண்முன்னே மறைந்து போகிறார்! காலைப் பனியை விட அந்த அற்புதச் சம்பவம் நூலாசிரியருக்கு இன்னும் அதிக உறைதலைத் தருகிறது..‌அது கனவு இல்லை.. காரணம் பையின் சில்லறைகள் குறைந்திருக்கின்றன... பிறகே வந்து எதிர்தோன்றி அருள் செய்து கண்முன்னே மறைந்து போனது ஷிர்டி பாபாவே என்பதை உணர்கிறார்... ஸ்ரீ சத்ய சாயி பங்காரு என்பார்... ஸ்ரீ ஷிர்டி சாயி தங்கம் என்கிறார்... ஆக சொல்லின் பொருள் ஒன்றே!  ஸ்ரீ ஷிர்டி பாபாவே சில பக்தர்களிடம் இருந்து சில்லறைகள் வாங்கி அதனை நன்றாக தேய்த்து கர்மாவை அழிக்கும் ஒரு நூதன முறையைப் பின்பற்றுகிறவர்... ஆக ஸ்ரீ சத்ய சாயி பக்தர்களுக்கு ஸ்ரீ ஷிர்டி சாயி அருள்புரிவதும்... ஸ்ரீஷிர்டி சாயி பக்தர்களுக்கு ஸ்ரீ சத்ய சாயி அருள் புரிவதும் சகஜமே! காரணம்-: இரு சாயியும் ஒரு சாயியே!

பாலை திரட்டிப் பாலாக உண்டாலும் , பால்பாயாசமாக உண்டாலும் இரண்டும் ஒரே பாலே ஒரே இனிமையே என்பது போலவே...! 


(ஆதாரம் : ஸ்ரீ சத்ய சாயியின் இனியவை 400 | பக்கம் : 122 | ஆசிரியர்: சாயி சரஜ் (சரோஜினி சாயிராம்)


சாயி அவதாரங்களே கலியின் வன்மைக்கான ஒரே நிவாரணம்! தன்னலமில்லா தர்ம சிந்தனைகளை நம்முள் வளர்ப்பதற்கு சாயி அவதாரங்களே ஒரே உபாயம்! ஆன்ம ஞானம் அடைவதற்கான ஒரே மார்க்கம் சாயி அவதாரங்களின் மார்க்கமே! பாபா விரைவிலேயே தனது பிரேம அவதார பிரகடனத்தை அறிவிப்பார்! அதற்காக நாம் பக்தியோடு காத்திருப்போம்! அதுவரை பாபாவின் பாதங்களில் பற்றற்ற வாழ்வு நடத்தி ஆன்ம ஞானத்தில் பூத்திருப்போம்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக