தலைப்பு

வெள்ளி, 9 டிசம்பர், 2022

சீசனே இல்லாத போதும் பாபா விளைவித்த மாங்கனி!

பல்வேறு விதமான பக்தர்களுக்கு பாபா அளித்த பல்வேறுவிதமான கனவு அனுபவங்களும்...‌அது வெறும் கனவல்ல நிஜம் என்று உணரும்படியான நிகழ்வுகளும் சுவாரஸ்யமாக இதோ...


இளம்வயது பால பாபா உரவகொண்டாவில் அண்ணன் சேஷமராஜு வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்தபோது எதிர் வீட்டில் இருந்தவர் சாந்தலஷ்மி...அவரின் தந்தை பாலபாபா படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர்... அவர்கள் வீட்டிலேயே பாபா எப்போதும் விளையாடுவார்! அவர்களுக்கும் பாபா தனது தோள்களில் தண்ணீர் சுமந்து வருவார்... அவர்கள் வீட்டிலேயே பஜன் பாடுவார்.. சுந்தரத் தெலுங்கு கொஞ்சும் இறை நாமங்களில் தோய்ந்த மிக எளிய பஜன்கள்! பால பாபா தமது மதுரக்குரலில் பாடுகையில் அங்கே அமர்ந்திருந்தார்கள் மெழுகாய் உருகுவார்கள்... பஜன் முடிந்த பிறகு உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு தன் திருக்கரத்தால் தானே பிரசாதம் வழங்குவார்... அதே துவாபர யுகத்துக் கள்ளச்சிரிப்போடு யாரெல்லாம் பிரசாதத்திற்காக மட்டும் வந்திருக்கிறீர்கள்...இங்கே வாருங்கள்.. என அவர்களையும் அழைத்து பிரசாதம் வழங்குவார்! முழுக்க முழுக்க கிருஷ்ணக் குறும்பு!

அப்படி மட்டுமல்ல தனது பக்தர்களுக்கு கனவிலும் நிறைய அனுகிரகமும் ஆசியும் பிரசாதமும் வழங்கி இருப்பதை நூலாசிரியர் ஒவ்வொரு முத்தாகக் கோர்க்கிறார்!


15/12/2001 அன்று நூலாசிரியர் வீட்டிற்கு வரும் தேவி தனது கனவு அனுபவத்தைப் பகிர்கிறார்...

"நீ ஏன் இப்போதெல்லாம் சரியாகவே எனக்கு சேவை செய்வதில்லை... " என்று 4 மணிக்கு தேவியின் கனவில் வந்த பாபா கேட்க... "சரி இந்தா" என்று கமகமக்கும் ஒரு மாம்பழத்தை கையில் கொடுத்து... இதைச் சாப்பிட்டு உனக்கு குழந்தை பிறக்கும்!" என்கிறார்! 

விடிந்து கனவு கலைந்து எழுந்து வந்தால் பாபா கனவில் கொடுத்த அதே பழத்தின் மாங்கொட்டை வாசலில் கிடக்கிறது.. அந்த இடம் முழுக்க மாம்பழ மணம்.. உடல் சிலிர்க்கிறது தேவிக்கு... உருக்கம் ஏற்படுகிறது அவளுள் பொதிந்த ஆவிக்கு..(ஆன்மாவுக்கு)...‌அது டிசம்பர்... மாங்கனிகள் எங்குமே முகம் காட்டாத காலம்... கனவிலும் வந்து.. அந்த கனவும் நிஜம் என உணர்த்த இறைவன் பாபா காட்டிய மாங்கனிக் கருணை அது!


நூலாசிரியருக்கு நன்கு பரிட்சயமான ஒரு பெண்மணி உடல் நலம் சரியில்லாமல் படுத்துக் கொண்டிருக்க... அன்றிரவே கனவில் பாபா தோன்ற... நெற்றியில் அந்தப் பெண்மணிக்கு சிருஷ்டி விபூதி இடுகிறார்... கையில் ஒன்றை சிருஷ்டித்துக் கொடுத்து கையை மூடியபடி இதைச் சாப்பிடு சரியாகிவிடும் என்கிறார்! மறுநாள் காலை அந்த பெண்மணி எழுகையில் கையைத் திறக்க... கையுள் உலர்ந்த திராட்சைப் பழங்கள்... கனவு நினைவுக்கு வருகிறது... கையோடு சேர்த்து உடம்பும் சிலிர்க்கிறது... பாபா அளித்த பிரசாதத்தை வாயில் போட்டுக் கொள்ள... அது அமுதத்திற்கே போட்டி போடும் அளவிற்கு எங்கேயும் உண்ணாத திதிப்பு அவள் இதயத்தையும் சேர்த்து பாபாவின் கருணை உண்கிறது!

அதோடு மட்டுமில்லை அந்தப் பெண்மணி எழுந்து நிலைக்கண்ணாடி பார்க்க.. பாபா கனவில் அந்தப் பெண்மணிக்கு இட்டுவிட்ட விபூதி நெற்றியில் அப்படியே இருக்கிறது!


நூலாசிரியரின் கனவிலும் பாபா தோன்றி இருமுறை அமிர்தச் சொட்டுகளை அவர்களது வாயில் விடுகிறது... அந்தப் பரவச கனவுப் பொழுதுகளையும் அவர் பதிவு செய்கிறார்... "உனக்கு முன்பே கொடுத்துவிட்டேன் அல்லவா...!" என பாபா கேட்கிற போதே அது இரண்டாவது முறை என உணர்ந்து கனவிலேயே நூலாசிரியர் புல்லரித்துப் போகிறார்!


சுவாமிநாதன் எனும் ஒருவர் தன் மகனுக்கு காய்ச்சல் என்று சொல்லி நூலாசிரியர் வீட்டிற்கு வந்து விபூதி கேட்க... பாபா விபூதியை அவரும் தர.. அது குணமாகி பாபா மேல் சுவாமிநாதனுக்கு பக்தியும் வரவழைத்து விடுகிறது! 

ஒருமுறை நூலாசிரியர் வீட்டிற்கு சுவாமிநாதன் வந்து.. "பாபா இங்கே வந்திருந்தாரா?" என அவர் கேட்க... "என்ன விஷயம்" என நூலாசிரியரின் மறுகேள்விக்கு ...

பாபாவை கனவில் தரிசனம் செய்தேன்... ஒரு கல்யாண மண்டபம்... அதில் ஒரு ஓரத்தில் சோஃபாவில் லுங்கி பனியன் சகிதமாக அமர்ந்திருந்தார் ஒருவர்... "என்னை அடையாளம் தெரிகிறதா?" என அவர் கேட்க... இறைவன் பாபாவின் ஆரா கேசம் அவரை அடையாளம் காட்டிவிட...

"நீங்கள் எந்த உடையில் வந்தாலும் கண்டுபிடித்துவிடுவேன்!" என்று சுவாமிநாதன் சொல்ல..

"நான் யார் சொல்?" என இறைவன் பாபா குறும்போடு கேட்க...

"நீங்கள் பாபா... எனக்கு நன்றாக தெரியும்... ஆனால் முன்பு தெரியாது! ஒரு ஆன்ட்டியின் மூலமாகத் தான் அறிந்து கொண்டேன்!" என நூலாசிரியரை சுவாமிநாதன் குறிப்பிட..

"அந்த ஆன்ட்டியின் வீட்டிலிருந்து தான் வருகிறேன்!" என்கிறார் இறைவன் பாபா!


(ஆதாரம் : ஸ்ரீ சத்ய சாயியின் இனியவை 400 | பக்கம் : 31 - 36 | ஆசிரியர் : சாயி சரஜ் (சரோஜினி சாயிராம்)


இறைவன் பாபா எந்த ஊடகம் வழியாகவும் நம்மிடையே வருவார்! ஆகவே ஸ்ரீ சத்ய சாயி பக்தர்களுக்கு விழிப்புணர்வும் பக்தியும் அதிகம் வேண்டும்.. அன்னப்பறவை போல் எது பால்? எது நீர்? என பிரித்தறியும் ஆற்றலும் நமக்கு அவசியம்! பாபா தோன்றிடும் கனவு... கனவல்ல நிஜம்! அதுபோல் எவ்வுடை ஆயினும் இறைவன் பாபாவுக்கு எல்லாம் ஒன்றே... நமக்கு உடம்பில் உடைகள்... பாபாவுக்கோ உடம்புகளே உடைகள் தான்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக