இறைவன் பாபாவால் நிகழ்த்தப்படும் அனுபவங்கள் ஏராளம்... குறிப்பாக அதில் நூதன அனுபவங்கள் பரவசங்கள் மிகுந்தவை... அவ்வனுபவங்கள் நமக்கு வழிகாட்டிகளாகவும் அமைகின்றன... அதில் ஓரிரண்டு சுவாரஸ்யமாக இதோ...
மேல்நாட்டைச் சேர்ந்தவர் கே... அவர் இறைவன் பாபாவிடம் பலவித அனுபவங்களைப் பெற்றவர்... ஒரு முறை பாபாவின் அருகே அமர்ந்திருக்கும் பாக்கியம் பெறுகிறார்... அப்போது அவர் பெற்ற பாபாவின் ஸ்ரீ முக தரிசனம் வார்த்தைக்கு அப்பாற்பட்டது! பாபாவின் முகமெங்கும் தேஜோமய பேரொளி கரை புரண்டு ஓடுகிறது... அதை எப்படியேனும் பதிவு செய்திட வேண்டும் என்ற ஓர் உணர்வு பெற்று அதை புகைப்படம் எடுக்க கே முயல்கிறார்... ஆனால் எவ்வளவு முயன்றும் அவரால் அதை பதிவேற்ற இயலவில்லை... அப்படி எடுத்துவிட்டால் அதையே பார்த்துக் கொண்டே இருக்கலாமே என்ற நியாயமான உணர்வு தான்... ஆனால் பாபாவின் சங்கல்பமின்றி எதுவும் நிகழாது..அப்படியே அந்தப் புகைப்படப் பதிவும் நிகழவில்லை...
ஒரு மாதம் கடந்து ஒரு விடியற்காலை இறைவன் பாபாவோடு பயணிக்கும் வாய்ப்பு பெறுகிறார்! அந்தப் பயணத்திற்கு பாபாவே காரணமாகிறார்... பாபா கூப்பிட்டே கே அவரோடு பயணிக்கிறார்... பாபா கூப்பிடாமல் எவர் பாபாவிடம் இதய நெருக்கம்... ஆன்ம அணுக்கம் பெற இயலும்? அதுவும் விமானத்தில்... அதிலும் பாபாவின் அருகில்... பயணம் தொடர்கிறது... அப்போது தரிசனம், ஸ்பரிசனம் (பாபா தொடுகை) , சம்பாஷனம் (பாபா உரையாடல்) யாவற்றையும் அனுபவிக்கிறார்! அந்த மெய் சிலிர்க்கும் நேரத்தில் ஒரு கவரை பாபா கே'யிடம் தருகிறார்! ஆச்சர்யப்பட்டு அந்தக் கவரை கே பிரித்துப் பார்க்க.. மேலும் ஆச்சர்யப்படுகிறார் கே... ஆம் அது கே எடுக்க நினைத்து தவறவிட்ட அன்றைய தருணத்தின் புகைப்படம்... கே தரிசித்து வியந்த பாபாவின் தேஜோ மய
முக தரிசனத் தருணம்... மிகவும் வியப்படைகிறார் கே... அவரிடம் பாபா "இது ஃபோட்டோ கிராஃபரே இல்லாமல் எடுத்த புகைப்படம்" என்று வியப்புக்கு மேல் வியப்பை தருகிறார்!
அது கே அவர்களுக்கே நன்கு தெரியும்.. காரணம் அன்று புகைப்படம் எடுக்க விளைந்தது அவர் ஒருவரே... அதுவும் நடவாமல் போனது.. ஆனால் அந்தக் காட்சியையே சிறு புகைப்படமாக மீட்டு அவரிடமே கையில் கொடுக்கிறார் இறைவன் பாபா!
ஒருமுறை நூலாசிரியர் அமெரிக்கா செல்கிறார்... தன் பெண் வீட்டிற்கு ஓர் விஜயம்!மீண்டும் ஊருக்கே வந்த பிறகு பார்க்கிறார்.. மணி பிளான்ட் வாடி இருக்கிறது... விசாரிக்கிற போது .. தண்ணீர் விட்டேனே என தகவல் வந்தும்... ஏதாவது பால் கலந்த நீரோ ஏதாவது ஊற்றப்பட்டதால் தான் மணி பிளான்ட் செடிக்கு இந்த நிலை என உணர்கிறார்... அருகே மஞ்சளும் ஒளி இழந்து காணப்படுகிறது... என்ன செய்யலாம் என யோசிக்கையில்... இறைவன் பாபாவுக்கு அவரின் பூஜையறையில் தினசரி சமர்ப்பிக்கப்படும் ஒரு கோப்பை தண்ணீர் நினைவுக்கு வருகிறது.. பொதுவாக தினசரி நீரை மாற்றுகையில் அந்தக் கோப்பைத் தண்ணீரை கொட்டிவிடுவார்... ஆனால் அந்த முறை அதை எடுத்து அந்த வதங்கிய மணி பிளான்ட்'டிற்கு ஊற்றுகிறார்... கூடவே ஒளி இழந்த மஞ்சளின் தலையிலும் நீர்த் தெளிக்கப்படுகிறது! பிறகு ஒரு வாரம் வேலை நிமித்தமாக நூலாசிரியர் இரு செடிகளையும் கவனிக்க மறக்கிறார்... அடுத்த வாரம் எதேர்ச்சையாக சென்று பார்க்க.. அந்த மணி பிளான்ட் ஆளுயரத்திற்கு வளர்ந்திருக்கிறது...மஞ்சளின் முகத்திலும் மஞ்சள் கலை... பாபாவுக்கு படைக்கப்பட்ட ஒரு கோப்பை நீருக்கே எத்தனை மகத்துவம் என உணர்ந்து புல்லரிக்கிறார்... அது முதல் பூஜையறையில் பாபாவுக்கு படைக்கப்படும் நீரை தினசரி மாற்றுகிற போது அதனை வெளியே ஊற்றாமல் பிரசாதமாக பருகிய பிறகே புதிய நீரை நிரப்பி வைக்கிறார்... பாபாவுக்கு எது படைக்கப்பட்டாலும் அது பிரசாதமாகிறது... அதில் அவர் பெருஞ்சக்தி இறங்குகிறது! பாபா பருகியதற்காக நீர் குறைந்தாலும் குறையாவிட்டாலும்.. நீரை பருகினேன் என்கிற அருள் அடையாளத்திற்காக பாபா மூடிய கோப்பை நீரில் விபூதி தூவாவிட்டாலும் அதில் பெருஞ்சக்தி இருக்கவே செய்கிறது என்பதை நாமும் இந்த மகிமை வழி உணர்கிறோம்!
(ஆதாரம் : ஸ்ரீ சத்ய சாயியின் இனியவை 400 | பக்கம்: 62 - 64 | ஆசிரியர் : சாயி சரஜ் (சரோஜினி சாயிராம்)
இரண்டு மகிமைகள்... இரண்டும் பாடங்கள்.. ஒன்று : நிகழ்பவை யாவும் பாபா சங்கல்பத்தோடே நிகழ்கிறது.. அது மட்டுமின்றி எல்லா நிகழ்வும் பாபாவின் அருவ கேமராவில் பதிவாகிறது... ஆக நாம் ஒவ்வொருவரும் மிக கவனத்தோடே நம் அன்றாட கடமையை புரிய வேண்டும்.. காரணம்... யாவையும் பாபா கவனிக்கிறார்... கர்மா எனும் கணக்காளர் நாம் செய்கிற யாவற்றையும் குறிப்பெடுக்கிறார்!
இரண்டாவது: பாபாவுக்காக சமர்ப்பிக்கப்படும் எதுவும் புனிதமடைகின்றன... சக்தியூற்றப்படுகின்றன... ஆக நாம் நம்மையே பாபாவிடம் சமர்ப்பிக்க வேண்டும்! அதுவே பக்திக்கான உன்னத இலக்கு.. அதுவே ஆன்ம சரணாகதி!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக