தலைப்பு

செவ்வாய், 20 டிசம்பர், 2022

ஒரே ஒரு தரிசனத்தில் சாயி'யிசமாக மாறிய கம்யூனிசம்!

பாபா நிகழ்த்தும் அற்புதங்கள் மகிமைகள் எண்ணில் அடங்கா... எண்ணிக்கையில் மட்டுமல்ல எண்ணத்திலும் அடங்கா... விதவித அனுபவங்கள் விசித்திர நிகழ்வுகளின் வியன்மிகு வரிசைகளில் ஓரிரண்டு சுவாரஸ்யமாக இதோ...

நூலாசிரியர் வீட்டிற்கு பாபா பக்தையான மிருணாளினி வந்திருக்கிற சமயம் "பாபா பற்றிய அனுபவங்கள் ஏதேனும் கூறுங்கள்" என்று நூலாசிரியர் கேட்டுக் கொள்கையில்... அவர் த்ரயி பிருந்தாவனத்தில் நிகழ்ந்த ஓர் அனுபவத்தை அகம் திறக்கிறார்...

பிருந்தாவன் பாபா கல்லூரி மாணவர்கள்... பர்த்தியில் இருந்த பாபாவை பிருந்தாவனுக்கு வரும்படி பிராத்தனை செய்தனர்.. அதற்கும் செவி சாய்த்து ஸ்ரீ சத்ய சாயி கண்ணனும் பிருந்தாவனம் வர... தரிசனத்திற்கு ஆர்வமோடிருந்த பாபா மாணவர்களுக்கு குழப்ப அதிர்ச்சியே காத்திருந்தது.. இரண்டு தரிசனத்திலும் பாபா தலைகுனிந்து அவர்களிடம் பேசாமல் சென்றுவிடுகிறார்...

அடுத்தநாள் பாபா வர... தவித்த கன்றாய்... மிக நன்றாய் பாபாவின் பாதங்களை சூழ்ந்து "நாங்கள் என்ன தவறு செய்தோம் சுவாமி? ஏன் நீங்கள் பேசவில்லை!" என கண்ணீர் தேங்கி இருக்க.. குரலோ ஏக்கம் வாங்கி இருக்க... என்னவோ ஏதோ என அவர்கள் பதற.. அதற்கு பாபா கூலாக "நேற்று என்ன நாள்?" என்று கேட்க.. ஏப்ரல் 1 ன்று! முட்டாள்கள் தினம்! பாபா சிரிக்க... ஏதேதோ கற்பனை செய்தவர்கள் சேர்ந்து சிரிக்க... அந்த இடமே சிரிப்பு ஜுகல்பந்தியே அரங்கேறிக் கொண்டிருக்கிறது!


நூலாசிரியர் எதைத் தான் பார்த்தாலும் அதை நூலில் பதிவு செய்ய வேண்டும் என விரும்புபவர்... நூலாசிரியர் தன் பீரோவில் வைத்திருக்கும் நூல் புடவைகளை விடவும் அவர் பாபாவுக்கு எழுதிய நூல்களே அதிகம் என்கிற வகையில் தேனீயாய் சுற்றிச் சுற்றி சாயி அனுபவங்களைச் சேகரித்தவர்... அப்படி ஒரு அனுபவம்... 2001 அக்டோபரில் இந்தோனேஷியா தேசத்திலிருந்து ஒரு பெண்மணி பாபா தரிசனத்திற்காக காத்திருக்கிறார்..‌அருகே நூலாசிரியர்... அந்த அயல்நாட்டு பெண்மணி கையில் அசையாத மெழுகு பொம்மை... என்ன இது என உற்று நோக்குகிற போதுதான் நூலாசிரியருக்குப் புரிகிறது.. அது ஓர் குழந்தை... நூலாசிரியர் என்ன விளையாட்டு காட்டிய போதும் அது அசையவே இல்லை! பிறகு அந்த அயல்நாட்டுத் தாயே "பாபா பாபா" என்று அந்தக் குழந்தையிடம் பேசுகிறார்... அதுவரை துளியும் அசையாத குழந்தை ஆனந்தமாகச் சிரிக்கிறது!

இந்தச் சம்பவத்தில் என்ன இருக்கிறது என வாசிப்பவர்கள் யோசிக்கலாம்... பாபா என்கிற பெயருக்கு அத்தனை மகிமை இருக்கிறது.. அந்தத் தெய்வீகப் பெயர் ஆன்மாவரை அமர்ந்து தாலாட்டிக் கொண்டிருக்கிறது என்பதை அந்தக் குழந்தை வழி நாம் உணர்கிறோம்!


பாபாவின் பால்ய சித்ராவதி மணல்வெளிக் காலங்களில் பால பாபா "நீ ஏன் இப்போது ஜபம் செய்வதில்லை?" என முதிர் வயது பெண்மணியைப் பார்த்துக் கேட்க... தன் ஜபமாலை தொலைந்துவிட்டதாக அவர் பதில் அளிக்க... மணலுக்குள் கை விடுக்கிறார்... உடனே ஒரு ஜபமாலை எடுத்துத் தருகிறார் பாபா... பரவசத்தில் அழுது கரைகிறார் அந்தப் பெண்மணி... "இது என்ன?" என்று பாபா அந்த மாலையை கையில் பிடித்துக் கேட்க... "இந்த மாலை தான் என்னிடமிருந்து தொலைந்த ஜபமாலை" என பரவசமாய் பதில் அளிக்க...அது ஒரு ருத்ராட்சமாலை... அந்த முதிர் வயதுப் பெண்மணியின் தாய் அவர்களுக்கு பரிசளித்த மாலை.. தொலைந்த அதே மாலை... தொலைந்தவற்றை திருப்பித் தருவதற்கே சாயி அவதாரங்கள்‌... மாலைகளை மட்டுமல்ல... நமக்குள்ளே நாம் தொலைத்த ஆன்ம ஞானத்தையும் மீட்டுத் தருவதற்காகவே நம் இதயத்தை மீட்டிக் கொண்டிருக்கிறார் பாபா!


மாஸ்டர் எனும் பெயர் கொண்ட ஒருவர் அழைக்கப்படும் ஒருவர்.. பெரும்பணக்காரர்... கம்யூனிசத்தில் ஊறித்திளைத்தவர்... சகல உயிரினமும் சமம் என எல்லாவற்றையும் அரவணைக்கும் பாபாவை விடவா ஒருவர் கம்யூனிச உணர்வாளராக இருக்க முடியும்! அனைத்து மனிதரும் சமம் இது கம்யூனிசம்... அனைத்து ஜீவராசிகளுமே சமம் இது சாயி'யிசம்! அதுவே நம் இதயத்து ஜீவ சாயி ரசம்!

அந்த மாஸ்டரோ கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்... வாயில் புகையும் மேகப் புகையும் சமமாக வந்து கொண்டிருந்த அவரது கொடைக்கானல் பங்களாவில் சுற்றிலும் கார்ல் மாக்ஸ் புகைப்படங்கள்... அவரோ கால் ஆட்டிக் கொண்டிருக்கிறார்... அவரின் அந்த நாளே ஆட்டம் காணப் போகிறது என்பதை அவர் சிறிதும் அறியாமல்...! 

திடீரென ஒரு நண்பர் வந்து "பாபா வந்திருக்கிறார்.. வா உடனே சென்று பார்க்கலாம்!" என வலுக்கட்டாயமாக அழைத்துப் போகிறார்! 

"பாபாவா... யார் அது? 1008 சாமியார்களில் அதுவும் ஒன்று? தாடி மீசையோடு வருவார்? இந்த சாமியார்களுக்கு வேறு வேலை இல்லை! அதையும்  சென்றுதான் பார்ப்போம்! வேடிக்கையாக இருக்கும் !" என மனதில் ஏதேதோ நினைத்துக் கொண்டு நண்பரோடு கிளம்புகிறார்... 

அவர் சென்ற போது கொடைக்கானலில் 15 தே பேர்கள்... அமர்ந்து கொள்கிறார்...

பாபா அசைந்து அசைந்து வருகிறார்...

அது ஆரஞ்சு அங்கியா? ஆரஞ்சு ஜோதியா? அது கேசமா? கார்முகில் தேசமா? அது முகமா? அருகே நெருங்கும் சூரிய ஜகமா? அது உதடா? இல்லை நம் அறியாமையை உட்கொள்ளும் செந்தூரக் குழாயா? அது புன்னகையா? இல்லை தன்னலமில்லா பேரன்பின் மௌன முழக்கமா?

உயிரைப் பிசைகிறது அந்த மாஸ்டருக்கு... பிரபஞ்ச மாஸ்டரே நடந்து வருகிற போது எதிர்மறை எண்ணம் கொண்ட கொடைக்கானல் மாஸ்டருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை... அப்படி ஒரு தரிசனத்தையும்... அப்படி ஒரு உருவத்தையும் அவர் தன் வாழ்நாளிலே பார்த்ததில்லை! அப்போது பாபாவுக்கு 27 வயது இருக்கலாம் என்கிறார் மாஸ்டர்! 


"என் அகந்தை நொறுங்கியது... கம்யூனிசம் பறந்தது... உடனே முழுமையான சரணாகதி ஏற்பட்டது.. தன் தூய அன்பால் அடித்து என்னை ஒரே நொடியில் ஆட்கொண்டார்!" என அந்த மாஸ்டரே தன் இதயத்து ஒப்புதல் வாக்குமூலத்தை திறக்கிறார் 


ஆதாரம் : ஸ்ரீ சத்ய சாயியின் இனியவை 400 | பக்கம் : 88 - 95 | ஆசிரியர் : சாயி சரஜ் (சரோஜினி சாயிராம்)


இறைவனே இறங்கி வந்தால் தான் ஒரே தரிசன மாத்திரத்தில் அப்படி ஒரு அக மாற்றத்தை வழங்க முடியும்... ஆகவே தான் பாபா இறைவன்... அக மாற்றம் தான் சம்ஹாரத்தை விட மிக உன்னதமான செயல்! மற்ற யுக அவதாரங்கள் புற சம்ஹாரம் செய்தன... ஆனால் கலியில் சாயி அவதாரங்களோ தீய குண சம்ஹாரம் செய்கின்றன...! கந்தன் புரிந்தது அரக்க சம்ஹாரம்... கடவுள் பாபா புரிவது அகந்தை சம்ஹாரம்!


 பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக