தலைப்பு

திங்கள், 19 டிசம்பர், 2022

தஞ்சம் அடைந்ததில் இரு சாயி அவதாரமும் தீர்த்து வைத்த தண்ணீர்ப் பஞ்சம்!

இறைவன் ஸ்ரீ ஷிர்டி பாபாவே இறைவன் ஸ்ரீ சத்ய சாயி பாபா... மனிதனுக்கு உடம்பில் உடை...இறைவனுக்கோ உடம்பே உடை... ஆக மூன்று உடை அணிந்திருக்கும் சாயி அவதாரம் முதல் இரண்டு உடையில் செய்த சேவையும் ஒன்றே என நிரூபிக்கும் சம்பவங்கள் சுவாரஸ்யமாக இதோ...


தண்ணீர் பூமியின் ரத்தம்... அது ஓடாவிடில் மனிதனின் ரத்த ஓட்டமே நின்றுவிடும்... மூன்று சாயி அவதாரமும் தாகம் தீர்க்கவே அவதரித்திருக்கிறது... அதில் மிக முக்கிய தாகம் ஆன்ம தாகம்... அது அருளாதார தாகம்! ஆயினும் வாழ்வாதார அடிப்படை தாகமான தண்ணீர் தாகத்தை இரு சாயி அவதாரமும் தீர்த்தது... அப்போது ஷிர்டி கிராமத்தில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம்! குடுநீர் திகழ்ந்த கிணறுகள் வற்றிக் கொண்டே வருகின்றன... உப்புத்தண்ணீராக ஒரு கிணறு இருந்தது... உப்புத் தண்ணீர் எவ்வாறு தாகம் தீர்க்கும்? அது போல் தான் நம் வெறுப்பு குணம் எவ்வாறு இறைவன் அருளை சம்பாதிக்கும்?


நல்ல நீரும் வற்றிவிடுகிறது... உப்பு நீரை வைத்து என்ன செய்ய முடியும்? அப்போது யாரும் நல்ல தண்ணீரை பதுக்கி காசுக்கு விற்கும் பாவத்தைச் செய்யவில்லை! இறைவன் பாபாவுக்கு தெரியாதது என்ன? ஆக ஒருநாள் அவர் கிணற்றின் அருகே வருகிறார்... மலர்களை அள்ளி அந்த உப்பு நீர் கசிந்து கொண்டிருக்கும் கிணற்றில் வீசி எறிகிறார்... ஆம் அது வீசி எறிதல் அல்ல... அந்த உப்பு நீரை இறைவன் பாபா மலர்களால் ஆசீர்வதிக்கிறார்! அந்த உப்பு தான் கறிப்பது தப்பு என்பதை உணர்ந்து கற்கண்டாக உடனே அகமும் புறமும் மாறி ஊர் மக்களுக்கே ருசியை தருகிறது! அது போல் நாம் எப்போது நம் கோப குணங்களை மாற்றி சாந்த குணமாகி உலகத்திற்கே ருசியை அளிக்கப் போகிறோம்...? பாபா சதா நம் மேல் அருள் மலர்களை தூவிக் கொண்டே தான் இருக்கிறார்!


இதே போல் இறைவன் ஸ்ரீ ஷிர்டி சாயி இறைவன் ஸ்ரீ சத்ய சாயியாக அவதரித்த போதும்... ஷிர்டி போல் புட்டபர்த்தியும் ஒரு குக் கிராமம் தான்! தண்ணீர் கஷ்டம் வேறு! அவர் பள்ளி படித்த கமலாபுரத்திலும் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்து ஆடியது... இறைவன் பாபா தன் தாமரைத் தோள்களிலேயே தண்ணீர்க் காவடி சுமந்து வந்திருக்கிறார்... உறவினர் வீட்டுக்கு மட்டுமல்ல அருகாமை வீடுகளுக்கும் அவரே தண்ணீர்ச் சேவை ஆற்றினார்...! திரேதாயுகத்தில் கூட சுவாமி வெறும் வில்லும் அம்பும் சுமந்து வெறும் கால்களில் நடந்தாரே அன்றி கலியில் தான் அவர் சந்தித்த இன்னல்கள் அதிகம்! இன்னல்கள் எல்லாம் அவர் பாதம் பட்டு மின்னலாய் மறைந்து போனது!

அது பாத மந்திரத்திலிருந்து பிரசாந்தி நிலையம் கட்டிக் கொண்டிருக்கிற சமயம்.. எவ்வாறு தன் ஷிர்டி அவதாரத்தில் உப்பு நீரை கற்கண்டாக்கினாரோ... கூடுதலாக ஒரு படி மேலே சென்று... "இங்கே கற்கண்டு தண்ணீர் கிடைக்கும்...இங்கே தோண்டுங்கள்!" என குறி காட்டி கிணற்றை வெட்டச் செய்கிறார்... அது இன்றுவரை அமுதசுரபியாக சுரந்து பெருகுகிறது...இன்று வரை அதில் ஒரு துளி நீர் கூட வற்றியதே இல்லை! பெயரோ சென்னை.. ஆனால் அதற்கு அன்னையே இறைவன் ஸ்ரீ சத்ய சாயி தான்! பாபா இட்ட தண்ணீர்ப் பிச்சையே அதற்குக் காரணம்! அதுவரை ஸ்பூனில் நீர் தெளித்து குளித்தது போல் பாவனை செய்த சென்னை மக்களை புறக்குளியலுக்கு ஆட்படுத்தியதே அகக் குளியலுக்காக அவதரித்த பாபா தான்! ஸ்ரீ சத்ய சாயி கங்கா பிராஜக்ட் -- பாபா இறைவன் என்பதால் அது சாத்தியப்பட்டது!

அது போல் ஷிர்டி அவதாரத்தில் தனது பாதத்தில் கங்கையை எழச் செய்த அதே பாபா.. ஸ்ரீ சத்ய சாயியாக பத்ரி யாத்திரையில் சில பக்தர்களுக்கு உத்தரணி கரண்டியில் தானே சிருஷ்டித்த கங்கையையும் வரவழைத்திருக்கிறார்... ஒருமுறை வெள்ளம் பெருகுவது போல் கங்கை பெருகி பாத மந்திரம் (பாபாவின் பழைய கோவில்) நனைக்க... பாபாவின் மலரடியில் மலர்களை சமர்ப்பிக்க... இதை நேரில் கண்ணுற்றவர்களில் குமாரம்மா தனது "அன்யதா சரணம் நாஸ்தி" எனும் அனுபவ நூலில் பதிவு செய்திருக்கிறார்!


(ஆதாரம் : ஸ்ரீ சத்ய சாயியின் இனியவை 400 / பக்கம் :20 / ஆசிரியர் : சாயி சரஜ் (சரோஜினி சாயிராம்)


இப்படி தண்ணீருக்கும் அவதாரத்திற்கும் நிறைய தெய்வீகத் தொடர்பு இருக்கிறது... காரணம் என்ன தெரியுமா? இறைவனின் முதல் அவதாரத் தொட்டிலே தண்ணீர் தான்! மச்சாவதாரம்!


   பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக