தலைப்பு

வியாழன், 29 டிசம்பர், 2022

இயற்கை நடத்தும் பாடம் என்ன?

மானுடர் தர்மப்படிக் கர்மங்களைப் புரிந்து பழைய கர்மாவைத் தீர்த்துக் கொள்ள ஆன்ம சாதனா லயமாக இருப்பது உலகமே! எனவே இறுதியில் உலகை விட்டு இறைவனிடம் செல்ல வேண்டியவர்களாக இருந்தாலும் அதற்கான திறத்தை இந்த உலகிலிருந்து கொண்டு, உலகப் பொருட்களைக் கொண்டு வாழும்போதேதான் பெற வேண்டும்; உலகத்துடனேயே பந்தமுறுத்தும் மாயையில் சிக்காமல் இந்த உலகத்தில் வாழ்ந்தே பரத்துக்கு (வேற்றுலகத்திற்கு) பக்குவமாக வேண்டும்! 

"படகு தண்ணீரில் இருக்கலாம் ஆனால் படகுக்குள் தண்ணீர் வந்துவிடக் கூடாது!" என்பது போலவே உலக வாழ்வில் நாம் இருந்தாலும்... உலக வாழ்வு நமக்குள் ஊறிவிடாமல் வாழ வேண்டும்!


பரமாத்மாவின் மாயா சக்தி என்றும் பிரகிருதி என்றும் சொல்லப்படுவதன் உருவமே உலகம்! பிரகிருதி தான் உலகில் இயற்கையாக உள்ளது! 

சத்தியப் பரம்பொருளின் திருவிளையாடல் கூடமே அது என்ற உணர்வோடே உலகைப் பார்!

இயற்கையை இறைவனது ஆடையாக , எனது சங்கல்பத்தின் வெளியீடாகக் காணப்பழகு! இறைவனது மகிமையின், ஆற்றலின், வலிமையின், ஆளுமையின், அழகின் கலைத் திறனின் வெளிப்பாடாக உலகத்தைப் பார்! ஒவ்வொரு புல்லிலும், பூவிலும், சின்னஞ்சிறு பூ இதழிலும், கனியின் சுளையின் முத்திலும் பரமாத்மாவின் பெருமையும், சக்தியும் , சௌந்தர்யமும் கற்பனை ஆற்றலும் மிளிர்வதை ரசித்து இன்புறு!


இயற்கை பேசாமலே தரும் போதனைகள் பல...! அவதூத குருவைப் போலத் திறந்த உள்ளத்தோடு கற்கும் பணிவோடு உலகைப் பார்த்தால் எங்கெங்கும் உபதேசங்கள் பெறலாம்! 


நதியைப் பார்! அது பரோபகாரத்துக்கே உருவாகியுள்ளது!

மலையைப் பார்! அதன் கம்பீரத்தையும், நிலை உறுதியையும் பாடமாய்க் கொள்!

நட்சத்திரங்களைப் பார்! சூரியனை விடவும் எவ்வளவோ பெரிதாக இருந்தும்.. இறைவனின் ஆணைக்கிணங்கி ஒன்றுக்கொன்று மோதலின்றி விண் வீதியில் இறைவனை வலம் வரும் கட்டுப்பாட்டையும், பணிவையும் புரிந்து கொள்!

கடலைப் பார்! அதன் மாபெரும் பரப்பில் விழுந்த துரும்பையும் தன்னிடம் வைத்துக் கொள்ளாமல் கரையில் ஒதுக்குகிறது! தனக்கென எது உரியதோ அதற்கு அதிகமாக இம்மியும் சேர்த்துக் கொள்ளாமல் தனது தூய்மையை சர்வ ஜாக்கிரதையுடன் காத்துக் கொள்கிறது! 


பஞ்சபூதங்களைப் பார்!

ஆகாயத்தில் சப்தம் மட்டுமே உள்ளது! ஆனால் அது சப்தம் போடுகிறதா? 

தீக்குச்சியில் நெருப்பு உள்ளது.. ஆனால் அதுவே பற்றி எரிகிறதா?

ஒன்றோடு ஒன்று மோதாமல் ஆகாயத்திலிருந்து சப்தமும் வருவதில்லை...தீக்குச்சி உரசாமல் நெருப்பும் பற்றுவதில்லை...

ஐம்புலன் விஷயங்களில் தொடர்புடைய ஐம்பூதங்களில் இருந்தும் நீங்கள் பாடம் கற்கலாம்...

புலன்களில் இருந்து விடுபட விடுபடவே நாம் விஸ்தாரமாகி(விரிவாகி) விசாலம் பெறுகிறோம் எனும் பாடம்! 

ஐம்புலனுக்கும் அப்பாற்பட்டது ஆன்மா.. எத்தனை விசாலமானது என்றும் எங்கும் பரவி விரிந்திருப்பது என்பதையும் உணர வேண்டும்!

புலன் பற்று குறையக் குறைய மண்ணிலிருந்து ஆகாயம் ஈறாக முன்னதை விட அடுத்தடுத்து கனம் குறைந்து லேசாகிறது! இதிலிருந்தே ஆன்மநிலை எப்படி எந்தச் சுமையுமற்று பிரசாந்தமாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்!


(ஆதாரம்: அறிவு ஆறுபது/ பக்கம் : 52/ ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக