தலைப்பு

வியாழன், 8 டிசம்பர், 2022

இனிப்பு இறைவன் பாபாவின் திருப்படத்திலிருந்து பொழிந்து கொண்டே இருந்த திதிப்புச் சக்கரை!

பாபா எவ்வாறு தன் ஏழ்மையான ஒரு பக்தர் குடும்பத்தை திதிப்போடு அவர்களுக்கு இருந்த பக்தித் துடிப்போடு காப்பாற்றி கரை சேர்க்கிறார் என்பது மிகவும் சுவாரஸ்யமாக இதோ...


அது மாண்டியா சக்கரை ஆலை! மாண்டியா எனும் பெயரைக் கேட்டாலே ஸ்ரீ பிரேம சுவாமி உணர்வே மேலெழும்பும்... பூலோகத்தில் இறைவனின் நிறைவு அவதாரம் அது! அனைத்து பக்தர்களும் ஆவலோடு காத்திருக்கும் பிரம்மாண்ட அவதாரம் அது! அந்த பேரவதாரத்தை தனது மணிவயிற்றில் தாங்கிய பூமி மாண்டியா! ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த புண்ணிய பூமியில் பல மகிமைகளை பாபா தனது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்திலேயே நிகழ்த்தி இருக்கிறார்! நிகழ்த்திக் கொண்டும் வருகிறார்!


அந்த மாண்டியா சக்கரை ஆலையின் காவலாளி மிகவும் ஏழ்மையில் திண்டாடுகிறார்! அவரது மனைவி வாராவாரம் விடாமல் சாயி பஜனைக்கு சென்று பாபாவிடம் சென்று மன்றாடுகிறார்! தங்கள் வீட்டில் வசந்தத்திரு விளக்கை பாபா ஏற்ற மாட்டாரா? எனும் அங்கலாய்ப்பு! பூர்வ கர்மாவாயினும்... இந்த ஜென்மத்தில் ஒருவர் மிக நல்லவராக வாழ.. அவரது முன் ஜென்ம பாவ வீரியங்கள் இறைவன் பாபாவால் குறைக்கப்படுகின்றன எனும் அந்த அடிப்படை சத்தியத்தின் மேல் காவலாளி மனைவி தனது பிரார்த்தனை கோபுரத்தை பலமாகக் கட்டிக் கொண்டிருக்கிறார்!


ஒருநாள் அவள் கனவில் வருகிறார் பாபா! கனவு - தியானம் - இதர தெய்வீக ஊடகங்கள் யாவும் பாபா அருள் புரிவதற்கு தொடர்பு கொள்ளும் வாகனமே! ஆக அவள் கனவில் தோன்றி பாபா சொல்லும் ஒரே வார்த்தை "உன் வீட்டில் பஜனை நடத்து!" என்பதே... அவளுக்கோ பேராச்சர்யம்...! இறைவனே நம் இமைகளுக்குள் நுழைந்து இதயத்தினுள் நிறைந்து கனவு தேசத்தில் தோன்றி விட்டாரே என... இப்படி கனவு வழி தரிசனமும் ஆக... சம்பாஷனையும் (உரையாடல்) நேர... உடனே தன் வீட்டில் பஜனை நடத்த ஏற்பாடு செய்கிறாள்! ஏற்கனவே அது எளிய குடும்பம்... பாபாவுக்கும் எளிமையே பிடிக்கும்... ஆடம்பரமோ அடுத்தவரை கைதட்டி அழைக்கும்.. ஆனால் எளிமையோ கைகூப்பி அழைக்கும்... இறைவன் பாபா எப்போதும் கைகூப்பி அழைத்தாலே வருவார்! கைதட்டி அழைத்தால் காது கேட்காதவர் போல நகர்ந்து விடுகிறார்..! ஆக இவர்கள் கண்ணீர் மல்க பஜனை நிகழ்த்த ஏதேனும் பிரசாதம் தர வேண்டுமே என நினைத்து 

கணவரிடம் ஆலையில் மிச்சமாகும் சக்கரையை கொண்டுவரும்படி கேட்கிறாள் காவலாளியின் மனைவி...


அதை அவர் அந்த மேலாளரிடம் தெரிவிக்க... கைக்குட்டையில் வடிகட்டிய கஞ்சனான அந்த மேலாளர் கொய்யோ மொய்யோ என குதிக்கிறார்! அந்தக் காவலாளி கணவரோ இறைவன் பாபாவை விட்டுத்தரவே இல்லை! "இந்த கலியுகத்தில் பாபாவே கண்கண்ட தெய்வம்" என்கிறார் திடமாக.. அது தான் பக்தி!

நம் கீழே வேலை செய்பவர்களிடம் பாபாவை பற்றி சொற்பொழிவு ஆற்றுவதை காட்டிலும் நம்முடைய மேலதிகாரியிடமே பாபாவை பற்றி திடமாக நாம் எடுத்துரைப்பது பக்தியின் உச்சபட்ச நிலை...அங்கே அச்ச உணர்வோ விளைவு பற்றிய சிந்தையோ இருப்பதில்லை... அதையே செய்கிறார் அந்த காவலாளி..

அதற்கு அந்த மேலாளர்... "ஓ உனக்கும் அந்த பைத்தியம் பிடித்துவிட்டதா? அவர் பணக்காரர்களின் சாமி! வெளியே போ!" என விரட்டுகிறார்!

மனிதன் தனது கோமாளித்தன கற்பனைகளை எல்லாம் கடைசியில் இறைவன் மீதே கொட்டிக் தீர்க்கிறான்! ஆக காவலாளி கேட்டதோ திதிப்புச் சக்கரை.. ஆனால் மேலாளர் தந்ததோ வாய்வழியே உப்பு மழை!

ஆணவம் எல்லோரையும் உதாசீனப்படுத்துகிறது... இறுதியில் தர்மம் உதாசீனப்படுத்தும் ஆணவத்தையே உதாசீனப்படுத்திவிடுகிறது! ஆக கண்கலங்கிய அந்தக் காவலாளி வெற்றுக் கையுடன் தன் வீட்டு பஜனையிலேயே கலந்து கொள்கிறார்... பாட வரிகள் வராமல் கண்ணீரே பெருக்கெடுத்து ஓடுகிறது! பஜனையில் உள்ள வரிகளை விடவும் பக்தியில் உள்ள கண்ணீர் அத்தனை உயிர்ப்பாகிறது! கொட்டிக் தீர்க்கிறார்... அவர் கொட்டிக் தீர்க்க... இறைவன் பாபா திருப்படத்திலிருந்து .. அதிலும் பாபாவின் அபயக்கரங்களில் இருந்து சக்கரை கொட்ட ஆரம்பிக்கிறது... எத்தனை கிலோ கொட்டியது என கணக்கே இல்லை... பாடுகிறவர்கள் மிரள... அந்த அற்புத செய்தி மாண்டியா முழுதும் விரிய... அந்தத் தாராள பிரபுவான மேலாளரின் காதுகளிலும் விழ... அவர் விக்கித்துப் போகிறார்...


பஜனை மழையில் பாபா நனைய... பதிலுக்கு சக்கரை மழையில் பக்தர்களை பாபா நனைக்க... அதுவே பிரசாதமாகிறது... பல இடங்களுக்கு பகிரப்படுகிறது! பிறகு அந்த அற்புத சக்கரை மூட்டை கட்டி பிரசாந்தி நிலையத்தில் கொண்டு செல்லப்பட்டு இறைவன் பாபாவால் பிரசாதமாக எல்லோருக்கும் வழங்கப்படுகிறது! 

அந்தச் சக்கரையில் தொட்டுப் பார்க்க அதில் அந்த காவலாளியின் ஈரம் பொதிந்தபடியே அவரது தூய பக்தியை இனிக்க இனிக்க மௌன மொழியில் பேசிக் கொண்டே இருக்கிறது!


(ஆதாரம் : ஸ்ரீ சத்யசாயியின் இனியவை 400 | பக்கம் : 24 | ஆசிரியர் : சாயி சரஜ் (சரோஜினி சாயிராம்)


அருட்பெருஞ்ஜோதி இறைவனான பாபாவின் அணுகுமுறை தனிப்பெருங்கருணை வாய்ந்தது! பாபா நமது உள்ளத்தையும் பூர்வ கர்மாவையுமே பார்க்கிறார்! செல்வமோ செல்வாக்கோ பாபாவை எதுவுமே செய்துவிடுவதில்லை... அந்தப் புயலுக்குப் பணிய இறைவன் பாபா வெறும் நிழல் தரும் மரம் அல்ல...‌ அந்த நிழல் தரும் பல மரங்களையே பிரசவிக்கும் மலை... ஆகாயமே அண்ணார்ந்து பார்க்கும் இறைவன் பாபா சாட்சாத் அந்த திருவண்ணாமலை!


   பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக