தலைப்பு

வியாழன், 15 டிசம்பர், 2022

ஏன் கடவுளை வந்தனை செய்பவர் ஏழ்மையாகவும்.. நிந்தனை செய்பவர் வசதியாகவும் வாழ்கிறார்கள்?

பக்தி உள்ளவர்களில் பலர் வசதியை கோரித்தான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்! அப்படிப்பட்ட  அவர்களுடைய பிரார்த்தனையை நிறைவேற்றியும் கூட அதற்கும் மேற்பட்ட வைராக்கிய பக்தி நிலையில் அவர்கள் செல்கிறார்களா? என கடவுள் பார்க்கிறார்! ஆயினும் உண்மையான பக்தர் விஷயத்தில் அவர்களின் அனைத்து உடைமைகளையும் பறித்துக் கொண்டு அவர்களை வைராக்கியத்தில் மேலும் முதிர்ச்சி பெறச் செய்கிறான்! ஹரி- ஹரன் என்ற பெயர்களுக்கே அபகரிப்பவன் என்றே பொருள்! உங்கள் மனதை அபகரிப்பவன் மட்டுமல்ல உங்கள் உடைமைகளையும் அவனே அபகரிக்கிறான்!


"எவனுக்கு அருள் புரிய எண்ணுகிறேனோ அவனது பொருளைக் கவர்ந்து விடுவேன்!" 

-- ஸ்ரீமத் பாகவதம் (10-88-8)

கிருஷ்ணா! உன் காரியங்கள் எல்லாம் விசித்திரமாகவே இருக்கிறது என்று

சொல்லிக் கொண்டே துவாரகைக்குள் நுழைகிறான் அர்ஜுனன்!

என்ன விசித்திரம் கண்டாய்? என சுவாமி (ஸ்ரீ கிருஷ்ணர்) கேட்க...

வரும் வழியில் ஒரு ஏழை பராரி.. வருமானத்திற்கே கஷ்டம்.. அவன் மனைவி குழந்தை வேறு இறந்துவிட்டனர்..தன்னந்தனிமை வாசம்... கஷ்ட ஜீவனம்.. உன்னை இறைவன் என உணர்ந்ததே சில நபர்கள் தான்.. அதில் அவன் உன் பால லீலையை கேள்விப்பட்டதிலிருந்தே உன் பக்தனாக உன் பெயரையே சொல்லிக் கொண்டிருக்கிறான்... ஆனால் வறுமையோ வறுமை... ஒரே ஒரு பசுமாடு.. அது தரும் பாலை விற்று கால்வயிறே உண்ணுகிறான் பாவம்!

அப்படியே திரும்பும் வழியில் ஒரு பணக்காரன்.. வட்டி வசூலிப்பவன்... மக்களிடம் பணம் கொடுத்து வட்டி மேல் வட்டி கேட்டு வதைக்கிறான்.. போதாக்குறைக்கு உன்னையும் வசைபாடுகிறான்.. கிருஷ்ணன் ஒரு ஏமாற்றுப் பேர்வழி.. இரண்டு மூன்று மாய வித்தைகளைக் கற்றுக் கொண்டு இறைவனைப் போல் நாடகமாடுகிறான் என உன்னையும் சீண்டுகிறான்.. ஆயினும் அவன் சுகபோகமாக வாழ்கிறான்... "இதுவா உன் நியாயம் கிருஷ்ணா!" என அர்ஜுனன் கேட்க... எதுவும் தெரியாதது போல் சுவாமி.. வா அவர்கள் இடத்திற்கே செல்லலாம்.. ஆனால் நான் உன் கண்ணுக்கு மட்டுமே தெரிவேன் என்று சுவாமி சொல்ல...


அது ஏழை குடிசை... அவனோ பசி மயக்கத்திலும் கிருஷ்ணா கிருஷ்ணா என ஜபிக்கிறான்.. சுவாமியோ கையை மேலே உயர்த்தி ஏதோ எழுதுகிறார்.. சரி செல்வம் கொட்டோ கொட்டென கொட்டப்போதிறது என அர்ஜுனன் எதிர்பார்க்க... சுவாமி அந்த பசுவை நோக்கி விரல் நீட்ட... அதே இடத்தில் அது இறந்து விடுகிறது.. இருந்த ஒரு பசுவும் அம்பேல்! அதைக் கண்டு அதிர்ச்சியுற்று சரிகிறான் அந்த ஏழை! அந்த பசு கறந்ததோ கால் படி பால் அதில் கூட முக்கால்வாசியை கன்றுக்குட்டிக்கு பருகக் கொடுக்கும் அந்த ஏழையின் பசு இறந்துவிட்டதே என ஊரார் பரிதாபப்படுகிறார்கள்..

"என்ன கிருஷ்ணா இப்படி செய்துவிட்டாய்..? அவன் நல்லவன்... பரம யோக்கியன்.. சாது... இது நியாயமா?"

என அர்ஜுனன் நியாயம் கேட்க...

"நான் அப்படி நினைத்து செய்யவில்லை... சரி வா! அந்த வட்டிக்காரன் இடத்திற்குச் செல்வோம்!" என சுவாமி அழைக்க...


அவனோ பந்தய சீட்டு விளையாடி ஒவ்வொரு ஆட்டத்திலும் பொன் பொருளை பந்தயமாக வைத்து தோற்றுப் போய்க் கொண்டிருக்கிறான்... "எவ்வளவு ஏழையின் உழைப்பு ரத்தத்தை உறிஞ்சிக் குடித்தவன்.. நன்றாக அனுபவிக்கட்டும்!" என அர்ஜுனன் நினைக்க... அது கடைசி ஆட்டம்.. இதில் தோற்றால் ஓட்டாண்டியாகிவிடுவான் அந்த கருமியான வட்டிக்கடைக்காரன்... ஜெயித்தால் எல்லாம் திரும்ப வந்து கூடுதலாக ஒரு லட்சம் பொன்னும் வரும்... "அந்த படுபாவியை ஜெயிக்க விடாதே கிருஷ்ணா! இந்த கடைசி ஆட்டத்திலும் அவனை தோற்றுப் போகச் செய்!" என அர்ஜுனன் கேட்க.. சுவாமி கையால் ஏதோ எழுத... விழுந்த சீட்டு அவனுக்கு சாதகமாக... அந்த வட்டிக்கடைக்காரன் ஆட்டத்தில் ஜெயித்து ஹே என ஆரவாரம் செய்கிறான்! அர்ஜுனனோ "என்ன கிருஷ்ணா! இப்படி செய்து விட்டாயே!" என நொந்து கொள்கிறான்‌.. "நான் அப்படி நினைத்து செய்யவில்லை..ஆனால் அப்படி ஆகிவிட்டது !" என எதுவும் தெரியாதது போல் பேசுகிறார் சுவாமி!

காலம் நகர்கிறது.. அந்த இரண்டு பேரையும் மறந்து போகிறான் அர்ஜுனன்... சுவாமி அவர்கள் இருவரையும் அவனுக்கு நினைவுப்படுத்தி இப்போது அவர்கள் எப்படி இருக்கிறார்கள் சென்று பார்த்துவிட்டு வா! எனச் சொல்ல... அந்த இடம் செல்கிறான் அர்ஜுனன்... அப்போது போல ஏழை குடிசையாக இல்லை அந்த இடம்.. சிறு ஆசிரமமாக மாறி இருந்தது... அதே ஏழை இப்போது மகானாகி இருந்தார்... பெரிய வெண்தாடி.. கண்களில் ஒளி... முகத்தில் தேஜஸ்... "என்ன அர்ஜுனா.. எப்படி நான் இப்படி ஆனேன்? என்று தானே யோசிக்கிறாய்...?" என மாறுவேடத்தில் வந்த அர்ஜுனனை சரியாகக் கண்டுபிடித்து அவர் கேட்க... ஆச்சர்யப்படுகிறான் அர்ஜுனன்... "எப்போது என் பசு இறந்ததோ... அப்போது 'என்' 'நான்' என்ற உடைமையும் , உடல் மேல் இருந்த பற்றும் எனக்குள் இறந்தது... இனி வாழ வைப்பதும் சாகடிப்பதும் கிருஷ்ணன் கையில் என முழுமையாக சரணாகதி அடைந்தேன்! பசுவை பாதுகாக்க வேண்டும் என்ற ஆசையும் போனது... நிலையாமை உணர்ந்தேன்... இந்த ஞான நிலை வாய்த்தது!" என புன்னகையோடு பேசுகிறார் முன்னாள் ஏழையான இன்னாள் மகான்... அப்போது தான் சுவாமி செய்கையின் அருமை புரிந்தது அர்ஜுனனுக்கு..

சரி அந்த வட்டிக்கடைக்காரர் என்ன ஆனார்? எனத் தேடிப்பார்க்கிற போது... அவரின் வீடு கடை யாவிலும் வேறொருவர் இருப்பது புரிந்தது.. அவரைத்தேட அவரோ பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்... 


நல்ல உணவு, உடை எல்லாம் கொடுத்தபின் அவரிடம் அர்ஜுனன் அவரின் நிலை குறித்து விசாரிக்க... "நான் ஒரு கருமியாக இருந்தேன்... வட்டியால் அப்பாவிகளை வதைத்தேன்... செலவழியும் இடத்திற்கே செல்ல மாட்டேன்.. ஆனால் எனக்குள் பந்தய சீட்டு விளையாட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுத்தி... அதில் வெற்றியும் பெற வைத்து.. அதன்மேல் ஒரு ஈர்ப்பை வளரவிட்டு... அதனால் பொருளை சிறுகச்சிறுக இழக்க வைத்து.. மது, மங்கையர் என போகத்தில் என் அறிவை மயங்கச் செய்து... நான் செய்த பாவத்திற்கு தக்கதொரு தண்டனையை அந்த கிருஷ்ணனே அளித்திருக்கிறான்... அவன் தான் எப்படியாவது என் பாவத்தை மன்னித்து காப்பாற்ற வேண்டும்!" என கதறுகிறான் முன்னாள் வட்டிக்கடைக்காரன்... இப்போது தான் அர்ஜுனனுக்கு சுவாமியின் செய்கை முழுமையாகப் புரிந்தது!


"அர்ஜுனா! ஒவ்வொன்றும் நிகழ்வதற்கு ஒரு காலகட்டம் தேவைப்படுகிறது.. விதைத்த உடனே எதுவும் மரமாகி விடுவதில்லை... அதுபோல் தான் உங்கள் புண்ணியமும் பாவமும்... நீங்கள் கதவின் துவாரம் வழியாகப் பார்ப்பது போல்தான் காலத்தைப் பார்க்கிறீர்கள்... நான் அப்படி அல்ல! எனக்கு எல்லாம் தெரியும்! எதை எப்போது நிகழ்த்த வேண்டும் என்பதும் தெரியும்! இதோ என் புல்லாங்குழலைப் பார்... அது எத்தனை துளைகளை தனக்குள்ளே கொண்டிருக்கிறது.. சூடுபடாமல் எப்படி துளைபெறமுடியும்? துளை பெறாமல் எப்படி என் அதரம் அதைத் தொட முடியும்? அது போல் தான் "நான்" , "எனது" என்கிற அகந்தை எண்ணத்தை விட்டுவிட்டு மிகவும் நல்லவனாக திட நம்பிக்கையோடு என்னை முழுமையாக சரணடைந்தால் அந்த ஏழை எவ்வளவு உன்னத நிலையை அடைந்தானோ அவ்வாறு அடைய முடியும்! இப்போது புரிகிறதா?" என சுவாமி கேட்க...

யமுனையை தன் கண்ணில் வார்க்கிறான் அர்ஜுனன்.. காற்றில் அசையும் சுவாமியின் கீரீடத்து மயிலிறகாய் அர்ஜுனன் தலை அசைத்து ஆமோதிக்கிறான்!


(ஆதாரம்: அறிவு அறுபது/ பக்கம் : 106-123/ ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக