தலைப்பு

சனி, 3 டிசம்பர், 2022

பக்தர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?

நடைமுறையில் தாங்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம்... அப்படி வாழ்ந்து கொண்டே பெரிதாக ஆடம்பர பூஜை செய்து, திருப்பதி உண்டியலில் பொன்னும் பொருளும் போட்டுவிட்டால் அதுவே பக்தி என்று நினைப்போர் நிறைய பேர் இருக்கிறார்கள்! ராச லீலா அனுபவம், தந்திர மார்க்கம் என்று சொல்லிக்கொண்டும் பக்தி என்ற பெயரில் தகாத காரியங்கள் செய்து கொண்டிருப்பவர்கள் இருக்கின்றனர்... இதெல்லாம் இறைவனுக்கு உகந்தவையே அல்ல! உண்மையில் ஏனைய மனிதர்களை விடவும் தன்னிடம் பக்தி கொண்டவர்கள் தான் தர்ம நெறிகளை அதிகக் கண்டிப்புடன் கடைபிடித்து வாழ வேண்டும் என இறைவன் விரும்புகிறான்! பக்தி இல்லாதோர் செய்யும் அதர்மங்களை கூடப்  பொறுத்துக் கொள்வான்... ஆனால் பக்தர்கள் அதர்மம் செய்தால் முளையிலேயே இறைவன் கிள்ளி எறிந்து விடுவான்! 


ஒரு பாபா பக்தையின் அண்ணன் "பார்! ஒரு சாயி பக்தர் என்னிடம் பணம் வாங்கிக் கொண்டு.. திருப்பி தராமல் ஏமாற்றிவிட்டார்... அதை உன் பாபா பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்!" எனக் கேட்டபோது... பதில் தடுமாறி வந்தது அந்த பக்தைக்கு... "அந்த நபர் கடன் வாங்கும் அந்த நேரத்தில் சுவாமி தன் படத்தையாவது விழ வைத்து மறுப்பு தெரிவித்திருக்கக் கூடாதா?" என்று அவருக்கு தோன்றுகிறது! 

நாட்கள் செல்கிறது... அந்த சாயி பக்தைக்கு ஒரு தொகை வருகிறது.. அதனை எங்கு முதலீடு செய்யலாம்? என அதே அண்ணனிடம் ஆலோசனை கேட்கச் செல்ல... அவரோ சினிமா கம்பெனிக்காரர்களுக்கு கொடுக்கலாம் என அறிவுரை வழங்க... வீட்டுக்கு வருகிற வழியில் "சுவாமிக்கு சினிமா பிடிக்காதே?" என்ற எண்ணமும் .. "சினிமாக்காரர்கள் கூடவும் சுவாமி நெருங்கி பழகியிருக்கிறாரே" என்று மற்றொரு எண்ணமும் பின்னிப்பிணைய... "அவர்களுக்கு கடன் கொடுத்தால் கொடுத்தால் என்ன தவறு?" என்ற படி வீட்டினுள் நுழைய... பெரிய சத்தம்... உள்ளே சென்று பார்த்தால்.. பாபா படம் கீழே விழுந்திருக்கிறது.. ஒரே அதிர்ச்சி... தனது மறுப்பை பாபா தெரிவித்ததை உணர்ந்த பக்தை... அன்று பணம் பெற்று ஏமாற்றுகிற நேரம் இது நேராமல்.. தனக்கு மட்டும் இப்படி பாபா செய்திருக்கிறாரே எனக் குழம்ப... பாபா புத்தகம் தனை கண்மூடிக் கொண்டு திருப்பினால் பலருக்கும் பாபா சரியான விடை அளிப்பாரே என நினைத்து அந்த பக்தை ஒரு பாபா புத்தகத்தைத் திருப்ப...


ஒரு கதை பாபாவால் சொல்லப்பட்டதை வாசிக்கிறார் அந்த பக்தை... அது யாதெனில்... 

ஒரு ஆடு மேய்ப்பவர் வைரத்தின் மதிப்பு உணராமலும் மண்ணில் தென்பட்ட அந்த வைரக் கல்லை எடுத்து அதன் மதிப்பு தெரியாமலும் தான் நேசிக்கும் ஒரு ஆட்டின் கழுத்தில் கட்டிவிடுகிறார்! நாட்கள் நகர்கின்றன...அந்த வைரத்தை  கண்ட ஒரு வைரக் கடத்தல்காரன் ஆடு மேய்ப்பவரின் அறியாமையை உணர்ந்து, "அந்தக் கல்லை தருகிறாயா? எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன்!" எனக் கேட்க... நூறு ரூபாய் தருவாயா? என அவரும் கேட்க.. கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த வைரத்திற்கு, "ஆயிரம் ரூபாயே தருகிறேன்!" என்று கொடுத்து அந்த வைரக் கல்லை வாங்கி நடக்கையில்.. சில நிமிடங்களில் வியாபாரி கையிலிருந்து தானாக வைரம் குதித்து பொடிப்பொடியாக உடைகிறது... அதிர்ச்சி அடைந்த வியாபாரியிடம் "அவனுக்கு என் மதிப்பு தெரியவில்லை ஆனாலும் தான் நேசிக்கும் ஆட்டின் கழுத்தில் கட்டி அழகு பார்த்தான்.. ஆகவே அவனோடு மகிழ்ச்சியாக இருந்தேன், ஆனால் நீயோ  என் மதிப்பை உணர்ந்தும்... மலிவான விலை கொடுத்து என்னை அவமதித்து விட்டாய்.. ஆகவே தான் ஒரு நொடி கூட உன்னோடு இருக்க விருப்பமின்றி சுக்கல் நூறாக உடைந்து போனேன்!" என பொடிந்த வைரம் ஞானம் பேச... அதிர்ந்த வைர வியாபாரி வாயடைத்து நின்றான்! 

இந்தக் கதையிலிருந்து தன் சந்தேகத்திற்கு தெளிவு பெற்றார் அந்த சாயி பக்தை!


(ஆதாரம் : அறிவு அறுபது/ பக்கம் : 179 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக