பூர்ணாவதாரம் ஶ்ரீ சத்ய சாயிபாபா ஒரு பெண்மணியிடம், "நீ எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. நான் உன் மகன்." என்று வாக்குறுதி அளித்தார் எனில் அந்தப் பெண்மணி எத்தகைய பாக்கியசாலியாக இருந்திருக்க வேண்டும். தற்போதைய குஜராத்தின் நவாநகர் சமஸ்த்தானத்தின் ராஜமாதா திருமதி.குன்வெர்பா சாஹிபா தான் அவர். ஶ்ரீ சத்யசாயி மத்திய அறக்கட்டளை, பல்கலைக்கழக அறக்கட்டளை மற்றும் சத்யசாயி அமைப்பின் உலக கவுன்சிலிலும் முக்கிய உறுப்பினராக… சுவாமியால் பரிந்துரைக்கப்பட்ட புனிதவதி இந்த நவாநகர் ராஜமாதா. புண்ணியாத்மாக்கள் வரிசையில் அந்த அம்மையாரின் வாழ்க்கைக் குறிப்பு இதோ…
நவாநகரின் மஹாராஜா "ஜாம் சாஹேப் சர் திக்விஜய் சிஞ்சி" அவர்களின் அன்பு மனைவி "மஹாராஜ்குமாரி பாய்ஜி ராஜ் ஸ்ரீ காஞ்சன் குன்வெர்பா சாஹிபா" ஆவார். மகாராஜாவின் மரணத்திற்குப் பிறகு... அவர்களின் மகன் யுவராஜ் (Crown Prince) ஸ்ரீ சத்ருசல்யா சின்ஜி அரியணை ஏறியபோது ராணி குன்வெர்பா, நவாநகரின் ராஜமாதா ஆனார்.
முடிசூட்டப்பட்ட தனது மகனின் சில நடவடிக்கைகளால் மிகுந்த வருத்தத்திற்கு ஆளானார் ராஜமாதா. சுயமரியாதை உணர்வைக் கொண்ட உறுதியான பெண்மணியான அவர், 1968ம் ஆண்டு தனது 58வது வயதில், பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் தெய்வீக அருகாமையில் குடியிருக்க பெங்களூரு பிருந்தாவனம் வந்து சேர்ந்தார்.
🌷அரசகுடும்பத்திற்கு ஆண்டவன் அறிமுகம்:
அதற்கு மூன்று ஆண்டுகள் முன்பாக… 1965ம் ஆண்டு பிப்ரவரியில் மஹாராஜா ஸ்ரீ திக்விஜய் சின்ஹ்ஜி, ஜாம்நகர் அரண்மனையில் மிகவும் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்தார்.
பித்தப்பையில் கல் மற்றும் நீரிழிவு நோயினால் சிரமப்பட்டார், மேலும் அவரது பார்வை குளுக்கோமாவால் மங்கலானது. மன உறுதி கொண்ட மனிதராக இருந்தாலும், தொடர் நோயினால் முற்றிலும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட அவர், தனது துயரத்திலிருந்து விடுபட மரணத்தையே எதிர்பார்த்தார். அவரைச் சந்தித்த மருத்துவத் தொழிலில் உள்ள புகழ்பெற்ற நிபுணர்கள் உதவியற்றவர்களாக இருந்தனர்; அறுவை சிகிச்சையை தயக்கத்துடன் பரிந்துரைத்தனர்.
இந்த சூழ்நிலையில், ஜாம் சாஹேப் எப்படியாவது தனது குரு, ஸ்ரீ அகோரானந்தஜி மகராஜை சந்தித்து அவரது ஆசிகளைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டார். அகோரானந்தஜி ஒரு சிறந்த யோகியாகவும் தெய்வாம்சம் பொருந்தியவராகவும் கருதப்பட்டவர்.ஒருநாள் அந்த குருவே தன் சீடரைப் பார்க்க ராஜ் மந்திருக்கு வந்தார். ஜாம் சாஹேப் தனது குருவிடம் ‘மகராஜ்! என்னால் இனி வலியைத் தாங்க முடியாது. என்னை நிரந்தரமாகத் தூங்க வைக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று கெஞ்சினார். குருவோ தனது பையிலிருந்து ஒரு படத்தை எடுத்து, ஜாம் சாஹேப்பிடம் காட்டி, 'உங்களுக்கு அவரைத் தெரியுமா?' என்றார். ஜாம் சாஹேப் சிறிது முயற்சியுடன் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, 'இது சாயிபாபா’ என்று பலவீனமான குரலில் குறிப்பிட்டார். அப்போது குரு அவரிடம் 'ஆம், பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா தான். உங்கள் மனதை வலியிலிருந்து அவரை நோக்கித் திருப்பி, வலியிலிருந்து விடுவிக்க இதயத்தின் ஆழத்திலிருந்து அவரிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.' என்று அறிவுரை கூறினார். குருவின் குரலில் இருந்த உறுதி, அரச சீடரின் உள்ளத்தில் ஒரு சிறு நம்பிக்கையை விதைத்தது.
🌷சுவாமி கொடுத்தனுப்பிய விபூதி:
இதற்கிடையில் மகாராணி வெளியில் யாரிடமோ உரத்த குரலில் பேசுவது கேட்டு குரு வெளியே வந்தார்.மகாராணி நடப்பவற்றைப் பின்வருமாறு விளக்கினார் , 'மகாராஜாவை உடனடியாகச் சந்திக்க ஒரு மனிதர் விரும்புகிறார். மகாராஜா உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், யாரையும் சந்திக்க முடியாது என்று நான் அவருக்குச் செய்தி அனுப்பியபோது, அவர் மகாராஜாவையோ அல்லது மகாராணியையோ சந்திக்காமல் போக மாட்டேன் என்று கூறுகிறாராம்’. குருவோ ராணியை சமாதானப்படுத்தி, 'ஒருவேளை வந்திருக்கும் நபர் வெகு தூரத்திலிருந்து வந்திருக்கலாம். அவர் நமக்கு வேண்டப்பட்ட மிக முக்கியமான ஒருவராகவும் இருக்கலாம். வா! அவரை ஒன்றாக சந்திப்போம்' என்றார்.
வருகை தந்திருந்தவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் காடியா. மகாராணியின் அனுமதியுடன் உள்ளே வந்து பணிவுடன் சமர்ப்பித்து 'உங்களை தொந்தரவு செய்துவிட்டேன் மன்னிக்கவும். பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாவால் அனுப்பப்பட்டேன். இரண்டு நாட்களுக்கு முன்பு புட்டபர்த்தியில் இருந்தேன். மகாராஜாவுக்கு உடம்பு சரியில்லை என்று பகவான் என்னிடம் கூறி இந்த விபூதி பொட்டலத்தை அவருக்காக கொடுத்தனுப்பினார்' என்றார். மகாராணி ஆச்சரியப்பட்டாள்; அங்கிருந்த குருவோ குழந்தை போன்ற மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டார், ‘நான் சொன்னேன், அவர் நமக்கு வேண்டப்பட்டவராக இருக்கலாம் என்று! நான் பகவான் பாபாவின் புகைப்படத்தை அரசரின் படுக்கையில் வைத்திருக்கிறேன், இப்போது பாபா தனது புனித பிரசாதத்தை அனுப்பியுள்ளார்!’.
பகவான் அனுப்பிய விபூதிப் பிரசாதத்தை தண்ணீரில் கலந்து ஜாம் சாஹேப்பைக் குடிக்கச் செய்தனர். மேலும் அவரின் வயிற்றிலும் விபூதி பூசினர். அன்றைய வினோதமான நிகழ்வுகளைப் பற்றி அவர்கள் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தபோதும், மூன்று நாட்களாகத் தூக்கம் வராத மகாராஜா அமைதியாகத் தூங்கிவிட்டார். எல்லோருக்கும் பெரிய நிம்மதியாக இருந்தது. காலையில் எழுந்தபோது வலி முற்றிலும் மறைந்திருந்தது!
🌷மகாராஜாவின் மரணம்:
மகாராஜா அடுத்த ஆறு மாதங்களில் குணமாகி முற்றிலும் சரியாகிவிட்டார். அவரது மங்கலான பார்வைக்காக. டிசம்பர் 1965ல், அவர் பிரசாந்தி நிலையத்திற்குச் சென்று பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபாவைத் தரிசனம் செய்தார். பகவான் ஒரு இனிப்பை வரவழைத்து, தீராத நீரிழிவு நோயாளியாக இருந்த மகாராஜாவிடம் கொடுத்து, "பரவாயில்லை! ஸ்வாமி பிரசாதமாகத் தரும்போது, தயக்கமின்றி உண்ணலாம்" என்றார். மகாராஜா பிரசாதம் சாப்பிட்ட பிறகு, பகவான் அவரிடம் " உங்களுக்கு என்ன வேண்டும் ஜாம் சாஹேப்? கண்பார்வை வேண்டுமா?" என்றார். அதற்கு ஜாம் சாஹேப் 'சுவாமி! இந்த உலகத்தில் உள்ள எதையும் பார்ப்பதற்காக எனக்கு கண்பார்வை தேவையில்லை. உங்களின் தெய்வீக ரூபத்தை நான் முன்பே கண்டிருப்பதனால் எனக்குள் நன்றாக பதிந்திருக்கிறது. எனது இஷ்ட தெய்வம் சோமநாதரை நான் இவ்வுலகை விட்டுப் பிரியும் தருணத்தில் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது’ என்றார்.
பகவான் அப்போது அவரிடம் “நானே உன்னை சோமநாதரிடம் அழைத்துச் செல்கிறேன்” என்று உறுதியளித்தார். திருப்தியடைந்த ஜாம் சாஹேப் ஜாம்நகர் திரும்பினார். 1966ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது, ஆனால் அவருக்கு எந்த வலியும் ஏற்படவில்லை. இறுதியாக, அவர் மகாராணியிடம் ‘நன்றி. நீங்கள் ஒரு உன்னதமான பெண்ணாக இருந்தீர்கள். கடவுள் எப்போதும் உங்களுடன் இருப்பார்’ என்று கூறினார். மகாராணி அவருக்கு கங்கை நீர் ஊட்டிய பிறகு அவர் அமைதியாக தன் உலக வாழ்வை நீத்தார்.
🌷உலகம் போற்றிய ஜாம் சாஹேப் :
இறைவனின் கருணைக்குப் பாத்திரமாகிய மகாராஜா திக்விஜய் சிஞ்சி ஒரு சாதாரண அரசர் அல்ல. கருணைக்கும் கௌரவத்திற்கும் உரித்தான உன்னத மனிதராவார். இரண்டாம் உலகப் போரின்போது, சிறிய ஐரோப்பிய நாடுகள் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. 1939 செப்டம்பரில் ஹிட்லரின் படைகள் போலந்து மீது படையெடுத்தன, இதனால் நாட்டில் லக்ஷக்கணக்கான குழந்தைகள் அனாதைகளாக ஆயினர். பல பெண்களும் குழந்தைகளும் நாட்டை விட்டு வேறு இடங்களில் தஞ்சம் புகுந்தனர். இருப்பினும், பல தேசங்கள் அவர்களைப் புறக்கணித்து உதவியற்றவர்களாக ஆக்கியது. இந்தியாவில், நாவாநகரில் மகாராஜா திக்விஜய்சின்ஜி ரஞ்சித்சிங்ஜி, பிரிட்டிஷ் அதிகாரிகள் எதிர்ப்பை மீறி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மொத்தம் 5400 அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தார்.
உலகப் போரின்போது தங்கள் உயிரைக் காப்பாற்றிய அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, போலந்து நாட்டின் வார்சாவில் உள்ள ஒரு சதுக்கத்திற்கு Square of the Good Maharaja என்ற பெயரில் ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
🌷இறைவனின் இனிய கடிதம்:
ஜாம் சாஹேப் இறந்து சரியாக ஏழு நாட்களுக்குப் பிறகு, மகாராணிக்கு பிரசாந்தி நிலையத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. இது கட்ச் இளவரசி நந்தகுமாரி என்பவரால் எழுதப்பட்டது. அந்த சமயம் கட்ச் இளவரசி பிரசாந்தி நிலையத்தில் தங்கியிருந்தார். அவரிடம் பகவான் பாபா, தன் சார்பாக மகாராணிக்கு ஒரு கடிதம் எழுதச் சொல்லியிருந்தார். அவர் நந்தகுமாரியிடம் "மகாராணிக்கு எனது ஆசிகளை தெரிவியுங்கள். மகாராஜாவின் ஆன்மாவுக்கு என்ன நேர்ந்தது என்று அவள் மிகவும் கவலைப்பட்டாள். அவனுடைய கடைசி நேரத்தில் நான் அவனுடன் இருந்தேன், அவனுடைய கடைசி விருப்பத்தின்படி சோமநாதரிடம் அழைத்துச் சென்று நிறைவேற்றினேன். அவருக்கு மோட்சம் வழங்கினேன்". அந்த கடிதம் மகாராணியின் துக்கமான இதயத்திற்கு தைலமாக செயல்பட்டது. அந்தக் கடிதத்தின் மூலம், பகவான் அவளுக்கு “தானே சாக்ஷாத் பரமேஸ்வர ஸ்வரூபர்'' என்ற முழு நம்பிக்கையை வழங்கினார்.
🌷நானே உனது மகன்!
மகாராஜாவின் மரணத்திற்குப் பிறகு 1966ல் இளவரசர் ஸ்ரீ சத்ருசல்யா சின்ஜி அரியணை எறியபின், அவருடைய நடவடிக்கைகளில் மஹாராணி அதிருப்தி அடைந்தார். அந்த சமயம் சுவாமி ராஜமாதாவிடம், "நீ எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. நான் உன் மகன்."என்றார். அந்த ஒரு வாக்கியம் அவளின் கவலையை முற்றிலும் நீக்கியது; ராஜமாதா தேவமாதாவாக ஆசீர்வதிக்கப்பட்டாள்!. சில நாட்களுக்குப் பிறகு, பம்பாயில் உள்ள அவர்களின் இல்லத்திற்கு பகவான் சென்றார். ராஜமாதாவின் மகள் ஹிமான்சு குமாரி, தன் அன்புக்குரிய மறைந்த தந்தையை பாபாவின் இடத்தில் பார்க்க முடிந்தது! அவள் இதயத்தில் முன்பிருந்த அவநம்பிக்கை நீங்கி, பகவான் பாபாவை இறைவனென்று கண்டுகொண்டு நன்றிவுணர்வில் கண்ணீர் சொரிந்தாள்.
இன்னும் பல சுவாரஸ்யமான சம்பவங்களும் படிப்பினைகளும் பகுதி-2ல் காணலாம்
சுதந்திரத்திற்கு முன்பு இந்தியா… சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான பல்வேறு சமஸ்தானங்களைக் கொண்ட பெரிய பிரதேசமாக, ராஜாக்கள் மற்றும் மகாராஜாக்களால் ஆளப்பட்டு வந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, பழைய சமஸ்தானங்கள் அனைத்தும் இந்தியக் குடியரசில் இணைக்கப்பட்டன. தற்போதைய குஜராத் மாநிலத்தில் உள்ள நவாநகர் சமஸ்தானம் அத்தகைய சமஸ்தானங்களில் ஒன்றாகும். அந்த மாநிலத்து மக்களின் வெகுவான அன்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய ராஜமாதா தனது அரசவாழ்வை நீங்கி சுவாமியின் ஆசிரமத்தில் தனது கடைசி நாட்களைக் கழித்தார். அந்த உறுதியான முடிவிற்கு… நம் சுவாமியின் கருணையும், ராஜமாதாவின் பக்தியுமே காரணம்.
🌷தெய்வீகப் பணியில் முக்கியப்பங்கு:
1968ம் ஆண்டு பெங்களூரு பிருந்தாவன ஆசிரமத்திற்கு தன்னுடைய 58வது வயதில் வந்துசேர்ந்த ராஜமாதா, பாபா கொடுத்த நிலத்தில் 'தேவி நிவாஸ்' என்ற இருப்பிடம் கட்டப்படும் வரை மூன்றாண்டுகள் சுவாமியின் ஆசிரமத்திலேயே வாழ்ந்து வந்தார்.
ராஜமாதா தனது இறைவனின் தெய்வீகப் பணிகளுக்கென தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். 1972ல் ஸ்ரீ சத்யசாயி மத்திய அறக்கட்டளை நிறுவப்பட்டபோது பகவான் பாபா, ராஜமாதாவை அறக்கட்டளையின் உறுப்பினராக நியமித்தார். மீண்டும் 1981ம் ஆண்டு ஸ்ரீ சத்யசாயி உயர்கல்விக்கான நிகர்நிலைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டபோது, பகவான் ராஜமாதாவின் பெயரைப் பல்கலைக்கழக அறக்கட்டளைக்கும் பரிந்துரைத்தார். மேலும் ஸ்ரீ சத்யசாயி அமைப்புகளின் உலக கவுன்சிலிலும் அவர் இருந்தார். இவற்றின்மூலம் பகவானின் பணியில் ராஜமாதாவின் பங்கு ஈடு இணையற்றது.
🌷60 பேருக்கான உணவு 700 பேருக்குப் பெருகின அதிசயம்:
1970 டிசம்பரில், பெங்களூரில் இருந்து பம்பாய் செல்லும் வழியில் பூனாவில் உள்ள ராஜமாதாவின் இல்லமான 'ஜாம்நகர் ஹவுஸில்' பகவான் தங்கினார். அந்த வளாகத்தில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, பகவான் சொற்பொழிவு நிகழ்த்தினார். ராஜமாதா சமையலறையில் தனது மகள் ஹிமான்சு குமாரியுடன் விருந்தினர்களுக்கான உணவுத் தயாரிப்புகளை மேற்பார்வையிட்டார். அவர்கள் அங்கேயே அமர்ந்து பகவானின் சொற்பொழிவைக் கேட்கவும், ஜன்னல் வழியாக தரிசனம் செய்யவும் முடியும். சொற்பொழிவின் முடிவில், பகவான் பாபா சில பஜன்களைப் பாடத் தொடங்கினார், ராஜமாதா பக்தியுடன் பின்பாட்டு பாடிக்கொண்டிருந்தார். சில பாடல்கள் பாடி முடித்த பாபா, பக்தர்களை தொடர்ந்து பாடும்படி செய்துவிட்டு மெதுவாக நடந்து சமையலறைக்குள் சென்றார். ராஜமாதா பக்தியில் மூழ்கி, கண்களை மூடிக்கொண்டு ஆத்மார்த்தமாக பாடிக்கொண்டிருந்தார்.
பகவானோ அங்கிருந்த மற்றவர்களிடம், அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சைகை செய்துவிட்டு அவள் பாடுவதைக் கேட்டுக்கொண்டு பின்னால் நின்றார். சிறிது நேரம் கழித்து ராஜமாதா என்ன நடக்கிறது என்று கண்திறந்து பார்த்தபோது, அங்கு பாபாவைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள். பகவான் பாபா அவளிடம் "ராஜமாதா! நீ நன்றாகப் பாடுகிறாய். இனி நீ பந்தலுக்குச் சென்று பஜனைகளை நடத்தலாம்" என்று கூறினார். திகைத்துப் போன ராஜமாதா, ‘இல்லை, சுவாமி! என்னால் முடியாது; நான் ஒருபோதும் செய்யமாட்டேன்' என்று கூச்சத்துடன் பதிலளித்தார். சுவாமியோ, “இல்லை! நான் பாடுவதை எத்தனை முறை நீங்கள் கேட்டிருப்பீர்கள். இப்போது உங்கள் பாடலை நான் கேட்க விரும்புகிறேன்" என்று வலியுறுத்தினார்.
'சுவாமி! தயவு செய்து என்னை சங்கடப்படுத்தாதீர்கள். மேலும், நீங்கள் ஏன் சமையலறைக்குள் வந்தீர்கள்?' என்று தலைப்பை திசை திருப்ப முயன்றாள் ராஜமாதா. சுவாமியோ,"நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள் என்பதைப் பார்க்கவும், உங்கள் பஜனைக் கேட்கவும் வந்தேன். பரவாயில்லை. எத்தனை பேருக்கு நீங்கள் உணவு சமைத்தீர்கள்?" என்றார். அதற்கு ராஜமாதா ‘சுவாமி! சுமார் அறுபது பேருக்கு உணவளிக்கலாம்’ என்று பதிலளித்தாள். பகவான் பின்னர் சரக்கறைக்குச் சென்று ஒவ்வொரு பாத்திரத்தின் மூடியையும் திறந்து அதில் என்ன இருக்கிறது என்று விசாரித்தார்.
ஒவ்வொரு பொருளையும் ஆசீர்வதித்துவிட்டு மீண்டும் பந்தலுக்குச் சென்றார். சிறிது நேரம் கழித்து நிகழ்ச்சியின்படி, பகவான் சில அழைப்பாளர்களுடன் மதிய உணவை உட்கொண்டார். அதோடு, உணவளிக்க வேண்டியவர்களின் பட்டியலில் ஆட்களைச் சேர்த்துக் கொண்டே சென்றார் சுவாமி. சமயலறையில் செய்து வைத்திருக்கின்ற உணவின் அளவைப் பற்றி ராஜமாதா கவலைப்படத் துவங்கினார். ஆனால், பாபா அவளின் மனக்குழப்பத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். உணவளித்து முடிந்ததும், மொத்தம் எழுநூறு நபர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் உணவளிக்கப்பட்டு, இன்னும் கொஞ்சம் உணவு மீதமும் இருந்தது! அங்குள்ள ஒவ்வொரு பாத்திரமும் அக்ஷய பாத்திரமாக மாறிய அதிசயத்திற்கு அன்று சமையலறையில் இருந்த அனைவரும் சாட்சி!
🌷சுட்டெரிக்கும் வெயிலில் வெறுங்காலுடன் நடந்த பாபா:
1973ம் ஆண்டு பகவான் பாபா... ராஜ்கோட்டில் உள்ள ராஜ்குமார் கல்லூரியின் ஸ்ரீ திக்விஜய் சின்ஜி பிரிவைத் திறந்து வைத்துவிட்டு, நண்பகல் அமர் விலாஸ் அரண்மனைக்கு வருகை புரிய சம்மதித்திருந்தார். தனது அன்பான இறைவனின் வருகைக்காக அந்த இடத்தின் புனிதத்தைப் பேண எண்ணினார் ராஜமாதா. எனவே, போர்டிகோ மற்றும் அரண்மனைக்குள் பாதணிகளுடன் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று தனது விசுவாசமான அரபு பாதுகாவலர் 'ஷீக்கிற்கு' அவர் அறிவுறுத்தி இருந்தார். திட்டத்தின்படி சுவாமி, ராஜ்குமார் கல்லூரியில் நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும் அரண்மைக்குப் புறப்பட்டார் . சுவாமியைப் பின்தொடர்ந்து பல கார்கள் அணிவகுத்துச் சென்றன; அதில் ஒன்றில் ராஜமாதா அமர்ந்திருந்தார். பகவானின் கார் போர்டிகோவை அடைந்தது, அவர் காரை விட்டு இறங்கியதும், வரவேற்புக் குழு உறுப்பினர்கள் அவரை மரியாதையுடன் வரவேற்க முன்னேறினர். ஆனால், 'ஷீக்' அனைவரையும் முந்திக்கொண்டு, அவர்கள் திகிலடையும்படி பகவானிடம் 'பாபா! ஜூதே நிகாலியே' ('பாபா! உங்கள் காலணிகளை அகற்றவும்') என்றார். பாபா சிரித்துக்கொண்டே காவலாளியின் வார்த்தைகளின்படி செயல்பட்டார்! அது மட்டும் அல்ல; கடுமையான வெயிலில் ஹோம்கார்டுகளின் மரியாதையை ஏற்க வெறும் காலில் நடந்து சென்றார்!
சில நொடிகளில் அங்கு வந்துசேர்ந்த ராஜமாதா, கோடைகால சுட்டெரிக்கும் வெயிலில் வெறுங்காலுடன் சுடுமணலில் பகவான் சிரமமின்றி நடப்பதைத் திகைப்புடன் பார்த்தாள்! தனது பாதுகாவலர் செய்த தூஷணத்தை அறிந்து கொண்டார். அவள் உடனே தன் இறைவனிடம் விரைந்தாள், மன்னிப்புக் கேட்டுத் தன் கைகளில் ஏந்தியிருந்த செருப்பைப் போட்டுக்கொள்ளும்படி கெஞ்சினாள். மேலும் அவள் போர்டிகோவிற்குத் திரும்பி, மன்னிக்க முடியாத பாவத்திற்காக 'ஷீக்கை' கோபத்துடன் கண்டித்தாள். பகவானோ ராஜமாதாவை சமாதானப்படுத்தினார், "ராஜமாதா! இது அவருடைய தவறல்ல! எனக்காக விதிவிலக்கு அளிக்கும்படி நீங்கள் அவருக்கு அறிவுறுத்தவில்லை. அவருடைய விசுவாசத்தையும் கடமை உணர்வையும் நான் பாராட்டுகிறேன்" என்றார். காவலாளியின் கண்களிலிருந்து நன்றியின் கண்ணீர் வழிந்தது. பாபா மனித உருவில் உள்ள கடவுள் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தும் அவர் தனது கடமையைச் செய்திருந்தார். பகவான் பாபா, அவரது முதுகில் மெதுவாகத் தட்டிக் கொடுத்து, அவருக்கு ஒரு தாயத்தை உருவாக்கினார். அது குரானின் அரபு எழுத்துக்களுடன் கூடிய ஒரு அங்குல அளவிலான பச்சை கலந்த சாம்பல் நிறக் கல். திகைத்துப் போன 'ஷீக்', தனக்குக் கிடைத்த அற்புதமான வாய்ப்பிற்காக, ராஜமாதாவை நன்றியுடன் பார்த்தான்!
🌷சாயி கன்ஹையா:
பெங்களூரு பிருந்தாவன் தரிசன மண்டபத்தில் நிறுவுவதற்காக புதிய கிருஷ்ணர் சிலை கொண்டுவரப்பட்டது. கிருஷ்ணர் 'திரிபங்கி' தோரணையில் புல்லாங்குழல் வாசிப்பதைச் சித்தரிக்கும் ஒரு அழகிய கலைப்படைப்பாக அது இருந்தது. பகவான் பாபா ராஜமாதாவை அந்த இடத்திற்கு வரவழைத்து சிலையைக் காண்பித்தார். அவள் உள்ளே வந்து, அந்தச் சிலையை மகிழ்ச்சியோடு கண்டு… உயிர்ப்புடன் இருப்பதாக வியந்து பார்த்துக் கொண்டிருந்தபோது, பகவான் அவளிடம் "ராஜமாதா! எப்படி இருக்கிறான் இந்தக் கிருஷ்ணா! மிக அழகாக இருக்கிறான்..... இல்லையா?" என்றார். ராஜமாதா, சாயி கிருஷ்ணாவை (பகவான் பாபாவை) மனதில் கொண்டு, ‘என் கன்ஹையாவைப் போல் யாரும் அழகாக இருக்க முடியாது!’ என்றாள். பாபாவின் முகத்தில் ஒரு மயக்கும் புன்னகை தோன்றியது. அங்கு வந்திருந்த பிருந்தாவன் கல்லூரி முதல்வரிடம் "அவள் கன்ஹையா யார் தெரியுமா?" என்று கேட்டார். அங்கு நிகழ்ந்த சம்பாஷணையை சரியாகக் கண்டுணராத, பிரின்சிபால் திகைப்புடன் பகவானைப் பார்த்தார். பகவான் பெருமிதத்துடன் தன்னைச் சுட்டிக்காட்டி, "நான்தான் அது!" என்பதாக தனது தலையை ஆமோதிக்கும் வண்ணம் அழகாக அசைத்தார்!
🌷பிறந்தநாள் பரிசு:
செப்டம்பர் 26 ராஜமாதாவின் பிறந்தநாள்; அன்று பகவான் பாபா 'தேவி நிவாஸ்'க்கு சென்று அவளைப் பார்த்தவுடன், "பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஜமாதா!" என்று பாடத் தொடங்கினார். ஆனந்தக்கடலில் மூழ்கிய ராஜமாதா, 'சுவாமி! இன்று உங்களிடம் பிறந்தநாள் பரிசு கேட்பேன்; அதைத் தவறாமல் வழங்க வேண்டும்' என்று வேண்டினாள். பகவான் "அது என்ன பரிசு?" என்று கேட்டார். அதற்கு அவள், 'முதலில், அதைத் தருவதாக நீங்கள் எனக்கு உறுதியளிக்க வேண்டும், அது என்னவென்று நான் உங்களுக்கு அப்புறம் சொல்கிறேன்' என்றாள். பகவானோ, "முதலில் உனக்கு என்ன வேண்டும் என்று சொல்; நான் தருகிறேன்" என்று வற்புறுத்தினார். கடவுளுக்கும் அவரது பக்தைக்கும் இடையே வாக்குவாதம் நடந்து கடைசியாக பகவான் , "சரி... உன் விருப்பத்தை நிறைவேற்றுவதாக என் வாக்குறுதிஇதோ! இப்போது சொல்!" என்றார். 'பகவானே! எனக்கு மரணம் கொடுங்கள்' என்று வேண்டினாள் ராஜமாதா. பாபா அமைதியாக அதனை ஆமோதித்து, ஐந்து நிமிடம் அவள் தலையில் தனது தெய்வீகக் கரத்தை வைத்தார். அந்த பொன்னான நிமிடங்களில் அவளுக்குள் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது!. ஆனால் பின்னர் அதைப் பற்றி பேசுகையில், தன் மகளிடம் ராஜமாதா பின்வருமாறு கூறினாள்: ‘சுவாமி கடவுள்!. நான் பார்க்க விரும்பிய அனைத்தையும் அவர் அந்த ஐந்து நிமிடங்களில் எனக்குக் காட்டினார்!’
அன்று முதல் ராஜமாதா, தான் உலகத்தை விட்டுப் பிரிந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்று தனது குடும்ப உறுப்பினர்களுக்கு விரிவான அறிவுரைகளை வழங்கினார். ஆறு நாட்களுக்குப் பின் ... தனது கடைசி மூச்சுக்கு சில மணி நேரங்களுக்கு முன், தன் மகளிடமும் பேரனிடமும், "இனி என்னுடன் பேசாதே. நான் பகவானின் குரலை மட்டும் கேட்க விரும்புகிறேன்" என்று கூறினார். அதிகாலை 4 மணியளவில், ஒரு டேப் ரெக்கார்டரில் தனது அன்புக்குரிய இறைவன் பாடிய பஜனைகளை அமைதியாகக் கேட்டுக்கொண்டே சுவாமியுடன் கலந்தாள்.
பகவான் பாபா அன்று சூரிய உதயத்திற்குப் பிறகு 'தேவி நிவாஸ்'க்குச் சென்றார். தனது அன்பான பக்தையின் உடலைப் பார்த்து, "இனிமேல் என்னுடன் 'ஜகதா' (சண்டை) செய்வது யார்?" என்று குறிப்பிட்டார். பகவானுக்கும் அவரது அன்பான பக்தை ராஜமாதாவுக்கும் இடையே இருந்த வசீகரமான உறவின் ஒரு தனித்துவமான அம்சம் என்னவென்றால், பல விஷயங்களில் அவருடன் கருத்து வேறுபாடு கொள்ளும் சுதந்திரத்தை அவர் அவளுக்கு அனுமதித்திருந்தார். சில சமயங்களில், அவருடன் வாதிடுவதற்கும் கூட அனுமதித்திருந்தார்! சுவாமியின் எண்ணற்ற பக்தைகளுள் சிறப்பானதொரு இடத்தைப் பிடித்த புண்ணியாத்மா நவாநகர் ராஜமாதா என்பதில் ஐயமில்லை.
மூலம் : சாயி இலக்கியங்கள் மற்றும் இணையம்
✍🏻 கவிஞர்.சாய்புஷ்கர்









-1.png)
.jpg)





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக