தலைப்பு

வியாழன், 29 டிசம்பர், 2022

பாபாவின் சுடர் மிகு ஞான மொழி பற்றி ஸ்ரீமான் கஸ்தூரி!

இப்படி ஒரு விளக்கத்தை இதுவரை யாரும் வழங்கியதில்லை... அப்படி வழங்கிய அவர் ஒரு உன்னதர்... இறைவன் பாபாவின் பேராற்றலை துல்லியமாக உணர்ந்தவர்... தொண்டு செய்து பழுத்தப் பழம் எனும் சொற்றொடர் அவருக்கே பொருந்தும்! இல்லை எனில் ஸ்ரீ பிரேம சாயி அவதாரத்திற்கான அன்னையாக அவரால் எப்படி பிறந்திருக்க முடியும்? அவர் பெயரே சாயி சேவைக்கான உத்வேக சக்தி.. அவரே சேவைத் திலகம் ஸ்ரீமான் கஸ்தூரி...‌அவர் அளித்த மெய்சிலிர்க்கும் விளக்கம் இதோ...


பகவானின் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு மந்திரம்.

ஒவ்வொரு சொற்றொடரும் ஒரு சூத்திரம்.

வாக்கியம் ஒவ்வொன்றும் ஒரு காயத்ரி.

ஒவ்வொரு சொற்பொழிவும் ஒரு உபநிஷதம்.

அவர் ஒரு குளமோ, கிணறோ நதியே அல்ல... தெய்வ போதமான கடல்! 

ஓ! அவருடைய வார்த்தைகள் கனவுலகில் இருந்து விழித்தெழும் ஒவ்வொரு ஜீவனுக்கும் காலைப்பனி போல் அருளைப் பொழிகின்றன...

உன் வாழ்வின் வேர்களுக்கு அவர் உணவளிக்கிறார்!

உயிர்வாழ அத்தியாவசியமான பொருளை அடைய விரைவுபடுத்துகிறார்! 

மொட்டுக்களை மலர்விக்கிறார்!

பூவிதழ்களை நிறைத்து அளிக்கிறார்!

அவைகளுக்குத் தேனீக்களை தங்களிடம் வரவழைக்கும் மணத்தைக் கொடுக்கிறார்!

தம்முடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் காயைப் பழமாக்குகிறார்!

அந்த வார்த்தைகள் உன்னுடைய பாறை போன்ற மனத்தை இளக வைக்கின்றன...

ஆச்சர்யங்ஙளுக்கெல்லாம் ஆச்சர்யம்!

அது அங்கே துளிர்விடுகிறது!

இலைகள் பரந்து வளர்கின்றன...

அவருடைய பேச்சு குளுமையானது!

ஆனால் உறைந்து போகாது!

வெப்பமானது! ஆனால் எரிக்காது!

மழை போன்றது! ஆனால் வெள்ளமாகாது!

அது மனத்துன்பப்படுத்துபவர்களை குணப்படுத்துகிறது! சாந்தப்படுத்துகிறது! 

அமைதியைக் கொடுக்கிறது!

சக்தியைக் கொடுக்கிறது!

ஒவ்வொரு வாக்கியமும் கவனத்தைத் தூண்டுகிறது!

ஆனந்தத்தை அளித்து , உணர்வூட்டி விழித்தெழச் செய்கிறது! 

அவருடைய பேச்சுக்களைக் கேட்கும் போது, உன் யாத்திரைப் பாதையில் ஓரடி முன்வைக்க... நீ அமைதியாக முடிவெடுக்கிறாய்!

அவதாரத்தின் இனிய வாய்மொழியாகவே அவர்!

பாபா பேசுவதைக் கேட்கும் நீங்கள் எவ்வளவு பாக்கியசாலிகள்! 


(ஆதாரம் : ஸ்ரீ சத்ய சாயியின் இனியவை 400 | பக்கம் : 141 | ஆசிரியர் : சாயி சரஜ் (சரோஜினி சாயிராம்)

மூலம் : அவதார மொழி அமிர்தம் | ஆசிரியர் : ஸ்ரீமான் கஸ்தூரி)


இறைவன் பாபாவின் ஞான மொழி பற்றி எழுதும் போது சேவைத் திலகத்தின் விரல் சிறகாகிவிடுகிறது! பேனா வானவில் கவிதை நடையை வரைந்து இதயத்தில் நிலைக்கும் ரசவாதத்தை இயல்பாகப் புரிந்துவிடுகிறது! இறைவன் பாபாவோ பிரபஞ்ச ரகசியத்தை ஆன்ம ஞானமாய் மொழிபெயர்த்தவர்... சேவைத்திலகமோ அந்த ஆன்ம ஞானத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்! நமது வாழ்க்கை என்பதே பாபாவின் பக்தி என்பதான இயற்கையின் மொழிபெயர்ப்பு தான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக