தலைப்பு

புதன், 30 நவம்பர், 2022

பாபாவின் கால்பட்ட இடம் எல்லாம் பொங்கிப் பூத்த தேவலோக துளசிகள்!

இறைவன் பாபாவின் இளமைக்கால விளையாடல்கள் அவரின் ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் போல் குதூகலம் தருபவை... அதில் ஒன்று மிக வியப்புடன் இதோ...

பாபாவுக்கு அப்போது மிக இளம் வயது... மான் போல் துள்ளுவார்... உரலில் தான் பால பாபாவை கட்டி வைக்கவில்லையே தவிர கோகுலக் குறும்புகள் புட்டபர்த்தியில் அவதரித்த பிறகும் அவருக்கு குறையவே இல்லை... அவர் துவாபர யுகம் போல் வெண்ணெயை திருட வில்லையே தவிர... வெண்ணெய் கூட பரவாயில்லை தயிரிலிருந்து மீண்டும் உருவாக்கிக் கொள்ளலாம்.. பாபா திருடியதோ உள்ளங்களை... அதை மீண்டும் எங்கிருந்து உருவாக்குவது?! அவர் உள்ளம் கவர் கள்வன் என்பதால் பால சாயியை ஓயாமல் எப்போதும் நண்பர் குழாம் சூழ்ந்தே இருக்கும்... நெல்லிக் கனி போல் அல்ல பாபா கடித்த உடன் கசந்து பிறகு இனிப்பதற்கு... நினைத்தாலே இனிக்கும் நித்திய இறைவன் சாயியை ஆனவரை எந்தவித எதிர்ப்பார்ப்புமின்றி அவரைச் சூழ்ந்த இளமைக்கால வாலிபர் விளையாடி விளையாடி இன்புற்றனர்... முக்தி பற்றிய ஞானமும் இல்லை, உலகம் பற்றிய ஆர்வமும் இல்லை.. அத்தனைக் குழந்தைகளும் பாபாவோடு களித்தனர்... தொட்டு விளையாட்டு, கண்ணாமூச்சி என பாபா அவர்களோடு ஆடாத விளையாட்டே இல்லை... சிறு வயதிலிருந்து இன்றுவரை பாபா நம்மிடையே ஆடிக் கொண்டிருப்பது அந்த கண்ணாமூச்சி ஆட்டமே! அவருக்கு மிகப் பிடித்தமான ஆட்டம் அது! தவிப்பற்றவர் முன் திடீரென தோன்றுவார்! தவிக்க வைத்து அதைப் பின்னால் இருந்து ரசிப்பார்.. ஆகவே தான் இறைவன் பாபாவை யாராலும் புரிந்து கொள்ள முடியாது! அவரவர் கர்ம கணக்கிற்கு ஏற்பவே அவரவர்க்கு தனிப்பட்ட ரீதியில் பாபா அருள் புரிகிறார்! 


ஒருமுறை பாலசாயியோடு பாலகர்கள் விளையாடுகிற சமயத்தில் சித்ராவதியில் அவர்கள் கால்பதியாத இடமே இல்லை! அப்படி ஒரு குதூகலம்.. கும்மாளம்! அப்படி ஒரு சமயத்தில்... கூரிய கற்கள் நிறைந்த ஒரு இடம் அது! அதன் மேல் ஓடலாம் வாருங்கள் என பால சாயி அழைத்துப் போகிறார்... பால சாயி அதன் மேல் ஓடுகிற ஒவ்வொரு நொடியிலும்.. அவரின் ஒவ்வொரு அடியிலும் ஒரு துளசிக் கொத்து முளைக்கிறது... இப்படி பால சாயி ஒவ்வொரு அடி எடுத்து ஓட ...அடி எடுத்து ஓட அந்த துளசிக் கொத்து அவரின் பாத அடியில் வழி எங்கிலும் தழைக்கிறது! அந்தத் துளசிக் கொத்தின் மேல் பின் தொடர்ந்த பாலகர்கள் கால் வைத்து... கற்களின் குத்துதல் இன்றி சுகமாக பால பாபாவின் பின்னோடுகிறார்கள்... ஓடிய பாலகரில் ஒருவர் இஸ்லாமிய சகோதரர்... அந்த நினைவலைகளை தனது 80 வயதிலும் மறக்காமல் இனிக்க இனிக்க பதிவு செய்திருக்கிறார்... அதை நினைத்தால் இப்போதும் அந்த துளசிக் கொத்தின் வாசனை யோசனையில் வீசுகிறது எனக் கண்கலங்குகிறார்!

(ஆதாரம் : ஸ்ரீ சத்ய சாயியின் இனியவை 400 | பக்கம் - 23 | ஆசிரியர் : சாயி சரஜ் (சரோஜினி சாயிராம்) 


பால சாயி அவதரித்து அவர் பாதம் பட்ட பிறகே புட்டபர்த்தியே பூத்தது...அது வரை அது காய்ந்த சறுகு தான்... பறவையைப் பிரிந்து காற்றில் இலக்கின்றி அலைந்த ஒற்றை இறகு தான்...ஆகவே பால சாயி பாதம் பட்ட இடத்தில் துளிசிக் கொத்து பூத்து வந்ததில் ஆச்சர்யம் இல்லை.. ஆயினும் தனது சக நண்பர்களுக்கு கற்கள் குத்தாமல் தன்னோடு ஓடி வர ஏதுவாக இருக்கவே அந்தத் துளசிக் கொத்தைப் பூக்க வைத்தார் பாபா... என்பதாலேயே இன்னும் கருணையோடு கூடிய தெய்வீகம் அந்தச் சம்பவத்தில் பரவவே செய்கிறது!


   பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக