தலைப்பு

வெள்ளி, 9 செப்டம்பர், 2022

301-350 | ஸ்ரீ சத்யசாயி தெய்வீக நிகழ்வுகள்!

இறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது இதோ..📝 நிகழ்வு 301:

திரு. S.A Pather என்ற பெயர் கொண்ட சாய் பக்தர் முதல்முறையாக 1970இல் மும்பையில் உள்ள தர்மக்ஷேத்ராவில் சுவாமியை தரிசனம் செய்தார். தரிசனத்திற்காக அவர் அங்கு வந்திருந்தபோது ஒரு மூதாட்டி அவரை அணுகினார். அவர் தனது கைகளில் ஒரு வயதான ஆண் மகனை தாங்கிக் கொண்டிருந்தார். நமது கலாச்சாரப்படி ஆண்களும் பெண்களும் தனித்தனியாக தரிசனத்திற்கு உட்காருவதால், இந்த இளைஞனை தன்னருகே வைத்து பார்த்துக் கொள்ள முடியுமா என்று அவரிடம் கேட்டார். அதற்கு திரு. S.A Pather ஒப்புக்கொண்டார். பின்னர் அந்த மூதாட்டி பெண்கள் பக்கம் சென்று அமர்ந்துகொண்டார். சுவாமி அவருக்கே உரித்தான நளின நடையில் தரிசனத்திற்கு வந்தார். திரு. S.A Pather ஐ சிறிது கடந்து சென்ற பிறகு , திடீரென திரும்பிய சுவாமி , "ஓ!"என்று சொல்லிக்கொண்டே, அனைத்து கைகளும் கால்களும் ஊனமுற்று கீழே கிடக்கும் அந்த இளைஞன் அருகில் வந்தார்! விபூதியை சிருஷ்டி செய்து அவனது வலது கையில் முழுமையாக தேய்த்தார். பிறகு அவனது இடது கையையும் வலது கையையும் சேர்த்து தேய்த்த பின்னர் அங்கிருந்து சென்று விட்டார். சில வினாடிகள் கழித்து தன் வலது கையினுள் இரத்தம் நகர்ந்து கொண்டிருப்பதைப் போல் உணர்வதாக திரு. Pather இடம் தெரிவித்தார் அந்த இளைஞர். முதலில் தன் விரல்களை அசைக்க ஆரம்பித்து, பிறகு தன் கையையே அசைத்தார். தன் வலது கையை உயரத் தூக்கினார்! வெகுவிரைவில் இதுபோலவே தனது இடது கையும் சுவாதீனத்திற்கு வருவதை உணர்ந்தார்! பிறகு மெதுவாக எழுந்து நின்றார்! தனது கால்களை ஒன்றன்பின் ஒன்றாக நகர்த்தினார். 

இருபத்தி நான்கு வருடங்களுக்குப் பிறகு தனது கைகளையும் கால்களையும் நகர்த்த முடிந்ததை எண்ணி விவரிக்க முடியாத மகிழ்ச்சியில் நடனம் ஆடினார்! அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த தாயின் கண்களில் நீர் வார்த்தது! சுவாமி தரிசனம் முடிந்து இருந்ததால், அதே ஆனந்த நடனத்துடன் தன் தாயிடம் சென்றார்! தன் தாயின் கைகளைப் பற்றிக் கொண்டு வெளியே நடக்க ஆரம்பித்தார்! அப்போது அவர்கள் இருவரும் Pather அவர்களை மகிழ்ச்சியும் நன்றியும் கலந்த பார்வையுடன் நோக்கியபோது, Pather அவர்களின் கண்களிலும் நீர் ததும்பியது! 

தனக்குக் கிடைத்த சுவாமியின் முதல் தரிசனத்தின் போதே, எப்பேர்ப்பட்ட அனுபவம் அவருக்கு!

ஆதாரம்: "மிரகிள்ஸ் ஆஃப் டிவைன் லவ்", (முதல் பாகம்) என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 302:

14 வயது சிறுவனாக பாபா உரவகொண்டா உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலங்களில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை 4 மணி முதல் 8 மணி வரை சீரடி பாபாவாக நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு தரிசனம் அளித்து அவர்களது குறைகளை தீர்த்து வைத்தார். அந்த காலகட்டத்தில் அதே உயர்நிலைப் பள்ளியில் நான் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். நானும் வியாழக்கிழமைகளில் அவரிடம் சென்று மிகவும் பயன் அடைந்தேன். என்னுடைய மாணவராக இருந்த சத்யா, அப்போதும்கூட தன் கைகளை அசைத்து விபூதியை வரவழைத்து கொடுத்தார். சில காலத்திற்கு முன்னால் 22 வயதே ஆகியிருந்த எனது மகள் காலமானாள். இதன்காரணமாக என் மனைவி ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தாள். இதனால் சத்யா அவ்வப்போது என் வீட்டிற்கு வருவார். பிறப்பு இறப்பு எனும் இரு பெரும் தொல்லைகளை பற்றி நீண்ட உரை நிகழ்த்துவார்; பிறகு என் மனைவிக்கு ஆறுதல் சொல்வார். இதன் மூலம் என் மனைவி விரைவில் சகஜ நிலைக்கு திரும்பினாள். அவரது பிரேமை நிரம்பிய வார்த்தைகள் என் மனைவியின் மனக்குமுறல்களை அடக்கி அமைதியைக் கொடுத்தன. பகவானின் மேல் அவளுக்கு இருந்த பக்தியை அதிகப்படுத்தின. ஒரு வியாழக்கிழமை அவள் சுவாமியை வணங்கிய போது அவர் விபூதியை அளித்து, "அம்மா! நான் உன் பக்தியை போற்றுகிறேன். நான் திருப்தி அடைகிறேன். அடுத்த வாரம் நீ என்னை பார்க்க வா! நான் உனக்கு ஒரு அன்பளிப்பை தருகிறேன்!" என்றார். அதேபோல அடுத்த வாரம் அவள் வந்து சுவாமியின் கால்களில் விழுந்து நமஸ்கரிக்கும் போது, அவர் "அம்மா! நான் சீரடியில் சமாதி அடைந்த என்னுடைய இறுதி நாளன்று நான் அணிந்திருந்த அங்கியின் ஒரு சிறு துண்டை உனக்கு கொடுக்கிறேன்!" என்று கூறிவிட்டு தன் கையை ஒரு கணம் மூடித் திறந்தார்.. அவரது கையில் தோன்றியிருந்த நான்கு அங்குலம் நீளம் உள்ள ஒரு சதுர வடிவிலான துணியை காண்பித்தார்! என் மனைவியிடம் அதனைக் கொடுத்து, "இந்தத் துணியை உன் வீட்டில் வைத்து என் பெயரைச் சொல்லி பூஜை செய்து வா! அடுத்த வாரம் நீ வரும்போது மேலும் சிலவற்றைத் தருகிறேன்!" என்று கூறி எங்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார். மேலும் அவர், "இப்போதிலிருந்து , நீ மகிழ்ச்சியாகவே இரு! உன்னுடைய சுமைகள் அனைத்தையும் இன்று முதல் நான் தாங்குகிறேன்" என்று வரமளித்தார்! 

 அடுத்த வியாழக்கிழமை நாங்கள் சென்று சுவாமியை வணங்கிய போது முன்போலவே ஒரு கணம் தன் கையை மூடி திறந்தார். அவர் கை நிறைய அட்சதை நிரம்பியிருந்தது! அப்போது அவர், "சென்ற வாரம் நான் உனக்கு அளித்திருந்த துணியில் இதை கட்டி வைத்து பூஜை செய்! இது உனக்கு மன அமைதியைத் தரும்! இனிமேல் நீ கவலைப் படுவதற்கான எந்த காரணமும் இருக்காது! நீ என் மேல் முழுமையான பக்தியை பெறுவதற்கான வரத்தை நான் உனக்கு அளிக்கிறேன்!" என்று கூறினார்!

 இதேபோல் 5வது வியாழக்கிழமையும் ஒரு அற்புதம் நிகழ்ந்தது! அவர் என் மனைவியிடம், "அம்மா! நீ உன் வீட்டில் உள்ள பூஜை அறையில் ஒரு பீடத்தை வை! அங்கேயே நான் உனக்கு தரிசனம் கொடுத்துக் கொண்டிருப்பேன்!" என்றார்! எங்களை உடனே அதை செய்யவும் வைத்தார்!

ஆதாரம்: சனாதன சாரதி ஆகஸ்ட் 2022 இதழில் பதிவாகியுள்ள பகவானுடைய ஆசிரியர், திரு. மஞ்சிராஜு தம்மிராஜு அவர்களது உரையிலிருந்து.


📝 நிகழ்வு 303:

✍🏻Mr. Eruch K. Wadia என்ற பக்தர், பெங்களூரில் இருந்து எழுதுகிறார்:

நூமோ தொராக்ஸ் என்ற நுரையீரல் நோயால் நான் மூன்றாவது முறையாக பாதிக்கப்பட்டிருந்த போது, விக்டோரியா ஹாஸ்பிடலில் உள்ள சிறப்பு மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு நான் அறிவுறுத்தப்பட்டேன். ஏனெனில் அதுவரை நான் மேற்கொண்ட சிகிச்சைகள் எனக்கு பலன் கொடுக்கவில்லை. இந்த அறிவுரையை செயல்படுத்துவதற்கு முன்னால் நான் பிரசாந்தி நிலையத்திற்கு சென்றேன். சிறிது தொலைவில் இருந்து எனக்கு தரிசனம் கிடைத்தாலும் நான் மனதார சுவாமியிடம் வேண்டிக் கொண்டேன். மருத்துவர்களை கலந்து ஆலோசிப்பதற்காக உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டேன். 

 மருத்துவர்கள் என்னை பலவிதமாக பரிசோதித்த பின்னர், "உங்களுக்கு நூமோ தொராக்ஸ் என்ற நோய் உள்ளது என்று யார் உங்களுக்குக் கூறினார்கள்?" என்று கேட்டார்கள்! உடனே நான், "தீவிர பரிசோதனைகளுக்காக, நான் எஸ் டி எஸ் சானடோரியத்திற்கு அனுப்பப்பட்டேன். எனது வலது நுரையீரல் பகுதியில் இந்த நோய் இருப்பதாக எனக்கு கூறப்பட்டது" என்று பதிலளித்தேன். அதற்கு அந்த மருத்துவர்கள், "நீங்கள் கூறுவது எங்களுக்குப் புதிராக உள்ளது. நீங்கள் கூறிய அதே வலது நுரையீரல், சாதாரணமாக உள்ள உங்களது இடது நுரையீரலை காட்டிலும், நன்றாகவும் பலமாகவும் உள்ளது! உங்களிடத்தில் எந்த குறையும் இல்லை ஆகவே எதுவும் செய்ய வேண்டிய தேவையில்லை!" என்று கூறினர்! 

சுவாமியின் தரிசனம் மட்டுமே என்னுடைய நோயைப் போக்கி பூரணமான ஆரோக்கியத்தை அளித்துள்ளது!!

ஆதாரம்: "மிரகிள்ஸ் ஆஃப் டிவைன் லவ்", (முதல் பாகம்) என்ற புத்தகத்திலிருந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக