தலைப்பு

செவ்வாய், 3 ஜனவரி, 2023

தன் சமாதிக்குப் பிறகு பாபாவை தரிசிக்க வந்த இறைத்தாய் ஈஸ்வராம்பா!

இறைவன் பாபா பற்றற்றவர்... அவருக்கெந்த பந்த பாசமும் இல்லை... சத்தியத்தை தன் அங்க அசைவிலும் வெளிப்படுத்துகிறவர் பாபா! அப்படி இருக்கையில் பாபா எனும் சைதன்ய ஜோதியை தாங்கிய தெய்வீகத் திருவிளக்கான ஈஸ்வராம்பா பாபாவால் பெற்ற சத்தியப் பாராட்டு யாவை? சுவாரஸ்யமாக இதோ...


வெங்கடேசன் எனும் பாபா மாணவர்... பாபா நடத்தி வரும் கல்விச் சாலையில் ஒயிட் ஃபீல்டில் கல்வி கற்கிறார்... மிருணா என்பவரின் வீட்டிற்கு ஒருமுறை விடுமுறையில் வருகிறார்... அது அவரின் விடுமுறைக் காலம்! அந்த விடுமுறைக் காலங்களைக் கூட பாபா மாணவர்கள் மிகச் சரியாக பயன்படுத்துபவர்கள்.. அவர் பாபா அனுபவங்களை கேட்டறிந்து பிறகு அதை சக மாணவர்களோடு பகிரவே மிருணா எனும் பக்தரின் வீட்டிற்கு வருகிறார்! சில பாபா மாணவர்களும் இவருக்கு முன்பே வந்து விட்டு அனுபவங்களை கேட்டறிந்து செல்கின்றனர்... பாபாவின் அருகாமையிலேயே தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு ஏற்படாத பாபா அனுபவங்களா? பிறகு ஏன் பிற பக்தர்களுக்கு நிகழும் அனுபவங்களை அவர்கள் கேட்டறிய வேண்டும்? அது தான் பக்குவமான அணுகுமுறை... நமக்கு நிகழ்கிற அற்புதங்கள் நம்மை ஆன்மீகத்தில் ஆழப்படுத்துகிறது.. பிறருக்கு நிகழ்பவற்றையும் நாம் கேட்டு ஆனந்தப்படும் போதே நமது அனுபவம் அகலப்படுகிறது!


ஆக வந்திருந்த பாபா மாணவரான வெங்கடேசனிடமே பாபா குறித்த அனுபவங்கள் கேட்கிறார்கள்... அவர் பகிர ஆரம்பிக்கிறார்... கேட்பவர்கள் இதயத்தின் இன்னொரு பரவசக் கதவு திறந்து கொள்கிறது! அவர் பகிர்வதாவது...

சில நாட்களுக்கு முன்பு இறைவன் பாபா அறையின் முன்பு சேவை புரியும் மூன்று மாணவர்களிடம் பிற பாபா மாணவர்கள் சேர்ந்து "இப்போது சுவாமி மிகவும் இளைத்துவிட்டிருக்கிறார்... ஆகவே நீங்கள் சுவாமியிடம் "உங்கள் உடம்பை நீங்கள் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறுங்கள்!" என சக மாணவர்கள் அவர்களிடம் பரிந்துரைக்க... அவர்களும் அந்த சமய சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறார்கள்! அன்று இரவாகிறது... பாபா அறை வெளியே அவர்கள் காத்திருக்கிறார்கள்... எப்படியாவது பாபா தனது அறையை விட்டு வெளியே வர வேண்டும்.. அப்போது தான் தங்களின் ஒட்டுமொத்த ஒரே கோரிக்கையை சொல்ல முடியும் என பிரார்த்தனை செய்கிறார்கள்! தனது எந்த பக்தரின் எந்த பிரார்த்தனையையும் கவனித்துக் கேட்பவர் இறைவன் பாபா! ஆக பாபாவும் தனது அறையை விட்டு வெளியே வந்து "என்ன விஷயம்?" எனக் கேட்கிறார்! 


அந்த சமயம் பார்த்து ஒரு பெண்மணி உள்ளே நுழைகிறார்... அவர்களை இடைமறித்தபடி "நீங்கள் யார்? எவ்வாறு அனுமதியின்றி உள்ளே வந்தீர்கள்?" என அந்த மூன்று மாணவர்களும் விசாரிக்க... உடனே பாபாவோ அவர்களின் கையை அமர்த்தி விட்டு..

"இவர் தான் ஈஸ்வராம்பா.. என்னை தரிசிக்க வந்திருக்கிறார்!" என்கிறார் பாபா!

வியப்பின் உச்சிக்கே போகிறார்கள் அந்த மாணவர்கள்... காரணம் இறைத்தாய் ஈஸ்வராம்பா சமாதி ஆகி பல வருடங்கள் கடந்திருந்த சமயம் அது! ஆகவே அந்த பரவசம்!  

அப்போது இறைத்தாயோ "சுவாமி! நீ மிகவும் மெலிந்திருக்கிறாய்! உடம்பை கவனித்துக் கொள்வதே இல்லை! பக்தர்கள் பலர் கைக்குட்டை எல்லாம் கொடுக்கிறார்கள்... கவனமாக இரு.. அதில் ஏதாவது விஷம் கூட இருக்கலாம்! அதை எல்லாம் வாங்காதே! சர்வ ஜாக்கிரதையாக இரு!" என்கிறார் இறைத்தாய்! 


இதைக் கேட்ட அந்த மூன்று மாணவர்களுக்கு மேலும் வியப்பு... தாங்கள் சொல்ல வந்த விஷயத்தையே இறைத் தாய் சொல்லியதில் நெகிழ்ச்சியும்... மகிழ்ச்சியும்... சமாதி ஆன பிறகும் அதே பாசம் அதே அக்கறை... எல்லாம் அறிந்த இறைவன் பாபாவான போதும்... தனது அதே பாச உணர்வை இப்போதும் அவர்கள் வெளிப்படுத்த

"பயப்படாதே! கவலையில்லாமல் இரு! சுவாமி ஜாக்கிரதையாகவே இருக்கிறேன்!" என்கிறார் பாபா! பிறகு அந்த மூன்று மாணவர்களின் பக்கம் திரும்பி "ஈஸ்வராம்பா மிக நன்றாக ராகிக் களி, சாறு எல்லாம் சமைப்பார்... நன்றாக ருசித்துச் சாப்பிடுவேன்! அந்த மாதிரி ருசியாக இப்போது யாருக்கும் சமைக்கத் தெரியவில்லை!" என்று இறைத்தாயின் சமையல் மகிமையை விவரிக்க... கேட்கும் தாயே கண் கலங்குகிறார்!

சமையல் மகிமையை இறைத்தாய் நிகழ்த்தியதை சமய மகிமையை நிகழ்த்தும் இறைவன் பாபா விவரித்த அந்த நேரம் கண்கொள்ளா காட்சியாக நிறைந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தாலே மெய் சிலிர்க்கிறது!


(ஆதாரம் : ஸ்ரீ சத்ய சாயியின் இனியவை 400 | பக்கம் : 66 | ஆசிரியர் : சாயி சரஜ் (சரோஜினி சாயிராம்))


இறைவன் பாபா இந்த உலகத்தவர் இல்லை.. அவர் லோகம் இது இல்லை.. ஆயினும் ஜீவராசிகளின் மேல் உள்ள பெருங்கருணையினால் மீண்டும் மீண்டும் மீண்டும் (3 முறை) மண்ணில் அவதரிக்கிறார்... ஆக பாபா எது சொல்லினும்... எதை நடத்தினும் அது நம் நன்மைக்கு மட்டுமே! எனவே கணம்தோறும் பாபாவின் கவனம் யாவும் பக்தர்களின் நலனில் மட்டுமே என்பதை நம்மால் நன்றாக உணர முடிகிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

1 கருத்து: