தலைப்பு

செவ்வாய், 10 ஜனவரி, 2023

சுவாமி! சிலர் இறைவனுக்கு உருவம் இல்லை எனவும் பலர் உருவம் உள்ளது எனவும் வழிபடுகின்றனர்? இதில் எது உண்மை? எது சிறந்தது?


இதில் நான் பலரின் எண்ணம் தவறாக உள்ளது! 

உருவம் என்ற ஒன்றே இல்லாமல்.. உருவம் இல்லாமை  எப்படி வரும்?

இறைவனை உருவமற்றவனாக எப்படி உன்னால் நினைக்க இயலும்?

உனக்கே ஒரு உருவம் இருக்கிறது அல்லவா?!

உருவம் இல்லாமல் எப்படி ஒன்றோடு தொடர்புபடுத்திக் கொள்ள இயலும்?

மீன் தனது இறைவனாக தன்னை விட மிகப்பெரிய மீனையே உருவகப்படுத்த இயலும்! 

எருமை கூட தனது இறைவனை தன்னை விட உருவத்தில் பெருத்த இன்னொரு எருமையாகவே பார்க்கும்!

அதே போல் மனிதன் கூட தனது இறைவனை தன்னை விட ஆற்றல் மிகுந்த மனித உருவில் தான் பார்க்க முடியும்! அதுதான் எதார்த்த உண்மை! 

உண்மையில் உருவமற்ற இறை வழிபாட்டிற்கு உருவமுள்ள இறை வழிபாடே இட்டுச் செல்கிறது!

அது இல்லாமல் இது சாத்தியமே இல்லை!


உதாரணத்திற்கு : நீங்கள் இந்த அறையில் சுவாமியோடு பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.. இது உங்களுக்கு நிகழும் உருவ அனுபவம்...

இதனை நீங்கள் உங்கள் வீட்டிற்குச் சென்று என் உருவமில்லாத சூழலில் நினைத்துப் பார்த்து ஆனந்தப்பட்டால் அதுவே உங்களுக்கு நேரும் உருவமற்ற அனுபவம்! 

இன்னொரு உதாரணம்: நீங்கள் பால் அருந்த விரும்பினால்? எப்படி அருந்துவீர்கள்? அதற்கு ஒரு பாத்திரம் தேவை அல்லவா? அந்தப் பாலை கறப்பதற்குக் கூட பாத்திரம் தேவை! அந்தப் பால் என்பது உருவமற்ற வழிபாடு எனில்... அதைத் தாங்கி நிற்கும் பாத்திரமே உருவ வழிபாடு!


இந்த இரண்டு வழிபாட்டில் எது சிறந்தது எனக் கேட்கிறீர்கள்? 

சுவாமி என் பார்வையில் இரண்டுமே சிறந்தவை! இரண்டுமே ஒன்றை ஒன்று மிஞ்சியதல்ல...! 

உதாரணத்திற்கு: கோவையில் நிலப்பரப்பு சமமாக இருக்கிறது..

ஆனால் கொடைக்கானலில் நிலப்பரப்பு அப்படி இல்லை... பள்ளமும் மேடுமாக மலைகள் அடர்ந்தும் இருக்கிறது... இதை யாரும் ஏற்படுத்தவில்லை... இயற்கையின் விளைவு! இயல்பாகவே அப்படி உள்ளது! இதில் என்ன பேதம் இருக்கிறது? அது அது அதனதன் காட்சியில் அழகே! இரண்டுமே அதனதன் சூழ்நிலையில் பயனுள்ளவையே! அதுபோல் உருவமோ உருவமற்ற வழிபாடோ இரண்டுமே அவரவர் ஆன்மநிலைக்கு  ஏற்ப பயனுள்ளவை தான்!


(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம்: 25)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக