தலைப்பு

திங்கள், 9 ஜனவரி, 2023

யோகினி ஸ்ரீ வேங்கட லஷ்மம்மா | ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்

யோகிகள் விளம்பரங்களில் வருவதில்லை... அவர்களுக்கு விளம்பரங்களும் தேவையில்லை... அப்படி ஒரு யோகினி பாபாவை எவ்வாறு உணர்கிறார்? தன்னை நாடி வந்த ஒருவருக்கு அவர் பாபா பற்றி பகிர்ந்த பேருண்மை யாது? அந்த நபர் யார்? சுவாரஸ்யமாக இதோ...


"ஸ்ரீ சத்ய சாயி ஆனந்ததாயி" என்ற புத்தகம் வாசிக்காத சாயி பக்தர்களே இருக்க முடியாது! அதன் ஆசிரியர் கருணாம்பா ராமமூர்த்தி... கண்ணம்மா என்று அழைக்கப்படுபவர்... அந்த புத்தகப் பக்கம் ஒவ்வொன்றும் நம்மை பாபாவின் பக்கம் அழைத்துச் செல்லும்! அந்த புண்ணியாத்மா கருணாம்பா அவர்களின் தாயாரே நாமகிரியம்மா! ஒருமுறை அரச மர அடியில் தியானம் செய்து கொண்டிருக்கிறார் நாமகிரியம்மா... அந்த மரம் வேணுகோபால சுவாமி கோவில் அருகே இருக்கிறது.. இளவரசர் கௌதம புத்தர் இளைப்பாறிய மரமே அரச மரம் (போதி மரம்) என பிற்காலத்தில் அழைக்கப்படுகிறது.. அப்படி இளைப்பாறிய போதே அவருக்கு ஞானோதயமும் ஏற்படுகிறது! அப்படி அந்த மரத்தில் தியானம் செய்து விட்டு கண் திறந்த போது பாபா அவர் முன் தோன்றியடி நிற்கிறார்... நாமகிரியம்மாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது! "இந்த இடம் மிகச் சரியான இடம்.. இனி இதே இடத்தில் தினமும் தியானம் செய்!" என்கிறார் பாபா! 

பக்தர்கள் தியானம் செய்கையில் அகம் மகிழ்ந்து அவர்களுக்கு மேலும் வழிகாட்ட ஓடோடி வருபவர் இறைவன் பாபா என்பது அனுபவ சத்தியம்!


நாமகிரியம்மா

ஒருநாள் பாபாவை நாமகிரியம்மா பிரசாந்தி நிலையத்தில் இருக்கும் தங்கள் இருப்பிடத்திற்கு வரவேற்று "மந்திரோபதேசம் கொடுங்கள் சுவாமி!" என மனம் திறந்து கேட்கிறார்! குருவுக்கும் சீடருக்குமான அருட்தொடர்புப் பாலம் மந்திரம் வழியான உபதேசம்... அதனால் ஜபயோகம் ஏற்படுகிறது! அதற்கு பாபா சொன்ன சொன்ன பதில்... *"கடந்த வருடம் ஆன்மீக நன்மைக்காக நீ ஒரு இடத்திற்குச் சென்றாய்... அது நல்ல இடம்... அப்போது எது உபதேசமாகக் கொடுக்கப்பட்டதோ அதையே நீ தொடர்ந்து ஜபித்து வா.. மந்திரத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லை... நீ ஒருவேளை விருப்பப்பட்டால் 'சாயி' என்று அந்த மந்திரத்தின் துவக்கத்தில் சேர்த்துக் கொள்.. அதுவே போதும்!"* என்கிறார்! 

"சுவாமிக்கு எல்லாம் தெரிந்திருக்கிறதே!" என ஏக ஆச்சர்யம் நாமகிரியம்மாவுக்கு...! 

அவர்கள் பாபாவின் தெய்வீகத்தை அனுபவித்த சம்பவங்கள் ஒன்றா? இரண்டா? அத்தனையும் மகிமை மகிமை... அப்பேர்ப்பட்ட பாக்கிய மனுஷி அவர்கள்!


அந்த மந்திரத்தை நாமகிரியம்மாவுக்கு உபதேசித்தவர் தர்மாவரம் தாளூக்காவின் நாம்தயாளா கிராமத்தைச் சேர்ந்தவர்... 1945 ஆம் ஆண்டு அவர் பகவான் ஸ்ரீ ரமணமகரிஷியை தரிசித்துவிட்டு வரும் போது மைசூரில் நாமகிரியம்மா இல்லத்தில் 4 நாட்கள் தங்கி இருக்கிறார்... அவர்களின் பெயர் யோகினி ஸ்ரீ வேங்கட லஷ்மம்மா... ஸ்ரீ வேங்கடம்மா அதிகம் யாரோடும் பேசாதவர்... கோவிலை விட சாதுக்களின் மகான்களின் சந்நிதானத்திலேயே தனது நேரத்தை கழிக்க மிகுந்த ஆன்மீக ஆர்வமுடையவர்! இரவெல்லாம் ஆழமாக தியானம் புரிபவர்! ஒருமுறை  நாமகிரியம்மா வேங்கடம்மாவிடம் மந்திரோபதேசம் கேட்க... அவர் தனது கிராமத்திற்கு அழைக்க.. அங்கே செல்கையில் ஜப யோகத்திற்கான மந்திரத்தை உபதேசிக்கிறார்! அந்த காலகட்டத்தில் வேங்கடம்மா பெரிய யோகினி என எவரும் அறிந்திருக்கவில்லை...! சந்நிதான விளக்கு கருவறையை மட்டுமே பிரகாசிக்கச் செய்யும்... அது போலவே யோகிகள்,யோகினிகள்! 


மற்றொருமுறை நாமகிரியம்மா இல்லத்திற்கு வேங்கடம்மா வந்திருக்கும் போது தான் யாரை குருவாக கடவுளாக கொண்டாடி வழிபடுவது? என ஒரு ஆழமான கேள்வியை கேட்கிறார்... "என்னையே நீ வழிபடு!" என வேங்கடம்மா சொல்லவில்லை‌.. காரணம் அவர் யோகினி! யோகினிகள் அகந்தை அற்றவர்கள்... ஆன்மீக ஞானமுடையவர்கள்! மிகச் சரியாக வழிகாட்டுபவர்கள்! 

"அம்மா... பெனுகோண்டா கிராமம் அருகே ஒரு தெய்வீக மொட்டு மலர்ந்து கொண்டிருக்கிறது... அந்த இறை மலரே உனக்கு குருவும் கடவுளும்!" என்கிறார்! 

(முந்தைய காலத்தில் பெனுகோண்டா தாளுக்காவிலேயே புட்டபர்த்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது) அந்த நேரத்தில் பாபாவுக்கு 20 வயதிருக்கும்...! யோகினி சொன்னது எத்தனை சத்தியம் எனில்.. நாமகிரியம்மா குடும்பமே பாபாவின் காலடியில் தஞ்சம் அடைந்து அவரை குருவாக கடவுளாக பிற்காலத்தில் கொண்டாடி வழிபட்டதென்பது பிற்காலத்தைய இதிகாச வரலாறு!


ஒருநாள் மாலை.. பாபா சித்ராவதி மணல் படுகையில் பக்தர்களோடு வீற்றிருக்க... சிருஷ்டி விபூதியை அனைவருக்கும் அளிக்கிறார்! பிறகு நாமகிரியம்மாவிடம் சித்ராவதி மணலை அள்ளச் சொல்கிறார்... அவரும் அள்ளுகிறார்... என்ன இருக்கிறது எனக் கேட்கிறார்! அப்போது கைகளில் மணலை தவிர எதுவும் இல்லை! பிறகு பாபா தன் திருக்கரத்தை அந்த மணலில் விரலை விட ஒரு காகிதம் வெளியே வருகிறது.. அதை நாமகிரியம்மா கையில் தந்து.. இதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை இங்கே வாசிக்காதே... மந்திருக்குள் சென்று வாசி! என்றே சொல்ல... மந்திருக்குள் வந்து 

அந்த சிறு காகிதத்தைப் பிரிக்கிறார்.. வியப்பின் விளிம்பிற்கே போய்விடுகிறார்... 

ஆம் அது வேங்கடம்மா நாமகிரியம்மாவின்  காதில் ஓதிய ரகசிய ஆன்மீக ஜப மந்திரம்! பாபா அறியாதது என்ன ?! பாபா சங்கல்பமின்றி உலகில் நிகழாதது என்ன?!


நாமகிரியம்மா புட்டபர்த்தியிலேயே நிரந்தரமாக குடியமர்ந்த பிறகு... யோகினி ஸ்ரீ வேங்கடம்மா வருகிறார்... "அம்மா... நீங்கள் நிலையான ஒரு பிடிமானத்தை இறுக்கப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்... அதனை விடவே விடாதீர்கள்! நிச்சயம் அவர் ஆன்மீகமாய் உங்களை உயர்த்தி மேன்மைப்படுத்துவார்! எவர் அவரின் அருகாமையிலேயே வாசம் புரிகிறார்களோ அவரது மூன்று பரம்பரைகளுக்குமே அருள் வந்து சேரும்! மிகுந்த கவனத்தோடு அவரின் பாதங்களையே பற்றி இருங்கள்! அவரின் அருள் மழையாகப் பொழிய அன்றாடம் ஆன்ம சாதனை புரியுங்கள்!" என நாமகிரியம்மாவிடம் அகம் திறந்து பகிர்கிறார் யோகினி ஸ்ரீ வேங்கட லஷ்மம்மா!

இப்படியும் யோகிகள் யோகினிகள் வாழ்ந்திருக்கிறார்கள்... இன்னமும் மறைமுகமாய் சிலருக்கான ஆன்மீகத் துறைமுகமாய் வாழ்ந்த வண்ணம் பூமியை புனிதப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்! 


(Proof : Sri SathyaSai and Yogis / Page no: 169) / Author : Jantyala Suman babu / Eng Translation : Pidatala Gopi Krishna | Source : Sri SathyaSai Anandha Dhayi by Karunamba Rama moorthy / pg: 23,24,81)


யோகிகள் உலகை வென்றவர்கள்..‌ உலகை வெல்வது என்பது உலக அபிப்ராயங்களை வெல்வது... உலக கவர்ச்சியை வெல்வது.. உலக நாடகங்களில் ஒரு சாட்சியாக இருந்து விருப்பு வெறுப்பு அற்று வேடிக்கைப் பார்ப்பது... உலக மாயை நிஜம் என கற்பனை செய்து கொண்டே அதில் மூழ்காமல் இருப்பது! இதுவே உலகை வெல்வது! யோகிகளின் கவனம் இறைவனிடம் மட்டுமே... இறைவன் என்ன தருவான்? என்ன தந்தான்? என்ன தந்திருக்கிறான்? என்பதில் கவனம் செலுத்தாமல் இறைவனிடம் மட்டுமே கவனம் செலுத்துவது.. அதுவே ஆன்மீக வாழ்வு! தூய்மையான பக்தர்களுக்கு இறைவனின் அருளை விடவும் இறைவனே முக்கியம்! அப்பேர்ப்பட்ட இறைவன் பாபாவின் பக்தராக ஒருவர் மலர்கிறார் எனில் அதுவே ஆன்ம விழிப்பு நிலை அடைய எளிதான பாதையை வகுத்துவிடுகிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக