தலைப்பு

வெள்ளி, 6 ஜனவரி, 2023

ஸ்ரீ விஸ்வயோகி விஷ்வம்ஜி மகராஜ் | ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்

ஒரு துறவி எவ்வாறு யோகியாகிறார்... அவருக்கு ஏற்படுகிற ஒரு விபத்து.. அதை எவ்வாறு பாபா சங்கல்பம் என உணர்ந்து கொள்கிறார்.. பிற்பாடு எதிர்பாரா அந்த விபத்து எவ்வகையே பலனை ஏற்படுத்துகிறது என்பது சுவாரஸ்யமாக இதோ...


ஸ்ரீ குருபாடியா விஸ்வநாத சாஸ்திரி குண்டூரில் உயர் பள்ளி ஆசிரியர்... இலவச டியூஷனும் மாணவர்களுக்கு நிகழ்த்தி கொண்டிருக்கிறார்! தனது ஓய்வு நேரங்களை தியானத்தில் செலவிடுகிறார்... இவ்வாறு அவர் தியானம் புரிந்து வர ஒரு காலகட்டத்தில் ஆன்ம விழிப்பு ஏற்படுகிறது.. விஷ்வ யோகி விஷ்வம்ஜி என அழைக்கப்படுகிறது... அவர் பிடிமானம் முழுக்க தியானமே! வாழ்வில் பணத்தையோ உறவையோ நம்பியும் கிடைக்காத அமைதியும் ஆனந்தமும் தியானத்தால் கிடைத்தது மட்டுமின்றி ஆன்ம விழிப்பையும் தியானமே தருகிறது என்பதற்கு விஷ்வம்ஜி வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு! அந்த நேரத்தில் பி.ஏ படித்துக் கொண்டிருக்கிறார் ஆந்திர ஜட்சேரியா மெஹபூப் நகரில் தனது சகோதரனோடு தங்கிக் கொண்டே...! இந்த காலக்கட்டத்தில் பாபாவின் சொற்பொழிவுகள் கேட்கிறார்... பாபாவின் மேல் பக்தி ஏற்படுகிறது! சாயி பஜனில் கலந்து கொள்கிறார்! பல மகான்களின் வாழ்க்கை சரிதத்தை வாசிக்கிறார்! தேவையானவர்களுக்கு சேவை செய்கிறார்.. இங்கே மிக முக்கியமான விஷயம்: அவர் வெறும் சேவை மட்டும் புரியவில்லை ஆன்ம சாதனை (தியானம்)யோடு கலந்த மனிதகுல சேவையை புரிகிறார்...

சேவை (அன்பு) - தியானம் இவை இரண்டால் மட்டுமே ஒருவரால் ஆன்மீக வானில் உயரம் செல்ல முடியும்.. ஒரு சிறகை வைத்து ஸ்ரீவிஷ்ணுவின் கருடாழ்வாரால் கூட எதுவும் செய்ய இயலாது!


தத்தாத்ரேய வடேக்கர் மகராஜ் அவர்களால் ஸ்ரீதத்த மந்திரத்தை தீட்சையாகப் பெறுகிறார்.. இறைவன் ஸ்ரீ சத்ய சாயியை தனது குருவாக கொண்டாட ஆரம்பிக்கிறார்! ஸ்ரீ தத்தாத்ரேயரை தனது ஆன்மீக சேவைக்கு உறுதுணையாகப் பிடித்துக் கொள்கிறார்! குண்டூரின் ஆனந்த தீர்த்த அக்ரஹாரத்தில் பாபாவின் பெரிய படத்தை வைத்து பஜனை புரிய ஆரம்பிக்கிறார்! பாபாவே தனது குரு என எவர் உணர்கிறார்.. அடுத்த நொடியே இறைவன் பாபா வழிகாட்ட வந்துவிடுகிறார்! இவருக்கும் அவ்வாறே! "ஓம் ஸ்ரீ சாயிராம குருதேவ தத்தா!" எனும் மந்திரமே இவரின் உயிர் மூச்சாக திகழ்கிறது! 


1985 ஆம் ஆண்டு பாபாவின் 60 ஆவது அவதார ஜெயந்தி வைபவத்தின் போது தனது உறவினர் ஆஞ்சநேயலுவோடு பர்த்தியில் தங்குகிறார்...அந்த ஆச்சநேயலு பிற்காலத்தில் பாபாவின் ஈஸ்வராம்பா உயர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி பிற்காலத்தில் ஓய்வு பெறுகிறார்! விஷ்வம் ஜி ஒரு நாள் வீட்டு மொட்டை மாடியில் ஒரு பூந்தொட்டியை கவனிக்க அது கீழே தவறிவிழாதிருக்க எடுக்கையில் அவரது கால்களில் கைதவறி விழுந்து பெரிய காயம் ஏற்படுகிறது... 15 நாள் அவதிப்படுகிறார்... இந்த வலி அவரின் சுஷும்னா நாடியை திறந்துவிடுகிறது... அது பாபாவின் சங்கல்பமே என உணர்கிறார்! வலியே ஒளி என்பது விஷ்வம்ஜி வாழ்க்கை ஓர் உதாரணம்! மனதில் ஏற்படும் வலியே பக்குவம்... உடம்பில் ஏற்படும் வலியே உடலை கவனிக்க வைத்து ஆரோக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது! வலி மிகவும் நல்லது! வலி பெற்றோர் வரம் பெற்றோர்! அந்த வரம் அவருக்கு பலவித மகிமா சக்தியை ஏற்படுத்துகிறது! 

ஏற்கனவே ஆன்மீக வாழ்க்கையில் இருக்கும் விஷ்வம்ஜிக்கு அன்று பூந்தொட்டிக்கு பதிலாக பூவே காலில் விழுந்திருந்தாலும் மகிமா சக்தி ஏற்பட்டிருக்கும்... காரணம் ஆன்மீகமாய் வாழ்பவர்க்கு எது நிகழ்ந்தாலும் அது பாபாவின் ஆசீர்வாதமாகவே அமைந்துவிடுகிறது! ஆன்மீக வாழ்க்கையே சாரமுள்ள ஒரே உன்னத வாழ்க்கை!


டிசம்பர் 1991 கோ.வி நரசையா விஷ்வம்ஜியை தரிசிக்க வருகிறார்.. அவர் இதய வீக்கத்திலிருந்து அவதிப்படுகிறார்.. இதனை அறிந்த விஷ்வம்ஜி பாபாவின் விபூதியை அந்த இடத்தில் அப்பி ஆழ்ந்த தியானத்திற்குச் செல்ல அந்த வீக்கம் விஷ்வம்ஜிக்கு உருவாகி அவரிடமிருந்த வீக்கம் விலகுகிறது... மகான்களால் நோயை தாங்கள் வாங்கி அனுபவிக்க முடியும் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதாரணம் ! இனி ஒன்றுமில்லை உங்களுக்கு சரியாகிவிடும் என்கிறார் விஷ்வம்ஜி... அப்படியே அவருக்கு சரியாகிடுகிறது! 

ஸ்ரீதத்த ஜெயந்தி விழாவுக்காக வந்திருந்த ராகவ நாராயண சாஸ்திரி உடல் நலம் சரியில்லை விஷ்வம்ஜி அவருக்காக 5 நிமிடம் ஆழ்ந்த தியானத்தில் இருக்கிறார்.. அந்தப் பெரியவர் அப்படியே எழுந்து உட்கார்ந்து விடுகிறார்! இப்படி பல யோக சக்திகள் விஷ்வம்ஜிக்கு...! இவை எல்லாம் பாபா தனக்கு அளித்த வரமே என மனம் திறந்து பகிர்கிறார் மகான் விஷ்வம்ஜி!


"ஸ்ரீ சத்ய சாயி பேரன்பின் பூரண வடிவம்! பாபாவே கஷ்டங்களிலிருந்து மனித குலத்தையே விடுவிக்கிறார்! பாபா தனது பக்தர்களிடம் நண்பராக இருப்பவர்... பாபா யோகேஷ்வரர்...கடவுளின் வடிவம்! அவர் பிரசாந்தி நிலையத்தில் வசித்தாலும் அகில உலகமும் அவரது இருப்பிடமே! பாபா வாழ்கிற போதே நாம் பிறந்ததற்கும் அவரை அறிந்ததற்கும் பெரிய கொடுப்பினை செய்திருக்கிறோம்...! பல ஜென்மம் நாம் செய்த நன்மைக்கு கிடைத்த வரமே அது !" என தன் இதயம் திறந்து சத்தியம் பகிர்கிறார் ஸ்ரீ விஷ்வ யோகி விஷ்வம் ஜி!


(Proof : Sri SathyaSai and Yogis / Page no: 160) / Author : Jantyala Suman babu / Eng Translation : Pidatala Gopi Krishna | Source : Interview by Saradwatamma vishwaguru - Charitra) 


 "உங்களால் என்னை காண முடியாது.. நீங்கள் எதன்வழியாக காண்கிறீர்களோ அந்த வெளிச்சமே நான் தான்!

உங்களால் என்னை கேட்க முடியாது.. நீங்கள் எதன்வழியாக கேட்கிறீர்களோ அந்த சப்தமே நான் தான்!

உங்களால் என்னை அறிந்து கொள்ள முடியாது...

நீங்கள் எதனால் வாழ்ந்து வருகிறீர்களோ அந்த சத்தியமே நான் தான்!" என மிக தீர்க்கமாய் இறைவன் பாபா மொழிகிறார்! ஆக வாழ்வில் நமக்கு நிகழும் சம்பவங்கள் எல்லாமே பாபாவின் சங்கல்பத்தினால் மட்டுமே நிகழ்பவை... அவை யாவும் நமக்கு ஆசீர்வாதமே! அதில் துளி அளவு தீங்கும் இல்லவே இல்லை என்பதை உணரும் போது ஞானம் நம் அகக்கதவை அகலத்திறந்துவிடுகிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக