இறைவனின் இதயத்தை நெகிழச் செய்து நெக்குருகச் செய்யும் சக்தி பக்தி ஒன்றே தான்! இறைவன் உங்கள் செல்வத்தையோ , கல்வித்திறனையோ, அதிகார பலத்தையோ மதிப்பதில்லை! உங்கள் பக்தி மட்டுமே இறைவனை ஈர்க்க வல்லது!
இராமாயணத்தில் குகன் என்ன பெரிய கல்விமானா? சபரி என்ன பெரிய செல்வந்தரா? அந்தச் சிறிய அணிலிடம் எதைப் பார்த்து ஸ்ரீ ராமர் கருணை பொழிந்தார்?
சாதாரண பறவையாகிய ஜடாயுவுக்கு சக்கரவர்த்தியும் ஸ்ரீராமரின் தந்தையுமான தசரதனுக்கு கிடைக்காத தகுதி எப்படி கிடைத்தது!?
வானர மூர்த்தியான ஸ்ரீஅனுமன்ஸ்ரீராமர் அருளுக்கு பாத்திரமாகி, ஸ்ரீராமருக்கு நெருக்கமாகி,ஸ்ரீ ராம தூதராகி, எல்லோராலும் வழிபடும் படியாக உருவானார்?
எதிரியின் பாசறையைச் சேர்ந்த விபீஷணன் எவ்வாறு ஸ்ரீ ராமருக்கு நெருக்கமானவராக உருவானார்?
அப்படி அவரவருடைய பக்தியே ஸ்ரீ ராமருடைய அருளுக்கு பாத்திரமாக அமைந்தது!
மகாபாரதத்தில் துரௌபதி, பாண்டவர்கள், ஸ்ரீ கிருஷ்ணர் மேல் கொண்ட அளவற்ற பக்தியினால் தான் எல்லா யுகங்களிலும் போற்றப்படும் சரித்திர புருஷர்களாக ஆனார்கள்! ஸ்ரீமத் பாகவதத்தில் கோபிகைகள் கொண்ட ஸ்ரீ கிருஷ்ண பக்தி, அந்த இனிமையான பக்தி அளவற்ற உயிர்ப்பானதாகவும் மகிமை வாய்ந்ததாகவும் அமைந்தது! அந்த கோபிகா பக்தி மரம் செடிகளில் கூட ஸ்ரீகிருஷ்ணரே நிறைந்திருப்பதை உணர்ந்தது! ஸ்ரீ கிருஷ்ணரின் பிரிவை தாங்கமுடியாமல் தவித்தார்கள்! அதுவே பக்தியின் சிகரமாகும்!
"நிதி சால சுகமா, ராமுனி சன்னிதி சால சுகமா"
என்ற தியாகராஜ சுவாமிகளின் புகழிற்கு அவரின் பக்தியே காரணம்! ராமதாஸ், சூரதாஸ், துளதிதாஸ், மீரா எல்லோரும் இவ்வாறே இறைவனைத் தன் வயப்படுத்தி, நெகிழச்செய்து, நெக்குருகச் செய்து, இறையருள் பெற்று முக்தி அடைந்த அமர பக்தர்களாக மாறினார்கள்!
பக்தியால் உங்களுக்கு இறையருள் கிடைப்பது மட்டுமின்றி அந்த இறைவன் மேல் உங்களுக்கு உரிமையும் கிடைக்கிறது...
எப்படி தாலி கட்டியவுடன் மனைவி கணவனின் சொத்துக்களுக்கும் உரிமையாகிறாளோ! அப்படி ஒருவன் பக்தி என்கிற தாலியை அணிந்து கொண்ட பிறகு இறைவனின் அருள் மீதும் அவனுக்கு உரிமை கிடைக்கிறது! எல்லாவற்றுக்கும் பக்தியே வழி! பக்தியே குறிக்கோள்! பக்தியே புகழ் அளிக்க வல்லது! பக்தியே அனைத்தை விடவும் உத்தமமானது!
(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம் : 49)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக