தலைப்பு

புதன், 18 ஜனவரி, 2023

பலவடிவில் பாபா தோன்றி தற்கொலையை தடுத்த ஆச்சர்ய லீலை!


தன்னை சரண் அடைந்தவர்கள் அபயம்  எனக்கூறி  கண்ணீர் விடும் போது   பாபா தான் கூறியதை போலவே அவர்கள் கவலையை  போக்க பல  அற்புதங்களை செய்தார். அவரது  அற்புதங்கள்  ஏழை பணக்காரர் என்ற பாகுபாடின்றி  அனைத்தும்  சமத்துவ நோக்கிலேயே நிகழ்த்தப்பட்டது.

பகவான் சத்ய சாயி பாபா தன் பக்தர்களின் வேண்டுதலுக்கும்  அவர்கள் படும் இன்னல்களை  போக்குவதற்காகவே அற்புதங்கள் நிகழ்த்துகிறாரேயன்றி  தன்னை பெரிய சக்தியாக வெளி  உலகுக்கு காட்டிக்கொள்ள அல்ல  என்பது அவரது ஆன்மீக நோக்கம்  புரிந்த அனைவரும் உணர்வர்.

ஒரு சமயம் சுவாமி சச்சிதானந்தாவும்,  ஸ்ரீ சத்திய சாயி பாபாவும் கொடைக்கானலில்  ஓர் அறையில் ஆன்மீக விஷயங்கள் குறித்து  அளவளாவிக் கொண்டிருந்த போது, பாபா திடீரென "சுடாதே"  என தெலுங்கில் கூறிவிட்டு  தன்வயம் இழந்தார்.  சிறிது நேரம் கழித்து சுய  உணர்வு வர பெற்றவராய் "போபாலுக்கு ஒரு தந்தி  அனுப்பனும்" என்று சொல்லிவிட்டு  "பயப்படாதே கருவி(ஆயுதம்-தந்தியில் ஆயுதம் என்று  வார்த்தை பயன்படுத்த கூடாது ) என்னிடம் இருக்கிறது" என்று வாசகம் இட்டு அதை அனுப்பவேண்டிய  முகவரியை தெரிவித்தார்.

பாபாவின் விருப்பப்படி தந்தி அனுப்பப்பட்டது.  பகவான் இதுபற்றி விஷயம் எதுவும் தெரிவிக்கவில்லை.
பாபாவிடம் கேள்வி கேட்பவர் யார் ?
 சரியாக நான்கு தினங்கள் கழித்து  போபாலில் இருந்து பாபா பெயருக்கு  ஒரு கடிதம் வந்தது. அதை பலர் முன்னிலையில் படிக்க  சொன்னார் பாபா.
கடிதத்தில் கண்ட வாசகங்களை கேட்ட  வாசகர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போயினர்.
 விஷயம் இதுதான்.

இரண்டாம் உலகப்போரில்  நாட்டுக்காகப் போராடிய உயர்  அதிகாரிகள் அனைவருக்கும் பதவி உயர்வு  அளித்து தனக்கு மட்டும்  அளிக்காதது அந்த அதிகாரிக்கு  மனத்தாழ்மை ஏற்படுத்தியது.  சாயி பக்தரான அவர்  சாயிபாபாவை  மனமுருக பிரார்த்தித்து விட்டு அந்த விபரீத முடிவிற்கு துணிந்தார்.  அவரது மனைவி  சொந்த ஊருக்கு  சென்றிருந்த அந்த தனிமையான  நேரத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை  செய்து கொள்ள முயன்றபோது   தான் "சுடாதே'  எனக்கூறி பாபா மயக்கமுற்றார்.

அச்சமயத்தில் அந்த அதிகாரியின்  வீட்டிற்கு அவரது பால்ய கால கல்லூரி தோழர், அவரது மனைவி, மற்றும் அவர்களது வேலையால் மூவரும் வந்தனர்.  மிகவும் கலகலப்பான  சுபாவமுள்ள அந்த இளைஞனின்  பேச்சால் அவனது இறுக்கமான  சூழ்நிலை மாறி இயல்பு நிலைக்கு  வந்தான் .  நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த  அவர்கள் தாறுமாறாக இருக்கும்  வீட்டை பார்த்து, "  உன் மனைவி இல்லாததால் தான்  வீடு இப்படி இருக்கிறதா"?   என்று கேட்டுவிட்டு தன்  வேலையாளிடம் வீட்டை சுத்தப்படுத்த சொன்னான்.

அவனும் வீட்டை சுத்தப்படுத்திய பின்  துப்பாக்கியை எங்கு வைப்பது  என்று தெரியாமல் பாபாவின்  படத்திற்கு அருகே வைத்தான்.  பிறகு விடைபெற்று  கொண்ட அவர்கள்  தாங்கள்  தங்க விருக்கும் நண்பனின் விலாசத்தை கொடுத்துவிட்டு  சென்றனர்.

பாபா மயக்கமுற்ற  நாழி  கையில்தான்  இவ்வளவு சம்பவமும் நடந்து  முடிந்துள்ளது.  தான் உயிருடன் இருப்பதே  அந்த நண்பனால் தான் என்று  உணர்ந்த அந்த அதிகாரி  அவருக்கு நன்றி தெரிவிக்க  விரும்பினார்.  அவர்கள் கொடுத்து சென்ற  விலாசத்தில் தேடியபோது   அப்படி யாருமே இல்லை  என்ற தகவல் கிடைத்தது.  இறுதியாக பாபாவின்  தந்தியும் அவருக்கு கிடைத்தது. பயப்படாதே ஆயுதம் என்னிடம்  இருக்கிறது என்ற வார்த்தைக்கு ஏற்ப  பாபாவின் படத்திற்கு முன் ஆயுதம் வைக்கப்பட்டிருந்தது. வேலைக்காரனை அவ்விடத்தில்  ஆயுதத்தை வைக்கச் செய்த  சக்தி எது?  கல்லூரி தோழனாக, மனைவியாக, வேலையாளாக என  முப்பரிமாண சக்தியை  உண்டாக்கி அந்த ராணுவ அதிகாரியின் தற்கொலை  எண்ணத்தை மாற்றி ஆதர்ச  அன்பு மொழிகள் உதிர்த்த ,  அந்த அமானுஷ்ய சக்தி எது ?

வேறு யாராக  இருக்க முடியும் ?  தன்னை சரணடைந்தோரை  நல்வழிப்படுத்த அவதாரம் எடுத்த  சாட்சாத் பகவான் ஸ்ரீ  சத்ய சாய் பாபாவே தான் !

ஆதாரம்: Taken from book ‘Satyam, Sivam and Sundaram’ by  N.Kasturi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக