தலைப்பு

திங்கள், 2 ஜனவரி, 2023

பாபாவே விஷ்ணு என உணர்ந்தபின் ஒரு பக்தருக்கு ஏற்பட்ட விஷ்ணு சஹஸ்ரநாம பாராயண அனுபவங்கள்!


பேரிறைவன் பாபா பல பக்தர்களுக்கு அவரவர் இஷ்ட தெய்வ ரூபங்களில் காட்சி தருபவர்.. காரணம் - பாபாவே பரப்பிரம்மம்! ஒரு பக்தருக்கு பாபாவால் ஏற்பட்ட விஷ்ணு அனுபவமும், நூலாசிரியரின் தரிசன அனுபவமும்... ஒரு முதிய பக்தைக்கு குணமான காது பிரச்சனையும் சுவாரஸ்யமாக இதோ...


ஒரு பக்தர் நூலாசிரியரிடம் ஒரு நூதன அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.. அது மிக வித்தியாசமான அனுபவம்! அந்த பக்தர் தினசரி வீட்டில் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்பவர்... ஸ்ரீ கிருஷ்ணர் கேட்டு அம்புப்படுக்கையில் படுத்துக் கொண்டே பீஷ்மர் அருளிய வீரியம் மிகுந்த ஸ்ரீ விஷ்ணுவின் 1000 திருநாமங்களே ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்! அதனை அந்த பக்தர் ஒரு டேப்ரிக்காடர் சொல்வதைப் போல் தான் அதுவரை உச்சரித்து வந்தேன்... உள்ளே பக்தி பாவனையோ நெகிழ்வோ எதுவுமே இல்லை.. ஒரு இயந்திரத்தனமாகத் தான் அதை பாராயணம் செய்தேன் என இதயம் திறந்து வெளிப்படையாகப் பகிர்கிறார்... ஆனால் அது அப்படியே தொடர்ந்ததா? எனில் இல்லை! எப்போது இறைவன் பாபாவை நேரில் தரிசிக்கிறாரோ  எல்லாம் அடியோடு மாறிப் போகிறது... தரிசித்த மாத்திரத்திலேயே இறைவன் பாபாவே விஷ்ணு என உணர்ந்து கொள்கிறார்... முதன்முதலாக அவர் பெற்ற தரிசன அனுபவத்திலேயே இறைப் பேருணர்வு அடைகிறார்... அவர் வாழ்க்கையே அடியோடு மாறுகிறது... அது முதல் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்கிற போதெல்லாம் அவர் மெய் சிலிர்க்கிறார்... இறைவன் பாபாவின் புகைப்படம் முன் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமப் பாராயணம் நிகழ்த்தும் போது கண்கலங்கிப் போகிறார்.. உலகை மறக்கிறார்... ஆனந்தக் கண்ணீர் விடுகிறார்... அப்படி அவர் அடைந்த சாயி தரிசனம் சத்திய தரிசனம் என்பதற்கு ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத்தின் ஒவ்வொரு நாமமும் சாட்சியாக திகழ்கிறது!


ஒருமுறை 15/12/2001 அன்று பழம்பெரும் பக்தை ஒருவர் நூலாசிரியரின் இல்லம் தேடி வந்து தனது அனுபவத்தைப் பகிர்கிறார்... அந்த பக்தைக்கு அப்போது வயது 73.. சில நாட்களுக்கு முன் காது கேளாமல் போகிறது.. மிகவும் துயரப்படுகிறார்... பக்தர் துயரடைந்தால் இறைவன் பாபா எவ்வாறு பக்தர் இதயத்தில் சந்தோஷமாக வீற்றிருக்க இயலும்? ஆகவே அந்த முதிய பக்தையின் கனவில் தோன்றி குனிந்து அவரின் காதருகே "புட்டபர்த்திக்கு ரா!" என அழைக்கிறார்... அவரும் புட்டபர்த்தி செல்ல... தூரத்து தரிசனமே கிடைக்கிறது... பிறகு வீடு திரும்புகிறார்... பத்து நாட்கள் செல்கிறது..‌ அவர் வீட்டிற்கு வந்தவர்கள் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க.. திடீரென அவரின் பேரக்குழந்தை சுசீலா, பாட்டிக்கு காது கேட்கிறது என்று ஓ வென ஆச்சர்ய சப்தமிட.. ஏன் தன்னை இறைவன் பாபா புட்டபர்த்திக்கு அழைத்தார் எனும் கேள்விக்கான பதிலும் அந்த முதிய பக்தைக்குக் கிடைத்துவிடுகிறது!


1.10.2001 முதல் 30.10.2001 வரை பர்த்தி சேவையில் நூலாசிரியர் இயங்குகிறார்! அதில் 9 நாட்கள் மகாயக்ஞம் நடைபெறுகிளது! ஸ்ரீ சத்ய சாயி அம்பிகையே நிகழ்த்தும் நவராத்திரி உத்சவம் அது! இறைவி பாபா பூரண சந்திர ஹாலில் சூரியனாய் தரிசனம் தர.. தன்னையே மறுக்கிறார் நூலாசிரியர்... வேத பண்டிதர்கள் பாபாவை வலம் வந்து சாஷ்டாங்கமாக காலடியில் விழுந்து பாபாவுக்கு மலர் தூவ‌... அந்தக் காட்சி கண்களை நிரப்பியது என பதிவிடுகிறார்... பாபா மேடையில் நின்றதாகவே தெரியவில்லை... அந்தர வானத்தில் ஆகாய சூரியனாக ஜொலித்துக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன் என நெக்குருகுகிறார்... இந்த அனுபவம் 2007 ஆம் ஆண்டு சென்னை திருவான்மியூரில் நிகழ்ந்த அதிருத்ர மகா யஞ்கத்தில் ரித்விக் செக்யூரிட்டாக சேவையாற்றிய அடியேனுக்கும் இதே அனுபவம் பலமுறை நேர்ந்திருக்கிறது! 


ஆதாரம் : ஸ்ரீ சத்ய சாயியின் இனியவை 400 | பக்கம் : 36 -38 | ஆசிரியர் : சாயி சரஜ் 


பாபா பேரிறைவன் என்பது வெறும் உணர்ச்சிவசப்பட்டு பதிவு செய்யப்படுகிற வாசகம் அல்ல...அது அனுபவ சத்தியம்! அந்த சத்தியத்தை பற்பலரும் அனுபவித்து வருகின்றனர்... இறைவனே இறங்கி வந்து நமக்குள் பொதிந்திருக்கிற இறைமையை வெளியே மலர்த்துவதே இறைவனின் அவதார நோக்கம்! சத்தியமாக உதித்த அவதாரமே அகிலத்தை விரைவில் தனது பிரபஞ்சப் பிரேமையால் ஆட்கொள்ளும்! அந்த ஆட்கொள்தலே ஆன்மீகம் என்பதெல்லாம்...!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக