தலைப்பு

வியாழன், 19 ஜனவரி, 2023

கர்னல் ஜோகா ராவ் | புண்ணியாத்மாக்கள்


பூரணாவதாரம் ஸ்ரீ சத்ய சாயிபாபா தனது 65வது பிறந்ததினப் பேருரையின்போது பின்வருமாறு குறிப்பிட்டார், "கடந்த இருபது ஆண்டுகளாக பிரசாந்தி நிலையத்தின் பல்வேறு வசதிகளை மேம்படுத்துவதிலும், மத்திய அறக்கட்டளையின் உறுப்பினராக சிறப்பாகப் பணியாற்றுவதிலும் இரவும் பகலும் இடைவிடாது உழைத்தவர்   ஜோகாராவ். எல்லோரும் அவரை கர்னல் ஜோகாராவ் என்று அழைக்கிறார்கள், ஆனால் அவர் உண்மையில் கர்மயோகி ஜோகாராவ்.  (பகவான் பின்னர் கர்னல். ஜோகாராவின் கையில் தங்கத்தாலான கங்கணம் ஒன்றை அணிவித்தார்). எப்ப்பேற்பட்ட பாராட்டு! பரமாத்மாவினிடமே நேரடியாக கர்மயோகி பட்டம் பெறுவதென்றால் எத்தகைய அயராத சேவையாற்றியிருக்க வேண்டும் அந்த புண்ணியாத்மா?  



ஸ்ரீ சாதனால பெத்த ஜோகாராவ் (S P ஜோகாராவ்) ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தவலேஸ்வரத்தை சேர்ந்தவர். சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற பிறகு, குன்னூரில் முனிசிபல் என்ஜினீயராக சேர்ந்தார், பின்னர் அவர் இந்திய தேசிய இராணுவத்தின் ஆயுதப்படைகளில் பணியாற்றி, கர்னல் பதவிக்கு உயர்ந்தவர், இந்தியா முழுவதும் பல இடங்களில் பணியாற்றியவர். ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்-ன் (HAL) தலைமைப் பொறியாளராக  வெற்றிகரமாக  செயலாற்றியவர்.  ஒரு சிவில் இன்ஜினியரிங் மற்றும் கன்சல்டன்சி நிறுவனத்தைத் தொடங்கி, பொறியியல், கட்டுமானம் மற்றும் மேலாண்மை ஆகிய பல்வேறு துறைகளில் பல நிபுணர்களுடன் பணியாற்றிய பேரனுபவம் வாய்ந்தவர்.

 

🌷கடவுளிடம் ஈர்ப்புக்கண்ட கர்னல்:

கர்னல் ஜோகாராவின் அனுபவங்களும் தொழிற்திறன்களும் பின்னாளில்  அவர் செய்ய வேண்டிய பிரம்மாண்டமான தெய்வீகப் பணிகளுக்கான பயிற்சிக் களமாகவே அமைந்திருந்தது. மனித உருவில் வந்த இறைவனுடன் நீண்ட இனிமையான தொடர்பபுடைய வாழ்க்கை என்பது அவர் வாங்கியிருந்த வரமாக இருந்தது. 1969ல் ஒரு நாள், பெங்களூரின் ஒயிட்ஃபீல்ட் ஆசிரம சேவை நடவடிக்கைகளில் தொடர்புடைய ஸ்ரீ ராமஸ்வாமியின் வீட்டிற்கு பகவான் சென்றிருந்தார். இந்த ராமஸ்வாமியின் பக்கத்துக்கு வீட்டில் தான் கர்னல் ஜோகாராவ் குடியிருந்தார்.  சிறுவயதிலிருந்தே கிருஷ்ணரின் பக்தரான ஜோகாராவ் , காவி உடை அணிந்த மனிதர்களை சந்தேகக் கண்ணுடன் நோக்கும் வழக்கமுடையவராகவே இருந்தார்.

 

 பகவானை தரிசனம் செய்ய ஸ்ரீ ராமஸ்வாமியின் வீட்டிற்கு  அழைப்பு வந்திருந்தாலும், செல்லத் தயங்கினார் ஜோகாராவ். ஆனால் அவரது மனைவி பிடிவாதமாக இருந்ததால், கட்டாயத்தின் பேரில் அங்கு சென்றார். இதற்கு சில நாட்களுக்கு முன்பு, அவர் தனது வீட்டின் பூஜையறையில் சத்யசாயி பாபாவின் புகைப்படத்தைக் கண்டபோது அவர் எரிச்சலடைந்தார். ( அந்தப்படம் திருமதி ராமஸ்வாமி ஜோகாராவின் மனைவிக்கு கொடுத்திருந்தார்)

 

அங்கு சென்றதும்... பாபாவின் மென்மையான அன்பான நடத்தை ஜோகாராவின் இதயத்தை உடனே  தொட்டது, பகவானால் வெகுவாக ஈர்க்கப்பட்ட அவரின் உள்ளம் குளிர்ந்தது. பகவானும் அவரிடம் மிகவும் அன்பாகப் பேசினார், பிருந்தாவனத்திற்கு வருமாறும் அழைப்பு விடுத்தார். அன்புடன் ஏற்றுக்கொண்டு பிருந்தாவனுக்கு சென்றார் ஜோகாராவ்;  அங்கிருந்த பக்தி சூழலும் ஆசிரம ஒழுக்கமும் ஆழமான தாக்கத்தை அவர் மீது ஏற்படுத்தியது. பாபா அவரை மிகவும் அன்புடன் வரவேற்றார். அனந்தபூர் கல்லூரி கட்டுமானப் பணிகளில் அவரை இணைத்துக் கொள்ளுமாறு ஜோகாராவிடம் சாதாரணமாகக் குறிப்பிட்டார் சுவாமி.  அதுவே அவரது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கிற்று.

 

🌷தெய்வத்துடனான நெருங்கிய உறவும் சிபாரிசும்:

நாரத பக்தி சூத்திரத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள நவவித கடைசி பக்திநிலையான... ஆத்ம நிவேதனத்திற்கு முந்தைய கட்டத்தில், ஒரு பக்தர் இறைவனுடன் நெருங்கிய நண்பரின் உறவை அனுபவிக்கிறார்,  இறைவனுடனான அன்பின் பிணைப்பில் தன்னை இழக்கிறார். கர்னல் ஜோகாராவ் சுவாமியுடன் அத்தகைய உறவை அனுபவிக்கும் பாக்கியம் பெற்றார். ஸ்ரீ ஜோகாராவ் சுவாமியுடன் கொண்டிருந்த இந்த தனித்துவமான உறவை நினைவு கூறுகையில், ஸ்ரீ சத்ய சாயி சேவா அமைப்புகளின் முன்னாள் இந்தியத் தலைவர் ஸ்ரீ வி. சீனிவாசன், “கர்னல். ஜோகாராவ், பல பக்தர்களுக்காக பகவானிடம்   முடிந்த அளவுக்கு பரிந்து பேசுவார்.  அதனால் சில சமயங்களில் சுவாமியிடம் இருந்து கண்டனங்களையும் பெறுவார். புன்னகையுடன் பக்தர்களை அழைத்துச் சென்றுகருணை காட்ட வேண்டும் என்று பகவானிடம் பிரார்த்திப்பார். தனக்காக எதையும் கேட்காமல், மற்றவர்களுக்காக கேட்கிறார் என்பதை அறிந்ததால் பகவானும் அவரின் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்வார்”.

 

🌷தன்னலமற்ற சேவையே பக்தரின் பாஸ்போர்ட் :

"ஒரு வருடத்தில் பிரசாந்தி நிலையத்திற்கு அருகில் ஒரு பெரிய மருத்துவமனை கட்டப்படும், அது ஏழை எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவையை இலவசமாக வழங்கும்" - 1990 நவம்பர் 22ம் நாள், தனது சொற்பொழிவில் சுவாமி செய்த மாபெரும் பிரகடனம் அது. அச்சமயம் கர்னல் ஜோகாராவிற்கு 85 வயது நடந்து கொண்டிருந்தது.பொதுவாக மக்கள் 85 வயதை எட்டும்போது தங்கள் மீதவாழ்வை அமைதியாக செலவிடவே விரும்புவார்கள்.  ஆனால் ​​ஜோகாராவோ, சுவாமியின் பிரகடனத்தை நிறைவேற்ற தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். தன்னலமற்ற சேவையும், தளராத வைராக்கியமும்தான் கர்னல் ஜோகாராவை  பகவானின் நம்பிக்கைக்கு உரியவராக ஆக்கியது. சுவாமியின் வழிகாட்டுதலுடன் பிரசாந்தி நிலையத்திலும் பிருந்தாவனத்திலும் பக்தர்களுக்கான வசதிகளை நல்லமுறையில் மேம்படுத்தினார். மேலும் ஸ்ரீ சத்யசாயி உயர்கல்வி நிறுவனத்தின் பிரசாந்தி நிலையம், அனந்தப்பூர் மற்றும் ஒயிட்ஃபீல்டு வளாகங்களைத் திட்டமிட்டு கட்டமைக்கும் பணியில் அவர் ஆர்வத்துடன் ஈடுபட்டார். கர்னல் ஜோகாராவ் ஒருமுறை சுவாமியிடம், ‘எனக்கு தியானம் செய்யவோ, பஜனை பாடவோ, தவம் செய்யவோ தெரியாது, ஆனால் தன்னலமற்ற சேவையை மட்டுமே செய்ய முடியும்’ என்றார். சுவாமி உடனே அவரிடம், “அதனால்தான் நீங்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்; எல்லோரும் 'சாய் ராம்' 'சாய் ராம்' என்று கோஷமிடும்போது, ​​நானோ அடிக்கடி 'ஜோகா ராவ்', 'ஜோகா ராவ்' என்று அழைக்கிறேனே!" என்றார்.

 

🌷சுவாமியின் சங்கல்பம் நிறைவேறுவது உறுதி:

கர்னல் ஜோகாராவுக்கே ஒரு சந்தர்ப்பத்தில், புட்டபர்த்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்மாணத் திட்டத்தை முடிப்பதில் சந்தேகம் கொள்ளும்படி ஆனது. 1991ம் ஆண்டு சுவாமி கொடைக்கானலுக்குப் புறப்பட்ட நேரத்தில்தான் கட்டிடத்திற்கான அடித்தளப் பணிகள் தொடங்கின. ஹாஸ்பிடல் ப்ராஜெக்ட் தொடர்பாய்ச் சில வேலைகளுக்காக சென்னையில் மூன்று நாட்கள் தங்கியிருந்து பின்  கொடைக்கானலுக்கு சென்றார் ஜோகாராவ். மாபெரும் திட்டப்பணி நிறைவேறிக் கொண்டிருப்பதில்  உள்ள பலுவின் காரணமாக இரவு தூக்கமின்றி மிகுந்த சிந்தனை வயப்பட்டு தலைவலி ஏற்படுத்திக் கொண்டார்.  ‘நவம்பர் மாதத்திற்கு முன்பு மருத்துவமனை கட்டிடம் எவ்வாறு முடிக்கப்படும்? பல பிரச்சனைகள் உள்ளனவே! என்று உள்ளுக்குள் புலம்பினார். சுவாமிக்குப்  பிடித்தமான வேலை என்பதால் அதன் மீதான அவரது அக்கறை மற்றும் கவலையால் அவர் அவ்வாறு பதறினார். மறுநாள் காலை உணவின் போது, ​​சுவாமி ஜோகாராவிடம் கேட்டார், “ஜோகாராவ், நேற்று இரவு உங்களுக்கு நன்றாக தூக்கம் வரவில்லை. இல்லையா?” என்றார். ‘சுவாமி, உங்களுக்கு எல்லாம் தெரியும்’ என்று ஜோகாராவ் பணிவுடன் பதிலளித்தார். "நான் வாக்குறுதியளித்ததை நினைத்து நீங்கள் ஏன் தூக்கத்தை இழக்கிறீர்கள்?" சுவாமியோ புன்னகையுடன் கூறினார். ‘சுவாமி, சில சமயங்களில் நான் கவலைப்படுவேன். என்றார் ஜோகாராவ் .

 

ஜோகாராவ், நீங்கள் கவலைப்பட எந்த அவசியமும் இல்லை. திட்டப்பணிகள் குறித்த நேரத்தில் முடிக்கப்படும் என்பது உறுதி. வேலை முடிவதற்குத் தேவையான ஆட்கள், பணம், பொருட்கள் தானாக வந்து சேரும்.  இந்த பாரத பூமி என்பது  யோக பூமி, தியாக பூமி மற்றும் புண்ணிய பூமி . இந்த மகத்தான நிலத்தில் தன்னலமற்ற நோக்கத்துடன் செயல்களை மேற்கொள்பவர் எந்த சந்தேகமும் இல்லாமல் வெற்றி பெறுவர். சுவாமி விஷயத்தில் மட்டுமல்ல, சுயநலமற்ற எவருக்கும் அப்படித்தான்!” என்று பகவான் அறிவித்தார். அந்த உறுதியான வார்த்தைகள் ஜோகாராவின் மனதில் இருந்த கவலை மற்றும் சந்தேகத்தினை அகற்றியது. அன்று கொடைக்கானல் சாயிஸ்ருதி-யின் உணவறையில் இந்த தெய்வீக அறிவிப்பினை நேரடியாகக் கண்டவர்கள் உண்மையிலேயே தங்களை பாக்கியவான்களாக உணர்ந்தனர்.

 

🌷ஆர்வம் குன்றாத அன்புமனிதர்:

ஜோகாராவ்  ஒரு குழந்தை போன்ற இனிமையான உள்ளம் அமைந்தவர் . சுவாமிக்கு நெருக்கமானவராக முக்கிய பொறுப்புகளில் இருந்தாலும் கூட... குழந்தை, முதியவர், கோடீஸ்வரன், ஏழை, வேலைக்காரன், பண்டிதர் அல்லது படிப்பறிவில்லாதவர் என யாரிடமும் பேதம் காணாமல் குதூகலத்துடனும், உற்சாகத்துடனும் மனதாரப் பேசுவார். உடல் நலக்குறைவு ஏற்பட்டு படுத்த படுக்கையாக இருந்தபோதும்,அவர் எப்போதும் உற்சாகத்துடன் வாழ்க்கையின் மேல் தனது  ஆர்வத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.  தம்மைச் சந்திக்க  வரும் பக்தர்களை வரவேற்று,  பகவானுடனான தனது அனுபவங்களை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்வார்.

 

இன்னும் பல சுவாரஸ்யமான சம்பவங்களும் படிப்பினைகளும் பகுதி-2ல் காணலாம்








திறமைமிகு பொறியியல் வல்லுனரும் கர்ம யோகியுமான  கர்னல் ஜோகாராவ், பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பல்வேறு சேவைப்பணிகளில் தன்னை அர்பணித்திருந்தார். அந்த சேவைப்பணிகள் மூலமாக சுவாமியின் தெய்வீகத்தை வெகுவாக உணர்ந்திருந்தார். கருணையுள்ள இறைவன் பாபாவும், ஜோகாராவுக்கு பல தெய்வீக அனுபவங்களை வழங்கினார்... 

 

🌷காரைத்தூக்கிப் பாதையில் வைத்த கடவுள் சாயி:

ஒருமுறை கர்னல் ஜோகாராவ் அனந்தபூரிலிருந்து பெங்களூர் திரும்பிக் கொண்டிருந்தபோது பலத்த காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. சாலையில் விழுந்த ஒரு பெரிய மரம் காரணமாக அந்த சாலையில் கார்கள்  தடுத்து நிறுத்தப்பட்டன, ஏற்கனவே அந்தி சாயும் நேரம் அது. அப்போது தான் “சுவாமி அவரின் பயணத்தை ஒரு நாள் தள்ளிபோடுமாறு முன்பே அறிவுறுத்தி இருந்தது" அவரின் நினைவுக்கு வந்தது. சுவாமியின் அறிவுரைக்கு செவிசாய்த்திருக்க வேண்டும் என்று எண்ணியபடி அவருடைய பெயரை உச்சரிக்க ஆரம்பித்தார். சில உள்ளூர் மக்கள் உதவிக்கு வந்து ஒரு மாற்றுப்பாதையை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

 

அந்த புதிய பாதையிலும்  பல இடங்களில் பள்ளமும் நீருமாய்  இருந்தது. இருளும் மழையும் சேர்ந்து கடுமையான அயற்சியைத் தந்திருந்தது. அதனால்  ஒரு வளைவை கவனிக்கத் தவறி, கார் இடறி  பள்ளத்தில் விழவிருந்தது. ஆனால், திடீரென்று கார் முயற்சியின்றி தானாய், தவறான நிலையிலிருந்து கணப்பொழுதில் மாறி  சரியான பாதையில் சென்றுகொண்டிருந்தது!  கண்களுக்குப் புலப்படால் சுவாமியின் கரம்தான் நம்மைக் காப்பாற்றியது என்று உள்ளூர உணர்ந்தார் ஜோகாராவ். பெங்களூர் சென்றடைந் பின் பகவான் பாபாவை சந்தித்தபோது சுவாமி,  முந்தைய நாள் ஜோகாராவ்  சந்தித்த அனைத்து சிரமங்களையும் சுவாமியே விரிவாக விவரித்தார். குழியில் விழவிருந்த காரினை தூக்கிச் சரியான பாதையில் சுவாமியே செல்லவைத்ததாகவும் உறுதிசெய்தார். மேலும் சுவாமி அவருடன் எப்போதும் இருப்பதாகவும், அவரை வழிநடத்திக் காப்பதாகவும்  உறுதியளித்தார்

 

🌷பாபாவின் நிஜ ஸ்வரூபம்:

ஒருமுறை ஜோகாராவ் சுவாமியிடம், 'பாபா உங்கள் நிஜ ஸ்வரூபம் என்ன?" என்று வினவினார். சுவாமியோ புன்னகைத்தவாறு "ஒரு நாள் உனக்கு வெளிப்படுத்துவேன்" என்றார். 1978 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சுவாமி ஊட்டிக்குப் பயணப்பட்டிருந்தார்; திரும்பி மைசூர் வரும்வழியில் 4ம் தேதி முதுமலைக்குச் சென்றார். அன்று பகவான் பாபா, விருந்தினர் மாளிகைக்கு எதிரே உள்ள அழகிய புல்வெளிக்கு நடந்து சென்று… எல்லோருடனும்  புகைப்படம் எடுத்துக் கொண்டார். மாணவர் ஒருவர் போலராய்டு கேமரா கொண்டுவந்திருந்தார். அவ்வகைக் காமெராக்களில் புகைப்படங்கள் உடனடியாக டெவெலப் ஆகி வெளிப்பட்டும்.  பாபா அந்த மாணவனை தன்னைப் படமெடுக்கும்படி  கூறினார். அந்தசமயம் அவரது அங்கியின் கீழ்ப்பகுதி ஒரு புதரின் கிளைகளில் சிக்கியிருந்ததாய்த் தோன்றவே, ஸ்ரீமதி. ரத்தன்லால் அங்கியின் மடிப்புகளை சரி செய்ய, சுவாமியைநோக்கி விரைந்தார். பகவானோ  “என்னைத் தொடாதே” என்று உரத்த குரலில் சொல்ல, அந்த அம்மையார் உடனடியாகப் பின்வாங்கினாள்.

கேமரா க்ளிக் ஆனதும், கேமராவில் இருந்து வெளிவந்த  புகைப்படத்தை எடுத்து பாபா,ஜோகாராவிடம் கொடுத்தார். அவர் அதை உள்ளங்கையில் வைத்திருந்தார், படம் படிப்படியாக டெவெலப்(develop)பாகி தெளிவடைந்தது. 

ஆச்சரியப்படும் விதமாக, புகைப்படத்தில் வெள்ளை நிற ஆடையுடன், மூன்று தலைகள் மற்றும் ஆறு கைகளுடன் ஒரு வித்தியாசமான உருவத்தைப் பார்த்தார்! ஒவ்வொரு கையும் தெய்வீக சின்னங்களைத்  தங்கியிருந்தது. வலது முழங்கையை  மடக்கி, கம்பீரமான இளம் பசுவின் முதுகில் வைத்திருந்தார். பின்னால் நான்கு நாய்கள் இருந்தன. மையத்தில் இருந்த முகம் பாபாவின் முகம்! இது புராணங்களில் விவரிக்கப்பட்டுள்ள தத்தாத்ரேயரின் வடிவம் - பிரம்மா, விஷ்ணு மற்றும் மஹேஸ்வரரின் (மும்மூர்த்திகளின்) ஒருங்கிணைந்த வடிவம். அதன் மூலம் ஜோகாராவின் புரிதலுக்கென சுவாமி தனது நிஜ ஸ்வரூபத்தினை வெளிப்படுத்தினார். ஜோகாராவின் மூலமாக மற்ற பக்தர்களும் அதனை உணர்ந்து மகிழ ஒரு அற்புத சம்பவமாக அது அமைந்தது.

 

அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட சமயம் சுவாமியின் திவ்யஷக்தி  சூட்சுமமாக அங்கே செயல்பட்டுக் கொண்டிருந்ததனால், அது ரத்தன்லால் அம்மாவின் சரீரத்தை பாதித்துவிடும் என்று அவரை நகரச் சொல்லியதாக விளக்கம் கூறினார். கருணை மிகுந்த  பகவான் , அந்த புகைப்பட சம்பவம் நிகழ்ந்து முடிந்த பின்னர் ஒன்றிற்கும் மேற்பட்ட முறை திருமதி. ரத்தன்லாலிடம் ஆறுதலும் விளக்கமும் கூறியவண்ணம் இருந்தார்.

 

🌷இமைபோலக் காத்த இறைவன் சாயி:

ஜோகாராவின் மூத்த மகளுக்கு ஒருசமயம் பெங்களூரில் உள்ள ஒரு நர்சிங் ஹோமில், கருப்பை நீக்க  அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அவளது சிறுநீரகம் ஒன்று செயலிழந்ததால் பயந்துபோன மருத்துவர்கள், அறுவை சிகிச்சையின் போது அதை அகற்றுவது குறித்து ஆலோசித்து வந்தனர். அறுவை சிகிச்சைக்கு ஒரு நாள் முன்பு ஜோகாராவ் பிரசாந்தி நிலையத்திற்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அவர் எதையும் பேசுவதற்கு முன்பே, பகவான் பாபா அவரிடம் "ஜோகாராவ்! சிறுநீரகத்தை அகற்ற வேண்டிய அவசியமில்லை. எல்லாம் சரியாகிவிடும் என்று உறுதியுடன் இருங்கள்" என்று கூறினார். மேலும் விபூதி வரவழைத்து அவரிடம்  வழங்கினார். மறுநாள் காலை மருத்துவமனைக்கு மகளைப் பார்க்கச் சென்றபோது, ​​அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். அவள் ‘அப்பா! ஸ்வாமி கொடுத்தனுப்பிய  விபூதியை எனக்குக் கொடுங்கள். நேற்றிரவு சுவாமி இங்கு வந்து...  சிறுநீரகம் அகற்றப்படத் தேவையில்லை என்றும்எனக்கு விபூதி அனுப்புவதாகவும்  கூறினார்’ என்றாள். அதன் பிறகு எல்லாம் சரியாகிவிட்டது என்று சொல்லவும் தேவையா ?

 

ஒருமுறை, ஜோகாராவுக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது, மாரடைப்பின் அனைத்து அறிகுறிகளும் இருந்தன. பெங்களூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டார். பகவான் பாபா அப்போது பிரசாந்தி நிலையத்தில் இருந்தார், மதிய தரிசனத்தின் போது, ​​மந்திரின் போர்டிகோவில் இருந்த மாணவர்களிடமும் சில பெரியவர்களிடமும் பகவான் "ஜோகாராவுக்கு உடல்நிலை சரியில்லைநான் பெங்களூர் சென்று அவரைப் பார்க்க வேண்டும்" என்று கூறினார். சுவாமியின்  டிரைவர் காரைத் தயார் நிலையில் வைத்திருந்தார். அதற்குள் பாபா உள்ளே சென்று சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார்; பின், "ஜோகாராவை நான் சென்று பார்த்தேன். அவர் நலமாக உள்ளார்.  எனக்கு நாற்காலி வழங்கப்படவில்லை! எனவே நான் படுக்கையில் அவர் பக்கத்தில் அமர்ந்தேன்" என்று அறிவித்தார். அன்று மதியம் பெங்களுருவில் ஜோகாராவைச்  சந்திக்கச் சென்ற  மருமகனிடம் அவர்,  ‘சுவாமி இங்கு வந்து என்னை ஆசிர்வதித்தார். அவருக்கு நாற்காலி போடாததால் அவர் என் படுக்கையில் அமர்ந்தார் என்று கூறினார்.

 

🌷பகவானின் கிண்டல்:

ஜோகாராவ், உண்பதிலும் மற்றவர்களுக்கு உணவளிப்பதிலும் அதிக விருப்பமுள்ளவராக  இருந்தார். ஒருமுறை  இருதய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் வோலேட்டி சௌத்ரி மற்றும் ஜோகாராவுக்கு சுவாமி அளித்த பேட்டியில், சுவாமியின் கவனம் கர்னலின் உணவு பழக்கம் பற்றி கேலி செய்வதில் இருந்தது. ஆனால் ஜோகாராவோ,  பகவானே எனக்கு உணவளிப்பதால்தான் நான் இவ்வளவு சாப்பிடுகிறேன் என்று காரணம் கூறினார். அவருக்கு 85 வயதாகியிருந்த போதிலும், தனது பெற்றோரின் கண்டிப்பிற்கு உட்பட்டு பதிலளிக்கும்  குழந்தையைப் போல பதிலளித்தார் ஜோகாராவ். பின்னாளில் மற்றவர்களிடம் 'நான் சாப்பிடுகிறேன் சுவாமி எனக்கு ஜீரணிக்கிறார்' என்று கேலியாகக் குறிப்பிடவும் செய்வார்.

 

🌷ஜோகாராவ்உடனே வீட்டிற்குச் செல்லுங்கள்!

ஒரு நாள் மாலை பிருந்தாவனத்தில், ஜோகாராவ் பாபாவுடன் இரவு உணவு சாப்பிடுவதற்காக டைனிங் ஹாலுக்குச் சென்றபோது, ​​சுவாமி அவரிடம் "ஜோகாராவ்! ஏற்கனவே தாமதமாகிவிட்டதுஉடனே வீட்டிற்குச் செல்லுங்கள்" என்று கூறினார். வழக்கமாக சுவாமியுடன் உணவு உண்ணும் ஜோகாராவ் எதிர்பாராத கட்டளையைக் கேட்டு ஆச்சரியப்பட்டார். சற்றே மனச்சோர்வடைந்த நிலையில் மந்திரை விட்டு வெளியேறினார். அவர் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, ​​ஆசிரமத்தில்  வசித்த அவரது நண்பர் அவரை சிற்றுண்டி சாப்பிட அழைத்தார்; ஜோகாரவும் அங்கே சென்று சிறிது நேரத்தைக் கழித்தார்.  சற்று நேரத்தில், அவரது மனைவியின் திடீர் மரணம் குறித்து அவருக்கு வீட்டிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. உடனடியாக வீட்டிற்கு விரைந்த அவர், பாபா ஏற்கனவே அங்கு இருப்பதைக் கண்டார். மேலும், பாபா அழகான பட்டுப்புடவை ஒன்றையும் கொண்டு வந்திருந்ததைக் கண்டார் (இறந்திருந்த இவரின் துணைவியார்  உடலில் அணிவிக்க பாபாவே கொணர்ந்தது அது). பாபா இவரைக் கண்டதும் " ஜோகாராவ்நான் உங்களை உடனே வீட்டிற்குச் செல்லுங்கள் என்றேன்நீங்கள் செய்யவில்லை!" என்றார். பகவானின் கட்டளைக்குக் கீழ்ப்படியாததைக் குறித்து வருந்தியவாறு சுவாமியின் பாதங்களைப் பணிந்தார்.

 

🌷ஜனாதிபதி விருதை மறுத்த யோகி:

1990ம் ஆண்டு சுவாமியின் 65வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சுவாமி, ​​ஜோகாராவை வாழ்த்தி… அங்கு கூடியிருந்த பக்தர்களிடம் "அவரை கர்னல் ஜோகாராவ் என்று மட்டுமே உங்களுக்குத் தெரியும். ஆனால்அவர் கர்மயோகி ஜோகாராவ்! " என்றார். இரண்டு தங்கக் கங்கணம்  மற்றும் ஒரு வெள்ளித் தட்டு  வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் இந்தியக் குடியரசுத் தலைவர் ஸ்ரீ ஆர்.வெங்கடராமன், ஆந்திர முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.சென்னா ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், ஜனாதிபதியின் மற்றொரு நிகழ்ச்சியில், சமூகத்திற்கு அவர் செய்த தன்னலமற்ற சேவையைப் பாராட்டி தேசிய விருதை ஏற்குமாறு ஜோகாராவிடம்  முதல்வர் கேட்டுக்கொண்டார். குடியரசுத் தலைவர் மற்றும் முதல்வர் இருவருக்கும் அவர்களின் அன்பான செயலுக்கு நன்றி தெரிவித்த ஜோகாராவ், ‘நான் ஏற்கனவே இறைவனிடமிருந்து மிக உயர்ந்த கௌரவத்தைப் பெற்றுவிட்டேன். வேறு எந்த விருதையும் வாங்க நினைப்பதுகூட சரியான செயலில்லை என்று கருதுகிறேன் என்று பணிவுடன் மறுத்துவிட்டார்.  உண்மையிலேயே அவர் கர்மயோகி என்று உலகிற்கும் நிரூபித்த தருணம் அது !


மூலம் : சாயி இலக்கியங்கள் மற்றும் இணையம்

✍🏻 கவிஞர். சாய்புஷ்கர்


1 கருத்து:

  1. வீ. முத்து மாணிக்கம்20 ஜனவரி, 2023 அன்று 7:48 PM

    மிக மிக அருமை!
    மிக உயர்ந்த பாக்கியம் !!
    மிக எளிய மனம் !!!
    மிக சுருக்கமான கட்டுரை!!!!
    மிக மிக நன்றி!!!!!

    பதிலளிநீக்கு