தலைப்பு

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

பொங்கலாய்ப் பொங்கிய பாபாவின் சர்க்கரைப் பொங்கல் கருணை!


சக்கரைப் பொங்கல் சாப்பிடு என அக்கறையாய் மொழிந்த இறைவன் பாபா பேச்சைக் கேட்டும் அங்கே பொங்கலே இல்லை....பிறகு எவ்வாறு பாபா உரைத்த பொங்கல் சாப்பிடும் நிகழ்வு சேவைத் திலகம் கஸ்தூரியே எதிர்பாராத வேளையில் நிகழ்ந்தது என்பதும் இது தொடர்பான இன்னொரு சுவாரஸ்ய அனுபவமும் பொங்கல் வாழ்ந்தாய் இனிக்க இனிக்க இதோ...

ஸ்ரீ கஸ்தூரி அவர்களின் முழு பெயர் கஸ்தூரி ரங்கநாதன், என்றாலும் 69 வயது முடியும் வரை அவர் தமக்கு பெயர் தந்த திருவரங்கத்து பெரிய பெருமானை தரிசித்ததில்லை. அவ்வாண்டு டிசம்பர் 24-ஆம் தேதி அவரை பாபா பற்றி சொற்பொழிவு ஆற்ற திருப்பூரில் அழைத்திருந்தார்கள். கிறிஸ்து ஜெயந்தியான டிசம்பர் 25 தான் கஸ்தூரியின் ஜென்ம தினமும். இதுவோ 70ஆவது பிறந்தநாள். எனவே அன்று சுவாமியை விட்டு பிரிந்து இருக்க அவர் பிரியப்படவில்லை. 24ஆம் தேதி திருப்பூரில் பேசி, 25 அன்று பர்த்தி திரும்ப இயலுமோ, இயலாதோ? எனவே திருப்பூரை சற்று தள்ளி போட்டு விட்டு, அதோடு சேர்த்து ஸ்ரீரங்கமும் சென்று வரலாமா? என எண்ணினார். பகவானை கேட்டார்.

மனிதன் 'ப்ரப்போஸ், செய்வதை வேறு விதத்தில்' டிஸ்போஸ்' செய்வது தானே பகவானின் தொழில்? அதற்கேற்ப பகவான், "இப்பவே திருப்பூர் போ. அப்படியே உன் பர்த்டேக்கு ஸ்ரீரங்கமும் போ" என்றார். அவர் சொன்ன மாதிரியிலிருந்து, ஸ்ரீரங்கத்திலேயே அடியார்க்கு தரிசனம் தருவார் என்று தொனித்தது. இன்னொன்றும் வேடிக்கை குரலில் சொன்னார். "சர்க்கரைப்பொங்கல் சாப்பிடு" என்றார்.


எழுபதாம் பிறந்த நாளன்று மிக்க பெயர் பொருத்தமுடன், திருச்சி டாக்டர் வி .கே. அரங்கநாதனுடன் நமது கஸ்தூரி அரங்கநாதர் ஸ்ரீரங்கநாதனை தரிசித்தார்.

 அமுதமாய் இருந்தது அரங்கன் தரிசனம். "குடதிசை முடியிலிருந்து அங்க அங்கமாய் ரங்கனை பார்த்து 'குணதிசை பாத'த்திற்கு வந்தார்.

"பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி" என்று ஆழ்வார் கதறிய பாதத்தை பார்த்த கஸ்தூரி ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். அது கருங்கற் பாதமாக இல்லை! குழைவும், மென்மையும் கொண்டு இளநீலம் ஓடும்   வெண் சலவை பாதங்களாக இருந்தன. ஐயமில்லை, சத்திய சாயிநாதனின் திருப்பாதங்கள் தாம்!

தொனிக்கும் பொருளாக அவர் குறிப்பிட்டபடி பிறந்தநாள் தரிசனம் அருளி விட்டார்! அமுதமே உண்டது போலிருந்தது கஸ்தூரிக்கு. ஆயினும் சுவாமி சொன்னார் போல சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் அளிக்கப்படவில்லை. தனுர்மாஸ  'திருப்பட்சி' (அதாவது 'திருப்பள்ளியெழுச்சி'  பிரசாதமான) வெண்பொங்கல் கூட இன்றி, லட்டும் முறுக்கும் தான் விநியோகிக்கப்பட்டது.

அரங்கத்திலிருந்து நமது பேராசிரியரும் டாக்டரும் அருகே உள்ள ஆனைக்கா சென்றனர். அப்பு நாதனைக் கண்டு அம்பாள் அகிலாண்டேஸ்வரி தரிசனமும் முடித்து திரும்ப இருந்தபோது, "சுவாமின், சுவாமின்"என்று அழைத்துக் கொண்டு பின்னால் ஓடி வந்தார் அர்ச்சகர்.


இவர்களை அமர்த்தி இலை போட்டு, அதில் பெரிய பட்டையாக வைத்தார் - சர்க்கரை பொங்கலை தான்!

சிவன் கோயிலில் வழக்கமில்லாத வழக்கமாக போஜன பிரசாதம். அன்றைக்கு ஏதோ விசேஷ ஆராதனை என்று காரணம் கூறினார் அர்ச்சகர். ஆரா அன்பு சாயி அன்னபூரணி அகிலாண்டேஸ்வரியாக அடியார்க்கு படைத்த பிரசாதம்! உள்ளம் பொங்கப் பொங்கலை உள்ளே கொண்டார் அடியார்!

     **********************

ஸ்ரீவைஷ்ணவர்களின் 'கோயில்' என்றால் அது அரங்கமே .சைவர்கள் 'கோயில்' என்றால் அது தில்லையை தான் குறிக்கும். கஸ்தூரிக்கு பொங்கியிட்டதற்கு 18 வருடங்களுக்குப் பிறகு இவ்வாண்டு சாயி பல்கலைகழகத்தின் ஊழியரான ஒரு தம்பிக்கு தில்லையில் நமது கதாநாதர் பொங்கலிட்டிருக்கிறார்!

 நெய்வேலியில் உள்ள வீட்டுக்கு சென்று அப்படியே சிதம்பரத்தில் தரிசனம் செய்து திரும்ப "சான்சலர் சாயியி"டம் ஊழியர் பர்மிஷன் கேட்டார். சந்தோஷமாக அனுமதி வழங்கிய சுவாமி, " உம் சிதம்பரத்தில் சர்க்கரைப்பொங்கல் சாப்பிடு" என்றார்.


அன்னதான சன்னிதானம் அல்லவா நடராஜனாலயம்? "அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்" என்று அப்பர் சிறப்பித்த அங்கு சன்னிதி நிறைய சர்க்கரை பொங்கல் போடுவார்கள். 'கற்கண்டு சர்க்கரைப் பொங்கல்' என்றே ஒன்றையும் தீக்ஷிதர்கள் ஸ்பெஷலைஸ் செய்திருக்கிறார்கள். ஆயினும் கஸ்தூரிக்கு ரங்கன் கோவிலில் நடந்ததே( அதாவது நடக்காததே) இந்த தம்பிக்கு கூத்தன் ஆலயத்தில்" ரிப்பீட்" ஆயிற்று. சுவாமி சொன்ன சர்க்கரைப்பொங்கல் வழங்கப்படவில்லை.

அப்புறம் தில்லையம்மன் என்றும் தில்லை காளி என்றும் சொல்லப்படும் தேவி கோவிலுக்கு தம்பி சென்றார். அங்கிருந்த அன்னை படிமங்களில் ஒன்றிடம் விசேஷ ஈர்ப்பு கொண்டார். ஒருமுறை தரிசித்து வெளிவந்தபின் உள்ளிருந்து எதுவோ தூண்ட, மீளவும் திரும்பி நோக்கினார். அம்பாளும் அவரை நோக்கினாள்! ஆம், விக்கிரக கண்களின் அசைவை சந்தேகமின்றி கண்டு அவர் உள்ளம் பொங்கியது!

கையிலும் கனமாய் விழுந்தது அர்ச்சகர் போட்ட சர்க்கரைப் பொங்கல்! அம்மா தெய்வம்தான் அமுதூட்ட வேண்டும் என்பதால், அங்கே அரங்கனின் தங்கை மூலம் பொங்கி யிட்டவர், இங்கும் ஆட வல்லானை ஆட வைத்தவளையே படையல் செய்ய வைத்திருக்கிறார். பிரசாந்தி நிலையம் திரும்பி, சக ஊழியருடன் அந்த தம்பி "தர்ஷன் லைனி"ல் உட்கார்ந்திருந்தார். அருகே வந்து நின்றார் சுவாமி. இதுபோன்ற விஷயங்களை சிதம்பர ரகசியமாக காப்பதே அவர் வழக்கமாயினும், இன்றைக்கென்னவோ அவருக்கு சிதம்பரத்திலேயே சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், எல்லாமும் இருப்பது நினைவு வந்துவிட்டது போலும். தம்பி தில்லையம்மன் கோயிலில் பெற்ற அனுபவங்களை எல்லார் முன்புமே அம்பலப்படுத்தி குறும்பும் சிரிப்புமாக  பேசிப்  போனார்!

ஆதாரம்:  அற்புதம் அறுபது, ரா. கணபதி

2 கருத்துகள்:

  1. Sairam Admins....
    If Possible can you please tell me exactly which year Sri. Kasthuri Sairam visited to Tirupur.

    பதிலளிநீக்கு
  2. கஸ்தூரி சாயிராம்க்கு சுவாமியுடன் நேரடியாக பேசி ஏற்பட்ட உயர் மாற்றங்கள்
    போல் அடியேனுக்கு நேரடி சம்பாக்ஷனை
    வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் பிரசாந்தி சேவைக்குப்பிறகு த்ரயிப்ருந்தாவனத்தில்
    பாதநமஸ்காரச் சமயத்தில் சிலநொடிகளில்
    அடியேன்"சாமி எப்பொழுதும் இறைச்சிந்தனை ஆனந்தமாக இருக்க
    வேண்டும்"என கேட்டபோது அடுத்த வரிசைக்கு திரும்பும் அந்த நொடியில்
    "வரும்பா வரும்"என எமது தலையில்
    அழுத்தி ஆசிவழங்கினார்கள் காற்றில்
    மிதக்கும் நடையுடைய சுவாமியின்
    ஆசியின்போது உடம்பிற்குள் அதிகபலம்
    இறங்கியதை உணர்ந்தேன்.அதுமுதல்
    அதிகமேம்பாடு அடைந்துள்ளேன்.
    சுவாமியுடன் நேரடிசம்பாக்ஷனை எல்லோருக்கும் வாய்பில்லைஆனாலும்
    கணக்கில்லா மணிதர்கள் குணமேம்பாடு
    அடைந்துள்ளார்கள் என்பது நிச்சயம்.
    சுவாமி அருளியதுபோல்"இந்த அருள்குடை
    மேலும் மேலும் விரிவடைந்துகொண்டே
    இருக்கும்அதற்கு ஏற்றபடி நீங்கள் நடந்துகொள்ளவேண்டும்,உங்கள்ஒவ்
    வொருவரின் குணமேம்பாடானவாழ்கை
    முறைதான் இந்த உலகமக்களுக்கான
    எனது செய்தியாகும்".எல்லோரும்சுவாமி
    அவர்களின் வழியில்வாழ்ந்து சுவாமியின்
    அருள்குடையை விரிவடையச் செய்வோம்.
    அவன் அருளால் அவன்தாள்பற்றி குண
    மேம்பாடுடன் வாழ்வோம்
    ஜெய்சாயிராம்.

    பதிலளிநீக்கு