இலங்கை சாயி நிலையத்திற்கு வந்திருந்த ஒரு துறவி அனுபவித்த நிகழ்வும், நடந்த புத்தாண்டு வைபவத்தில் இறைவன் பாபா தனது பேரிருப்பை காட்டியதும் சுவாரஸ்ய அனுபவப் பகிர்வாக இதோ...
ஓம் சரவணபவ சுவாமிகள் உலக மெங்கும் பல ஆன்மீகத் தொண்டுகள், சமூக தொண்டுகள், செய்து கொண்டு வருகிறார். தென் இந்திய கேரளா மாநிலத்தில் தலைமை ஆசிரமம் நடத்தியபடி, உலக நாடுகளில் கிளை ஆசிரமங்களை அமைத்து தெய்வீகத்தை பக்தர்களிடத்தில் வெளிபடுத்திக் கொண்டிருக்கிறார். பல தடவைகள் இலங்கைக்கு வருகை தந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்திருக்கிறார். இவர் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் தீவிர பக்தர். முருகனையும் சாயி நாதரையும் தனது மூலாதாரமாகக் கொண்டு தொண்டாற்றி வருகிறார்.
இவர் எப்போதும் இலங்கைக்கு வந்தாலும், கொழும்பு புதுச் செட்டித் தெருவிலுள்ள, பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா மத்திய நிலையத்தின் “சாயி நிலையத்துக்கு” வராமல் போவது கிடையாது. அதிலும் அங்கு நடைபெறும் சாயி பஜனையில் கலந்துகொண்டு, தனது கரங்களால், பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் திருவுருவச்சிலைக்கு ஆரத்தி காட்டாமல் போகவே மாட்டார்.
ஓம் சரவணபவ சுவாமிகள் ஒரு குறுகிய பயணமாக இலங்கை வந்திருந்தார். கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி புதன் கிழமை காலை, சுவாமிகளை சென்று பார்த்தேன். கொழும்பிலுள்ள சாயி நிலையத்துக்கு வரும்படி அழைத்தேன். மறுநாள் அவர் லண்டன் போக வேண்டிய ஏற்பாடு. அதனால் வேறு எந்த நிகழ்ச்சிகளையும் வைத்திருக்கவில்லை. 2017ம் ஆண்டு அவர் இலங்கை வந்திருந்த சமயம், சாயி நிலையத்தில் சீரடி மந்திர் கட்டுவதற்கான ஆசீர்வாத பூஜையை நடத்தி வைத்துவிட்டு, கட்டிட வேலையை ஆரம்பித்து வைத்தார். 2022ம் ஆண்டு மந்திர் பூர்த்தியாகி, மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விபரங்களை அவருக்குத் தெரிவித்துவிட்டு, எப்படியாவது அவரது திருப்பாதம் அந்த மந்திரில் பதியவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். சற்று நேரம் சிந்தித்தார். அந்த நேரம் பார்த்து அவரது சீடர் ஒருவர், லண்டன் போக வேண்டிய பயணம் மாற்றம் செய்யப்பட்டுள்ள தகவலை, சுவாமிகளுக்குத் தெரியப்படுத்தினார்.
சுவாமிகள் தீடீர் என்று என்னிடம் “நாளை வியாழக்கிழமை, அதுவும் குரு வாரம். ஆகவே வருகிறேன். மாலை 3 மணிக்கு வந்துவிட்டு இரவு 7 மணிக்கு புறப்பட்டு விடுவேன். ஏற்பாடு செய்யுங்கள்” என்றார். இது பாபாவின் திருவிளையாடல் என்று மனதில் நினைத்துக் கொண்டு ஏற்பாடுகளைச் செய்துவிட்டேன்.
மறுநாள் 29ம் தேதி வியாழக்கிழமை. மாலை 3 மணியளவில், சாயி நிலையத்துக்கு தனது சீடர்களுடன் விஜயம் செய்தார். பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. சாயி பஜனையும்
நடந்துகொண்டிருந்தது. தனது கண்களை மூடியபடி, கையில் ஒரு தங்க வேலாயுதத்தை அசைத்தபடி, பஜனையில் மூழ்கிவிட்டார். “ஓம் ஜெய் ஜெகதீஷ ஹரே……..” என்று ஆரத்தி பாடல் ஒலித்தவுடன், மெதுவாக எழுந்து, தீபாராதனையை கையில் எடுத்து, பகவானின் திருவுருவச்சிலைக்கு முன்னால் அமைதியாக நின்று, அழகாக தனது உடலையும் கையையும் வளைத்து வளைத்து ஆரத்தி காட்டினார். அந்தக் காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.அதன் பின் பக்தர்களிடம் சொற்பொழிவாற்றினார். அதில் ஒரு விஷயத்தை முக்கியமாகத் தெரிவித்தார். அதாவது “சாயி அவதாரங்கள் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள். இந்தப்பிறப்பில் கொடுத்து வைத்தவர்களாக இருக்கிறீர்கள். சாயி சேவைகளை தொடருங்கள். சாயி பஜனை எனக்கு பேரானந்தத்தை எற்படுத்தியது. இலங்கை வாழ் சாயி பக்தர்களை ஆசீர்வதிக்க, பாபா என் திட்டத்தையே மாற்றிவிட்டார். ஸ்ரீ சத்திய சாயி பாபா இங்கு வந்து வந்து போகிறார். அவரை விட்டுவிடாதீர்கள். பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்” என்றார். பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க, அவர்களது அன்பு மழையில் நனைந்து, நேரம் போவதுகூடத் தெரியாமல் இரவு 11 மணி வரை பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார்.
டிசம்பர் 31ம் தேதி இரவு 11.30 மணி. வருடா வருடம் வழக்கமான புத்தாண்டு பிறக்கும்போது நடைபெறும் சாயி பஜனையும் ஆரத்தியும் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. நள்ளிரவு 12 மணி. புத்தாண்டு 2023 பிறந்துவிட்டது. புதுச் செட்டித் தெருவில், காதுகளை பிளந்து தள்ளும் பயங்கரமான பட்டாசு வெடிச் சத்தம். பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவுக்கு ஆரத்தி காட்டப்படுகிறது. அந்த சமயம் “பளீச்” சென்று ஒரு வெளிச்சம் சீரடி சாயி கோபுரத்தில் தெறித்தது. அனேகமாக அது பட்டாசு வானவேடிக்கையின் ஒரு ஒளிப்பிழம்பாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டோம். அதன் பின் சாயி நிலைய சி.சி.டி.வி கேமராவை சோதனை செய்தபோது, அதில் தென்பட்ட ஒரு அதிசயக் காட்சியைப் பார்த்து, அனைவரும் மகிழ்ச்சி கலந்த ஆச்சர்யம் அடைந்தோம்!
சாயி நிலைய மூலஸ்தான பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் திருவுருச்சிலையிலிருந்து, அவரது ஆசீர்வதிக்கும் திருக் கரத்திலிருந்து, ஒரு “ஒளிக்கீற்று” வீசிக் கொண்டிருந்தது. அது அங்கிருந்த பக்தர்களை நோக்கி சென்றுகொண்டிருந்தது. முதல்நாள் ஓம் சரவண பவ சுவாமிகள் கூறியது போன்று, பாபா வந்து காட்சியளித்து விட்டுத்தான் போயிருக்கிறார். இந்த செய்தியை சாயி நிலைய பக்தர்களுக்குத் தெரிவிப்பதற்காகத்தான், சுவாமிகளின் பயணமாற்றத்தை, இறைவன் பாபா ஏற்படுத்தியும் இருக்கிறார்! சாயி நிலையத்தில் மட்டுமல்ல அங்கிங்கெனாது எங்குமே ஸ்ரீ சாயி அவதாரங்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
தொகுத்தளித்தவர்: எஸ். என். உதயநாயகம். பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா மத்திய நிலையம், இலங்கை
Our beloved Bhagwan is parabrahmam, Jai SAIRAM
பதிலளிநீக்குஓம் சரவணபவ.நன்றி
பதிலளிநீக்கு