தலைப்பு

புதன், 20 ஜூலை, 2022

251-300 | ஸ்ரீ சத்யசாயி தெய்வீக நிகழ்வுகள்!


பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது இதோ..





📝 நிகழ்வு 251:

சுவாமியின் மிகவும் பிரபலமான பக்தரான திரு. ஜோகா ராவ் அவர்கள் ஒருமுறை அனந்தபூரில் சுவாமியின் வேலையாக  சில அதிகாரிகளை சந்தித்து விட்டு காரில் பிரசாந்தி நிலையத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கனமழை பெய்யத் தொடங்கியது.  அப்போது எங்கேயாவது சற்று ஒதுங்கி நிற்கலாம் என்று ஓட்டுனர் நினைத்தபோது ஜோகா ராவ் அவர்கள், அன்று அலுவலகத்தில் நடந்தவற்றை சுவாமியிடம் சீக்கிரம் சொல்ல வேண்டும் என்ற ஆவலினால் உந்தப்பட்டு, அந்தி நேரத்தில் வெளிச்சம் குறைவாக இருந்த போதிலும், ஓட்டுனரை தொடர்ந்து  காரை ஓட்டிச் செல்லும்படி பணித்தார்! அவர்கள் சத்தியசாயி தாலுகாவினுள் நுழைந்தபோது ,  கார் திடீரென்று ஒரு குழிக்குள் இறங்கியது போலிருந்தது.  மழைத் தண்ணீரால் மேலும் சாலையின் ஒருபுறம் தள்ளப்படுவது போல் தோன்றியது.  அதே நேரத்தில் திடீரென யாரோ  ஒருவர்  காரினை தூக்கிவைத்து சாலையை நோக்கித்  தள்ளுவது போல இருந்தது. பின்சீட்டில் அமர்ந்து இருந்த  திரு ஜோகா ராவும் அவரது நண்பரும் , அவர்களுக்கு பின்புறம் இருந்த  கண்ணாடியில் இரண்டு கைகளை பார்த்தனர்! அப்போது 'ஆஃப்' நிலையில் இருந்த  எஞ்சின்,  திடீரென 'ஆன்' ஆகி,  கார் ஓடத்தொடங்கியது.  நல்லபடியாக பிரசாந்தி நிலையம் சென்றடைந்தனர்.  சுவாமி  படுக்கையறைக்கு செல்வதற்கு முன்னால்  தன்னைப் பற்றி விசாரித்ததாக கேள்விப்பட்டார் ஜோகா ராவ்.  மறுநாள் காலை,  நடந்த விவரங்களை சொல்வதற்காக சுவாமியிடம் ஜோகா ராவ் சென்றபோது, அவர்  ஆரம்பிப்பதற்கு முன்னால்  சுவாமியே அவரிடம், "சாலையில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும் போது நீ ஓட்டுநரை தொடர்ந்து ஓட்டிச் செல்லுமாறு கூறி இருக்கக் கூடாது!  கார் குழியில் விழுந்து இருந்தால் என்ன நடந்திருக்கும்?" என்று கூறினார்!!  இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த திரு. ஜோகா ராவால் சுவாமிக்கு  நன்றிகளை முணுமுணுக்க மட்டுமே முடிந்தது!  அன்று மற்றொரு தருணத்தில்  தன்னுடன் பயணித்தவரிடம் , "சுவாமியின் வேலையை நாம் சரிவர செய்தோமானால் அவர் நம்மை என்றும் காப்பாற்றுவார்!" என்று கூறினார்!

ஆதாரம்: திரு. சுதீர் பாஸ்கர் அவர்களின் உரையிலிருந்து.


📝 நிகழ்வு 252:

நான் மும்பையில் ஒரு நிம்மதியான வேலையில்  இருந்தேன்.  அப்போது சென்னையில் ஒரு சுய தொழில் செய்வதற்கான வாய்ப்பு எனக்கு தென்பட்டது . என்னுடைய சேமிப்புகள் அனைத்தையும் அந்த தொழிலுக்காக செலவிட நினைத்தேன் .  மேலும் பல நிதி நிறுவனங்களில் இருந்தும்  கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.  அப்போது தமிழக அரசு, அம்பத்தூரில் உள்ள தொழிற்பேட்டையில்  பல புதிய பட்டறைகளைக் கட்டியிருந்தது.  அவற்றில் ஒன்றை வாங்குவதற்காக நான் விண்ணப்பித்தேன்.  ஆனால் அதற்குத் தேவையான 15%  முன் பணம் கூட என்னிடம் அப்போது இல்லை; (ஏனென்றால் எனது சேமிப்புகள் அனைத்தையும்  இயந்திரங்கள் வாங்குவதற்காக செலவழித்து விட்டேன்).  அதற்கான காலக்கெடு முடிந்து விட்டதால்  எனது விண்ணப்பத்தை நிராகரித்து விட்டதாக அரசிடம் இருந்து கடிதம் வந்தது.  இதனால் நான் மிகவும் மனம் நொந்து போனேன். அந்தக் கடிதத்தை என் பூஜை அறையில் சுவாமியினுடைய போட்டோவின் முன்பு வைத்தேன். நான் ஆர்டர் செய்திருந்த இயந்திரங்கள் வந்தால் அவற்றை நான் எங்கே வைப்பது என்பதை நினைத்து வருந்தினேன்.  என்னுடைய இந்த இக்கட்டான நிலையில் சுவாமியிடம் வேண்டிக் கொள்வதைத் தவிர எனக்கு வேறொன்றும் தோன்றவில்லை.  திடீரென்று ஒரு நாள் ,  என்னுடைய பணம்  டிமாண்ட் டிராப்ட் மூலம்  தங்களுக்கு வந்தடைந்ததாக  அரசிடமிருந்து எனக்கு கடிதம் வந்தது!! அதற்கான ரசீதும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது!!  ஒரு பெரிய தொகை ஒன்றை எனக்காக யார் ஒருவர் அனுப்பி வைத்திருக்க முடியும்?  கண்டிப்பாக அந்த பணத்தை நான் கட்டவில்லை!!   அது எனக்கு ஒரு புரியாத புதிர் ஆகவே இருந்தது.  அது சுவாமியின் செயலாகவே இருக்கும் என்று முடிவு செய்து சுவாமிக்கு நன்றி கூறும் விதமாக  அவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தேன்!  அந்தக் கடிதத்தை பார்த்துவிட்டு அவர் விஷமத்தனமாக என்னை பார்த்து சிரித்துக்கொண்டே ஆசிர்வாதம் செய்தார்!!  எங்கிருந்து பணம் வந்தது என்பது பற்றி இப்போது உங்கள் எல்லோருக்கும் புரிந்திருக்கும்!!

ஆதாரம்: திரு. பாம்பே ஶ்ரீனிவாசன் அவர்களின் உரையிலிருந்து.


📝 நிகழ்வு 253:

மூன்று வருடங்களாக என் மனைவி படுக்கையில் கிடந்தபடி இருந்தார். அவரது அடிவயிற்று எலும்புகள் மிகவும் பாதிக்கப் பட்டிருந்தன. மேலும் அவர் தனது முதுகுத்தண்டில் பலத்த வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் படுக்கையில் இருந்து எழுவதற்கு வாய்ப்பில்லை என்றும் அவரது உறுப்புகள் மேலும் வலுவிழந்து போகும் என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டனர். ஐந்து குழந்தைகளுடன் கூடிய என் குடும்பம் ஒரு நடுத்தர வர்க்கத்தை சார்ந்ததாகும். நான் சாதாரணமான ஒரு அரசு வேலையில் இருந்தேன். எனது வேலை நிமித்தம் பல நாட்கள் நான் வெளியூர் செல்ல வேண்டி இருந்தது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த நான் மிகுந்த மன அழுத்தத்திற்கு உட்பட்டேன். சுவாமியைப் பார்ப்பதற்காக புட்டபர்த்தி வந்தேன். சுவாமி என்னை இண்டர்வியூவுக்கு அழைத்து, என்னிடம், "மருத்துவமனைகள், மருத்துவர்கள், மருந்துகள்... இவை எதுவும் தேவையில்லை! ஒரு நாள்... டக்.. டக்.. டக்..( இவ்வாறு தன் கையில் சொடக்கு போட்டு கொண்டே) .. இப்படியே அனைத்தையும் சரி செய்து விடுகிறேன்!!" என்று கூறினார். சொல்லொணாத மகிழ்ச்சியுடனும் நன்றி உணர்வுடனும் மாண்டியா மாவட்டத்தில் இருக்கும் பேசகரஹள்ளி என்ற என்னுடைய ஊருக்கு திரும்பினேன். மூன்று மாதங்கள் கழிந்தன. என் மனைவியின் உடல் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. உண்மையைச் சொன்னால் இன்னும் மோசமாகவே போயிற்று. சுவாமியின் மீது இருந்த எனது நம்பிக்கை ஊசலாடத் தொடங்கியது. சரியான உணவும் உறக்கமும் இல்லாமல் மேன்மேலும் அவதிப்பட்டார். ஆனால் சுவாமியின் வார்த்தைகள் மட்டும் அவருக்கு ஒரு ஆறுதலைக் கொடுத்துக்கொண்டே இருந்தது. நாங்களிருவரும் எப்படியோ சுவாமியின் வார்த்தைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டோம். அரசு வேலையாக தூரத்திலுள்ள ஒரு கிராமத்திற்கு நான் செல்ல வேண்டி இருந்ததால் ஒரு நாள் காலை சற்று சீக்கிரமாகவே எழுந்தேன். அப்போது சமையல் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியுற்றேன்! "யார் அங்கே?"என்று நான் கேட்டதற்கு என் மனைவியிடம் இருந்து பதில் வந்தது!! ஆம்!! அவர் அடுப்பை ஏற்றி எனக்காக காபி தயார் செய்து கொண்டிருந்தார்!! 

 மேலும் அவர் தொடர்ந்து, "கனவா அலலது நனவா என்று எனக்குத் தெரியவில்லை, சுவாமி என் படுக்கைக்கு அருகில் வந்து நின்றுகொண்டு, என்னை கட்டிலில் இருந்து எழுந்து வந்து பாத நமஸ்காரம் செய்து கொள்ளும்படி கூறினார்!! அவர் அளித்த சக்தியால் உடனே நான் எழுந்து போய் அவரை நமஸ்கரித்தேன்! அப்போது அவர் எனக்கு பல ஆறுதலான வார்த்தைகளை கூறினார்!! பாதிக்கப்பட்ட என் மூட்டுகளில் லேசாகத் தட்டினார்!! உள்ளே இருந்த எலும்புகளிலிருந்து, " டக் ..டக் ...டக் "என்ற சத்தம் கேட்டது!! இவ்வாறு என்னுடைய நோயிலிருந்து நான் முழுமையாக விடு பட்டேன்!!" என்று கூறினார்!!

 சுவாமி தன் வார்த்தையைக் காப்பாற்றி விட்டார்!! 

 கண்ணீரினால் தனது நன்றியை வெளிப்படுத்திக் கொண்டே, என் மனைவி எழுந்த போது சுவாமி மறைந்துவிட்டார். என் மனைவிக்கு மருத்துவம் செய்த எலும்பு நிபுணர், "ஐந்து வருட காலம் என்னுடைய வெளிநாட்டு வேலை அனுபவத்தில், இத்தகைய நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் கூட குணமாகி நான் பார்த்ததில்லை!! இந்த நோயிலிருந்து உங்களுக்கு கிடைத்த நிவாரணம் , மருத்துவர்களால் கொடுக்க முடியாத ஒன்றாகும்!! இறைவன் உங்களை ஆசீர்வதித்து இருக்கிறார்!!" என்று கூறினார்.

 ஆதாரம்: சாயிபக்தர் திரு. என். எஸ். ராகவன் அவர்களது உரையில் இருந்து.


📝 நிகழ்வு 254:

ஆனந்த் என்பவர் கர்நாடகாவின் வடமேற்குப் பகுதியில் பெல்காம் மாவட்டத்தில் உள்ள கல்லோலி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு அதே கிராமத்தில் ஒரு காவலாளியாக பணி செய்து கொண்டிருந்தார். அந்த ஊரில் இருந்த சமிதியில் சுவாமியின் போட்டோவைப் பார்த்திருந்தாலும் அவருக்கு நம்பிக்கை இல்லை என்பது மட்டுமில்லாமல் சுவாமியை அவருக்கு பிடிக்கவும் இல்லை. ஆனால் 2012ஆம் ஆண்டு செப்டம்பரில், சுவாமியின் மகாசமாதிக்குப் பிறகு, சுவாமி அவருடைய கனவில் தோன்றினார்; தனது பைகளை எடுத்துக்கொண்டு பஸ் ஸ்டாப்பிற்கு வரச்சொன்னார். பிறகு தன்னுடன் பயணிக்கும் படி கூறினார்! ஆனந்த் அதற்கு மறுத்த போது சுவாமி பஸ்ஸில் ஏறிக் கொண்டு, "நீ இப்போது என்னுடன் வராவிட்டால் நான் உன்னை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்வதற்கு திரும்ப வருவேன்!" என்று கூறினார். அத்துடன் அந்தக் கனவு முடிவு பெற்றது. மறுநாள் காலை அவருடைய நண்பர் ஒருவர் உற்சாகத்துடன் அவரை அணுகி , பெங்களூருவில் உயர்ந்த சம்பளத்துடன் இதே காவலாளிக்கான வேலை வாய்ப்பு ஒன்று வந்துள்ளதாக தெரிவித்தார். தனது தாய் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அதிக வருமானம் தேவைப்பட்டு இருந்ததால் இந்த செய்தி அவருக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. இந்த வேலை ஸ்ரீ சத்திய சாயி சேவா நிறுவனத்தின் மூலம் வந்துள்ளதாக அந்த நண்பர் தெரிவித்தவுடன் ஆனந்துக்கு ஷாக் அடித்தது போல இருந்தது! சுவாமி கனவில் கூறியதைப் போல தன்னை அழைத்துச் செல்வதற்காக வருவதைப் போல உணர்ந்தார்! அம்மாவின் ஆசியுடன் அவர் பெங்களூருவிற்குச் சென்றார். அவர் அங்கிருந்து தமிழக ஸ்ரீ சத்திய சாயி சேவா நிறுவனத்திடம் முன் பயிற்சிக்காக அனுப்பப்பட்டார். பிறகு 2013இல், சுவாமியின் இல்லமான "த்ரயீ "யில் அவருக்கு பாதுகாவலர் பணி அளிக்கப்பட்டது! அப்போதும்கூட சுவாமியின் இறைத்தன்மை அவருக்குப் புலப்படவில்லை! மேலும் தன் சொந்த ஊரில் நோயினால் தனியாக அவதிப்பட்டு கொண்டிருக்கும் தன் தாயின் நினைவு அவரை வாட்டியது. உடனே அவர் சுவாமியை பரிசோதிப்பது என்று முடிவெடுத்தார். சுவாமியிடம், "நீங்கள் என் தாயை குணப்படுத்தினால் மட்டுமே நான் உங்களை கடவுள் என்று ஒத்துக் கொள்வேன் ; என்னுடைய முழு வாழ்வையும் உங்களுக்கு அர்ப்பணிப்பேன்" என்று மனதில் சவால் விடுத்தார். தினமும் இரவில் சுவாமியின் இல்லத்தை சுற்றி வர ஆரம்பித்தார். மேலும் அவர் சுவாமியிடம், "நான் இன்னும் உங்களுக்கு ஒரு ஐந்து நாள் அவகாசம் தருகிறேன். அதற்குள் என்னுடைய தாயின் உடல்நிலை சரியாகவில்லை, என்றால் நீங்கள் பெரும் மோசக்காரர் என்றே முடிவெடுப்பேன்!" என்று மனதினுள் கூறிக்கொண்டார். இவ்வாறாக ஒரு நான்கு நாட்கள் பிரதக்ஷிணம் முடிந்தது. ஐந்தாவது நாள் ஒரு வியாழக்கிழமையாக அமைந்தது. அன்று இரவில் சுற்றிவரும்போது ஆனந்த் சுவாமியின் மீது வெறுப்பும் கோபமும் அடைந்து கூக்குரலில் சுவாமியைத் திட்ட ஆரம்பித்தார்! அப்போது ஒரு நிழலில் ஏதோ ஒரு உருவம் நகர்வதைப் போல உணர்ந்தார்! உடனே அவர் பயந்துபோய் வேகமாக நடக்க ஆரம்பித்தார்! அப்போது அவருக்கு, "பங்காரு! நில்லு!" என்று ஏதோ ஒரு குரல் அவரிடம் கூறுவது போல இருந்தது! ஆனால் அதைக் கண்டுகொள்ளாமல் அவர் மிகவும் வேகமாக நடக்கத் தொடங்கியவுடன் அதே வார்த்தைகளை மேலும் உரத்த குரலுடன் கூறி அழைப்பது போலிருந்தது! உடனே அவர் தனது வேகமாக நடையை நிறுத்தி விட்டு திரும்பிப் பார்க்கையில் அதிர்ச்சியுற்று அங்கேயே மண்டியிட்டார்!! உயிருள்ள உடலுடன் சுவாமி அங்கே நின்று தன்னைப் புன்முறுவலுடன் பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தார்!! அவரது தாய் நல்ல உடல் நலத்தை பெறுவார் என்று சுவாமி அவருக்கு உறுதி அளித்து விட்டு மறைந்துவிட்டார்!

 மறுநாள் காலையில் அவரது தாயே அவருக்கு தொலைபேசி மூலம் தான் திடீரென்று பூரண குணமடைந்து விட்டதாகத் தெரிவித்தார்!! இதன்மூலம் ஆனந்த் சுவாமியின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையைப் பெற்றார்!!

ஆதாரம்: டாக்டர் மோகன் அவர்கள் எழுதிய "சத்யசாய்பாபா லிவ்ஸ் ஆன்" என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 255:

ஒருநாள் காலையில் எனக்கு மிகுந்த தலைசுற்றல் காரணமாக என்னால் எழுந்திருக்கவே முடியவில்லை.  மேலும்  வாந்தியும் தொடர்ந்ததால் நான் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன்.  டாக்டர். கல்யாணராமன் எனக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். இந்தத் தலை சுற்றலும் வாந்தியும் அடிக்கடி வந்ததால் நான் மிகவும் கவலை உற்றேன். என் முதுகுத்தண்டின் நடுவே செல்லும் இரத்தக் குழாயில் ஏற்பட்ட  இரத்தக்கட்டு தான் இதற்கு காரணம் என்று கண்டுபிடித்தார்கள். ஒரு மாத காலமாக என்னால் சாதாரணமாக நடக்கவே முடியவில்லை. தலை சுற்றலால் கீழே விழுந்து விடாமல் இருக்க நான் ஒரு தடியை பிடித்துக் கொண்டு நடக்க முயற்சித்தேன்.  ஒருநாள் மிகவும்  வெறுப்படைந்து ,  சுவாமியின் போட்டோ அருகில் சென்று நின்று கொண்டு  பின்வருமாறு மனதார வேண்டினேன்: "சுவாமி! என்னால் இனி நடக்க முடியாது என்றால் பரவாயில்லை நான் சக்கர நாற்காலியிலாவது நகர்ந்து செல்கிறேன் ஆனால் என்னால் இந்த தலைசுற்றலைத் தாங்க முடியவில்லை, தயவு செய்து என்னை அதிலிருந்து குணப்படுத்துங்கள்!" என்று. மறுநாள் காலையில் நான் எழுவதற்கே பயந்தேன்.  ஆனால் ஆச்சரியம்! எழுந்து நிற்க முடிந்தது! என் நிலை தடுமாறாமல் நடந்தேன்! எந்தவித சிரமமும் தெரியவில்லை எனக்கு. வினோதமாக  இருந்தது, ஆனாலும் பயந்தேன்.  அருகிலிருந்த கை வைத்த நாற்காலியில் போய் அமர்ந்தேன். நாற்காலியின் கைகளைப் பிடித்துக் கொள்ளாமல் என்னால் உட்கார முடிந்தது!  எனக்கு தலைசுற்றல் வரவில்லை!  நான் நன்றாகவே இருந்தேன்! எனக்கு இப்போதுதான் நான் குணமாகி விட்டேன் என்ற  நம்பிக்கையே வந்தது!  சுவாமி என்னை முற்றிலும் குணமாகி விட்டார் என்பதை உணர்ந்தேன்!

பிறகு ஒரு மாத காலத்தில் நான் காரை ஓட்டிக்கொண்டு அலுவலகம் செல்ல ஆரம்பித்தேன்!! சுவாமியினுடைய அன்பின் ஒரு சிறு துளியின் மகிமையையே என்னவென்று சொல்வது!!

ஆதாரம்:  திருமதி. பத்மா ஶ்ரீனிவாசன் அவர்கள் சனாதன சாரதியில் எழுதிய பதிவிலிருந்து.


📝 நிகழ்வு 256:

சுவாமி, குழந்தைகளின் நடுவில்ஒரு குழந்தையாகவும், பெரியோர்களின் நடுவில் ஒரு பெரியவராகவும், மற்றும் அனைவருக்குமே ஒரு தாயாகவும் விளங்குபவர். என்னுடைய இளம் பருவத்தில் ஒரு முறை நாங்கள் புட்டப்பர்த்தி சென்றிருந்தபோது சுவாமி எங்களை இன்டர்வியூவுக்கு அழைத்தார். நான், எனது இரு தங்கைகள் மற்றும் இரு தம்பிகள் அனைவரும் சுவாமியையே பார்த்துக்கொண்டிருந்தோம்;  பெரியவர்களிடம் மட்டுமல்லாமல் சில நேரங்களில் எங்களிடமும் கூட சுவாமி பேசுவது உண்டு. அவ்வப்போது நகைச்சுவையாகவும் பேசுவார்.  அவ்வாறாகவே இந்த முறை என்னுடைய நாலரை வயதே ஆகியிருந்த தங்கையிடம் அவர் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று அவள் எழுந்து நின்று, சுவாமியிடம் என்னை சுட்டிக் காண்பித்து , "என் அண்ணா என்னை எப்போதும் அடிக்கிறான்! அவனுக்கு கோபம் அதிகம் வருகிறது. அவன் என்னை அடிக்க கூடாது என்று நீங்கள் அவனிடம் கூறுங்கள்!" என்று கூறினாள்! உடனே சுவாமி தன் சிம்மாசனத்தில் இருந்து எழுந்து விட்டு  அருகில் வந்து என் மீதும் என் தம்பியின் மீதும் தன் கைகளை வைத்துக்கொண்டு,  "இதோ பாருங்கள் சுவாமி எல்லோரிடத்திலும் இருக்கிறார். ஆகவே, அவர் உன் தங்கையிடமும் இருக்கிறார் அல்லவா?" என்று கேட்டார்.  அதற்கு நாங்கள் இருவரும் "ஆம் சுவாமி" என்றோம். உடனே அவர் "ஆகவே நீங்கள் உங்கள் தங்கையை அடிப்பதால் நீங்கள் சுவாமி அடிப்பதாக  அர்த்தம்,  இல்லையா?" என்றார். அதற்கு நாங்கள் "ஆம், சுவாமி!" என்றோம்.  அதற்கு அவர், "நீங்கள் சுவாமியை அடிக்க விரும்புகிறீர்களா?"  என்றார்! அதற்கு நாங்கள்," இல்லை, சுவாமி!" என்றோம்.   உடனே சுவாமி, "குட் பாய்ஸ்!" என்று சொல்லி பிரசாதம் கொடுத்தார்.  

என் வாழ்க்கையிலேயே நான் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக அது இருந்தது. எவ்வளவு பெரிய உண்மையை சுவாமி ஒரு தாய் தன் குழந்தைகளுக்குச்  சொல்வதைப்போல் சொட்டும் அன்புடன் சொல்லிவிட்டார்!!  உலகத்தில் உள்ள அனைத்து தாய்களுக்கும் மேலான அன்பைப் பொழிபவர் நம் சுவாமிதான்!

ஆதாரம்:  திரு. ஜி. ரவிசங்கர் என்பவரது உரையிலிருந்து.


📝 நிகழ்வு 257:

நான் நம் சுவாமியின் பக்தை ஆவேன் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை.  1980இல் தன்னுடைய முப்பதாவது வயதில் என் கணவர் டாக்டர். ராமச்சந்திரா ரெட்டி அவர்கள் திடீரென பக்கவாதத்தால்  பாதிக்கப்பட்டார். அவரது உடலின் இடது பாகம் முழுவதும் செயலிழந்தது. லண்டனில் உள்ள மிகச்சிறந்த மருத்துவமனைகளை நாங்கள் அணுகினோம். அவர் முற்றிலும் குணமாவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று அங்கு மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்.  நான் மெதுவாக எனது நம்பிக்கையை இழந்து கொண்டிருக்கும் நேரத்தில் சில மருத்துவர்களும் பேராசிரியர்களும் என்னிடம்  வந்து  இந்தியாவில் இருக்கும் புகழ்பெற்ற கடவுள் மனிதர்களை  அணுகும்படி கூறினார்கள்.  இதற்கு முன்னால் நாங்கள் சத்திய சாயி பாபாவைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. இறுதியாக நாங்கள் வைட் ஃபீல்டில் சுவாமியை முதன்முதலாக தரிசனம் செய்தோம்.  எங்களது கஷ்டத்தைப் பற்றி யாரும் அவரிடம் கூறவில்லை. சுவாமி நேராக என் கணவரிடம் சென்று  இடது பக்கத்தில் அவரது தலை மற்றும் அவரது கைகளைத் தடவி விட்டார்! மேலும் அவர்,, "நீ கவலைப்பட வேண்டாம்" என்று என் கணவரிடம் கூறினார்.  ஆண்கள் பக்கம் தரிசனத்தை முடித்து விட்டு பெண்கள் பக்கம் திரும்பினார்.  என்னருகில் வந்து, "நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம்; நான் உன் கணவரைப் பார்த்துக் கொள்கிறேன்!" என்று கூறினார்!  ஆச்சரியமும் திடீர் மகிழ்ச்சியும் கலந்த மன நிலையில் நான் அவரை உற்று நோக்கிய போது அவரது கண்களில் எனக்குத் தென்பட்ட  அன்பும் கருணையும் என்னால் மறக்கவே முடியாது! இந்த சந்திப்பின் பிறகு என் கணவர் அதிசீக்கிரத்தில் முழுமையாக குணமடைந்தார்!

ஆதாரம்:  ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் அமைச்சராக இருந்த திருமதி. கீதா ரெட்டி அவர்களது உரையிலிருந்து.


📝 நிகழ்வு 258:

எனது கல்லூரியில் 1971ஆம் வருடம் MBBS படித்து முடித்த சக மாணவர்கள் பலரும் வருடத்திற்கு ஒருமுறை புதிய இடம் ஒன்றில் கூடுவது வழக்கம். அவ்வாறு 2013 இல் நாங்கள் இந்தோனேசியாவில் உள்ள பாலியில் கூடினோம். முதல் இரண்டு நாட்களை ஊரை சுற்றி பார்ப்பதிலேயே கழித்தோம். மூன்றாவது நாளும் இவ்வாறே பொழுதைக் கழிப்பதற்கு அனைவரும் முடிவெடுத்தாலும், நான் மட்டும் அந்த ஊரில் சாயி மையம் ஏதாவது இருந்தால் அதனை சென்று தரிசிக்கலாம் என்று ஆசைப்பட்டேன். எனது விருப்பத்தை கேள்விப்பட்டவுடன் ஒரு டாக்டர் தம்பதியினரும் மற்றும் ஒரு டாக்டரும் என்னுடன் வருவதற்கு விருப்பம் தெரிவித்தனர். டாக்டர். பரமசிவத்தின் மனைவியான டாக்டர். கௌரி அவர்கள் மட்டும் என்னிடம், "நான் சாயி பக்தை இல்லை; ஆனால் சிவனின் பக்தை , ஆதலால் நான் குறிப்பாக ஒரு சிவன் கோவிலுக்கு செல்ல விரும்புகிறேன்" என்று கூறினார். மேலும் அவர் தன்னுடைய ஊரில் குறிப்பாக தெற்கு நோக்கி இருக்கும் சிவனை வாரத்திற்கு ஒருமுறை தரிசிப்பதாக அவர் கூறினார். , ஆகவே இந்த ஊரிலும் தெற்கு நோக்கி இருக்கும் சிவன் இருந்தால், அவரை தரிசிப்பதற்கு ஆவல் கொண்டார். அப்போது நான் அவரிடம் சுவாமியும் சிவனும் ஒன்றே என்றும் சுவாமியை தரிசிப்பதால் சிவனை பார்ப்பதற்கு ஒப்பாகும் என்று அவரிடம் விவரிப்பதற்கு முற்பட்டேன். 

நாங்கள் தங்கியிருந்த விடுதியின் வரவேற்பு மையத்திற்கு சென்று , அந்த ஊரில் சாயி மையம் இருக்கிறதா என்று கேட்டேன். அப்போது அவர்கள் சொன்ன பதிலை கேட்டதும் எனக்கு தூக்கி வாரிப்போட்டது! அங்கு பணி செய்து கொண்டிருந்த வரவேற்பாளர்களில் ஒருவர் , ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் பக்தர் தான் என்றவிவரமே அந்த இன்ப அதிர்ச்சிக்கு காரணம்! அவர் அன்று விடுமுறையில் இருந்ததால் தொலைபேசி மூலம் அவர்கள் தொடர்பு கொண்டு சாயி மையத்தின் முகவரியை எனக்குப் பெற்றுத் தந்தனர்! மேலும் ஒரு மகிழ்ச்சி தரும் விதமாக, அது எங்களது விடுதிக்கு அருகாமையிலேயே இருந்தது. அன்று மதியம் நாங்கள் அனைவரும் அந்த மையத்திற்குச் சென்றோம். நாங்கள் உள்ளே நுழைந்த அடுத்த நொடியில் அங்கு ஷீரடி பாபாவை போலக் காட்சியளித்த ஒரு முதியவர் எங்களை சந்தித்தார். அவர் எங்களுக்காகவே பல நேரம் காத்திருந்தது போல தோன்றியது. மிகப் பெரியதாக இருந்த அந்த மையத்தை எங்களுக்கு சுற்றி காண்பிப்பதற்கு அவர் முன்வந்தார். அவ்வாறு சென்று கொண்டிருக்கையில் அங்கு ஒரு இடத்தில் சிவனினுடைய ஒரு சிலையும் லிங்கமும் காணப்பட்டது. இதைப் பார்த்தவுடன் டாக்டர் கௌரி அவர்கள் மிகவும் ஆச்சரியமடைந்தார்! மேலும் அந்த சிலை டாக்டர். கௌரி அவர்கள் எதிர்பார்த்தது போல தெற்கு நோக்கியே இருந்தது! அந்த சிலைக்கும் லிங்கத்திற்கும் பின்பக்கத்தில் நம் சுவாமியின் மிகப்பெரிய படம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது! மூன்றும் ஒரே வரிசையில் இருந்தன! இதைக் கண்ட டாக்டர் கௌரியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. உடனே நான் அவரிடம், "சிவனை தரிசிக்க வேண்டும் என்ற உங்களது அவா பூர்த்தியானது மட்டுமல்லாமல், அவர் தெற்கு நோக்கி இருக்க வேண்டும் என்ற உங்களது தனிப்பட்ட விருப்பமும் பூர்த்தியாகிவிட்டது!! அதுமட்டுமல்ல! நான் உங்களுக்கு முன்னமே கூறியதைப் போல, தானும் சிவனும் ஒன்றே என்று சுவாமியே நமக்கு கூறுவதைப் போல அமைந்துவிட்டது!!" என்று கூறி எனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினேன்

ஆதரம்: டாக்டர் மோகன் அவர்கள் எழுதிய "சத்யசாய்பாபா லிவ்ஸ் ஆன்" என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 259:

இந்தப் புத்தகத்தை நான் பல வருடங்களுக்கு முன்னரே எழுதத் தொடங்கிவிட்டேன். நான் எனது வேலையில் மிகவும் மும்முரமாக இருந்ததால், தொடர்ந்து எழுதுவது கடினமாக இருந்தது; ஆகையால் என்னால் சீக்கிரம் இந்த புத்தகத்தை எழுதி முடிக்க முடியவில்லை. சில வருடங்களுக்கு முன்னால் நான் மும்பை சென்று இருந்தபோது என்னுடைய சாயி சகோதரர்களில் ஒருவரான திரு. கருப்பையா அவர்கள் என்னை அவரது சமிதிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அந்த சமிதியில் நான் உரை நிகழ்த்துவதாக இருந்தது. நான் புத்தகம் எழுதுவதைப் பற்றி அறிந்திருந்த அவர் , நாங்கள் காரில் சென்று கொண்டிருக்கையில் "நீங்கள் புத்தகம் எழுதுவது எந்த நிலையில் இருக்கிறது, சார்? அதை முடித்து விட்டீர்களா?" என்று கேட்டார். அதற்கு நான்," கருப்பையா! எனக்கு அதிக நேரம் எடுக்கின்றது. என்னுடைய பல அலுவல்களுக்கு இடையே, புத்தகம் எழுதுவதற்கான நேரம் சரிவர கிடைப்பதில்லை!" என்று கூறினேன். அதற்கு அவர், "நீங்கள் ஒன்றும் தப்பாக நினைக்க வில்லை என்றால் நான் ஒன்று கூறட்டுமா?" என்றார். அதற்கு நான், " நீங்கள் தாராளமாக சொல்லலாம்" என்றேன். அதற்கு அவர், "உங்களைப் போல் பல அலுவல்களில் முனைப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் பலர், புத்தகம் எழுத நினைக்கும்போது, அதற்கென்றே சிலரைப் பணிக்கு எடுத்துக் கொள்கின்றனர். அவர்களிடம் தங்களது புத்தகத்தின் முதன்மையான கருத்துக்களை மட்டும் கூறிவிடுகின்றனர். பிறகு அந்தப் பணிக்கு அமர்த்தப்பட்டவர்கள், தங்களது அனுபவத்தின் மூலமாக மிகச்சிறந்த புத்தகத்தை எழுதுகின்றனர். நீங்களும் அவ்வாறே செய்யலாமே! இதன் மூலம் நீங்கள் சீக்கிரம் புத்தகத்தை எழுதி முடிக்க முடியும்" என்றார். நான் அவருக்கு பதில் கூறுவதற்கு முன்னரே என்னுடைய செல்போனில் ஒரு எஸ்.எம்.எஸ். செய்தி வந்ததை குறிக்கும் வகையாக ஒலி வந்தது. உடனே நான் அதை பார்த்த போது, "என்னுடைய புத்தகத்தை நீ எழுத ஆசைப்பட்டால் அதை நீ உன் கையாலேயே எழுது" என்று எழுதப்பட்டிருந்தது! இதைப் பார்த்தவுடன் சில நொடிகள் நான் பேச்சு மூச்சற்று போனேன்! இதை நான் கருப்பையாவிடம் காட்டியபோது அவர் கண்களில் நீர் ததும்பியது! எங்கள் இருவராலும் இந்த அற்புதத்தை நம்பவே முடியவில்லை! 

நமது ஒவ்வொரு உரையாடலையும் சுவாமி நம் அருகே இருந்து அமைதியாக கேட்டுக் கொண்டே இருக்கிறார் என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்தது.

ஆதாரம்: டாக்டர் மோகன் அவர்கள் எழுதிய "சத்யசாய்பாபா லிவ்ஸ் ஆன்" என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 260:

நான் இந்த புத்தகத்தை சுமார் ஆறு வருடங்களாக எழுதிக் கொண்டிருந்தேன்! இறுதியாக நான் இந்தப் புத்தகத்தின் கையெழுத்துப் பிரதியை 2017ஆம் ஆண்டு குரு பூர்ணிமாவின் போது மகா சமாதியில் சமர்ப்பிப்பதாக சுவாமியிடம் சத்தியம் செய்தேன்; அதன்படியாக நான் மகா சமாதியில் சமர்ப்பித்து விட்டு சாந்தி பவனில் உள்ள என்னுடைய அறையில் உட்கார்ந்து, அச்சிட கொடுப்பதற்கு முன்னால் ஒருமுறை இறுதியாக அதைப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது சுவாமியின் படத்தின் மீது போட்டிருந்த மாலை திடீரென்று கீழே விழுந்தது. அதைப்பற்றி எதுவும் யோசிக்காமல் நான் அந்த மாலையை திரும்ப அந்த படத்தின் மேல் போட்டேன். ஸ்ரீ சத்ய சாய் சாதனா டிரஸ்டின் புத்தக வெளியீட்டுத் துறையின் தலைவரான திரு. கே. எஸ். ராஜன் அவர்களை சந்திக்கலாம் என்று சென்றுகொண்டிருந்தேன் . அப்போது ரேடியோ சாயி ஆபீசுக்கு எதிரே உள்ள சாய் பிளாசம்ஸ் என்ற கட்டிடத்தில் ஒரு விழாவில் அவர் பங்கு கொண்டிருப்பதைப் பார்த்தேன். அங்கிருந்த மற்றவர்களும் என்னை பார்த்தவுடன் அந்த கட்டிடத்திற்குள் என்னை அழைத்துச் சென்றனர். அங்கே பஜனை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவர்கள் என்னை தேங்காய் உடைக்கச் சொன்னார்கள். அதன்பிறகு அங்கே நடந்து கொண்டிருக்கும் பஜனையில் நான் உட்கார்ந்த தருணத்தில் சுவாமியின் பெரிய படத்திற்கு போட்டு இருந்த ஒரு பெரிய மாலை திடீரென விழுந்தது! அருகில் சென்று பார்த்தபோது அது சாதாரணமாக நழுவி விழ வில்லை என்றும் அந்த மாலையின் மேல்பாகத்தின் ஒருபுறம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அறுந்து விழுந்திருக்கிறது என்றும் தெரிந்தது! சில நிமிடங்களில் அதன் பொருள் எனக்குப் புரிந்தது. முந்தைய நாள் இரவில் என் அறையில் பூ மாலை விழுந்தபோது அதைப்பற்றி நான் சற்றும் யோசிக்கவே இல்லை. ஆகவே இப்போது நடந்த இந்த அற்புதம், "நேற்று நான் உன் புத்தகத்தை ஏற்றுக் கொண்டதற்கான சைகையை உனக்கு காண்பித்தேன். ஆனால் நீ அதை கவனிக்கவில்லை! ஆகவே இந்த முறை அந்த மாலையை நான் நடுவிலே அறுத்து காண்பித்தேன்! இப்போவாவது இந்த அற்புதத்தை நீ புரிந்து கொண்டாயா?" என்று சுவாமி என்னிடம் கூறுவதைப் போல இருந்தது! இந்த நிகழ்வை சுவாமியின் ஆசீர்வாதமாக நான் ஏற்றுக் கொண்டேன்!

ஆதாரம்: டாக்டர் மோகன் அவர்கள் எழுதிய "சத்யசாய்பாபா லிவ்ஸ் ஆன்" என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 261:

1970 இல் நடந்த ஒரு நிகழ்வு:  

ஒரு இன்டர்வியூவில் சுவாமி எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.  சுவாமி, தான் பேசுவதை சற்றே நிறுத்தும் போதெல்லாம் அங்கிருந்த ஒரு பெண்மணி சுவாமியைப் பார்த்து "சுவாமி! நீங்கள் எங்கள் ஊருக்கு கண்டிப்பாக வரவேண்டும் . அங்கே நாங்கள் நிறைய சேவை செய்து கொண்டிருக்கிறோம்" என்றார். முதல் இரண்டு தடவை சுவாமி அவரை  சிறிதும் கவனிக்கவில்லை. சுவாமி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது மூன்றாவது முறை அவரை குறுக்கிட்டு, "சுவாமி!  நீங்கள் எங்கள் ஊருக்கு வர வேண்டும் " என்று மறுபடியும் கூறினார்.  உடனே சுவாமி அவரைப்பார்த்து "ஏன்?  நான் உங்கள் ஊருக்கு ஏற்கனவே வந்திருக்கிறேன்!"* என்றார். அதற்கு அந்தப் பெண்மணி, "இல்லை, சுவாமி! நீங்கள் இன்னும் எங்கள் ஊருக்கு வரவில்லை!" என்றார். சுவாமி உடனே தன் பேச்சை மாற்றினார். "உங்கள் ஊரில் சேவை எவ்விதம் நடந்து கொண்டிருக்கிறது?" என்று வினவினார்.  அதற்கு அந்தப் பெண்மணி, "சுவாமி நாங்கள் முதன் முதலில் ஆரம்பித்த போது பத்து குடும்பங்கள் தான் இருந்தன.  அவர்கள் ஒவ்வொருவரும் அரிசியை  சேவைக்கு என சேமித்து வைத்து கொடுத்தனர். ஆனால் இப்போது 100 குடும்பங்கள்  சேர்ந்து 25 கிலோ அரிசியை சமைத்து பலருக்கு உணவளிக்கிறோம் . இந்த சேவை மிகவும் சிறப்பாகவே சென்று கொண்டிருக்கிறது"  என்றார்.  சுவாமி உடனே, "அப்படியா? மிகவும் சந்தோஷம்!" என்றார். பிறகு திடீரென அந்த பெண்மணியை பார்த்து, "நீ சமைப்பதற்கு எந்த ரக அரிசியை உபயோகப் படுத்துகிறாய்?" என்று கேட்டார்.  அதற்கு அவர் ,"சுவாமி! சிறந்த அரிசி  தான்!"  என்றார்.  அதற்கு சுவாமி, "இல்லை நான் நீ மற்றவர்கள் உபயோகப்படுத்தும் அரிசியை கேட்கவில்லை. நீ, சேவைக்காக எந்த அரிசியை சேமித்து பயன்படுத்துகிறாய் என்று கேட்டேன்!" என்றார்.  அதற்கு அவர், "நல்ல அரிசி தான் , சுவாமி !" என்று கூறினார். அதற்கு சுவாமி, "ஓ! அப்படியா? நல்ல அரிசி தானா?"  என்றார்.  அதற்கு அந்தப் பெண்மணி ,"ஆமாம், சுவாமி! மிகவும் நல்ல அரிசிதான்" என்று  கூறிவிட்டு மேலும் தொடர்ந்து, "சுவாமி! நீங்கள் கண்டிப்பாக எங்கள் ஊருக்கு வந்து, அங்கு நடக்கும் சேவையை பார்க்க வேண்டும்!" என்றார்!  அதற்கு சுவாமி, "நல்லது, நல்லது, ஆ! எனக்கு நன்றாகவே தெரியும்!  ஐந்து ரூபாய் அரிசி உங்கள் குடும்பத்திற்கும்,  இரண்டு ரூபாய் அரிசி, ஏழைகளுக்கு உணவு அளிப்பதற்கும்!" என்றார்.

   அதற்கு அந்தப் பெண்மணி," இல்லை, இல்லை, சுவாமி!"  என்றார். அதற்கு சுவாமி, "ஆமாம், ஆமாம்! நீ என்னை  நம்பவில்லையா?  ஐந்து ரூபாய் அரிசி மிகவும் நன்றாகவே இருக்கும்; ஆனால் இரண்டு ரூபாய் அரிசியோ நல்ல ரகமாக இருக்காது, மேலும் அது சுத்தப்படுத்தப்படாமல் இருக்கும்!" அதற்கு அந்தப் பெண்மணி மறுபடியும், "இல்லை, சுவாமி! நல்ல அரிசிதான் சுவாமி!" என்றார். இந்த பதிலைக் கேட்ட சுவாமியின் சிரித்த முகம் மாறியது.   உடனே சுவாமி, "நீ என்னை நம்பவில்லை! பொறுத்திரு நான் உனக்குக் காண்பிக்கிறேன்! இரண்டு வருடங்களுக்கு முன்னால் ,ஒரு நாள் உங்கள் வீட்டுக்கு ஒரு பிச்சைக்காரன் வந்து 'அம்மா, "பிச்சை!' என்று கேட்டபோது  ஒரு சிவப்புத் துணியில்  நாராயண சேவைக்கு என்றே  நீ மூட்டை கட்டி வைத்திருந்த  இரண்டு ரூபாய் அரிசியை அவரிடம் கொடுத்தாய் அல்லவா!"  என்று சொல்லி விட்டு அருகில் இருந்த அறைக்குள் சென்று, சிவப்பு நிற மூட்டையை தூக்கி கொண்டு வெளியே வந்து, "இதை நீ எனக்கு கொடுக்கவில்லையா? இப்போதாவது புரிந்து கொள்! நான் உங்கள் ஊருக்கு வந்திருக்கிறேன்!"  என்று அவர் அழுத்தமாகக் கூறி முடித்த போது அங்கு நிசப்தம் நிலவியது!  அதிர்ச்சியும் அவமானமும் கலந்த நிலையில் இருந்த அந்தப் பெண்மணியின் கண்களில் இருந்து இப்பொழுது நீர் தாரை வார்த்தது!!  இந்த நிகழ்வு அங்கு இருந்த எங்கள் எல்லோரது மனங்களையும் நெகிழ வைத்தது.

ஆதாரம் : திருமதி கீதா மோகன்ராம் அவர்கள் இங்கிலாந்தில்  அவர் அளித்த சொற்பொழிவில் இருந்து.


📝 நிகழ்வு 262:

திரு. V.S. சிதம்பரம் என்பவர்,  சுவாமியின் பக்தையான திருமதி.  கமலா சாரதி அவர்களின்  வயலின் ஆசிரியராக இருந்தார். அவரும் சுவாமியின் பக்தர் ஆவார்.  அவர் டில்லியில் சாரதி- கமலா தம்பதியினரின் வீட்டிலேயே தங்கியிருந்தார். 1950இல் இந்த நிகழ்வு நடந்தது:

ஒருநாள் காலையில்  சிதம்பரம் அவர்கள்  பழைய டெல்லியையும் புதுடில்லியையும்  இணைக்கும் மின்டோ ரோட்டில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.  புது டில்லியில் இருந்த சில மாணவர்களுக்கு அவர் வயலின் சொல்லிக் கொடுத்துவிட்டு பதினோரு மணிக்குள் வீடு திரும்ப வேண்டியிருந்தது. அவ்வாறு சென்று கொண்டிருக்கையில் ,  பின்வருமாறு யோசித்துக் கொண்டிருந்தார்.  "சுவாமியை தரிசிப்பதற்காக டில்லியிலிருந்து புட்டபர்த்தி செல்லவேண்டுமானால் அதிக பணம் தேவைப்படுமே,  இப்போது இருக்கும் நிலையில்  இந்தப் பயணத்தை மேற்கொள்வது அப்படி ஒரு முக்கியமான தேவையா?  சுவாமி உண்மையிலேயே கடவுளின் அவதாரம் தானா?  இவ்வளவு செலவு செய்து கொண்டு, அங்கு சென்று  தரிசனம் செய்வதால் பிரயோஜனம் இருக்குமா?" என்று. அந்த நொடியில் தனது பின்பக்கத்திலிருந்து வேகமாக சைக்கிளில் ஒரு வயது முதிர்ந்த சாது ஒருவர் அவர் அருகில் வந்தார். அவரைப் பார்த்தவுடன் சிதம்பரம் அவர்கள்  அவரை வணங்கினார். அவர் பார்ப்பதற்கு அங்கி அணிந்து கொண்டும் தலையில் ஒரு துணியை கட்டிக் கொண்டும் ஷீரடி பாபாவை போல காட்சியளித்தார்.  இருவரும் சைக்கிளில் இருந்து இறங்கி நின்றனர்.  உடனே அந்தப் பெரியவர் திரு சிதம்பரத்திடம், "நான் உன்னிடம் ஒரு சில நிமிடங்கள் தனியாகவும் ரகசியமாகவும் பேசவேண்டும் இந்த சாலையில் மிகுந்த சத்தம் இருப்பதால் நாம் தனியாக ஓர் இடத்திற்கு செல்லலாமா?"  என்று கேட்டார்.  அதற்கு சிதம்பரம் அவர்கள் ,"நான் என் வேலையை முடித்துவிட்டு சீக்கிரம் வீட்டிற்கு திரும்ப வேண்டும். இப்போது அதற்கு நேரம் இல்லையே "என்று கூறினார்.  அதற்கு அந்த பெரியவர், "எனக்கு பத்து நிமிடம் கொடுத்தால் போதும்" என்று கூற,  அருகிலிருந்த அமைதியான இடத்திற்கு இருவரும் சென்றனர். அங்கே இருந்த ஒரு சமாதியில் அந்தப் பெரியவர் ஷீரடி பாபாவைப் போல வலது காலை இடது காலின் மேல் போட்டு அமர்ந்தார்!   சிதம்பரம் அவர்கள் அவரது காலடியில் அமர்ந்தார்.  உடனே அந்த பெரியவர் சிதம்பரத்தை பார்த்து, "நீ என்னை யார் என்று நினைக்கிறாய்?" என்று கேட்டார்! அதற்கு அவர், "நீங்கள் ஷீரடி பாபாவைப்போல  காட்சி அளிக்கிறீர்கள்" என்றார்! அதற்கு அந்தப் பெரியவர், "சரி, நீ இப்போது என் கையைப் பார்!" என்றார்.  அந்த நேரத்தில் அந்த உள்ளங்கை ஒரு கண்ணாடியைப் போல மாறிற்று. அதனுள் பல வண்ணங்களுடன் கூடிய ஒளி ரேகைகளுக்கு நடுவே புட்டபர்த்தி சாய்பாபா ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு புன்முறுவலுடன் தன்னை பார்ப்பதை  கவனித்தார்! அந்தக் காட்சியில் தன்னை மெய் மறந்தார்!  பிறகு அந்தப் பெரியவர் தன் அங்கியின் மேலிருந்த பொத்தானை அவிழ்த்து தன் மார்பினைக் காண்பித்தார்!  அங்கும் சிதம்பரம் நம் சுவாமியைப் பார்த்தார்! ஆனால் இங்கே சுவாமியை , மாலை  அணிந்துகொண்டு பிரகாசத்துடன் இருக்கும் ஆனந்த சொரூபனாகப் பார்த்தார்!  உணர்ச்சிவசப்பட்ட சிதம்பரம் ஆனந்த கண்ணீர் வடிக்க ஆரம்பித்தார்.  உடனே அந்த முதியவர் நம் சுவாமியைப் போல விபூதியை வரவழைத்து  சிதம்பரத்தின் முதுகெங்கும் தடவினார்!  மேலும் அவருக்கு கல்கண்டு பிரசாதம் கொடுத்தார்! இரண்டு பாபாவும் ஒன்றே என்பதை உறுதிப்படுத்திய அந்த முதியவர்,  "என்றும் நம்பிக்கையையும் தைரியத்தையும் இழந்துவிடாதே!  உன் மீது எனக்கு இருந்த பேரன்பின் காரணமாகவே நான் இப்போது உன்னை பார்க்க வந்தேன்!  சரி, வா! இனி நாம் போகலாம்!" என்றார்!! நம் பாபா தான் அவர் என்று உணர்ந்ததால் அவரை  வலுக்கட்டாயமாக தன் வீட்டிற்கு வருமாறு அழைத்தும், பாபா அவர்கள் வேகமாக சைக்கிளில் ஏறி மாயமாய் மறைந்துவிட்டார்! மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்ததால் அவரால்  சைக்கிளை ஓட்ட முடியவில்லை.  அதனால் அவர் ஒரு வண்டியில் சைக்கிளை போட்டுக் கொண்டு வீடு சென்றடைந்தார்! 

ஆதாரம்:  ஹோவர்ட்  மர்பெட்  எழுதிய "மேன் ஆஃப் மிரகிள்ஸ்" என்ற புத்தகத்தில் இருந்து.


📝 நிகழ்வு 263:

அப்போது நான் பிருந்தாவனத்தில் சுவாமியின் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி கொண்டிருந்தேன். அக்டோபர் 25ஆம் தேதி என்னுடைய பிறந்த நாள் ஆகும். என் மனைவி இனிப்புகள் செய்து வீட்டிலிருந்து எனக்காக கொடுத்து அனுப்பி இருந்தாள். ஆனால் எனது அறைக்குள், தினசரி அலுவல்கள் குறித்து மட்டுமல்லாமல், சுவாமியிடம் இருந்து எனக்கு கிடைத்த புதிய அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொள்வதற்காகவும், பலர் வந்து போய்க் கொண்டிருந்ததால் என்னால் அந்த இனிப்புகளை ருசி பார்க்க முடியவில்லை. இரவு 10 மணி வரையிலும் கூட என்னிடம் யாராவது பேசிக் கொண்டிருந்ததால், என் பிறந்தநாள் அன்று அந்த இனிப்புகளை உண்பது என்பது முடியாமல் போனது. பிறகு மறுநாள் காலை நகர சங்கீர்த்தனம் நடக்கும் நேரம் தான் இந்த இனிப்புகளை உண்பதற்கு சரியான நேரம், என்று முடிவு செய்தேன். ஏனெனில் யாரும் என்னை அந்த நேரத்தில் தொந்தரவு செய்ய மாட்டார்கள். நான் என் அறையை தாளிட்டுக் கொண்டு என் மனைவி அனுப்பியிருந்த 6 இனிப்புகளை ஒன்றன்பின் ஒன்றாக உண்டு முடித்தேன். அவற்றின் வாசனை வெளியே தெரியாமல் இருக்க இரண்டு கிராம்பு துண்டுகளை வாயில் போட்டுக் கொண்டேன். வழக்கம்போல அன்று காலை நான் சுவாமியின் தரிசனத்திற்கு சென்றேன். ஆனால் அன்று மட்டும் சுவாமி வேறு எங்கும் செல்லாமல் நேராக என்னை நோக்கி வந்த வண்ணம், நான் நன்றாக சாப்பிட்டேனா என்று சைகையால் கேட்டார்! என் அருகில் நின்று கொண்டு, "அந்த ஆறு இனிப்புகளையுமா நீ முழுமையாக சாப்பிட்டு விட்டாய்? ஓரிரு துண்டுகளைக்கூட உன் நண்பர்களுக்கு உன்னால் கொடுக்க முடியவில்லையா? இன்று உன்னுடைய பிறந்தநாள் என்று எனக்கு தெரியும்! பாத நமஸ்காரம் செய்து கொள்!!" என்றாரே பார்ப்போம்!! நான் ஒரு நிமிடம் அதிர்ந்து போய் விட்டேன்!

ஆதாரம்: திரு. அனில்குமார் அவர்களது உரையிலிருந்து.


📝 நிகழ்வு 264:

நான் பர்த்தியில் மாணவனாக இருந்தபோது எனக்கு தினமும் ஒரு கவிதை எழுதும் பழக்கம் இருந்தது. ஒருநாள் மதியம் நான் ஸாயி குல்வந்த் ஹாலில் அமர்ந்திருந்தபோது , ஒரு புதிய கவிதையின் வரிகள் என் மனதில் மிக அழகாகவும் சரளமாகவும் வந்து கொண்டிருந்தன. ஆங்காங்கே சொற்களை மாற்றியமைத்து கவிதைக்கு மெருகேற்றி முடிக்கும் தருணத்தில் சுவாமி இன்டர்வியூ ரூமில் இருந்து வெளியே வந்து, முன்னாள் மாணவர்கள் அமர்ந்து இருக்கும் பகுதியை நோக்கி வராண்டாவில் நடந்து வந்தார். பஜன் ஹாலின் வாயிலின் அருகே அமர்ந்து இருந்த எனக்கு திடீரென்று, அந்தக் கவிதையை சுவாமியிடம் கொடுக்க வேண்டும் என்று தோன்றிற்று. ஏனெனில் அந்தக் கவிதை அவருக்காகவே எழுதப்பட்டது ஆயிற்றே! அவர் என் அருகில் வந்த போது என் கையில் நான் மடித்து வைத்திருந்த காகிதத்தை பார்த்து, "அது என்ன?" என்று கேட்டார். உடனே நான், அதை அவர் கையில் கொடுத்துக்கொண்டே," சுவாமி! இது ஒரு கவிதை" என்றேன். அதைப் பிரித்துப் பார்த்துக் கொண்டே சுவாமி என்னிடம், "ஆ? லவ் லெட்டர்?" என்றார்! அதற்கு நான் ,"இல்லை, சுவாமி! அது ஒரு கவிதை" என்று திரும்பவும் கூறினேன். அவர் அதனைப் படித்துவிட்டு சில நொடிகளுக்குப் பின், "பார்த்தாயா! நான் ஏற்கனவே கூறி விட்டேனே! இதில் ஆறு முறை லவ் என்ற வார்த்தையை நீ உபயோகித்து உள்ளாய்!" என்றார். இதை நான் வேடிக்கையாக எடுத்துக்கொண்டு நான் வேறு எதுவும் சொல்லாமல் அமைதியானேன். ஏனெனில் அவரது செயல்களில் என்றுமே தவறு என்பது இருந்ததில்லையே! அந்தக் காகிதத்தை மடித்து அவரே என் சட்டைப் பைக்குள் வைத்தார்! பிறகு என் மார்பில் லேசாக தட்டிக்கொண்டே, புன்முறுவலுடன், "மிக அழகான வார்த்தைகள்... ஆனால் அவை இதயத்திலிருந்து வர வேண்டும்; இல்லையெனில் அவை (பயனற்ற) வெறும் வார்த்தைகளாகவே இருக்கும்!" என்றார்!! 

 ஆதாரம் : திரு. கே. அஜெய் என்ற முன்னாள் மாணவரின் பதிவிலிருந்து.


📝 நிகழ்வு 265:

1990களில் சுவாமி மும்பைக்கு விஜயம் செய்தபோது நடந்த நிகழ்வு இது:

அப்போது ஒரு 'குட்டிப் பையானாக ' இருந்த நானும் என் அக்காவும் சாயி ஆன்மீகக் கல்வி (SSE) கற்றுக் கொண்டிருந்தோம். ஒரு நாள் சுவாமியின் இல்லமான 'சத்ய தீப் ' பின் வெளியே உள்ள புல்தரையில் ,SSE மாணவர்களுடன் சேர்ந்து என்னை அமர வைத்தனர். நாங்கள் அங்கே செல்வதற்கு சிறிது கால தாமதம் ஆகிவிட்டது. அங்கு அமர்ந்திருந்த அனைவரும் தங்கள் கையில் சுவாமியிடம் கொடுப்பதற்காக ஒரு ரோஜா மலரை வைத்திருந்ததை நாங்கள் பார்த்தோம். எனக்கு அந்த ரோஜா மலர் கிடைக்கப்பெறாமல் போனதை நினைத்து மனம் வருந்தினேன். சுவாமியிடம் கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லையே என்று அழுதேன். கண்ணீருடன் சுவாமியிடம் வேண்டினேன். சுவாமிக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று தீவிரமாக விரும்பினேன். எனது அருகில் இருந்த சில புற்களைப் பிடுங்கி என் கைகளில் வைத்துக்கொண்டு சுவாமியின் வருகைக்காக காத்திருந்தேன். சுவாமி நாங்கள் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி வந்தார். ஒவ்வொருவரும் அளித்த ரோஜா மலரை கையில் வாங்கிக் கொண்டு நேராக எனக்கு முன்னால் வந்து நின்றார். நான் உடனே எழுந்து என்று பணிவுடன் எனது சிறிய கைகளால் 'காணிக்கை'யை சுவாமிக்கு அளித்தேன்! என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே அந்த புற்களை வாங்கிக் கொண்டு , என்னிடம் சில நொடிகள் பேசினார்! அந்த நொடியில் நான் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். மன வருத்தத்தினால் ஏற்பட்ட என் கண்ணீர் ஆனந்த கண்ணீராக மாறியது! அன்பின் அவதாரமாகிய சுவாமி , எனது ஆழ்மனதின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து எனக்கு ஆனந்தம் அளித்தார்! இன்றும் கூட அவர் குழந்தைகளுக்கு தன் அன்பின் ஆனந்தத்தை அளித்துக் கொண்டுதான் இருக்கிறார்!

ஆதாரம்: அர்ஜுன் என்ற பக்தரின் உரையிலிருந்து.


📝 நிகழ்வு 266:

அப்போது எனது பெண் ஷீலாவுக்கு வயது ஒன்பது இருக்கும். அந்தக் காலகட்டத்தில் பர்த்தியில் தினசரி பஜனை நிகழ்வின் கால அளவை சுவாமியே நிர்ணயம் செய்வார். அப்படி ஒரு நாள் நான் பஜன் ஹாலில் அமர்ந்திருந்த போது திரு. கஸ்தூரி அவர்கள் என்னிடம் வந்து, சுவாமி என்னுடைய மகளை மாடிக்கு அழைப்பதாக தெரிவித்தார். சுவாமியினுடைய விருப்பத்திற்கேற்ப எனது மகளை திரு. கஸ்தூரி அவர்களோடு அனுப்பி வைத்தேன். தீவிரமான தொண்டை பாதிப்பினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஒரு சிறுமி இருந்த அறைக்குள் அவள் அழைத்துச் செல்லப்பட்டாள். எனது மகளிடம், "நான் இப்போது ஒரு அறுவை சிகிச்சை செய்யப் போகிறேன்; நீ எனக்கு உதவி செய்வாயா?" என்று கேட்டார்! மேலும் அவர், "நான் எப்போதெல்லாம் கத்தரிக்கோல், பஞ்சு போன்ற பொருள்களை கேட்கின்றேனோ அப்போதெல்லாம் நீ அவற்றை எனக்கு எடுத்துக் கொடுக்க வேண்டும், சரியா?" என்றார். திடீரென சுவாமி இவ்வாறு கூறியது அவளுக்கு உடனே புரிபடவில்லை என்றாலும் கூட அவள் அதற்கு ஒத்துக்கொண்டாள். பின்னர் சுவாமியே அறுவை சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் போன்றவற்றை வரவழைத்தார். பிறகு அந்தப் பெண்ணிற்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்தார். அறுவை சிகிச்சை முடிந்த உடன் ஷீலா திரும்பவும் பஜன் ஹாலுக்குள் வந்தாள். சுவாமி உன்னை ஏன் கூப்பிட்டார் என்று நான் அவளிடம் கேட்டேன். அதற்கு அவள், " என்னை எதற்குக் கூப்பிட்டார் என்று தெரியவில்லை , ஆனால் அவர் ஒரு சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்தார். நான் அவருக்கு கத்திரிக்கோல், பஞ்சு போன்ற பொருட்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டு இருந்தேன்!" என்றாள்! உங்களால் நம்ப முடிகிறதா? அந்தப் பெண் குழந்தை சீக்கிரமாகவே முற்றிலும் குணமாகி விட்டாள் என்பதை நான் சொல்லத் தேவையில்லை!

 ஆதாரம்: திருமதி. ராணி சுப்பிரமணியன் அவர்கள் 'சனாதன சாரதி'யில் எழுதியிருந்த பதிவிலிருந்து.


📝 நிகழ்வு 267:

நாங்கள் நாக்பூரில் இருந்தபோது ஷீலாவுக்கு 10 வயது இருக்கும். திடீரென அவளுக்கு ஜுரத்தினால் உடல் கொதிக்க ஆரம்பித்து விட்டது. அங்கிருந்த பல பிரபல மருத்துவர்களை அணுகினோம். ஆனால் அதன் காரணத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அது டி.பி. நோயாக இருக்கலாம் என்று நினைத்தார்கள். ஆனால் பரிசோதனைகளின் முடிவுகள் நன்றாகவே இருந்தன. அப்போது என் கணவருடைய நண்பர் ஒருவர் டெல்லியில் இருந்து திரும்பிவந்து கொண்டிருந்தார். மருத்துவரான அவர் ஷீலாவை பரிசோதிக்க ஒப்புக்கொண்டார். ஷீலாவின் உடல்நிலை கவலைப் படக் கூடியதாக இல்லை என்று கூறினார். உடல் வளர்ச்சியின் வேகம் குறைவாக உள்ள சில குழந்தைகளுக்கு இவ்வாறு ஏற்படலாம் என்றார். ஆனால் உடல் உஷ்ணத்தின் அளவு குறைவதாக தெரியவில்லை. இவ்வாறாக இரண்டு மூன்று மாதங்கள் கழித்து எனக்கு மருத்துவர்கள் மீது இருந்த நம்பிக்கை அறவே போய்விட்டது. புட்டப்பர்த்திக்கு செல்வதற்காக என் கணவரிடம் நான் அனுமதி கேட்டேன். அங்கே மருத்துவர்கள் யாரும் இல்லை என்று அவர் கூறினார். ஆனாலும் விடாப்பிடியாக இருந்தேன். என் மகளை அழைத்துக்கொண்டு சென்று சுவாமியை பார்க்க விரும்பினேன். இறுதியாக நான் புட்டபர்த்திக்கு சென்றேன். அங்கு பகவானை பார்த்தேன். தங்குவதற்காக மற்ற இடங்கள் எல்லாம் நிரம்பியிருந்ததனால் எங்களிருவரையும் கார் நிறுத்தும் இடத்தில் தங்கிக் கொள்ளச் சொன்னார். சுவாமி என்னிடம், "நீ ஏன் ஷீலாவை இங்கே கூட்டிக்கொண்டு வந்து இருக்கிறாய் என்று எனக்குத் தெரியும். அவளுக்கு பல நாட்களாக காய்ச்சல் இருந்திருக்கிறது, இல்லையா? கவலைப்படாதே , அவளுடைய உடல்நிலை சரியாகி விடும்! ஆனால் நீ இங்கே ஒரு மாதம் தங்க வேண்டியிருக்கும்" என்றார். ஆனால் காலையில் 9 மணிக்கு மேல் ஷீலாவை வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது என்று கூறிவிட்டார். "அவள் மீது சூரிய ஒளி படக்கூடாது! இதை நீ மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். நீ துணி துவைப்பதற்காக வெளியே செல்லும்போது அவளை இங்கே பூட்டிவிட்டுச் சென்று விடு. நானும் அவளை பார்த்துக் கொள்கிறேன்!" என்று கூறினார்! ஒரு மாதத்திற்கு பிறகு அவர் எங்களை ஊருக்கு செல்வதற்கு அனுமதித்தார். இந்த ஒரு மாத காலத்தில் அவர் அவளது உடல் வெப்பத்தின் அளவைப் பார்க்கவும் இல்லை, எந்த ஒரு சிகிச்சையும் கொடுக்கவில்லை! நானும் கவலைப்படவில்லை. நாங்கள் நாக்பூர் சென்றடைந்த பிறகு என் கணவர் வெப்பமானியை வைத்துப் பார்த்ததில் அவள் நார்மலாக இருந்தது தெரியவந்தது!! 

சுவாமியுடைய செயல்முறைகளின் பின்னால் உள்ள காரணங்கள் பற்றி என்னால் மற்றவர்களுக்கு என்றுமே விளக்க முடியாது!!

 ஆதாரம்: திருமதி. ராணி சுப்பிரமணியன் அவர்கள் 'சனாதன சாரதி'யில் எழுதியிருந்த பதிவிலிருந்து.


📝 நிகழ்வு 268:


கோடையில் ஒரு நாள் என் நண்பர் ஒருவர் என்னை அவருடைய சில நண்பர்களை சந்திப்பதற்காக அழைத்துச் சென்றார். அந்த சந்திப்பின்போது பாபாவைப் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை எனக்கு அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்த சந்திப்பிற்கு பிறகு பாபாவைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கு வந்தது. நான் முதன்முதலாக டாக்டர் சாமுவேல் சேண்ட்வீஸ் அவர்கள் எழுதிய புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். பைபிள் புத்தகத்தைப் படிப்பது போல நான் தினமும் அந்த புத்தகத்தில் இருந்த சுவாமியின் பொன்மொழிகளை படித்தேன். அந்த காலகட்டத்தில் எனக்கு மிகவும் மோசமான குடிப்பழக்கம் இருந்து வந்தது. எனக்கு அது நல்லது அல்ல என்று தெரிந்தும் என்னால் அந்த பழக்கத்தை விட முடியவில்லை. ஆகவே பகவானிடம் உதவி கேட்க முடிவெடுத்தேன். தொடர்ந்து மூன்று நாட்கள் இரவில், புத்தகம், சுவாமியின் போட்டோ, மற்றும் விஸ்கி இவற்றுடன் அமர்ந்திருந்தேன்! மறுநாள் இரவு 11 மணி 45 நிமிடம் இருக்கும். அந்தத் தருணத்தில் ஒரு கையில் விஸ்கி நிறைந்த கண்ணாடி கோப்பையுடன் மற்றொரு கையால் அந்த புத்தகத்தை தொட்டுக்கொண்டு, சுவாமியின் போட்டோவை பார்த்து "இனி நீங்கள்தான் எப்படியாவது இந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும்" என்று இதயப்பூர்வமாக வேண்டிக்கொண்டேன்! அதே நொடியில் என் கையிலிருந்த கண்ணாடி கோப்பை மிகப்பெரிய வெடி சப்தத்துடன் சுக்குநூறாக உடைந்து அறை முழுவதும் சிதறியது! அந்த கண்ணாடி துகள்கள் புத்தக அலமாரியில் இருந்த புத்தகங்கள் மீதும், மேஜைக்கு அடியிலும், இவ்வாறு பல மூலை முடுக்குகளிலும் பரவியிருந்தன!  

இதன் மிக சுவாரசியமான விஷயம் இரண்டு நாட்களுக்கு பிறகு நடந்தது! நான் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். இரண்டு நாட்களாக என்னால் அந்த வெடி சப்தத்தை மனதிலிருந்து நீக்கவே முடியவில்லை! அந்த நிலையில் பயணித்துக்கொண்டிருந்த எனக்கு திடீரென என் தலைக்குள் இருந்து ஏதோ ஒரு குரல், "அந்த கண்ணாடி கோப்பை அவ்வாறு வெடித்துச் சிதறியதன் பிறகும் உனக்கு ஒன்றுமே ஆகவில்லை என்பதை நீ கவனித்தாயா?" என்று என்னை கேட்டது! அந்த நிமிடத்தில் நான் அடைந்த ஆனந்தத்தை அளவிடவே முடியாது! சுவாமி நிகழ்த்திய அற்புதத்தின் காரணமாகவே நான் இன்று நன்றாக இருக்கிறேன் என்று எனக்கு அப்போது தான் உறைத்தது!! உண்மையிலேயே, அந்தக் கோப்பை வெடித்தபோது, என் முகத்தில் இருந்து ஒரு அடியை விட குறைவான தூரத்திலேயே இருந்தது! இந்த நிகழ்வு தான் " நான் இனிமேல் குடிக்க மாட்டேன்!" என்று சுவாமியிடம் நான் உறுதிமொழி அளித்து அதனை நிறைவேற்ற உதவியது!  

ஆதாரம்: ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த கிட்டி லேமான்ட் என்பவரது அனுபவம்....திரு வி.பாலு மற்றும் சகுந்தலா பாலு அவர்கள் எழுதியுள்ள ' டிவைன் குளோரி' என்ற புத்தகத்தில் இருந்து...


📝 நிகழ்வு 269:

தெலுங்கு கவிஞர் ஒருவர் தனது அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டது எனக்கு நினைவுக்கு வருகிறது. கவி சம்மேளனம் என்ற ஒரு நிகழ்ச்சிக்காக அவர் புட்டப்பர்த்திக்கு வந்திருந்தார். அவர் இயற்றியிருந்த கவிதை சுவாமிக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருக்கு சுவாமி ஒரு மோதிரத்தை வரவழைத்து கொடுத்தார். அப்போது அவர் சுவாமியிடம், "ஒரே ஒரு எண்ணத்தின் மூலம் நான் இந்த கவிதையை உருவாக்கினேன். நீங்களும் அவ்வாறு ஒரே ஒரு எண்ணத்தின் மூலம் இந்த மோதிரத்தை வரவழைத்து இருக்கிறீர்கள்!" என்று கூறினாராம். அதற்கு உடனே சுவாமி, "இந்த மோதிரம் மட்டுமல்ல! இந்த முழு பிரபஞ்சத்தையும் அப்படித்தான் நான் ஸ்ருஷ்டி செய்தேன்!!"

என்று மிகவும் சாதாரணமாக பதில் அளித்தாராம்!!!

ஆதாரம் : முன்னாள் மாணவர் ஒருவரின் பதிவிலிருந்து.


📝 நிகழ்வு 270:

நான் பள்ளியில் இருந்து ஓய்வு பெற்றதும், ஒரு புதிய பள்ளிக்கூடம் தொடங்க உத்தேசித்து இருந்தேன்.  சென்னை மையத்திற்கு சற்று தள்ளி இடம் கிடைத்ததால் சற்று யோசனையாக இருந்தது.  இந்த இடத்தில் பள்ளி எந்த அளவிற்கு முன்னேறும் என்ற சந்தேகம் இருந்ததால் எந்த முடிவும் எடுக்க தயங்கிக் கொண்டிருந்த சமயம் அது .  ஒரு இன்டர்வியூவில் பகவானிடம் இதைப் பற்றி கேட்க நினைத்து, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல், ' பர்சனலாக ஒரு விஷயம்' என்று நான் ஆரம்பித்த போதே,  என் எண்ண அலைகளை படித்து விட்ட பகவான், "நீ ஒரு புது பள்ளிக்கூடம் ஆரம்பிப்பது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறாய்!  உடனே வேலையை துவங்கு. ஆயிரம் தாய்களுக்கு சமமான பாபா உன்னோடு இருக்கிறேன்" என்று தன் நெஞ்சைத் தொட்டு கூறியபோது சாயி  தாயின் அளவில்லாத அன்பில் மூழ்கி வாயடைத்துப் போனேன்!  எப்பேர்ப்பட்ட பாக்கியம்!  அவரது வார்த்தைகள் என்னுள் அசாத்திய தைரியத்தை வரவழைத்தது.

 ஆதாரம்: திருமதி. அலமேலு கணபதி என்ற பக்தர், " இறைவனுடன் இனிய அனுபவங்கள்" என்ற  புத்தகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் இருந்து.


📝 நிகழ்வு 271:


இன்டர்வியூவில் என்னிடம் பேசிக் கொண்டிருந்த சுவாமி உடனே என் கணவரை நோக்கி, "உன் உடல் நலத்தில் மிகவும் கவனமாய் இருக்க வேண்டும் ; ஏனென்றால் உன் உதவி இவளுக்கு தேவை" என்றார். என் கணவர் அப்போது மிகவும் ஆரோக்கியமாகத்தான் இருந்தார். சுவாமி ஏன் இப்படி சொல்கிறார் என்று என் மனதில் அப்போது ஏதும் தோன்றவில்லை. பிறகு சுவாமி தன் கையை ஊதி ஒரு பச்சை கல் மோதிரத்தை வரவழைத்தார். ஏற்கனவே என் நண்பர்கள் சிலரிடம் சுவாமி கொடுத்த பச்சை கல் மோதிரத்தை நான் பார்த்திருந்ததால், "எப்பொழுதும் இப்படி பச்சைக்கல் மோதிரம் தான் வரும் போலிருக்கிறது" என மனதுக்குள் எண்ணினேன். உடனே சுவாமி என்னை பார்த்து சிரித்துக் கொண்டே, "என்ன? பச்சைக்கலராய் இருக்கு என்று பார்க்கிறாயா? உனக்கு என்ன கலர் வேணும்?" என்று கேட்டார்! எனக்கு தூக்கி வாரி போட்டது! சுவாமி என்னிடம் மீண்டும் வற்புறுத்தியதன் பேரில் நான், சுவாமி ! வெள்ளை" என்றேன். white for purity என்று சொல்லிக்கொண்டே அவர் மோதிரத்தை ஊதினார். பச்சைக்கல் அதே அளவிற்கு வெண்ணிற வைரம் ஆயிற்று! அதை என் கையில் அணிவித்த பிறகு 'ஓம்' பதித்த தங்க மோதிரம் ஒன்றை வரவழைத்து அதை என் கணவரின் கையில் போட்டார். பகவானின் பரிபூரண ஆசிகளுடன் நாங்கள் சென்னைக்கு திரும்பினோம். ஊரிலிருந்து வந்த சில நாட்களில் என் கணவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது! முதலிலேயே எச்சரிக்கை செய்தார் அல்லவா? அதன்பிறகு சுவாமியின் அறிவுரைப்படி இவர் தன் உடல்நலத்தை மிகவும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொண்டார்.

ஆதாரம்: திருமதி. அலமேலு கணபதி என்ற பக்தர், " இறைவனுடன் இனிய அனுபவங்கள்" என்ற புத்தகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் இருந்து.


📝 நிகழ்வு 272:

சுவாமி புட்டபர்த்தியில் தொடக்கப்பள்ளி ஆரம்பித்த போது நான் மும்பையில் இருந்தேன். அந்த நேரத்தில் புட்டபர்த்தியில் இருந்த திரு. கிஷின் பஞ்ச்வாணி அவர்கள், என்னுடைய மகளை அந்தப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதற்காக எனக்கு ஒரு கடிதம் எழுதினார். ஆனால் அந்தக் கடிதம் என்னவோ இன்றுவரை என்னை வந்து சேரவில்லை. பல நாட்கள் கழித்து அவர் தர்மக்ஷேத்ராவுக்கு வந்திருந்த போது , எதேச்சையாக நான் அங்கு இருந்தேன். அவர் என்னை அங்கே பார்த்தவுடன், "இன்னும் இங்கே நீ ஏன் இருக்கிறாய்? உன் மகளின் பள்ளி சேர்க்கை சம்பந்தமாக நான் உனக்கு பல நாட்கள் முன் கடிதம் எழுதி இருந்தேனே?" என்றார்! அதற்கு நான் "அப்படிப்பட்ட கடிதம் ஒன்று எனக்கு வரவே இல்லையே?" என்று கூறினேன். மறுநாளே நான் என் மகளை அழைத்துக்கொண்டு புட்டபர்த்திக்கு வந்தேன். நான் அங்கு பள்ளியின் முதல்வரை அணுகியபோது அவர் அந்த வருடத்திய சேர்க்கைகள் எல்லாம் முடிந்து விட்டதாக என்னிடம் கூறினார். இதைக் கேட்ட நான் மிகுந்த சோகத்துடன் என் அறைக்கு வந்தேன். பள்ளியில் இடம் கிடைக்கும் வரை நான் உணவும் நீரும் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்து அதை செயல் படுத்தினேன்! மூன்றாம் நாள் மதியம் சுவாமி பிருந்தாவனத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தார். அங்கே நான் நின்றுகொண்டு தீவிரமாகப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். அவர் தனது காரினுள் உட்காருவதற்கு சற்று முன்னால், தூரத்தில் நின்று கொண்டிருந்த என்னை பார்த்து, அருகில் வர அழைத்தார்! என்னிடம், "நீ , நாளை காலையில் பள்ளிக்கு சென்று உன் மகளை சேர்த்து விடு!" என்று கூற, அவரது கால்களில் நான் விழுந்து ஆசீர்வாதம் எடுத்துக்கொண்டேன். பிறகு நான் என் அறைக்கு வந்து என் உண்ணாவிரதத்தை முடிக்கும் விதமாக சிறிது நீர் அருந்தினேன். அன்றைய முழு பொழுதையும் அவருக்கு நன்றி கூறுவதிலேயே கழித்தேன். மறுநாள் காலை நான் பள்ளிக்குச் சென்றபோது முதல்வர் தனக்கு சுவாமியிடம் இருந்து எந்த ஒரு வார்த்தையும் வரவில்லை ஆதலால் அட்மிஷன் கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்டார்! நான் திரும்பி வந்து திரு. குடும்பராவ் அவர்களை சந்தித்தேன். அவர் அப்போதுதான் பள்ளி முதல்வருக்கு சுவாமியினுடைய கட்டளையை தெரிவித்திருப்பதாகக் கூறி, மறுநாள் பள்ளிக்கு செல்லுமாறு சொன்னார். அவ்வாறே நானும் செய்தேன்; என் மகள் கீர்த்திக்கு அட்மிஷன் கிடைத்தது. இப்போது அவள் சுவாமியின் அனந்தபூர் கல்லூரியிலேயே படித்து பட்டம் பெற்றுள்ளாள்!
 
ஆதாரம்: மும்பையில் பாந்த்ரா சமிதியின் கன்வீனர் ஆன , திரு. மகேஷ் விஷன் தாஸ் மன்யால் அவர்கள் சனாதன சாரதியில் எழுதிய பதிவு.


📝 நிகழ்வு 273:

கொடைக்கானலில் உள்ள 'சாயி ஸ்ருதி'யிலிருந்து கிளம்புவதற்கு முன் சுவாமி அங்கு பணியாற்றிய காவலாளிகள், சலவைத் தொழிலாளர்கள், சமையல் செய்தவர்கள், சேவா தள தொண்டர்கள் போன்ற பலதரப்பட்டோருக்கு ஏதாவது ஒரு பொருளோ அல்லது வெகுமானமோ அளித்துவிட்டுத் தான் கிளம்புவார். போலீஸ் அதிகாரிகளும் இவர்களில் அடங்குவர். அவ்வாறு ஒருமுறை அங்குள்ள பஜன் ஹாலில் போலீஸ் அதிகாரிகள் அமர வைக்கப்பட்டிருந்தனர். அங்கே நுழைந்த சுவாமி சில நொடிகளில் திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் அங்கிருந்து வெளியே வந்து விட்டார்! காரணம் இதுதான்- சுவாமியுடன் அங்கு சென்றிருந்த மாணவர்கள், 20 ஜோடி ஆடைகள் மட்டுமே தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால் அங்கு அமர்ந்து இருந்ததோ 100 பேர்! மீதமுள்ள 80 பேருக்கு உள்ளே துணிமணிகள் இருப்பு உள்ளதா என்று சுவாமி கேட்டார். அவ்வாறு இருப்பு ஏதும் இல்லாமல் இருப்பினும், அவற்றை உடனடியாக வாங்கிக் கொடுப்பதற்கு தேவையான பணத்திற்கு எங்கே போவது என்று அங்கு இருந்த பலர் யோசனையில் ஆழ்ந்ததால் சுவாமியின் கேள்விக்கு பதில் கூற முடியவில்லை! அங்கே ஒரு சங்கடமான நிசப்தம் நிலவியது. ஆனால் சுவாமி மிகவும் அமைதியாக இருந்தார். அவர், "நான் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து விட்டு வந்துவிடுகிறேன் சற்று பொறுங்கள்" என்று கூறிவிட்டு சென்றார்! சுவாமி வெளியில் சென்றவுடன் அங்கு இருந்த மூத்த பக்தர்கள் தங்களால் எவ்வளவு பணம் திரட்ட முடியும் என்ற முயற்சியில் மிகவும் அவசரமாக ஈடுபட்டனர். அவ்வாறு அவர்கள் பணத்தை சேகரித்துக் கொண்டிருந்தபோது, தன் கை நிறைய பக்தர்கள் அளித்த கடிதங்களின் கற்றையுடன் சுவாமி உள்ளே நுழைந்தார். அப்போது ஒரே ஒரு கடித உறை மட்டும் சுவாமியின் கையிலிருந்து நழுவி கீழே விழுந்தது! பணம் திரட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு மூத்த பக்தர்தான் அந்த உறையை கீழே குனிந்து எடுத்தார். ஆழ்ந்த அர்த்தம் பொதிந்த பார்வையுடன் அவரை நோக்கி, "அந்த உறையைத் திற!" என்றார். அதைத் திறந்து பார்த்த அந்த பக்தர் , உள்ளே பணம் நிறைய வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ந்து போனார்! மீதமுள்ள அந்த 80 போலீஸ் அதிகாரிகளின் ஆடைகளுக்கு தேவையான பணம் அதில் இருந்தது! அடுத்து சுவாமி கூறிய வார்த்தைகள் தான் இந்த அனுபவத்திற்கு மகுடம் வைத்தது போல இருந்தன. 
"இந்தப் பணத்தைப் பெறுவதற்கு நான் என்னுடைய தெய்வீக சக்தியை உபயோகப்படுத்தவில்லை! உங்களுக்கு ஒரு முக்கியமான பாடம் கற்பிப்பதற்கு ஆகவே இந்த நிகழ்வு நடந்துள்ளது!" என்று சுவாமி கூறினார். மேலும் அவர் தொடர்ந்து, "மக்களின் வாழ்க்கைகளை மேம்படுத்துவதில் நான் ஒரு சிறந்த பங்கு வகிக்க வேண்டும் என்ற ஒரு தீவிரமான ஆசை உங்களுக்குள் இருந்தால், பிறர்நலம் பேணுவதற்காக சுயநலமற்ற முறையில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்ற தீராத தாகம் கொண்டு இருப்பீர்களானால், இயற்கையின் சக்திகள் உங்களுடன் சேர்ந்து கொண்டு உங்களது தூய எண்ணங்கள் நிறைவேற சந்தேகமின்றி ஆவன செய்யும்! எப்போதும் இதனை நினைவில் நிறுத்துங்கள்" என்று பறைசாற்றினார்!

ஆதாரம்: திரு. அனில் குமார் அவர்களது உரையில் இருந்து.


📝 நிகழ்வு 274:

எனது கல்லூரி நாட்களில் ஒரு நாள் என் வகுப்பில் படிக்கும் தோழன் ஒருவனுக்கு அவனது தந்தையிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது.  அவர் புதிய வீடு ஒன்றிற்கு  மாற்றிச் சென்றுவிட்டதாகவும் ,  வரப்போகும் விடுமுறையின் போது அவன் அந்த புது வீட்டுக்கு வரலாம் என்றும் அவர் எழுதி இருந்தார்.  அடுத்த மாதம் அவனுடைய மாமா பர்த்திக்கு வந்திருந்தபோது,  அவரை சந்தித்த  சக மாணவன்  மிகுந்த ஆவலுடன் தனது தந்தையின் புதிய வீட்டினை பற்றி விசாரித்தான்.  ஹால், படுக்கையறைகள், சமையலறை,  மொட்டை மாடி,  வீட்டின் முன்புறம் திறந்தவெளி,  என்று வீட்டைப் பற்றிய பல விஷயங்களை,  அவன் தனது மாமாவிடம் விசாரித்தான். உரையாடல் முடிந்தபின்பு  அவன் ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தான்.  வீட்டைப் பற்றிய உரையாடல்  அங்கேயே முடிந்தது என்று நினைத்தான். சில நாட்களுக்குப் பிறகு சக மாணவனுக்கு சுவாமியுடன் பேசுவதற்கான அரிய வாய்ப்பு கிட்டியது.  அவன் சுவாமியிடம் "சுவாமி நான் இப்பொழுது என்னுடைய பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் இருக்கிறேன்.  முடிவில் நான் இன்ஸ்டிட்யூட்டில் இருந்து விலகி  வெளி உலகில்   பிரவேசிக்கும்போது தயவு செய்து நீங்கள் என்னை மறந்து விடாதீர்கள்" என்று மூன்று முறை  கூறி மன்றாடினான்.  அதற்கு சுவாமி "நான் உன்னை என்றுமே மறக்க மாட்டேன் ஆனால் நீ தான் என்னை மறந்து விடுகிறாய்" என்றார்!  அதற்கு அவன்," சுவாமி! நான் உங்களை என்றும் மறப்பதில்லை" என்று பதிலளித்தான்.  அதற்கு சுவாமி, "உன் மாமா உன்னை பார்க்க வந்திருந்த போது   புதிய வீட்டினைப்  பற்றிய பல விவரங்களை நீ அவரிடம் விசாரித்தாய்!  ஹால் எங்கே இருக்கிறது, சமையலறை எங்கே இருக்கிறது, படுக்கையறைகள் எங்கே இருக்கின்றன, குளியலறை எங்கே இருக்கிறது, போன்ற பல கேள்விகளை நீ அவரிடம் கேட்டாய்!" என்றெல்லாம் அவனுக்கு ஞாபகப்படுத்தி விட்டு  மேலும் தொடர்ந்து, "ஆனால் அப்போது நீ என்னை மறந்து விட்டாய்!  பூஜை அறை எங்கே இருக்கிறது என்று நீ அவரிடம் கேட்கவில்லை!" என்று அவனிடம் சுட்டிக்காட்டினார்!!  சுவாமியின் இந்த வார்த்தைகள்  அவனது அகக் கண்களைத் திறந்தது போல அமைந்தன. "நான்தான் சுவாமியை மறந்து விட்டேன் ஆனால் சுவாமி என்னை மறக்கவில்லை" என்ற உண்மை அவனுக்கு தெளிவாகியது!!  

இந்த அனுபவத்தின் மூலம் அவனது சக மாணவர்களான நாங்களும்  மற்றொரு மிகப் பெரிய உண்மையை புரிந்து கொண்டோம்:  "நம் அனைவருடைய  ஒவ்வொரு உரையாடலையும்  சுவாமி அமைதியாக கேட்டுக் கொண்டிருக்கிறார்" என்பதுதான் அந்த உண்மை!!
 
ஆதாரம் ஒரு முன்னாள் மாணவரின்  நாட்குறிப்பேட்டில் இருந்து எடுத்த பதிவு.


📝 நிகழ்வு 275:

ஒரு சமயம் என் கணவர் ஆதிநாராயணாவிற்கு உடல்நிலை சரியில்லை. உணவுக் குழாயில் ஏதோ ஒரு அடைப்பு காரணமாக எந்த ஆகாரமும் உள்ளே செல்லவில்லை. ஆபரேஷனை தவிர வேறு வழியில்லை என்று மருத்துவர்கள் தீர்மானமாய் சொல்லிவிட்டார்கள். உடனே பயம் என்னைப் பீடித்தது. பறந்தேன் பிருந்தாவனத்திற்கு. பற்றினேன் பரந்தாமனின் திருவடிகளை.

 மந்திரில் இருந்து வெளிவந்த பகவானை கண்டதும் அழுகை வெடித்தது. நான் கூறுவதற்கு முன்பே, "கவலைப்படாதே, உன் கணவருக்கு ஆபரேஷன் தேவையில்லை என்று அபயஹஸ்தமளித்து கையை சுழற்றி ஒரு ஆப்பிளை வரவழைத்தார். இந்தப் பழத்தின் சாற்றை அவருக்கு கொடு குணமாகி விடுவார்" என்று உறுதி அளித்தார். பாத நமஸ்காரம் கூட செய்யத் தோன்றாமல் பழத்தை வாங்கி கொண்டு, வந்த வேகத்தில் சென்னை திரும்பினேன். பழச்சாற்றை என் கணவருக்கு புகட்டினேன். என்ன ஆச்சரியம்! அதுவரை அடைத்திருந்த உணவுக்குழாய் வழிவிட பழரசம் உள்ளே இறங்கியது! மருத்துவர்கள் வியக்கும் வண்ணம் படிப்படியாக என் கணவர் குணமடைந்தார்.

 ஆதாரம்: " இறைவனுடன் இனிய அனுபவங்கள்" என்ற புத்தகத்தில் திருமதி அவர்களின் பதிவு.


📝 நிகழ்வு 276:

காலஞ்சென்ற மேஜர் ஜெனரல் எஸ்.பி. மகாதேவனும் அவரது துணைவியாரும் எங்கள் குடும்பத்தினருக்கு நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். அவ்வப்போது எங்கள் வீட்டிற்கு வருகை தந்து கொண்டிருந்தார்கள். அவ்வாறு ஒருமுறை வந்திருந்தபோது அவரது துணைவியார், சுவாமி அவருக்கு சிருஷ்டி செய்து கொடுத்திருந்த கருப்பு நிற முத்து நெக்லஸை என் மனைவியிடம் காண்பித்தார். உடனே என் மனைவி தன் கைகளை சுவாமியின் படத்தை நோக்கி காண்பித்து, "இதேபோன்று எனக்கும் ஒரு நெக்லஸை சுவாமி வரவழைத்துக் கொடுக்க மாட்டாரா?" என்று வேண்டினார். பல வருடங்கள் கழித்து ஒரு இன்டர்வியூவில் என் மனைவி சுவாமியிடம் , "என்னுடைய வேண்டுதல்கள், நான் பஜனைப் பாடல்களைப் பாடுவது, போன்றவற்றை நீங்கள் அறிவீர்களா?" என்று கேட்டார்! மேற்கொண்டு அவர் , "நீங்கள் அறிவீர்கள் என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது?" என்று ஒரு கேள்வி கேட்டார். அவர் எப்பொழுதும் எங்களுடனேயே இருக்கிறார் , எங்களுடைய வழிபாடுகளையும், வேண்டுதல்களையும் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் தான் இருக்கிறார் என்பவற்றை நிரூபணம் செய்யும் விதமாக ஒரு சில உதாரணங்களை எடுத்துக் கூறினார்! பிறகு முன் கூறிய அதே கருப்பு நிற நெக்லஸை வரவழைத்து என் மனைவியிடம் அளித்தார்! "இதுபோன்ற ஒரு நெக்லஸை சுவாமி எனக்கு வரவழைத்து தர மாட்டாரா என்று என் படத்தின் முன்னால், நீ ஒரு நாள் வேண்டினாய் அல்லவா?" என்றார்!! பல வருடங்களுக்கு முன்னால் என் மனைவி கூறிய அதே வார்த்தைகளை சுவாமி திரும்பக் கூறினார்! மேலும் அவர் தொடர்ந்து, இதே போன்ற ஒரு நெக்லஸை வாங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஒரு நகைக்கடைக்கு சென்றதையும், கையில் போதிய பணம் இல்லாததால் திரும்பி வந்ததையும் சுவாமி தெரிவித்தார்!! மேலும் "அந்த கடையின் பெயரென்ன? 'டாஷ்கண்ட் ஜுவல்லரி' தானே!" என்று கூறி எங்களை வியப்பில் ஆழ்த்தினார்!! சுவாமி அனைத்தையும் அறிவார்! அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்!!அனைத்தையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்!!!

ஆதாரம்: திரு . பாம்பே ஶ்ரீனிவாசன் அவர்களின் பதிவில் இருந்து.


📝 நிகழ்வு 277:

ஜனவரி 1998 இல், திரு சுப்ரமணிய செட்டியார் அவர்களும், அவரது மகன் ஶ்ரீனிவாசன் செட்டியாரும், பிரசாந்தி நிலையத்தில் இருந்தனர். அப்போது சுப்ரமணிய செட்டியார் அவர்கள் உடல் நலம் குன்றியதால், பகவானுடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒருநாள் காலையில், சுவாமி, ஶ்ரீனிவாசன் செட்டியாரிடம் , "இந்த வருடம் என்ன பிரதிஷ்டை செய்யப் போகிறீர்கள்?" என்று கேட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின்னால் நடக்கவிருந்த பாதுகை திருவிழா பற்றி ஏதும் யோசிக்காமல் இருந்ததால் அவரால் பதிலேதும் கூற முடியவில்லை. ஆகையால் அவர் சுவாமியிடம் "சுவாமி! நாங்கள் எந்த சிலையை வடிக்க வேண்டும் என்று நீங்களே கூறுங்கள்" என்றார். ஆனால் சுவாமி அமைதியாக இருந்தார். உடனே செட்டியார் அவர்கள், "சுவாமி! தத்தாத்ரேயர் அல்லது சிவ-சக்தி அல்லது விஷ்ணு- லக்ஷ்மி , இவற்றில் எதை நாங்கள் தயார் செய்வது?" என்று மேலும் கேட்டார். சில நிமிட அமைதிக்குப் பின்னர், சுவாமி, "இன்று இரவு நீ மருத்துவமனையில் இருக்கும் உனது தந்தையைப்போய் பார், அவர் நீ என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுவார்!" என்று கூறினார். அன்றிரவு ஸ்ரீநிவாசன் செட்டியார், சுவாமியுடன் நடந்த உரையாடலை தன் தந்தையிடம் முழுமையாக விவரித்தார். அதற்கு சுப்ரமணிய செட்டியார் அவர்கள், "நான் உன்னிடம் என்னவென்று சொல்வது, இன்று அதிகாலையில் இருந்து நான் எப்பொழுதெல்லாம் என் கண்களை மூடுகின்றேனோ அப்போதெல்லாம் தாய் காயத்ரி என் அகக்கண் முன் தோன்றுகிறாள். அவள் மிக அழகாகவும் ஒரு தெய்வீக அமைதியுடனும் காட்சியளிக்கிறாள்! அவளது தரிசனம் எனக்கு மிகுந்த ஆறுதலையும் அமைதியையும் கொடுக்கிறது. நான் அவளை வழிபட்டதில்லை, அவளை இலக்காக வைத்து தியானம் செய்ததும் இல்லை! அவளை நினைத்ததே இல்லை, அவளைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது - அப்படி இருந்தும் அவள் ஏன் எனக்கு இவ்வாறு அடிக்கடி காட்சி தருகிறாள் என்று எனக்கு புரியவில்லை! இதன் முக்கியத்துவத்தை பற்றி நீ சுவாமியிடம் கேள்!" என்று கூறினார்.
  மறுநாள் காலை பகவான், திரு. சீனிவாசனை மறுபடியும் இன்டர்வியூவுக்கு அழைத்தார். "உன் தந்தை என்ன கூறினார்?" என்று கேட்டார். அதற்கு அவர், "சுவாமி! அவருக்கு நாள் முழுவதும் தாய் காயத்ரியின் தரிசனம் கிடைத்துக் கொண்டே இருந்தது!"என்று பதிலளித்தார். உடனே சுவாமி மிகுந்த உற்சாகத்துடன், "ஆ! காயத்ரி!! ஆமாம், காயத்ரியின் சிலையை செய்யுங்கள்!" என்று ஆணையிட்டார்! இவ்வாறாக, சுவாமி, காயத்ரி மாதாவிற்கான கோவிலுக்கு வித்திட்டார்.

 ஆதாரம்: சனாதன சாரதி மார்ச் 2021 இதழில் திரு. பிஷு ப்ரஸ்டி அவர்களின் பதிவு.


📝 நிகழ்வு 278:
சுவாமியின் ஆணைக்கு அடிபணிந்து  திரு . சீனிவாசன் செட்டியார்  ஜெய்ப்பூருக்கு சென்றார். அங்கு  தெய்வ பக்தி மிக்க ஒரு சிற்பியை சந்தித்து  அவரிடம்  காயத்ரி மாதாவின் சிலையை  செய்யும் பணியை ஒப்படைத்தார்.  வடிவமைப்பு, சிலையின்  அளவுகள்  போன்றவற்றை  சுவாமி கூறியவாறு அவரிடம்  விவரித்தார்.  சிலை வடிப்பதற்கு தேவையான தொகையின்  பாதியை முன்பணமாக அவரிடம் கொடுத்தார்.  பிறகு அந்த சிற்பி  தன் வேலையை தொடங்கினார்.  சிற்ப வேலை எந்த அளவிற்கு  முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக அடிக்கடி சீனிவாசன் ஜெய்ப்பூர் சென்று வந்தார்.  அவ்வாறு ஒருமுறை சென்றபோது  அந்த சிற்பி ஆழ்ந்த கவலையில் இருந்தார்.  காரணத்தைக் கேட்டபோது அந்த சிற்பி,  சிலை உருவாகிக் கொண்டிருந்த அந்தக் கல்லில் ஒரு துளை இருப்பதாக தெரிவித்தார்.  90 சதவிகித வேலை  முடிந்த நிலையில் இருந்ததால் இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை என்று அவர் கவலைப்பட்டார். அவர் இந்த துளையை மூடி மறைத்து விட்டு  தன் வேலையைத் தொடர்ந்து முடித்திருக்கலாம்.  ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. "  காயத்ரி மாதாவின் இந்தப் புனிதமான சிலையில் நான் இந்த தவறை செய்யக்கூடாது.  அதுவும் இந்த சிலை பிரசாந்தி நிலையத்திற்கு சென்று கொண்டிருக்கும்போது"  என்று தன் இதயத்தின் அடியிலிருந்து சிந்தித்தார்.  ஆகையால் தான் செய்த வேலையை நிறுத்தி விட்டார்.   இவ்வாறு உண்மை கூறியதற்காக அந்த சிற்பியை மெச்சிவிட்டு திரு சீனிவாசன் செட்டியார் அவர்கள் சுவாமியிடம் விரைந்தார்.

  எதிர்பாராத விதமாக நடந்த இந்த நிகழ்வை அவர் சுவாமியிடம் விவரித்தபோது,  சுவாமி, உடனே,"  இந்த சிற்பி எவ்வளவு நல்லவர் என்று பார்த்தாயா?  அவர் மிகவும் நேர்மையானவர்!   கவலைப்பட வேண்டாம் என்று நீ அவரிடம் சொல்!  வேறு ஒரு புதிய கல்லை எடுத்துகொண்டு வேலையை தொடங்கச் சொல்!!  பிரதிஷ்டை செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்ட நாளுக்கு  நன்கு முன்னதாகவே  சிலை வடித்து ஆகிவிடும்!  கவலைப்பட வேண்டாம்!!"  என்றார்! சுவாமி கூறியது போலவே ,  சிலை வடிக்க சாதாரணமாக தேவைப்படும் நாட்களின்  பாதியிலேயே சிலை வடிவமைப்பு முடிந்துவிட்டது!   அந்த சிலையின் அழகு அவரே  வியக்கும் அளவுக்கு  இருந்தது!   இது சுவாமி நிகழ்த்திய ஒரு அழகான அற்புதமாகும்!
அந்த சிலை பிரசாந்தி நிலையம் வந்தடைந்தபோது சுவாமி அந்த சிலையை பார்த்து தனது மனப்பூர்வமான மகிழ்ச்சியை  தெரிவித்தார்!  சீனிவாசனிடம் சுவாமி, "  நீ அவருக்கு எவ்வளவு பணம் கொடுத்தாய்?"  என்று கேட்டார்.  அதற்கு அவர் தான் கொடுத்த முன்பணத்தை தெரிவித்துவிட்டு , "  அவர் நல்ல பக்தர்; அவர் எது கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்"  என்று சுவாமியிடம் பதிலளித்தார்.  அதற்கு சுவாமி ,"இல்லை, இல்லை!  மேலும்  அதிகமாகப் பெற்றுக் கொள்வதற்கு அவர் தகுதி படைத்தவர்!"  என்று கூறி சிற்பியை தன் அருகில் அழைத்தார்!  அவரிடம், "  மிகவும் நன்றாக இருக்கிறது! மிகவும் நன்றாக இருக்கிறது!!"  என்று கூறிவிட்டு மேலும் தொடர்ந்து, "  இந்த சிற்ப வேலையின் மிகச் சிறந்த  விஷயம் என்னவென்றால்,  நீ உண்மையைச் சார்ந்து நின்றாய்!  சிலையில் இருந்த குறையை நீ மறைத்திருக்கலாம்!  ஆனால் நீ உண்மை எனும் பாதையில் நடக்க முடிவெடுத்தாய்!!  இதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன்!!"  என்று கூறினார். ஒரு பெரிய  பச்சைக்கல் மோதிரத்தை வரவழைத்து அவரது  கைவிரலில்  அணிவித்தார்!  பிறகு அவர் உள்ளே சென்று விட்டு ,  ஒரு கனமான பண உறையுடன் வெளியில் வந்தார்!  சீனிவாசன் கொடுத்த பணத்தின் ஐந்து மடங்கு அதில் இருந்தது!!  அதை அவரிடம் கொடுத்து விட்டு அவருக்கு ஒரு சால்வை போர்த்தி அவரை கௌரவப் படுத்தினார்!!

ஆதாரம்:  சனாதன சாரதி  மார்ச் 2021  இதழில்  திரு. பிஷு ப்ரஸ்டி  அவர்களின் பதிவு.


📝 நிகழ்வு 279:

நாங்கள் சுவாமியுடன் பத்ரிநாத்தில் இருந்து ஜோஷி மடத்துக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தோம். நாங்கள் 3 பஸ்களில் பயணித்தோம். கவர்னரும் மற்ற அதிகாரிகளும் மூன்று கார்களில் பயணித்தனர். அவ்வாறு ஒரு மலைப்பாதையில் திரும்பி வந்துகொண்டிருந்தபோது எங்களுக்கு முன்னால் சற்று தூரத்தில் காரில் சென்று கொண்டிருந்த சுவாமி , காரை நிறுத்தி விட்டு திடீரென கீழே இறங்கி, எங்களை நோக்கி தன் கைக்குட்டையை வீசிக்கொண்டே, "அனைவரும் பஸ்களில் இருந்து கீழே இறங்குங்கள் ! உங்கள் கைவசம் என்ன பொருட்கள் இருக்கின்றனவோ அவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு என்னை நோக்கி சீக்கிரம்நடந்து வாருங்கள்!" என்று கூறினார்! நான் உடனே கீழே இறங்கி நடக்க ஆரம்பித்து விட்டேன். பின்னாலிருந்த பஸ்களில் இருந்த மக்கள் கீழே இறங்கத் தொடங்கினர். சுவாமி என்னை நோக்கி, "அதோ பார்! ஒரு பெரிய மலையில் இருந்து நிலச்சரிவு ஆரம்பித்திருக்கிறது! மலையே சரிந்து விடும் போல இருக்கிறது!!" என்றார்! சிறிய பாறைகள் கீழே உருண்டு வர ஆரம்பித்தன!! பஸ்களில் இருந்த அனைவரும் சுவாமியின் பக்கம் ஜாக்கிரதையாக வந்து சேரும்வரை, சுவாமி தன் பார்வையால் அந்த நிலச்சரிவை நிறுத்தி வைத்திருந்தார்!! நாங்கள் வந்து சேர்ந்த பிறகு அந்த நிலச்சரிவு முழுமையாக நடந்தேறியது!!


கிருஷ்ணர் கோவர்த்தன கிரியை தன் கை விரலால் உயர்த்தினார் என்று யாராவது சொன்னால் அதை பெரும்பாலோர் நம்புவதில்லை! இங்கே எங்கள் கண்முன்னால், மிகவும் அபாயகரமான ஒரு நிலச்சரிவை, வெறுமனே தன் பார்வையால் சில நிமிடங்கள் நிறுத்தி காட்டினார், நம் சுவாமி!! நிஜமாகவே நாம் உற்றுக் கவனித்தோமானால் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் சுவாமியின் அற்புதங்களை உணர முடியும்!! கவர்னர் எங்கள் அருகில் இருந்ததால் புதிதாக மூன்று பஸ்கள் வரவழைக்கப்பட்டு, அவற்றில் நாங்கள் பயணம் செய்து ஹரித்வார் வந்தடைந்தோம்!!

 ஆதாரம்: டாக்டர். கோடேடி சரஸ்வதி அவர்கள், பிப்ரவரி 2021 - சனாதன சாரதி இதழில் எழுதிய பதிவு.


📝 நிகழ்வு 280:

சுவாமி ஒருமுறை தன் காரில் புறப்பட்டு ஸ்ரீ சத்யசாயி ஹில்வியூ ஸ்டேடியத்திற்கு வந்தார்.  ஒரு சுற்று முடிந்தவுடன் அவரது கார்  ஹாஸ்டலின் பின்புற வாயில் அருகே வந்து நின்றதை நாங்கள் பார்த்தோம். அங்கிருந்து திரும்பி சுவாமியின் கார் ஹாஸ்டலுக்குள் வருமா என்று நாங்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தோம்.  ஆனால் ஒரு சில நிமிடங்கள் கார் அங்கேயே நின்றது.  என்ன காரணமாக இருக்கும் என்று எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.  ஆனால் சில நிமிடங்கள் கழித்து நாங்கள் ஏமாற்றம் அடையும் விதமாக கார்  மந்திரத்தை நோக்கி சென்று விட்டது.  ஆனால் அன்று மாலையே நாங்கள் தரிசனத்துக்கு சென்றிருந்தபோது இந்த புதிருக்கு விடை கிடைத்துவிட்டது!! சுவாமி ஒரு குறிப்பிட்ட மாணவனை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார்.  அப்போது  ஹாஸ்டல் வார்டன் அவர்கள் சில மாணவர்களை  சுவாமியின் அருகே வரும்படி அழைத்துக் கொண்டிருந்தார்.  ஆனால் சுவாமியோ 'இந்த மாணவர்கள் இல்லை' என்று கூறிவிட்டார்!  அப்போது, 'அவன் மியூசிக் கல்லூரியில் படிக்கும் மாணவன்' என்று குறிப்பிட்டார்.  அதைக் கேட்டவுடன் என் அருகில் அமர்ந்திருந்த ஒரு மியூசிக் கல்லூரி மாணவனை எழுந்திருந்து சுவாமியின் அருகில் செல்லுமாறு கூறினேன்.  அவன் எழுந்த உடனேயே சுவாமி அவனை அடையாளம் கண்டு  கொண்டதுபோல்  தலையசைத்து ஒரு புன்முறுவலுடன் அவனை அருகில் அழைத்தார் .  அவனிடம், "இன்று காலையில் ஒரு மோசமான தலைவலியுடன் நீ உன் அறையில் உள்ள ஜன்னல் அருகே அமர்ந்திருந்தாய் அல்லவா?  அப்போது நீ "சுவாமி இங்கு இப்போது வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ?" என்று யோசித்தாய்!  ஆனால் நீ உன் தலையை தூக்கி ஜன்னலுக்கு வெளியே மட்டும் பார்க்கவில்லை!!  அப்போதுதான் நான் ஹாஸ்டலுக்கு வெளியே இருந்து உன்னை பார்த்துக் கொண்டிருந்தேன்!!" என்று கூறினார்!  இதன்மூலம் ஒரு மாபெரும் உண்மையை மிக எளிமையாக சுவாமி கூறிவிட்டார்! 

- இறைவன் நமக்காக எப்போதுமே காத்துக் கொண்டுதான் இருக்கிறார்!  மனிதன் தன்னை சற்றே உயர்த்திக் கொள்ள வேண்டும்.  அந்த முயற்சியை அவன் எடுத்தால் அவனால் இறைவனை உணர முடியும்!

ஆதாரம்:  வித்யுல்லேகா- 2008 என்ற  முன்னாள் மாணவர்கள் எழுதிய  பதிவுகளின் தொகுப்பிலிருந்து.


📝 நிகழ்வு 281:

ஆறு வயதான ஒரு குழந்தைக்கு நாங்கள் அறுவை சிகிச்சை செய்து முடித்திருந்தோம்.  அந்தச் சிறுவன்  பிறகு தீவிர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் இருந்தான்.  சுவாமியின் பொன்மொழிகள் எழுதப்பட்டிருக்கும் அவரது போட்டோக்களை நாங்கள் அங்கு வரும் நோயாளிகளுக்கு கொடுப்பது வழக்கம்.  அப்போது அவர்களிடம்,  "சுவாமியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அவர் யார்?" என்ற கேள்விகளைக் கேட்போம்.  அப்போது இந்த ஆறு வயது சிறுவன் அந்த போட்டோவை மிகுந்த ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.  அவரிடம் சென்று நாங்கள் சுவாமியைப் பற்றி கேட்டபோது,  அவன் சிரித்துக்கொண்டே, "இத்தகைய முடி உடைய இவர்  தினமும் எங்களைப் பார்க்கும் வரும்போது,  என்னிடம் வந்து 'நீ நலமாக உள்ளாயா?' என்று கேட்பார்" என்று  கூறினான்!  

இந்த பதில் எங்களுக்கு  ஒரு உண்மையை வெளிச்சமிட்டுக் காட்டியது!!  பகவான் எங்களுடனே இருந்துகொண்டு  தன்னிடம் வந்த நோயாளிகளை அவர் தான் காப்பாற்றி வருகிறார்!!  தூய்மையான இதயத்தைக் கொண்ட ஒரு  சிறுவனால் சுவாமியை பார்க்க முடிந்தது. ஆனால்  வயதான எங்களுக்கு அது முடியவில்லை!

ஆதாரம்:  ஸ்ரீ சத்ய சாய் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருக்கும்  டாக்டர். நீலம் பிபின் சந்திர தேசாய்  அவர்கள்  சனாதன சாரதி-  பிப்ரவரி 2021  இதழில் எழுதிய பதிவு.


📝 நிகழ்வு 282:

5 வயது ஆன சிறுவன் ஒருவனது எடை வெறும் 5 Kg ஆக இருந்தது. அவன் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தான். இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவு மிகக் குறைவாக இருந்ததால் அவனது கைகளும் கால்களும், நீல நிறத்தில் காணப்பட்டன. ஆகையால் அவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆயினும் அவனுக்கு மேற்கொண்டு ஒரு சிக்கல் ஏற்பட்டது. நுரையீரலை மூடிக்கொண்டிருக்கும் திசுப் பையினுள் திரவம் சேர்ந்து கொண்டு இருந்தது. மிகச்சிறந்த முயற்சிகளை நாங்கள் எடுத்த பின்னரும் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆகையால் நாங்கள் கவலையுற்றோம். நான் சுவாமியின் தரிசனத்துக்கு சென்றிருந்தபோது சுவாமி எங்களிடம் வந்து மருத்துவமனை பற்றியும் அங்கிருக்கும் நோயாளிகளைப் பற்றியும் விசாரித்தார். நான் உடனே அந்தப் பையனைப் பற்றி கூறினேன். நான் கூறியது அனைத்தையும் சுவாமி மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்ட பின்னர் அவனுக்காக விபூதியை வரவழைத்து என்னிடம் கொடுத்தார். நான் உடனே அதை எடுத்துக்கொண்டு சென்று அந்த சிறுவனை சாப்பிடச் செய்தேன். மேற்கொண்டு என்ன நடந்தது என்று நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சில நாட்களிலேயே அவன் பூரண குணம் பெற்று வீடு திரும்பினான். மூன்று மாதங்களுக்குப் பின்னர், மருத்துவமனையில் உள்ள தாழ்வாரத்தில் என்னை நோக்கி ஒரு சிறுவன் ஓடி வருவதைக் கண்டேன். அப்போது அந்த சிறுவனை என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. ஆனால் அவருடைய தாய் என் அருகில் வந்தபோது , மேலே கூறப்பட்ட சிறுவன் தான் என்று நான் உணர்ந்தேன்! முன்பு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை வந்திருந்தபோது அவன் நடக்கமுடியாமல் இருந்ததால் அவனது தாய் அவனை தன் தோள்களில் சுமந்து கொண்டு இருந்தாள்! ஆனால் இப்போது அவன் உடல்நலம் பெற்று பூரண ஆரோக்கியத்துடன் இருந்தான்! சுவாமியின் மகிமையை என்னவென்று சொல்வது!!

 ஆதாரம்: ஸ்ரீ சத்ய சாய் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் டாக்டர். நீலம் பிபின் சந்திர தேசாய் அவர்கள் சனாதன சாரதி- பிப்ரவரி 2021 இதழில் எழுதிய பதிவு.


📝 நிகழ்வு 283:

பத்ரிநாத்துக்கு அருகே பிரம்ம கபாலம் என்ற ஒரு இடம் உள்ளது. அது ஒரு பனிப்பாறையின் அடிப் பகுதிக்கு அருகே உள்ள இடம் ஆகும். அனைவரையும் அங்கே அமரவைத்து, அவரவர்களுடைய மூதாதையர்களுக்கு உரித்தான கர்மங்களை செய்யவைத்தார் சுவாமி. அப்பொழுது கொடுக்க வேண்டிய பொருள்களை அங்கு இருந்த கோயிலில் இருந்து பெற்றுக் கொண்டு அவர்கள் அவற்றை முறையாக படையல் செய்தனர். அங்கிருந்த அனைத்து ஆண்களையும் சுவாமி இந்த வழிபாட்டில் பங்கு கொள்ளச் செய்தார். ஆனால் அவர் எங்களிடம் "பெண்மணிகள் யாரும் இதனை செய்ய வேண்டாம் , உங்களுக்காக நான் செய்கிறேன்!" என்றார்! 

 அங்கிருந்து பல நூறு மீட்டர்கள் அடியில் கங்கை நதியானது அலகனந்தா என்ற பெயரில் ஓடிக்கொண்டிருக்கிறது. அவ்விடத்தில் சாலை மிக உயரத்தில் இருக்கிறது. அங்கிருந்து சுவாமி மிகவும் வேகமாக இறங்கினார். சுவாமி எங்களையும் கீழே இறங்கச் சொன்னார். நாங்கள் அனைவரும் அந்த நதியின் கரையில் வரிசையாக நின்று கொண்டோம். அங்கே சில சடங்குகளை செய்வதற்காக சுவாமி ஒரு பாத்திரத்தை வாங்கி பெற்றுக்கொண்டு கங்கையிலிருந்து நீரை அள்ளினார். அப்போது அவர், "இங்கு யாராவது ஒருவர் எள் விதைகள் கொண்டு வந்து இருக்கிறீர்களா?" என்று கேட்டார். எள் விதைகளை கொண்டு வரவேண்டும் என்று யாருக்குத் தெரியும்? அனைவரும் அமைதியாக இருந்தோம். அந்தக் கணமே, அவர் தம் கையில் வைத்திருந்த பாத்திரத்தில் இருந்த கங்கை நீரில் எள் விதைகள் தோன்றி மிதக்க ஆரம்பித்தன!! தன் கையை வெகு வேகமாக சுழற்றி ஒரு பெரிய விபூதி கட்டியை வரவழைத்தார் சுவாமி! அதனை நீரில் கரைத்து எங்கள் கைகளில் ஊற்றினார்! அப்போது அவர், "இனிமேல் உங்களுக்கு முன்னால் உள்ள ஏழு தலைமுறைகளுக்கும் உங்களுக்கு பின் வரப்போகும் ஏழு தலைமுறைகளுக்கும் எந்த வித சடங்கும் செய்யத் தேவையில்லை!" என்று அறிவித்தார்!!

ஆதாரம்: டாக்டர். கோடேடி சரஸ்வதி என்ற நீண்ட நாளைய பக்தர் , சனாதன சாரதி- பிப்ரவரி 2021 இதழில் எழுதிய பதிவு.


📝 நிகழ்வு 284:

1980இல் அனந்தபூர் கல்லூரியில் பிகாம் வகுப்பில் நான் படித்துக் கொண்டிருந்தபோது இந்த நிகழ்வு நடந்தது. ஒருமுறை நான் நோய்வாய்ப்பட்டிருந்த போது ஹாஸ்டல் வார்டனின் பரிந்துரையின்படி சிகிச்சைக்காக என் சொந்த ஊரான மும்பைக்கு செல்ல முடிவெடுத்தேன். அப்போது கல்லூரியின் விடுமுறை காலமாக இருந்ததாலும் உடனே இந்த முடிவை எடுத்தாலும் பயணச்சீட்டை முன்பதிவு செய்ய முடியவில்லை. என்னுடன் குண்டக்கல் வரை பயணம் செய்த மற்றொரு மாணவி தன் தந்தையின் மூலம் அங்கிருந்து எனக்கு உதவி செய்வதாக கூறினார். குண்டக்கல் வந்து அடைந்தவுடன் அவர் இந்த வாக்குறுதியை மறந்து விட்டு தன் தந்தையுடன் சென்று விட்டார். நான் இரவு எட்டு மணிக்கு குண்டக்கல் ரயில் நிலையத்தில் தனியாக விடப்பட்டேன்! நோயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் எனக்கு அந்த நேரத்தில் உடல் சோர்வும் மனச் சோர்வும் ஒருங்கே ஏற்பட்டது. மும்பை செல்லும் ரயில் ஏற்கனவே பிளாட்பாரத்தில் வந்து விட்டிருந்தது. அப்போது என்ன செய்வதென்று அறியாமல் நான் சுவாமியிடம் மனதாரப் பிரார்த்தித்தேன். அப்போது திடீரென்று எங்கிருந்தோ வயதான இஸ்லாமியர் ஒருவர் என் முன்னே தோன்றினார். மிகவும் தைரியமாக அவர் என் பெட்டிகளை எடுத்துக்கொண்டு தன்னைப் பின் தொடருமாறு கூறினார். அந்த நேரத்தில் எனக்கு தயக்கமோ அல்லது சந்தேகமோ தோன்றவில்லை!! அவர் என்னை அழைத்துக் கொண்டு முன்பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு பெட்டியில் என்னை அமர வைத்தார். பிறகு தனது சட்டைப் பையிலிருந்து ஒரு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை எடுத்து என் கையில் கொடுத்தார்!! அதற்கு நான் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டதற்கு அவர் என்னிடம் பின்னால் வாங்கிக் கொள்வதாக கூறி விட்டு ரயில் பெட்டியில் இருந்து கீழே இறங்கி விட்டார்! ரயிலும் மெதுவாக நகர ஆரம்பித்தது. அவர் ஜன்னல் அருகே வந்து நகர்ந்துகொண்டே "என் பெயர் காதர் என்பதை நினைவில் வைத்துக்கொள்" என்று மூன்று முறை கூறினார்! அப்போது அவரது கண்கள் மிகுந்த பிரகாசத்துடன் மிளிர்ந்தன!! நான் அவ்வாறு ஜன்னல் வழியே அவரை பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர் திடீரென மாயமாய் மறைந்து விட்டார்!!( காதர் என்ற சொல்லுக்கு அரபிக் மொழியில் எல்லாம் வல்ல இறைவன் என்று பொருளாம்!) அந்தக் கணத்தில் விவரிக்க முடியாத ஒரு இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன நான், அப்போதுதான் "நம் சுவாமி தான் என்னுடைய அந்த இக்கட்டான நிலைமையில் ஒரு சுமை தூக்கும் தொழிலாளி போல் என் கண்முன்னே தோன்றி எனக்கு உதவி செய்துள்ளார்!" என்பதை உணர்ந்தேன்! சிறிது நேரத்திற்கு பிறகு டிக்கெட் பரிசோதகர் என்னிடம் வந்து எனது டிக்கெட்டை பரிசோதித்துவிட்டு எனக்கு கீழ் படுக்கையை உறுதி செய்துவிட்டு சென்றார்!! 

 "எத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் இருந்தும் நம்மை காப்பாற்றுவதற்காக நம் சுவாமி எப்போதும் காத்திருக்கிறார் " என்பதுதான் நாம் எப்போதும் நம் நினைவில் முழு நம்பிக்கையுடன் வைத்திருக்க வேண்டிய உண்மை ஆகும்!!

ஆதாரம்: முன்னாள் மாணவி சுஜாதா ரவீந்திரன் மேனன் அவர்கள், ஏப்ரல் 2021 சனாதன சாரதி இதழில் எழுதி இருந்த பதிவு.


📝 நிகழ்வு 285:

மாண்டியாவில் உள்ள ஒரு சர்க்கரை ஆலையில் பாதுகாவலராக பணிசெய்யும் ஒருவரது மனைவி சுவாமி பக்தையாக மாறினாள். அங்கு நடக்கும் பஜனை நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டாள். ஒருநாள் சுவாமி அவளது கனவில் தோன்றி, வியாழக்கிழமை தோறும் அவளது வீட்டிலேயே பஜனை செய்யும் படி பணித்தார். அதன் போலவே ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை தோறும் அவளது வீட்டில் பஜனை நிகழ்ச்சியை நடத்த லானார். ஆனால் அங்கு வரும் பக்தர்களுக்கு தன்னால் எந்த ஒரு பிரசாதமும் கொடுக்க முடியவில்லையே என்று கவலை கொண்டாள். திடீரென்று ஒரு நாள் அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. சர்க்கரை ஆலையில் கீழே சிந்திக் கிடக்கும் சர்க்கரையை எடுத்துக் கொண்டு வருமாறு தன் கணவரிடம் கூறினார். அவரது கணவர், ஆலையின் நிர்வாகியிடம் சென்று, அவரது அனுமதியை நாடினார். உடனே அந்த நிர்வாகி கோபம் கொண்டு இவரைத் திட்டிவிட்டு, அவர் பாபா மீது கொண்டுள்ள 'பைத்திய'த்தை விட்டுவிடும்படி கூறினார். இதனால் மிகவும் மனமுடைந்த அந்த காவலாளி தன் வீட்டிற்கு வந்து சுவாமியின் படத்தின் முன்னால் நின்று வேதனையுடன் அழுதார். இவரது மனக்குமுறல் சுவாமியின் காதுகளில் விழுந்தது!! அடுத்துவந்த வியாழக்கிழமையில் நடந்த பஜனையின் போது சுவாமியின் படத்திலிருந்து சர்க்கரை கொட்ட ஆரம்பித்தது!! ஒவ்வொரு வியாழக்கிழமையும் இந்த அற்புதம் தொடர்ந்து நிகழ்ந்தது! இதனால் அவரது சிறிய வீட்டில் பஜனையின் போது கூட்டம் நிரம்பி வழிந்தது! இதனைப் பற்றி அறிந்தவுடன் ஆலையின் முதலாளியும் அந்த நிர்வாகியும் அவரது வீட்டிற்கு வந்து தன் கண்களால் நேராக அந்த அற்புதத்தைக் கண்டு களித்தனர்!! இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்கள், அந்த சர்க்கரை ஆலையின் மதில் சுவர்களுக்கு உள்ளேயே காவலாளிக்கு ஒரு தனி வீட்டை அமைத்துக் கொடுத்தனர்!! "தான் பிரசாந்தி நிலையத்திற்கு வர வேண்டும் , அதற்கு சுவாமி உதவ வேண்டும்"என்று அவர் பிரார்த்தித்துக் கொண்டார்! உடனே அவரது வீட்டில் அளவுக்கதிகமாக மேலும் சர்க்கரை கொட்ட ஆரம்பித்தது! பக்தர்களுக்கு எல்லாம் கொடுத்தது போக மீதம் இருந்த அரை மூட்டை சர்க்கரையை ஒரு குரு பூர்ணிமாவின் போது பிரசாந்தி நிலையத்திற்குக் கொண்டு வந்து கொடுத்தார் அந்த பாக்கியவான்

ஆதாரம்: "ரேடியோ சாய்" இல் வெளிவந்த பதிவு.


 📝 நிகழ்வு 286:

இலங்கையைச் சேர்ந்த மாணவர்  ஒருவர்  புட்டபர்த்தியில் பட்டப்படிப்பு முடித்த பின்பு  தன் நாட்டிற்குத் திரும்பிச் செல்வதற்காக  சுவாமியினுடைய அனுமதிக்காக காத்திருந்தார். அவர் ஒருநாள் போர்டிகோவில் சுவாமியிடம் கேட்டபோது,  சுவாமி மிகவும் சாதாரணமாக, "இங்கேயே இரு, போகாதே!" என்று இரு வார்த்தைகளில் பதில் கூறிவிட்டு நகர்ந்து விட்டார்! அந்த மாணவருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை; அங்கு எத்தனை நாள் தங்கி இருக்க வேண்டும்,  செல்ல வேண்டாம் என்று எதற்காக கூறினார்- போன்ற பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை. சுவாமி ஏதாவது மேற்கொண்டு சொல்வாரா என்ற எதிர்பார்ப்புடன்  அவர் காத்துக் கிடந்தார்.  நாட்கள் வாரங்களாயின; வாரங்கள் மாதங்கள் ஆயின!  சுவாமியிடம் இருந்து எந்த அனுமதியும் வரவில்லை.  இவ்வாறாக ஒரு வருடம் கழிந்தது. ஸ்வாமி அந்த மாணவரிடம் இத்தனை நாட்களில் எந்த ஒரு வார்த்தையும் பேசவில்லை.  திடீரென்று ஒருநாள் சுவாமி இந்த மாணவரைப் பார்த்து, "இங்கே நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"  என்று கேட்டார்!  அதற்கு அந்த மாணவர், "சுவாமி நீங்கள் என்னை காத்திருக்கச்  சொன்னீர்கள்!  அதையே செய்து கொண்டிருக்கிறேன்!" என்று  பதிலளித்தார். இந்த பதிலைக் கேட்டவுடன் சுவாமி அதிருப்தி அடைந்ததை போல காணப்பட்டார். உடனே அவர்,  "இனியும் காலத்தை வீணடிப்பதை நிறுத்து!  ஊருக்கு சென்று ஒரு வேலையை தேடு!  தாய் தந்தையருக்கு சேவை செய்து அவர்களை திருப்திப்படுத்து!" என்று கட்டளையிட்டார்!  அந்த மாணவரும் அவ்வாறே செய்தார்.  

காலம் கடந்து சென்றது. 15 வருடங்களுக்குப் பின்னர் அவர் ஒரு கைரேகை நிபுணரை சந்தித்தார்.  அந்த நிபுணரும்  இவரது கைரேகைகளை மிகவும் ஆழமாக சோதித்து விட்டு ,  ஒரு குறிப்பிட்ட வருடத்தை சொல்லி, "இந்த வருடத்தில் நீ  எங்கு இருந்தாய்? அங்கே என்ன செய்து கொண்டிருந்தாய்?"  என்று  கேட்டார்.  அதற்கு அந்த  மாணவர், "நான்,  பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் கட்டளைக்கிணங்க, புட்டபர்த்தியில் தங்கியிருந்தேன்!" என்று பதிலளித்தார்!  இந்த பதிலைக் கேட்ட அந்த கைரேகை நிபுணர் அதிர்ச்சி அடைந்தார்!  அவர் உடனே  பணிவும் வணக்கமும் கலந்த ஒரு  குரலில் , "புட்டபர்த்தியில் வாழும் அவருக்கு நான் என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!  மேற்குறிப்பிட்ட வருடம் அவரது  இடத்தில் உன்னைத் தங்க வைத்து  உன் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார்!! அவர் மட்டும் உன்னை காத்து அருள வில்லை என்றால்  அந்த வருடமே நீ இறந்திருக்க வேண்டும்!!!"  என்று கூறினார்.

ஆதாரம்:  ஸ்ரீ சத்ய சாய் இன்ஸ்டிடியூட்டில் படித்த ஒரு  முன்னாள் மாணவரின் நாட்குறிப்பிலிருந்து.


 📝 நிகழ்வு 287:


ஒரு ஐந்து வயது குழந்தையின்  இதயத்தில், சரிவர இயங்காத வால்வு,  இரண்டு துளைகள், ஆகிய சிக்கல்கள் அவன் பிறந்தது முதல் இருந்துவந்தன.  அதற்காக நான் அறுவை சிகிச்சை செய்து முடித்து இருந்தேன். இரண்டு துளைகளையும் மூடி விட்டேன்.  வால்வையும் சரி செய்துவிட்டேன்.  ஆனால் இவற்றை நான் திருப்தியாக செய்யவில்லை என்று எனக்குத் தோன்றியதால்,  அவற்றை கலைத்துவிட்டு  முழு அறுவை சிகிச்சையையும் மறுபடியும் மேற்கொண்டு  முடித்தேன். அதிக நேரம் எடுத்துக் கொண்டாலும் இம்முறை அனைத்தும் சிறப்பாக நடந்தேறியது .  குழந்தையின் உடல் நலத்தில் மிகுந்த முன்னேற்றமும் சீக்கிரமாகவே தெரிந்தது.  மறுநாள் நான் சுவாமியின் தரிசனத்திற்கு சென்றிருந்தபோது ,  சுவாமி என் அருகில் வந்து, "நேற்று  ஒரு சின்ன குழந்தைக்கு  மிகவும் சிக்கலான ஒரு அறுவை சிகிச்சையை நீ மேற்கொண்டு செய்து முடித்தாய். முதலில் உனக்கு திருப்தி ஏற்படவில்லை.  ஆகவே நீ இரண்டாவது முறையாக அந்த அறுவை சிகிச்சையை  செய்தாய்.  பிறகு அனைத்தும் நல்லபடியாக முடிந்தது!"  என்று கூறினார்!  எப்பேர்ப்பட்ட வெளிப்பாடு!  யார் இவரிடம்  கூறியிருக்க முடியும்?  இவ்வாறு சுவாமி,  "நான் எப்பொழுதும் உங்களுடனேயே இருக்கின்றேன்!"  என்பதை நிரூபித்து காட்டினார்!

ஆதாரம்:  ஸ்ரீ சத்ய சாய் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருக்கும்  டாக்டர். நீலம் பிபின் சந்திர தேசாய்  அவர்கள்  சனாதன சாரதி-  பிப்ரவரி 2021  இதழில் எழுதிய பதிவு.


 📝 நிகழ்வு 288:

சுவாமியின் அறிவுறுத்தலின்படி நாங்கள்  உகாண்டாவில் இருந்து கிளம்புவதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தோம். எனது பெற்றோர்களையும் அதற்கான முயற்சிகளில் ஈடுபடும்படி சொல்வதற்காக நான் மசாகாவிலிருந்து கம்பாலாவிற்கு என் காரில் சென்று கொண்டிருந்தேன். வழியிலே ஒரு மிலிட்டரி செக் போஸ்டை எதிர்கொண்டேன். அங்கிருந்த ஆபீஸர் ஒருவர் என்னிடம் வந்து என் காரில் ஆயுதங்கள் ஏதாவது இருக்கின்றனவா என்று வினவினார்.  மேலும் கம்பாலாவிற்கு நான் எதற்காக சென்று கொண்டிருக்கிறேன் என்றும் கேட்டார்.  அதற்கான விடைகளை நான் அளித்துவிட்டு என்னை அனுமதிக்குமாறு கேட்டேன்.  ஆனால்  அதற்கு மாறாக அவர் என்னை காரில் இருந்து கீழே இறங்கும்படி செய்து  என் நெஞ்சில் ஒரு துப்பாக்கியை வைத்தார்.  சாலையின் பக்கத்தில் இருந்த ஒரு புதரின் அருகே என்னை நிற்கும்படி கூறினார்.  அதே நொடியில் அவ்வழியாக டாக்ஸியை ஓட்டிச் சென்ற,  என்னை அறிந்த ஒருவர் உடனே தன் காரை நிறுத்திவிட்டு,  அருகில் வந்து அந்த ஆபீஸரிடம் என்னை விட்டு விடும்படி மன்றாடினார்.  ஆனால் அந்த ஆபீஸர் அவரது வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவில்லை.  மேலும்,  அங்கிருந்து செல்லவில்லை என்றால் அவரையும் சுட்டு   விடப்போவதாக பயமுறுத்தினார்.  ஆகவே அவரும் வேறு வழி இல்லாமல்  அங்கிருந்து கிளம்பி விட்டார். அந்த ஆபீஸர் என் நெஞ்சின் மீது வைத்திருந்த துப்பாக்கியை எடுக்காமலேயே, ' உன் இறுதி ஆசை என்ன?' என்று கேட்டார்." மசாகாவில் இருக்கும் என் குடும்பத்தினரிடம் நான் சென்று விடுகிறேன் ,என்னை விட்டு விடுங்கள்" என்று எவ்வளவு கெஞ்சியும் அவர் கேட்கவில்லை.  மாறாக அவர் எனக்கு அவரிடமிருந்து ஒரு சிகரெட்டை கொடுத்தார்.  அதற்கு "நான் புகை பிடிப்பதில்லை "என்று பதிலளித்தேன்.  உடனே அவர், "உனக்கு இரண்டு நிமிடம் தருகிறேன்: இறுதியாக நீ இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்" என்று கூறினார்! அந்த நேரத்தில் நான் என் பாக்கெட்டுக்குள் கைவிட்டு சுவாமி எனக்கு கொடுத்திருந்த விசிட்டிங் கார்டை எடுத்தேன்.
  அப்போது சுவாமி, "நீ எங்கு இருந்தாலும் இந்த விசிட்டிங் கார்டை உன் கைவசம் வைத்திரு.  மறந்து கூட பூஜை அறையில் வைத்து விடாதே!" என்று முன்பு எனக்கு அவர் அறிவுறுத்தியது என் ஞாபகத்துக்கு வந்தது.  மிகவும் பயந்து போய் அந்த விசிட்டிங் கார்டை என் நெஞ்சிலும் தலையிலும் வைத்து சுவாமியிடம் வேண்டிக்கொண்டேன்.  இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு அந்த ஆபீஸர் ,'இனி உன்னுடைய வேண்டுதல் நேரம் முடிந்துவிட்டது' என்று கூறினார்!  ஆனால் என்னை சுடுவதற்கு முன்னால் திடீரென்று,  நான் யாரிடம் வேண்டிக் கொண்டிருந்தேன் என்று அறிவதற்கான  ஆவலால் அந்த ஆபீஸர் உந்தப்பட்டார்!  நான் அவரிடம் அந்த விசிட்டிங் கார்டை காண்பித்தேன்.  அதில் "பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா, புட்டபர்த்தி, பெனுகொண்டா தாலுகா, அனந்தபுரம் டிஸ்ட்ரிக்ட்" என்று எழுதி இருந்தது. அவரது போட்டோவும் அதில் இருந்தது. அதைப்பார்த்து முடித்தவுடன் அந்த ஆபீஸர்,  கார்டை என் கையில் கொடுத்துவிட்டு, "போ!" என்றார்!! ஏதோ ஒன்று அவர் என்னை சுடுவதைத் தடுத்து நிறுத்தியது!

பிறகு 2004ஆம் வருடம் நான் பிருந்தாவனத்தில்  இருந்தபோது சுவாமி என்னை ஒருநாள் அழைத்து அங்கு  இருந்த மாணவர்களிடம் இந்த நிகழ்வைப் பற்றி பேசுமாறு பணித்தார்.  அப்போது அவர்,  "நான்தான் அந்த மிலிட்டரி ஆபீஸரின் மனதை மாற்றி உன்னை விட்டுவிடும்படி செய்தேன்!" என்று அறிவித்தார்!!

ஆதாரம்:  டாக்டர். கிஷன் N. காதியா  என்ற பக்தர் ஏப்ரல் 2021 சனாதன சாரதி இதழில் எழுதியுள்ள பதிவு.


 📝 நிகழ்வு 289:

ஒருமுறை எனது மகள் சுவாமியிடம் ஒரு கேள்வியை கேட்டாள்:" நீங்கள் எங்கள் குடும்பத்திற்கு எவ்வளவோ நன்மைகள் செய்து இருக்கிறீர்கள்.  இதே அனுகிரகம் எங்களுக்கு எப்போதும் வேண்டும்.  இதை நாங்கள் எவ்வாறு தொடர்ந்து பெற முடியும்?"

 அதற்கு சுவாமி, "இங்கே பார்!  புட்டப்பர்த்திக்கு வருவதாலோ,  என் தரிசனத்தைப் பெறுவதாலோ என்னுடைய அருளை நீங்கள் பெறுவதில்லை!  ஆனால் நீங்கள் என்னுடைய அறிவுரைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு   வாழ்க்கையில் கடைப் பிடித்தீர்களானால்  சம்பூர்ண கிருபையைப் பெறுவீர்கள்!  என்னைப் பற்றிக் கொள்ளாதீர்கள்! என்னுடைய வழிகாட்டுதல்களை பற்றிக் கொள்ளுங்கள்!!" என்று திட்டவட்டமாக பதிலளித்தார்.

ஆதாரம்:  திருமதி ராணி சுப்பிரமணியன் அவர்கள்  சனாதன சாரதி ஆகஸ்ட் 2021 இதழில்  எழுதிய பதிவு.

 

 📝 நிகழ்வு 290:

கொடைக்கானலில் இருந்தபோது சுவாமி ஒரு நாள்,  நீண்ட நேர நிகழ்ச்சிக்குப் பிறகு களைத்துப் போனது போல காணப்பட்டார்.  அப்போது அருகில் இருந்த ஒரு பக்தர்,  "சுவாமி! இன்று முழுவதும் உங்களுக்கு ஓய்வே கிடைக்கவில்லை! இதை பார்க்க எனக்கு வருத்தமாக இருக்கிறது" என்றார்.  அதற்கு சுவாமி, "நான் ஓய்வை விரும்புவதில்லை;  எனக்கு ஓய்வு தேவையுமில்லை.  ஏனென்றால் நான் ஒருபோதும் களைத்துப் போவதில்லை!" என்றார்!  எப்படிப்பட்ட பேருண்மை இது!!  நினைத்துப் பாருங்கள், கடவுள் மட்டும் ஓய்வெடுக்க  முடிவெடுத்துவிட்டால் நம் கதி என்ன ஆவது?!  இந்த நேரத்தில் எனக்கு மற்றொரு நிகழ்வு ஞாபகத்திற்கு வருகிறது.  ஒருவர் சுவாமியிடம், "சுவாமி!  நீங்கள் எதுவுமே சரியாக சாப்பிடுவதில்லை!  ஒரு தேக்கரண்டி அளவு கூட எடுத்துக் கொள்வதில்லை! ஆனால் எங்களுடைய உணவுத் தட்டுகளோ  நிரம்பி வழிகின்றன!  நாங்கள் நிறைய உணவு உட்கொண்டாலும்  அவ்வப்போது பலவீனம் அடைகின்றோம்!" என்று  கூறினார்.  அதற்கு சுவாமி, "உங்களுக்கு உணவு மிகவும் அவசியம்.  உணவின் மூலம் கிடைக்கும் சக்தியை வைத்துக்கொண்டு நீங்கள் வேலை செய்கிறீர்கள்.  ஆனால் உணவின் மூலம் கிடைக்கும் சக்தி எனக்கு தேவையில்லை. ஏனென்றால் அந்த சக்தியே நான்தான்!!" என்று பறைசாற்றினார்!! இங்கே நாம் அவரது தெய்வத்துவத்தை உணர்கின்றோம்!!

 ஆதாரம்:  திரு. டாக்டர். அனில் குமார் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள "  நெக்டார்  ஆஃப் டிவைன் மெலடீஸ்" என்ற  புத்தகத்திலிருந்து.


 📝 நிகழ்வு 291:

 1973 ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள் அதிகாலையில் எனக்கு ஒரு கனவு வந்தது:  சுவாமி என் அருகில் வந்து "உனக்கு என்ன நடக்கப்போகிறது, தெரியுமா?" என்று கேட்டார்.  பதில் ஒன்றும் கூறாமல் நான் அமைதியாக இருந்தேன்.  உடனே சுவாமி, " நான் ,  உனக்கு இவரை மணமுடித்து வைப்பேன்"  என்று சொல்லிக்கொண்டே,  ஹார்மோனியம் வாசித்துக் கொண்டிருக்கும் திரு. ராஜா ரெட்டியின் போட்டோவை எனக்கு காண்பித்தார்!  மேலும் அவர் தொடர்ந்து, "வைட்ஃபீல்டில் மணி காஞ்சன முகூர்த்தத்தில்  உன் திருமணத்தை நடத்துவேன்; இதை நீ ஞாபகம் வைத்துக்கொள்!"  என்றார்.  அதைக்கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன்.  மறுநாள் காலையில் நான் எழுந்தவுடன் என் தாயிடம் இதைப்பற்றி கூறினேன்.  அவர் உடனே ,"இதை நீ யாரிடமும் சொல்ல வேண்டாம்; உனக்குள்ளேயே வைத்துக்கொள்" என்று கூறினார்.   பிறகு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் என் தந்தைக்கு சுவாமியிடம் இருந்து ஒரு செய்தி வந்தது: " தீக்ஷித்!  டிசம்பர் 10ஆம் தேதி,  நீ உன் குடும்பத்துடன்  வைட் ஃபீல்டுக்கு வா!" என்று  அதில் கூறியிருந்தது.  நாட்கள் மிகக் குறைவாக இருந்ததால் நாங்கள் உடனே எங்கள் காரில் புறப்பட்டு  டிசம்பர் 10ஆம் தேதி வைட் ஃபீல்டுக்கு வந்து சேர்ந்தோம்.  எங்களைப் பார்த்த ஸ்வாமி அன்று  எங்களிடம் ஒன்றும் கூறவில்லை.  மறுநாள் காலையில் எங்களை பங்களாவுக்குள் அழைத்துச் சென்றார்.  அப்போது, "நாளை  உனது திருமணத்தை முடித்து வைக்கிறேன்" என்று கூறினார்.  அதற்கு சற்று முன்னால் சுவாமி , திரு. ராஜா ரெட்டியும் அவரது அம்மாவும் இருந்த அறைக்குள் என்னை அழைத்துச் சென்று, "  அம்மணியம்மா! இவள் தான் உன்னுடைய மருமகள்!  எப்படி இருக்கிறாள்?"  என்று கேட்டார்!  அதற்கு அவர், " சுவாமி எனக்கு இவளை மிகவும் பிடித்திருக்கிறது.  ஆனால் இவளிடம் நான் எப்படி பேச முடியும்? அவளுக்கு  தெலுங்கு மொழி தெரியாதே? நான் என்ன செய்வது? "  என்று கேட்டார்.  சுவாமி உடனே என் அருகில் வந்து என் தலையின் மீது கையை வைத்து, "  இப்போது தெலுங்கு பேசத் தெரியும், ஏன்? ரஷ்யன் கூட பேச தெரியும்!"என்று  கூறினார்!  நாங்கள் வெளியே வந்தபோது சுவாமி என் தந்தையிடம், "  இது என்னுடைய வெகு நாளைய சங்கல்பம்:  இவள் ராஜா ரெட்டியை மணம் செய்துகொள்ள வேண்டும் என்பது!  உனக்கு பரவாயில்லையா?"என்று  கேட்டார்!

  அதற்கு என் தந்தை," சுவாமி நீங்கள் கூறிய படியே ஆகட்டும்!  சுவாமியினுடைய விருப்பம்! சுவாமியினுடைய சங்கல்பம்!"என்று  பதிலளித்தார்.  அவர் கூறியதைப் போல மறுநாள் காலையில் எங்களது திருமணத்தை நடத்தி வைத்தார்.  அப்போது அவர், "  இதுதான் இவளுடைய உண்மையான திருமணம்;  ஆனால் உங்களுடைய பந்து மித்திரர் களுக்காக  புட்டபர்த்தியில் 19ஆம் தேதி மற்றொருமுறை திருமணத்தை விமரிசையாக நான் நடத்தி  வைக்கிறேன்!"  என்றார்!

 ஆதாரம்:  திருமதி. ஜ்யோத்ஸ்னா ரெட்டி  அவர்கள்  சனாதன சாரதி மார்ச் 2022 இதழில் எழுதியுள்ள பதிவு.

 

📝 நிகழ்வு 292:

டிசம்பர் 12, 1973  அன்று சுவாமி எனக்கும் திரு ராஜா ரெட்டி அவர்களுக்கும்   வைட் ஃபீல்டில் திருமணம் நடத்தி முடித்தார்.  அந்த நிகழ்ச்சியின் முடிவில் சுவாமி எனக்கு சில புடவைகளையும் நகைகளையும் அன்பளிப்பாகக் கொடுத்து *"சுவாமி உனக்கு இவற்றை தருகிறேன்"* என்று கூறினார்.  நாங்கள் உணவருந்திய பிறகு  சுவாமி என் தந்தையிடம், *"ராகு காலத்தில் ஊருக்கு கிளம்ப வேண்டாம்"* என்று கூறினார்.  அப்போது ராகு காலம் குறித்து எங்கள் யாருக்கும் ஒன்றும் தெரியாது. 

  அறியாமையின் காரணமாக  எனது பெற்றோர் ராகுகாலத்தில் மும்பைக்கு கிளம்பினர்.  பெலகாவி'க்கு அருகில் எங்கள் கார் நிறுத்தப்பட்டது.  அன்றைய காலகட்டத்தில் கர்நாடகாவிற்கும் மகாராஷ்டிரா விற்கும் இடையே சில பூசல்கள் இருந்து வந்தன.  அதன் உச்ச கட்டத்தில் மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.   பெலகாவி யின் எல்லையில்  சாலைகளில்  போக்குவரத்து நிறுத்தப்பட்டது. எங்களை முன்னுக்கு செல்ல அனுமதிக்கவில்லை.  மேலும் கார்களை நோக்கி கல்லெறிந்து கொண்டிருந்தனர்.  என் தந்தையை காரிலிருந்து கீழே இறங்கச் சொல்லி காரின் சாவியை பிடுங்கிக் கொண்டனர்.  திடீரென்று பருமனான ஒரு மாணவன்  கூட்டத்திற்கு இடையிலிருந்து வந்து, *"இவர் என் தந்தையைப் போன்றவர்,  இவர் என் தாயைப் போன்றவர்,  இவர் எனது தமக்கை போன்றவர்.  இவர்கள் அனைவரும் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் ஆசிரமத்தில் இருந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.  இவளுக்கு இப்போதுதான் திருமணம் நடந்துமுடிந்தது.  இவர்களை நான் என் குடும்ப உறுப்பினர்களை போல கருதுகின்றேன்.  ஆகவே காரின் சாவியை இவர்களிடம் கொடுத்து திரும்ப கொடுத்து விடுங்கள்!"* என்று கூறினார்!  அந்தப் போராட்டக் காரர்களுடன் மேலும் பலவாறு அந்த மாணவன் பேசி எங்களுக்கு சாவியை வாங்கிக் கொடுத்தார்.  பிறகு நாங்கள் பெலகாவி ஊருக்குள் பயணமானோம்.  டிசம்பர் 17ஆம் தேதி சுவாமி எங்களை பர்த்திக்கு வரச் சொல்லி இருந்ததால் நாங்கள் எங்கள் பயணத்தை மேற்கொண்டு தொடராமல் அங்கேயே சில நாட்கள் தங்கி விட்டோம்.  நாங்கள் பர்த்திக்கு வந்தபோது சுவாமி  என் தந்தையை மாடிக்கு அழைத்து, *"தீக்ஷித் நீ எதற்காக ராகு காலத்தில் கிளம்பினாய்?  நான் உன்னை "ராகுகாலத்தில் கிளம்பாதே" என்று சொல்லி இருந்தேன்"* என்று கூறினார்.  அதற்கு என் தந்தை, "சுவாமி! எனக்கு அப்போது ராகுகாலம் என்று தெரியாது. ஆகவே என்னை மன்னித்து விடுங்கள்" என்றார்.  அப்போது சுவாமி, *"நான்தான் அந்த மாணவர் உருவத்தில் வந்தேன்!  அதனால்தான் நீங்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டீர்கள்.  இல்லையெனில் உங்களுக்கு என்ன நடந்திருக்கும்  என்று யோசித்துப் பார்!  இந்தத் தவறை மீண்டும் செய்யாதே!"* என்று உரைத்தார்!  அப்போது என் தந்தை சுவாமியிடம் மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

ஆதாரம்:  திருமதி. ஜ்யோத்ஸ்னா ரெட்டி  அவர்கள்  சனாதன சாரதி மார்ச் 2022 இதழில் எழுதியுள்ள பதிவு.


நிகழ்வு 293:

என்னுடைய மாமாவாகிய டாக்டர் பகவந்தம் அவர்களின் வீட்டிற்கு சுவாமி வந்திருந்தபோது முதல் முறையாக என் தந்தையார் சுவாமியிடம் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார். அப்போது சுவாமியைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. இந்த காலகட்டத்தில் நான் சென்னையில் படித்துக் கொண்டிருந்தேன்.  பிறகு ஒரு நாள் என் தந்தை தான் புட்டபர்த்தி செல்லப் போவதாக இருப்பதால் என்னையும் வருமாறு அழைத்திருந்தார். 1959 சிவராத்திரி தினத்தன்று நாங்கள்  புட்டப்பர்த்திக்கு   கோலாரில் இருந்து காரில் புறப்பட்டு சென்றோம். மதியம் 12 மணிக்கு பிரசாந்தி நிலையத்தை சென்று அடைந்தோம். அன்று மாலை பஜனை மற்றும் சொற்பொழிவுக்காக நாங்கள் அனைவரும் ஓரிடத்தில் குழுமி இருந்தோம். பஜனை நடந்துகொண்டிருந்தபோது  சுவாமி திடீரென்று  வலி வந்து  அவஸ்தைப் படுவதைப் போல காணப்பட்டார். சில நிமிடங்களில் ஒன்றன்பின் ஒன்றாக சிறிய  அளவிலான 9 சிவலிங்கங்களை தன் வாயிலிருந்து எடுத்தார்!!  அதனைப் பார்த்த நான் மிகவும் குழப்பமடைந்தேன்.  இந்த சாயிபாபா ஒரு மேஜிக் நிபுணராக இருப்பாரோ என்ற சந்தேகத்தில் ஆழ்ந்தேன்.

 மறுநாள் காலையில் சுவாமி பக்தர்களுக்கு இன்டர்வியூ அளிக்க ஆரம்பித்தார்.  முதலில் என் பெற்றோர்களை அழைத்தார்; ஆனால் என்னை அழைக்கவில்லை.  என் பெற்றோர்களிடம் அவர், என்னிடம் தனியாக பேசுவதாக கூறி இருந்தார்.  ஆகையால் அவர் என்னிடம் என்ன பேசுவாரோ என்ற குழப்பத்தில் ஆழ்ந்தேன். அவர் என்னை அழைத்தபோது, "நீ  சென்னையில் என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?" என்று கேட்டார்.  நான் பட்டப்படிப்பு படித்துக் கொண்டு இருப்பதாக அவரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர், "இல்லை, இல்லை! நீ ஒரு திரைப்பட நடிகையுடன் பல படங்களுக்கு சென்று  கொண்டு உன் நேரத்தை வீணாக்கி கொண்டிருக்கிறாய்!   ஹோட்டல்களில்  பலவகை உணவுகளை உண்டு  வயிற்றில் அல்சரை வரவழைத்துக் கொண்டிருக்கிறாய்!" என்று கூறினார்!!  இவற்றைக் கேட்டவுடன் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்!  என்னால் நம்பவே முடியவில்லை! என் உடல் நிலையைப் பற்றியும் நான் படங்களுக்கு செல்வது பற்றியும் யார் அவரிடம் கூறி இருக்க முடியும்?  நான் சென்னையில் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதைப் பற்றி  என் பெற்றோர்களுக்கும் தெரியாது!  மேற்கொண்டு, சுவாமி என்னிடம், 'உன் பெற்றோர்களை  ஊரில் விட்டுவிட்டு,  நீ இங்கே திரும்பி வரவேண்டும்!" என்றார்!  என்னை பற்றிய உண்மைகளை சுவாமி என் பெற்றோர்களிடம் கூறி இருப்பாரோ என்ற சந்தேகம் வேறு எனக்கு வலுத்தது!  என்னைப் பற்றிய உண்மைகளை அவர் கூறியிருந்ததனால் பயந்து போயிருந்த நான்,  எதனால் உந்தப் பட்டேன் என்று தெரியவில்லை ஆனால் அவர் கூறிய படியே நான் திரும்பி  வந்தேன்!

ஆதாரம்: ஸ்ரீ விலாஸ் சூரி என்ற பக்தர்,  ஜூலை 2019 சனாதன சாரதி இதழில் எழுதியுள்ள பதிவு.


 நிகழ்வு 294:

சவிதாவிற்கு நான்கு அல்லது ஐந்து வயது இருக்கும்போது ஸ்கூலிற்கு லஞ்ச் எடுத்து செல்வது என் வழக்கம். ஒரு நாள் வேலை எல்லாம் சீக்கிரம் முடிந்துவிட்டது. நான் ஸ்கூலிற்கு  போகும் முன்  கொஞ்சம் இளைப்பாறிவிட்டுப் போகலாம் என்று சற்று படுத்தேன். ஆனால் நான் நன்றாக தூங்கிவிட்டேன்.  ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து எழுந்து பார்த்தால் எப்போதோ லஞ்ச் டைம் முடிந்து விட்டிருந்தது. குழந்தை பசியில் துடித்து போய் இருப்பாள் என்ற ஆற்றாமையில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பகிர்ந்துகொள்ள சென்றேன். சற்று நேரத்திற்கெல்லாம் குழந்தை வந்து விட்டாள்.  கீழ் வீட்டு மாமி, "சவிதா! மத்தியானம் ஸ்கூலில்  சாப்பிட்டாயாம்மா?"  என்று கேட்க  என் மகள், "சாப்பிட்டேனே!" என்றாள்.  "யார் கொடுத்தா?" என்று கேட்க "அம்மா தான்" என்று பதில் வந்தது!

"கீரை மிளகு கூட்டு ரசம் எல்லாம் கொடுத்தா" என்றாள்.

 எனக்கு ஒரே ஆச்சரியம்.  அன்று எங்கள் வீட்டுச் சமையல் அதுவே! குழந்தை மேலும் தொடர்ந்தாள்: "தயிர் சாதம் தான் கொஞ்சம் மீதம் வைத்து விட்டேன். அப்புறம் அம்மா எனக்கு  காட்பரீஸ் சாக்லெட் வாங்கித் தந்தாள்" என்று காட்டினாள்.  

ஸ்கூல் பேக்கை குடைந்தால்  இரண்டு விபூதி பாக்கெட்டுகள் இருந்தன!  தன் விளையாட்டிற்கு  ஒரு தடயம் விட்டு விட்டுப் போயிருந்தார் சுவாமி! "உன் குழந்தை என் குழந்தை இல்லையா?  என் குழந்தை பட்டினி கிடப்பதை நான் பொறுப்பேனா " என்று  தாயாய் என் உருவில் வந்த சுவாமியின் கருணைக்கு  வரம்பு ஏது?

ஆதாரம்:  மீனாட்சி என்ற பக்தர், "  இறைவனுடன் இனிய அனுபவங்கள்" என்ற புத்தகத்தில்  எழுதியுள்ள பதிவு.


 📝 நிகழ்வு 295:

1974 மே மாதம் பிருந்தாவனத்தில் கோடை வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒருநாள் மதிய உணவிற்கு முன்பு எங்களது அகக் கண்களைத் திறக்கும்படியான ஒரு நிகழ்வு நடந்தது.  காலை வகுப்புகள் நடந்து முடிந்த பின்னர் நாங்கள்  பகவானுடைய வீட்டைக் கடந்து சென்று கொண்டிருந்தோம்.  அப்போது எதேச்சையாக சுவாமி முதல் மாடி வராந்தாவில் நின்று கொண்டிருப்பதை நாங்கள் பார்த்தோம்.  உடனே நாங்கள் நடப்பதை நிறுத்திவிட்டு எங்கள் கைகளை கூப்பி நமஸ்கரித்தோம்.  சுவாமி மிகவும் ஆனந்தமாக  மாணவர்களிடம் பேச ஆரம்பித்தார்.  அப்போது அவர்  ஒரு கருப்பு வெள்ளை போட்டோவை  எங்களிடம் காண்பித்து, "உங்களில் யாராவது ஒருவர் இதை கிழிக்க முடியுமா?" என்று கேட்டார். உடனே சில மாணவர்கள் தங்கள் கைகளை உயர்த்தினார்கள். ஆனால் ஆச்சரியப்படும் படியாக, ஒருவராலும் அந்த போட்டோவை கிழிக்க முடியவில்லை!  அவர்களது முகங்களில்  வருத்தம் தெரிந்தது.  சுவாமி உடனே அந்த போட்டோவை தன்னிடம் கொடுக்கும்படி  கூறினார் .  அதனை வாங்கி ஒரு நொடியில் மிக எளிதாக இரண்டு துண்டுகளாகக்  கிழித்தார்!  இப்போது அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்தோம்!  அப்போது அவர், "ஒரு செயலை செய்வதற்காக நீங்கள் முற்படும் ஒவ்வொரு நேரத்திலும்,  அந்த செயல் எவ்வளவு எளிதாக இருப்பினும்,  இறைவனிடத்தில் அவரது ஆசிகளையும் துணையையும்கோருங்கள். அப்போது அந்த செயலை நீங்கள் வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாகிறது.  அவ்வாறு நீங்கள் இறைவனிடம் வேண்டிடும்போது, நீங்கள் உங்களை இறைவனது கருவியாக மட்டும் ஏற்றுக் கொள்கிறீர்கள்;  மேலும் அந்த செயலின் விளைவுகளை  இறைவனிடத்தில் விட்டுவிடுகிறீர்கள்.  ஆனால் இதற்கு மாறாக,  உங்கள் பலத்தின் மீது,  ஆணவம் கலந்த நம்பிக்கை வைத்தீர்கள் என்றால்,  உங்கள் முயற்சி நீங்கள் நினைத்த பலனை அளிக்காமல்,  உங்களுக்கு விரக்தியை  அளிக்கக்கூடும்" என்று  கூறினார்!  இந்த நிகழ்வு எங்களுக்கு மிகப்பெரிய ஒரு படிப்பினையைக் கொடுத்தது.

ஆதாரம்:  திரு. தேபசிஸ் முகர்ஜி  என்ற பக்தர்,  அக்டோபர் 2021 சனாதன சாரதி இதழில் எழுதியுள்ள பதிவு.


 📝 நிகழ்வு 296:

புகழ்பெற்ற விஞ்ஞானியான டாக்டர்.ஃப்ராங்க் ப்ரனோஸ்கி 1978இல் பிரசாந்தி நிலையத்திற்கு வந்திருந்தபோது சுவாமி அவருக்கு இன்டர்வியூ அளித்தார். முடியும் தருவாயில் சுவாமி அவரை நோக்கி திடீரென்று, "நீ ஊருக்குப் போய் சேரும் அதே நாளில் உன் பேரன்னுக்கு ஒரு அறுவை சிகிச்சை நடக்கும். அதன்பிறகு அவன் நல்ல உடல் நலம் பெறுவான்" என்று கூறினார்! இதைக் கேட்ட அந்த விஞ்ஞானி அதிர்ந்து போனார்! அவரே தனது ஒரு வயது ஆகியிருந்த பேரன் வருந்தத்தக்க உடல்நிலை குறித்து எவ்வாறு சுவாமியிடம் கூறி அவரது ஆசிகளைப் பெறுவது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, சுவாமியே அதைப்பற்றி அவரிடம் பேசியது அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது! சில நொடிகள் கழித்து அவர் சுவாமியிடம், "பாபா, நீங்கள் சொல்வது சரியாக இருக்காது. இந்த அறுவை சிகிச்சைக்குத் தேவையான 18 மாதங்களை அவன் இன்னும் எட்டவில்லை" என்று கூறினார். அதற்கு சுவாமி, யாரும் புரிந்துகொள்ள முடியாத ஒரு புன்னகையுடன், "இல்லை, இல்லை! நீ அங்கு போய் சேரும் நாளில் கண்டிப்பாக அறுவை சிகிச்சை நடக்கும்!" என்றார். 

சுவாமி கூறியபடியே, இவர் தன் ஊர் சென்றடைந்த அதே நாளில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் மூலம் அறுவை சிகிச்சை நடந்தேறியது! பிற மருத்துவர்கள் வியக்கும்படியாக, பிறப்பிலிருந்தே இதயத்தில் இருந்த குறைபாட்டினை நீக்குவதற்காக செய்யப்பட்ட அறுவை சிகிச்சையை அந்த குழந்தை நன்றாகத் தாங்கியது! படிப்படியாக முழு ஆரோக்கியத்தையும் அடைந்தது!!

ஆதாரம்: "மிரகிள்ஸ் ஆஃப் டிவைன் லவ்", (முதல் பாகம்) என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 297:

கேரளாவைச் சேர்ந்த திரு சேது மாதவன் நாயர் என்பவர் சுவாமியின் தீவிர பக்தர் ஆவார். வட கேரளாவில் உள்ள மலை மாவட்டத்தில் இருக்கும் அவரது வீட்டில் அவர் தினந்தோறும் பஜன் நடத்திக்கொண்டிருந்தார். 

 1969 செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் நக்சலைட்டுகளிடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அபாயத்தை குறிக்கக்கூடிய தான ஒரு மண்டை ஓடு மற்றும் இரண்டு எலும்பு துண்டுகள் அடங்கிய சின்னத்துடன் கூடிய அந்தக் காகிதத்தில் "உன்னுடைய பஜனையை நிறுத்திக்கொள்! மக்களை நீ ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய்! ஏழு நாட்களுக்குள் நீ நிறுத்தாவிட்டால் உன் தலை துண்டிக்கப்படும்!" என்று இரத்தத்தில் எழுதப்பட்டிருந்தது!! பஜனையை நிறுத்துவதை அவர் விரும்பவில்லை! சுவாமியிடம் வேண்டிக் கொள்வதைத் தவிர, தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கான வேறு எந்த வழிமுறையும் அவருக்குத் தெரியவில்லை. சுவாமியை முழுமையாக நம்பினார். ஆகையால் பயமின்றி பஜனையை தொடர்ந்தார். தங்களது கடிதத்திற்கு இவர் மதிப்பு கொடுக்காததால் நக்சலைட்டுகள் மிகுந்த கோபம் கொண்டனர் போலும்! ஒருநாள் காலையில் இவரது வீட்டிற்கு சென்ற ஒருவன், திறந்திருந்த ஒரு ஜன்னலின் வழியாக, குளியலறையில் சேதுமாதவன் தன் முகம் மற்றும் கை கால்களை கழுவிக் கொண்டு இருப்பதை பார்த்தான். உடனே தன் கையில் வைத்திருந்த கூர்மையான வெட்டுக்கத்தியை இவர் மீது குறிபார்த்து வீசினான்! அதே கணத்தில், சிவப்பு- ஆரஞ்சு நிற ஒளிக்கற்றை மின்னல் வேகத்தில் இவர் கண்முன் தோன்றியது! அதே நேரத்தில், அந்த அறையின் ஒரு மூலைக்கு தான் தள்ளப்படுவதை சேதுமாதவன் உணர்ந்தார்! அப்போது அந்த ஆயுதம் குறி தவறி, கடினமான தரையில் ஒரு உலோகம் எழுப்பும் சப்தத்துடன் விழுந்தது! மேலும், யாரோ ஒருவர் சுவற்றுக்கு வெளியே ஓடிச் செல்லும் சப்தமும் கேட்டது!

 அப்போது சேது மாதவனின் மனைவியும் மற்றொரு குடும்ப நண்பரும் அருகில் இருந்த பூஜை அறையில் ஓம்காரம் செய்துகொண்டிருந்தனர் . அவர்களும் இந்த சப்தங்களை கேட்டனர். உடனே குளியலறை நோக்கி ஓடிவந்தனர். அப்போது அந்த அறையில் இறை உணர்வை ஏற்படுத்தும் படியான, விவரிக்க முடியாத ஒரு சுகந்தம் வீசியது! சேதுமாதவன் உடல்முழுவதும் விபூதி நிரம்பியிருந்தது! அந்த நக்சலைட்டு வீசிய வெட்டுக்கத்தி கீழே கிடந்தது! அந்த நேரத்தில் அங்கிருந்த மூவரின் இதயங்களிலும் சுவாமியே நிரம்பி இருந்தார்!!*

ஆதாரம்: "மிரகிள்ஸ் ஆஃப் டிவைன் லவ்", (முதல் பாகம்) என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 298:

1970 களில் காகிநாடாவைச் சேர்ந்த ஜி.கே ராவ் என்பவரின் மாமியாருக்கு சொந்தமான ஒரு ஆயிரம் ரூபாய் அவரது வீட்டில் காணாமல் போய்விட்டது. தன்னுடைய மகன் தான் அதனை திருடி இருக்க வேண்டும் என்று அந்த மாமியார் சந்தேகப்பட்டார். சுவாமியிடமே முறையிடுவதற்காக அவர் தனது மகனையும் மருமகனையும் கூட்டிக்கொண்டு புட்டப்பர்த்திக்குச் சென்றார். சுவாமியின் மீது நம்பிக்கை இல்லாததால் மகனும் தைரியமாக சென்றான். அங்கு சென்ற பிறகு ஜிகே ராவ் தனது மைத்துனனிடம், "சுவாமிக்கு அனைத்தும் தெரியும். ஆகவே நீ அந்த தவறு செய்திருந்தால் இப்பொழுதே ஒப்புக் கொள்" என்றார்! அதற்கு அவன் மிகவும் திமிராக, "அவர் அனைத்தும் அறிந்தவர் என்பதை நாமும்தான் பார்த்து விடலாமே!" என்று பதிலளித்தான். சுவாமி அவர்களை இன்டர்வியூவுக்கு அழைத்தார். தாய் எதுவும் கூறுவதற்கு முன்னரே,நேராக அவனிடம், "மகனே! உன் தவறை ஒப்புக் கொள்! நீ இன்னும் அந்தப் பணத்தை செலவழிக்காமல் வைத்திருப்பதால், வீட்டிற்குச் சென்றவுடன் உடனே அதனை உன் அம்மாவிடம் கொடுத்து விடு!" என்று அறிவுறுத்தினார்! உடனே பயத்தால் நடுங்கிய அவன், தனது தவறை ஒப்புக்கொண்டு, தன் தாயிடம் பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவதற்கு ஒப்புக்கொண்டான். ஆனால் அவனைப் பற்றி நன்கு அறிந்த அவன் தாய் சுவாமியிடம், " இவன் வீட்டிற்கு வந்தவுடன் என்ன செய்வான் என்று சொல்லமுடியாது, சுவாமி! ஆகவே இப்பொழுதே நீங்கள் அந்தப் பணத்தை வரவழைத்துக் கொடுத்து விடுங்கள்!" என்றார்! அதற்கு சுவாமி, "இல்லை! எத்தனையோ பேர் தங்களது பொருட்களை தொலைத்துக் கொண்டிருக்கின்றனர். உனக்கு நான் வரவழைத்துக் கொடுத்தேன் என்றால், மற்ற அனைவரும் என்னை முற்றுகை இடுவர்!! இதோ பார்! உன் பணம் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை! நீ போய் நன்றாக தேடு! உனக்கு கிடைக்கும்" என்று கூறிவிட்டார். பிறகு மூவரும் வீடு திரும்பினர். தாய் சந்தேகித்த படியே, மகன்," நான் ஒன்றும் உன் பணத்தை திருடவில்லை! ஆனால் அங்கே எனக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தால் நான் ஒப்புக் கொண்டேன்" என்று சொல்லிவிட்டான்! வேறு வழியில்லாமல் சுவாமி கூறியபடி, தாயும் மருமகனும் வீடெங்கிலும் எல்லா மூலை முடுக்குகளிலும் தீவிரமாக தேடினர். தேடியும் அந்தப் பணம் கிடைக்காமல் போனதால் அந்தத் தாய் வெறுப்படைந்து தன் முயற்சியை கைவிட்டு விட்டார். சுவாமியும் வரவழைத்து கொடுக்காததால் நிராசையும் அடைந்தார். சில நாட்களுக்குப் பிறகு அவரது கணவர் பூஜை அறையில் இருந்த அடுக்குப் பெட்டியின் இழுப்பறைகளை வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக திறந்து பார்த்துக் கொண்டிருந்தபோது, தொலைந்து போன நோட்டுக் கட்டு அங்கே இருந்தது! (ஆனால் அதே இடத்தில் முன்பு பார்த்தபோது பணம் ஏதும் இல்லை!) ஆகவே அந்த நோட்டு கற்றைகள் முன்பு வேறு ஏதாவது ஒரு ரகசிய இடத்தில் வைக்கப்பட்டு இருந்திருக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். ஆகவே புட்டபர்த்தியில் வரவழைத்துக் கொடுக்காமல் இருந்தாலும், தாயின் இயலாமையையும், துயரத்தையும் கண்டு மனம் கனிந்து , சுவாமியே அந்தப் பணத்தை இடம் மாற்றி விட்டார் போலும்!

 பணம் இவர்கள் கைகளுக்கு கிடைக்கும் போது மகன் வீட்டில் இல்லை. ஆகவே இதைப் பற்றி அவரிடம் எதுவும் கூறாமல் அவனை கவனித்து வந்தனர். ஒரு நாள், வீட்டின் மாடிப் படியின் கீழிருந்த சுவிட்ச் போர்டின் மேல் மூடியை அவன் கழட்டிக்கொண்டிருந்தான்! அங்கே தான் முன்பு அவன் அந்தப் பணத்தை ஒளித்திருக்கிறான்! இந்த இடத்தை தேடவேண்டும் என்று யாருக்குமே தோன்றியிருக்காது! திறந்து பார்த்த அவனுக்கு ஷாக் அடித்தது, ஆனால் மின்சாரத்தால் அல்ல, அவன் வைத்த பணம் அங்கே இல்லாததால்!! அப்போது அங்கு வந்த அவனது பெற்றோர், அவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்கப்பெற்ற விவரங்களை அவனுக்கு தெரிவித்தனர்!

ஆதாரம்: திரு. ரா.கணபதி அவர்கள் எழுதிய "பாபா: சத்ய சாயி" என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 299:

நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் பிக்கத்தி என்ற ஒரு குக்கிராமத்தில் கால் ஊனம் அடைந்த குட்டன் என்ற பெயர் கொண்ட ஒரு நாய் இருந்தது. வயதில் முதிர்ச்சி அடைந்து இருந்தாலும், எச்சரிக்கை மற்றும் கடமை உணர்வோடு , அந்த கிராமத்திற்கு வரும் அந்நியர்களின் நடமாட்டத்தை கண்காணித்து, காவல் பணி செய்து வந்தது. ஒரு முறை சுவாமி அந்த கிராமத்திற்கு விஜயம் செய்தபோது அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் சுவாமி தரிசனத்திற்காக குட்டனை தன்னுடன் அழைத்துச் சென்றார். அப்போது தோல் வாரினால் கட்டப்பட்டிருந்த குட்டன் தன்னை அதில் இருந்து விடுவித்துக் கொள்ள முயற்சித்தது. கிராமத்து மக்களின் நடுவே நடந்து சென்று கொண்டிருந்த நம் சுவாமி குட்டனின் அருகே சென்று பிரேமையுடன் தட்டிக் கொடுத்தார். பிறகு அவர்,, "பங்காரு! கழுத்தில் கட்டியிருக்கும் தோல் வாரை அவிழ்த்து விடு, அவன் ஒரு சுத்தமான ஆத்மா!"* என்று குட்டனை அழைத்து வந்தவரிடம் கூறினார். அவரது ஆணைப்படி அது கழட்டி விடப்பட்ட பின், மகிழ்ச்சியுடன் வாலை ஆட்டிக்கொண்டு சுவாமியுடன் நடந்து சென்றது! சுவாமி மேடையில் இருந்த சிம்மாசனத்தில் அமர்ந்த பின்னர், குட்டனும், சுவாமியின் பாதங்களுக்கு அருகே அமர்ந்து கொண்டது! பஜனைப் பாடல்களை ஊர்ந்து கவனித்தது! பிறகு சுவாமி சமயலறைக்கு சென்றபோது, அதுவும் சுவாமியை பின்தொடர்ந்தது! சுவாமி, அங்கு சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுகளை ஆசீர்வதித்த பின்னர், முதலில் குட்டனுக்கு உணவு அளிக்குமாறு கூறினார். திருப்தியாக உணவு அருந்திய பின்னர், குட்டன் மேடைக்குத் திரும்பியது. ஸ்வாமி சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். அருகே நின்றுகொண்டு, அந்த கிராமத்தினர் உணவு அருந்தி கொண்டிருந்ததை குட்டன் சிறிதுநேரம் பார்த்தது. பிறகு சுவாமி தன் பாதங்களை வைத்திருந்த ஸ்டூலின் மேல், பாதங்களுக்கு அருகில் தன் தலையை வைத்தது. சில நிமிடங்களில் அப்படியே அமைதியாக உயிர் நீத்தது! எப்பேர்ப்பட்ட பாக்கியசாலி!

ஆதாரம்: "மிரகிள்ஸ் ஆஃப் டிவைன் லவ்", (முதல் பாகம்) என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 300:

தென்னாப்பிரிக்காவில் உள்ள  டர்பன் நகரில்  சுவாமியின் பரம பக்தர்களான ராணா தம்பதியினர் வசித்து வந்தனர்.  ஒருநாள் சமையல் செய்து கொண்டிருந்தபோது,  திருமதி. ராணா  அவர்கள்,  திடீரென்று  பழுப்பு நிறம் உடைய  ஒரு கை தனக்குப் பின்னால் இருந்து  தன் தோள்பட்டையின் மேலாக வந்து  அடுப்பின் மேல் இருந்த சமையல் பாத்திரத்தினுள் ஏதோ ஒன்றை போட்டது போல தோன்றியது! உடனே அவர் திரும்பி சுற்றும் முற்றும் பார்த்ததில்  யாரும் தென்படவில்லை!  உடனே அவர் அந்தப் பாத்திரத்தை எடுத்து காலி செய்த போது அதன் அடியில் ஒரு மோதிரம் இருப்பதை கண்டார். அதை அவர் தன் கைவிரலில் அணிந்த போது  அவருக்கு ஏற்ற அளவில் இருந்தது தெரியவந்தது!  இந்த அன்பளிப்பை நம் சுவாமி தான் அவருக்கு கொடுத்து இருக்கிறார் என்று அவர் நம்பிக்கை கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு  அவர்   ஜோஹான்னஸ்பர்க்கில் உள்ள  தன் சகோதரியை சந்திக்க சென்றார்.  அவரிடம் இந்த நிகழ்வை மகிழ்ச்சியுடன் விளக்கினார்.  உடனே அந்த சகோதரி இந்த மோதிரத்தைத்  தன் கை விரலில் அணிந்து பார்த்துக்கொண்டார்.  திருமதி ராணா அவர்கள் அதை திரும்பக் கேட்டபோது அவர் கொடுக்கவில்லை!  மேலும் அந்த மோதிரத்தை பார்பர்டன் என்ற ஊரில் உள்ள தங்களது பெற்றோரிடம் எடுத்துச் சென்று காண்பிக்க போவதாகக் கூறினார். உடனே திருமதி ராணா அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.  தனக்கு அன்பளிப்பாக சுவாமி அளித்த மோதிரத்தை தன்னிடமிருந்து  பிரிக்கக்கூடாது என்று  அவர் வாதாடினார்.  அதற்கு அந்த சகோதரி  ஏளனமாக சிரித்துவிட்டு, "நீயும், பாபாவும்!  அறிவில்லாமல் பேசாதே!" என்று  கூறிவிட்டார்!! 

தனது ஊரான டர்பனுக்கு திரும்பிய திருமதி. ராணா, மறுநாள் காலை தனது டிரெஸ்ஸிங் மேசையின் இழுப்பறையைத்  திறந்தபோது  அங்கே அந்த மோதிரம் அமைதியாக அமர்ந்திருப்பதைப் பார்த்து ஆச்சரியமும் ஆனந்தமும் அடைந்தார்!  உடனே தன்னுடைய சகோதரிக்கு போன் செய்து, "நீ எடுத்துக்கொண்ட  என்னுடைய மோதிரம்  இப்போது உன்னிடம் தான் உள்ளதா?"என்று  கேட்டார்.

  அதற்கு அவர் உடனே, "ஆமாம்! நான் என்னுடைய டிரெஸ்ஸிங் மேசை இழுப்பறையில் பத்திரமாக வைத்திருக்கிறேன்!" என்று கூறினார்.  அதற்கு திருமதி. ராணா, " அது சரிதான்!  ஆனால் இப்போது மோதிரம் அங்கே இருக்கிறதா என்று தயவு செய்து ஒரு தடவை பார்த்துவிட்டு சொல்!"  என்றார்.  சில நிமிடங்களுக்குப் பிறகு  இவருக்கு போன் செய்த அந்த சகோதரி  மிகுந்த பதட்டத்துடன், "அது மாயமாய் மறைந்து விட்டது!"  என்று கூறினார்!  உடனே திருமதி. ராணா மிகவும் அமைதியாக, "அந்த மோதிரம் பாபா எனக்கு பிரத்தியேகமாக அளித்த அன்பளிப்பு என்றும்   அதை என்னிடம் இருந்து எடுத்துச் செல்லக்கூடாது என்றும் நான் உனக்கு ஏற்கனவே கூறினேன்!  பாபா அதை எனக்கு இங்கே அனுப்பி வைத்துவிட்டார்!"  என்று  பதிலளித்தார்.

  

ஆதாரம்: "மிரகிள்ஸ் ஆஃப் டிவைன் லவ்", (முதல் பாகம்) என்ற  புத்தகத்திலிருந்து..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக