தலைப்பு

சனி, 2 ஜூலை, 2022

பாபாவின் 39வது அவதார ஜெயந்தி தீர்க்க பிரகடன தன்னிலை விளக்கம்!

பாபா தன்னைப் பற்றி பிரகடனம் செய்த மிக ஆழமான தன்னிலை விளக்கம் மிகவும் பரவசம் தரக்கூடியது! சூரியன் இப்படித்தான் பிரகாசிக்கிறது என ஒரு சந்திரனால் எப்படி பிரகாசித்துக் காட்ட முடியும்! அப்படியே மனிதர் இறைவன் பாபாவை விளக்க முயற்சிப்பதும்... இதோ தன்னிகரில்லா தெய்வசாயியின் தன்னிலை விளக்கம்...


"பிரஹலாதனிடம் அளவுகடந்த கருணையைப் பொழிந்து தந்தையின் சினத்திலிருந்து யார் காப்பாற்றினாரோ...? ஏழைக் குசேலருக்கு பொருட்செல்வத்தையும் ஆன்மீகச் செல்வத்தையும் யார் தந்துதவினாரோ...? பலிச் சக்கரவர்த்தியை அளவற்ற அன்பு கொண்டு யார் தேற்றினாரோ..? ஆதரவற்றோர்க்கும் துன்பமுற்றோர்க்கும் யார் பாதுகாவலரோ...? செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியின் தலைவர் யாரோ? பிரபஞ்சம் முழுமைக்கும் ஆதாரமாக விளங்கி பிரகாசிக்கும் சர்வ முழுமை யாரோ? அந்த மகாவிஷ்ணுவே பர்த்தியின் தலைவராக இன்று இறங்கி வந்திருக்கிறார்" என பாபா தனது திருவுரையின் துவக்கத்தில் மொழிந்த தெலுங்குக் கவிதையின் தமிழ் பதம்!


"சாயி என்ற இந்த வடிவத்தை உங்களிடம் நான் கற்பிக்க வரவில்லை... என்னுடையது புதிய மதத்திற்கான பரப்புரையும் அல்ல... அநாதி காலந்தொட்டு மனிதர் ஒரே இறைவனை எந்தெந்த பெயர்களால் போற்றி மகிழ்ந்தனரோ, அந்தப் பெயர்கள் அனைத்துக்கும் உரிய வடிவமே இந்த சாயி வடிவம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்! ஆகவே தான் சுவாமி சொல்கிறேன் ராமன், கிருஷ்ணன், ஈஷ்வரன், சாயி போன்ற பெயர்களுக்கிடேயே வேறுபாட்டினைக் கொள்ளலாகாது... இதுவே சுவாமி உங்களுக்கு ஆழமாய் அறிவுறுத்துகிறேன்... ஏனெனில் இவை அனைத்தும் எனது பெயர்களே! எனது சமத்வம் (ஒற்றுமை), எனது சாந்தி, எனது பிரேமை, எனது ஸஹனம் (அனைத்தும்), எனது ஆனந்தம்... இந்த இறை குணங்களை நீங்கள் வளர்த்துக் கொள்ளாமலேயே பெயர்களையும் வடிவங்களை மட்டும் வணங்குவதால் என்ன பயன்?"


"சமுதாயத்தில் நிறைய பேர் இங்கே கூடியிருக்கிறார்கள்... இதில் நூற்றுக்கு 90 பேர் சுவாமியை அறியாதவர்களே! ஆகவே சுவாமியின் உண்மைத்தன்மையை நீங்கள் ஓரளவுக்கேனும் உணர்ந்து கொள்ளும்படியாக சுவாமி செய்தாக வேண்டும்... இது யோகியர்களுக்கு கூட வாய்க்காத பேறு! மனிதன் கடவுளை குறிப்பிடும் ஒவ்வொரு பெயர்களும் வடிவங்களும் இந்த ஒரே வடிவத்தில் அடங்கி இருக்கிறது... சுவாமியின் இந்த வடிவம் "சர்வ தேவதா அதீத ஸ்வரூப வடிவம்!" சந்தேகம் தனை உங்கள் இதயத்தில் வீணாக அலைக்கழிக்கவிடாதீர்கள்! உங்கள் இதயபீடத்தில் உறுதியான நம்பிக்கையோடு சுவாமியின் தெய்வத்துவத்தில் நிலை கொண்டிருந்தால் நிச்சயம் நீங்கள் உண்மைத்தன்மையை கண்டுணர முடியும்! மாறாக நம்பிக்கைக்கும் சந்தேகத்திற்கும் பெண்டுலம் போல நீங்கள் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தால் சுவாமியை உணர வாய்ப்பில்லை! சுவாமியின் சத்தியத்தன்மையை உங்களால் உணர முடியாது ஆனால் அதனை அனுபவித்து ஆனந்தம் அடைய முடியும்! இந்தப் பிறவியிலேயே உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது என்றால் அது நீங்கள் பெற்ற பெறும் பேறே!


(ஆதாரம் : சத்தியம் சிவம் சுந்தரம் - பாகம் 5 / பக்கம் :25 / ஆசிரியர் : பி.என் நரசிம்மமூர்த்தி) 


ஐஸ்கிரீம் போல் மனித வாழ்க்கை சில காலமே பிறகு உருகி ஓடிவிடும்... அதற்குள் அதை சுவைக்கத் தவறி அதைப்பற்றிய ஆராய்ச்சியில் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கும் வரையெல்லாம் ஐஸ்கிரீம் காத்துக் கொண்டிருப்பதில்லை என்பது போல் இறைவன் பாபாவை முதலில் சுயநலமில்லாமல் அணுக வேண்டும்... அப்போதே பாபாவை அனுதினமும் அணு அணுவாக அனுபவிக்க முடியும்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக