பரம்பொருளின் பிரகடனம்:
"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
- இறைவன் ஸத்ய ஸாயி
அவதூத மகான் ஸ்ரீ வெங்காவதூதர்:
பாபா இறைவன் என முதன்முதலில் வெளிப்படுத்திய போற்றுதலுக்குரிய மகான் ஸ்ரீ வெங்காவதூதர்... அதிலும் பெரிய விசேஷம்... பாபா அவதாரம் செய்வதற்கு முன்பே அதனை முதன்முதலாக வெளிப்படுத்தியவர்... இவரே பாபாவின் முந்தைய அவதாரமான ஷிர்டி சாயியின் குருகுல குருவும்.. ஒரு சிலர் நினைப்பது போல் ஷிர்டி பாபா மகான் அல்ல இறைவன் என உணர்ந்தவரும் வெங்காவதூதரே! அவரின் திருவாய்மொழி சாயி அவதாரம் பற்றி சுவாரஸ்யமாய் இதோ...
இறைவன் ஷிர்டி பாபாவை ஒரு அரசாங்க அதிகாரி விசாரிக்கிற போது... உங்கள் பெயர் என்ன என ஆரம்பித்து.. உங்கள் குரு யார்? எனக்கேட்கிற போது "வெங்குசா" என்கிறார் பாபா! அதே வெங்குசா தான் வெங்காவதூதர்... அவதூதர் என்பவர் ஒரே இடத்தில் இன்றி இடம் விட்டு இடம் மாறிக் கொண்டே இருப்பர்... இதயத்தை இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு அடையாளங்களை இறைவன் பாதங்களில் சமர்ப்பித்த வண்ணம் உலவுபர்கள்... வெங்கையா சுவாமி , வெங்காவதூதர், வெங்குசா, குண்டூரு சுவாமி என பல பெயர் அவருக்கு இருக்கிறது... இது தான் என் பெயர் என் இடம் என அவதூதர்கள் அறிவிக்காத போது மக்கள் தங்களுக்கேற்ற பெயர் வைத்து பொதுவாக அவர்களை அழைக்கிறார்கள்...
வெங்காவதூதர் ஒரு அந்தணர் வகுப்பில் மஹாராஷ்டிராவில் அவதரித்தவர்... கலியுகத்தில் தான் அவதூதர்களின் வடிவத்தில் இருப்பேன் என ஸ்ரீ தத்தாத்ரேய சுவாமி மொழிகிறார்! ஒரு இடம் விட்டு இடம் நகர்வதால் அங்கிருந்து மடகாசிரா தாளூக் (Madakasira taluk) அனந்தப்பூர் மாவட்டத்திற்கு வருகிறார்... கர்நாடகா மாநிலத்தில் உள்ள துமுகுரு மாவட்டம் பவகாடா பகுதிக்கும் வருகிறார் (Pavagada area of tumukuru district in Karnataka) ... கண்ணமேடி கிராமத்தின் செலாபோடு குகையில் தியானத்தில் ஆழ்கிறார்... சகமகரிஷி போல் வாசனைப் பட்டாம்பூச்சியாய் இடம் விட்டு நகர்வர் என அங்குள்ளவர்கள் அவரின் மகிமையை மொழிகிறார்கள்... "வெங்கையா எனும் பெயரில் ஒருவர் ஒன்றை கொடுத்தால் அது மூன்று மடங்காக திரும்ப வருகிறது" என்பது அவர் பக்தர்களின் அனுபவம்... வெங்கையா சுவாமியோ பக்தரின் கோரிக்கைகளை தனது பக்தர்களை கைப்பட எழுதச் சொல்லி கேட்பார்... சிலருக்கு தனது கை அச்சுகளை பேப்பரில் பதித்து ஆசி கூறி அனுப்பி வைப்பார்... குழந்தை போல் பல நேரம் நடந்து கொள்வார்... அவதூதர்களை புரிந்து கொள்வது கடினம்... "அணுகுவதற்கு குழந்தையாய் தூரப்பார்வைக்கு பைத்தியம் போல் இருப்பார்கள்!" என்கிறார் ஆதி சங்கரர்! அவரே பர்த்தி பாபாவின் தாத்தாவான கொண்டமராஜுவின் குரு!
தெய்வத்திரு கொண்டமராஜுவுக்கு இரண்டு மகனும் ஒரு மகளும்... வெங்கையா சுவாமியின் பக்தர் என்பதால் தான் தனது மூத்த மகனுக்கு பெத்த வெங்கப்ப ராஜு... சிறியவருக்கு சின்ன வெங்கப்ப ராஜு... மகளுக்கு வெங்கம்மா எனப் பெயர் சூட்டுகிறார் கொண்டமர்! தனது அவதூத சக்தியால் மக்கள் பலரின் குறை தீர்க்கிறார் வெங்கையா சுவாமி! ஒரு சமயம் வெங்கையா சுவாமி புட்டபர்த்தி வந்து தனது பக்தர் கொண்டம ராஜுவை சந்திக்கிறார்...
மௌனமாகவே இருக்கிறார்... "ஏன் சுவாமி மௌனம்?" என கொண்டமர் கேட்கிற போது... "ஓ கொண்டமா... பூமாதேவி அழுகிறாள்... அது என் காதுகளில் கேட்கிறது!" என்கிறார்..
"ஏன் சுவாமி அழுகிறாள்?" என கொண்டமர் வினவுகிற போது...
"கலி.. கலி.. ஸ்ரீமன் நாராயணன் பூமியில் அவதரிக்கப் போகிறான் விரைவில்... நீ அவரை தரிசனம் செய்யப்போகிறாய்" என்கிறார்... ஒருமுறை இருமுறை அல்ல... பல முறை அதையே சொல்லி கைகளை இறுக்கப் பிடித்துக் கொள்கிறார்...கண் கலங்கிய கொண்டமரோ ஆச்சர்யப்படுகிறார்... சுவாமிகளும் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை... தனது குடும்பத்திலேயே ஸ்ரீமன் நாராயணன் அவதரிப்பான் என கொண்டமர் நினைத்துக் கூட பார்க்கவில்லை... கொண்டமர் பரம உத்தமர்... ஈ எறும்புக்கு கூட தீங்கு செய்யாதவர்... எந்த பொருள் மீதும் பற்று கொள்ளாதவர்... அவரின் ஆன்மீக பீடம் எல்லாம் வெங்கையா சுவாமியின் தெய்வீக அஸ்திவாரத்திலேயே அமைந்திருந்தது! வெறும் வாய்ப்பேச்சு மட்டும் உள்ளவர்கள் மத்தியின் பக்தியை வாழாவாக்கியவர் கொண்டமர்!
சில ஆண்டுகளுக்குப் பிறகு வெங்காவதூதர் எனும் வெங்கையா சுவாமி தனது பூதவுடலை உதிர்த்து சமாதியாகிறார்! அதன் பிறகு தீவிர வைராக்கிய அக சன்யாசியாகிறார் கொண்டமர்... பெத்த வெங்கப்பா ராஜுவின் மனைவியான ஈஸ்வராம்பா எட்டாவது முறை கர்ப்பம் தரிக்கிறார்.. அந்த சமயத்தில் வெங்கையா சுவாமி கனவில் சென்று "கொண்டமா.. அன்று நான் புட்டபர்த்திக்கு வந்திருந்த போது ஒன்று சொன்னேன் அல்லவா... நினைவிருக்கிறதா? ஸ்ரீமன் நாராயணன் உன் குடும்பத்திலேயே அவதரிக்கப் போகிறான்... கவனமாக விழிப்போடு இரு!" என்று சொல்லிவிட்டு மறைந்துவிடுகிறார்.. நீர் வழிய நீர் வழிய கனவிலிருந்து விழிக்கிறார்... பாபா அவதரிக்கிறார்... பாபா கருவில் இருக்கும் போதே பாபாவை இறைவன் என உணர்ந்த முதல் புண்ணியாத்மா கொண்டமரே! பிரகலாதனை போல் அத்தனை பக்தி பாபா மேல்...பால பாபாவும் தாத்தாவும் தனி குடிலில் வசித்து ஆன்மீக வாழ்க்கை மேற்கொண்டு... தாத்தாவுக்காக பாபாவே சமைத்து பரிமாறியதெல்லாம் அனைவருக்கும் தெரிந்த இதிகாசம்!
பிறகு 1940ல் பாபாவின் அவதாரப் பிரகடனம்! ஒரு முறை பாபாவின் பௌதீக தங்கை வெங்கம்மாவை வெங்கையா சுவாமியின் சமாதியான ஹுஸைன்புரத்திற்கு சென்று அவரின் மந்திரக்கோலுக்கு வெள்ளிப் பூண் அணிவிக்கச் சொல்கிறார் பாபா... அப்படியே அவரும் செய்து வருகிறார்... இன்றளவும் அவரின் பாதுகையும் மந்திரக்கோலும் பூஜிக்கும் பொருட்களாக பக்தர்களால் ஆராதனை செய்யப்பட்டு வருகின்றன...அவரின் சமாதி ஹுஸைன் புரம் பவகடா தாளூக் கர்நாடகத்தில் (hussainpura - Pavagada taluk - Karnataka) அமைந்திருக்கிறது...!
(Proof : Sri SathyaSai and Yogis / Page no: 1 / Author : Jantyala Suman babu / Translation : pidatala Gopi Krishna/ in tamil : Kavingar VairaBharathi )
அவதூதர்கள் வயது கடந்தவர்கள்.. பல இடங்களில் தனது சமாதியை நிறுவி மக்களுக்கு ஆன்மீக அதிர்வலைகளால் அகமாற்றம் தருபவர்கள்... தியான சூழ்நிலையை தருவதற்காகவே மகான்களின் சமாதிகள் இன்றளவும் திகழ்ந்து வருகிறது! அப்படி ஒரு மாபெரும் அவதூதராலேயே இறைவனின் அவதாரம் அறிவிக்கப்படுவதே மிகவும் சரியாகிறது.. அதுவே சனாதன தர்ம நெறியாகிறது!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக