பாபாவின் பேரன்பு பாற்கடலை விட தூய்மையானது... அப்பாலலைகளில் உடைந்து போகும் குமிழிகள் இல்லை... அப் பால் அப்பாலில்லை நம் அருகிலேயே இருக்கிறது.. அப்பாலுக்கு ஆடை எனும் திரையுமில்லை... அது பேசாத வான் மறையுமில்லை எனும் படி பாபா பேசி பக்தர்க்கு கேட்ட மொழிகள் சுவாரஸ்யமாய் இதோ...
அது 1977 ஆம் ஆண்டு... ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜார்ஜ் இஸ்டெட் வொயிட் ஃபீல்ட் வருகிறார்... அவர் வருகின்ற சமயத்தில் ஒரு அழுக்கான உடை கொண்ட முதியவர் ஒருவர் ... அவரிடமிருந்து துர்நாற்றம் வீசுகிறது... அருகிலிருப்போர் முகம் சுழிக்கிறார்கள்... ஆங்கில பாஷை புரியாததால் அவர்களின் முணுமுணுப்பதன் அர்த்தம் புரியாமல் தான் பாட்டுக்கு தரிசனத்திற்கு அமர்ந்திருக்கிறார்... அவர் அருகில் அமர்பவரும் அந்த அழுக்கு தோற்றம் பார்த்து அருவெறுக்கிறார்கள்... பார்க்க நாட்டுப்புறம் போல் இருக்கிறார்.. ஏன் இவ்வளவு பராரி போல் வர வேண்டும் என்ற வினாக்குறிகள் பார்ப்பவர் மனதில்.. அந்த பராரியும் பக்தர்களோடு காத்திருக்க காவி உடையணிந்த முராரி முகமலர்ச்சியோடு தரிசனம் தர வருகிறார்... பாபா நேராக அவர் அருகே செல்கிறார்... அவர் அருகேவா என ஆச்சர்யப்படுகின்றனர் அதைப் பார்ப்பவர்கள்... "ஒருவரையும் நீ ஒதுக்குவதில்லை!" எனும் கவச வரிகளின் படி பாபா முகம் மலர்ந்த புன்னகையோடு ... அகம் மலர்ந்த பேரன்போடு தொடுகிறார்...குகனை ஆரத்தழுவிய அதே கரம்... குசேலருக்கு பாதபூஜை செய்த அதே கரம்... ஒரு குழந்தை தீயில் தவறி விழப்போய் ஷிர்டியில் நெருப்பில் கைவிட்டபடி அதைத் தடுத்த அதே கரம்... அந்த பேரன்புக் கரம் அழுக்கடைந்த அவரை தொடுகிறது...! முதுகைத் தட்டிக் கொடுத்தபடி... "இனிமேல் நீ கொஞ்சங் கூட கவலைப்படக் கூடாது! எல்லாம் சரியாகிவிடும்!" என்கிறார் பாபா.. அவர் எதுவும் சொல்வதற்கு முன்பே பாபா பேசிய அன்பு மொழியால் அந்த முதிர் பக்தர் கண்கலங்குகிறார்... "நான் முழு பொறுப்பும் எடுத்தாகிவிட்டது! நீ வீட்டுக்குப் போ... பையன் குணமாகிவிடுவான்!" என மூன்று விரலை காட்டி "மூன்றே மூன்று நாளில் முழுமையாக தேறிவிடுவான்..." என்கிறார் பாபா! அந்த முதிய பக்தர் வாயடைத்துப் போகிறார்.. "சுவாமி சுவாமி" என்று மட்டும் உருகுகிறார்... அன்பு மொழிக்கு முன்... அந்த கருணை வாசகத்தின் முன் எந்த வாசகம் வாய் திறக்கும்?!
இதனை அருகே இருந்து பார்த்த அந்த ஆஸ்திரேலிய ஜார்ஜ் இஸ்டெட் ஆச்சர்யப்படுகிறார்.. அந்த அழுக்காடை முதியவரைப் பார்த்தால் ஆங்கிலம் தெரிந்தவராக இருக்க வாய்ப்பில்லை... பிறகு எவ்வாறு அவருக்கு பாபா பேசிய ஆங்கிலம் புரிந்திருக்கும் என நினைத்துக் கொண்டு அவர் அருகில் இருந்தவரிடம் சுவாமி அந்த பெரியவரிடம் ஆங்கிலத்தில் பேசினாரே அது அவருக்கு புரிந்து இருக்குமா? என அவர் கேட்க... அதற்கு அந்த நபரோ "சுவாமி அந்த பெரியவரின் பாஷையான கன்னடத்தில் தான் பேசினார், ஆனால் உங்களுக்கு உங்கள் பாஷையில் கேட்டுள்ளது!, இதே போல் ரஷ்யன்,சைனீஸ் ஆகியவர்களுக்கு அவர்கள் பாஷையில் கேட்கும்," என அவர் பதில் சொல்ல... அருகே கேட்ட ஆஸ்திரேலியர் விக்கித்துப் போகிறார்... சுவாமி நம் அருகே அவரிடம் பேசியது நமக்கு தெளிவாக ஆங்கிலத்தில் கேட்ட போது அவருக்கு எப்படி அது கன்னடத்தில் கேட்டது? என்ற ஆச்சர்யத்தில் இருந்து அவரால் வெளியே வரவே முடியவில்லை!
ஒருமுறை அமெரிக்க பக்த குழு ஒன்று பாபா நேர்காணல் அறையில் அமர்ந்திருந்தது... நான் பேசுவதை நீ மொழிப் பெயர்த்து விடு என்கிறார் ஒரு மாணவரைப் பார்த்து... பாபா மாணவர்கள் பரிசுத்தமானவர்கள்... பாபா எள் என்றால் எள்ளாகவே இருப்பார்கள்...பாபா கிழித்தக் கோட்டைத் தாண்ட மாட்டார்கள்... அப்போது மட்டுமல்ல எப்போதுமே பாபாவின் கரங்கள் அவரது இளைஞர்களே... அவரது மாணவர்களே... ! தர்மத்தேரில் அமரும் சுவாமியின் அச்சாணிகள் தியாக இதயம் படைத்த பாபாவின் இளைஞர்களே! சரி என அந்த பாபா மாணவரும் மொழி பெயர்க்க ஆரம்பிக்கிறார்... ஆனால் அங்கு அரங்கேறியது வேறு! "சுவாமி ஏன் நம்மை ஆங்கிலத்தில் பேசச் சொல்லிவிட்டு அவரும் ஏன் ஆங்கிலத்தில் பேசுகிறார்?" என்ற வியப்பு... அதைக் கேட்கிற அமெரிக்க பக்தர்களுக்கோ "இந்த மாணவர் எப்படி இவ்வளவு அழகாக தெலுங்கில் பேசுகிறார்?" என்ற பிரம்மிப்பு... அப்படியே பாபா அந்த நிகழ்வை தலைகீழாக மாற்றி விடுகிறார்... நேர்காணல் முடித்து வெளியே வந்த அவர்களுக்கு அப்போது தான் உண்மை புரிந்து வெடித்துச் சிரிக்கிறார்கள்... அப்போது பாபா சொன்னது "எனக்கு என் குழந்தைகளை சந்தோஷப்படுத்த வேண்டும்! அது தான் முக்கியம்!" என்கிறார்! அந்தக் கருணையால் தான் பாபா இறைவன்! பாபாவால் எதையும் எப்படியும் மாற்ற முடியும்...
"எது நடப்பினும் அது உன் செயலாகும்..
எந்த நிகழ்வும் உன் சங்கல்பமாகும்!" எனும் கவச வரிகள் சத்திய வரிகள்!
ஒரு முறை 1967ல் நடந்த அகில இந்திய ஸ்ரீ சத்ய சாயி சேவா மாநாட்டில் பாபா முதல் நாள் மாலை தான் பேசியவற்றை சிலருக்கு தெலுங்கில் விளக்கிக் கொண்டிருந்தார்...அப்போது பி.ராமகிருஷ்ணராவ் பாபாவிடம் இந்துலால் ஷா அவர்களுக்கு நீங்கள் பேசிடும் தெலுங்கு புரியாது சுவாமி என நினைவூட்ட... நான் வேண்டுமானால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவா? என கேட்க...
"வேண்டாம்...! அதற்கு இப்போது நேரமில்லை" என பாபா சொல்லிவிட்டு இந்து லால் ஷா அவர்களின் நெற்றியைத் தொடுகிறார்... பாபா கரம் பட்டு அவரது ஆறாவது சக்கரமான ஆக்ஞா இயங்க... அது முதல் அவருக்கு பாபா பேசிடும் தெலுங்கு புரிய ஆரம்பித்துவிடுகிறது!
ஒருமுறை மெக்ஸிக்கோ ஜனாதிபதி மனைவி வந்திருந்த போது எந்த மொழியில் பேசி சமாளித்தீர்கள் சுவாமி என விஞ்ஞானி பகவந்தம் கேள்வி எழுப்ப... "இதய மொழியில் " என்கிறார் பாபா.. அதனையும் நூலாசிரியர் பதிவு செய்கிறார்! பாபாவின் சிருஷ்டி என்பதே இப்பிரபஞ்சம் அனைத்தும்... அவர் கர சிருஷ்டி முதல் அதர சிருஷ்டி என... ஸ்தூல சூட்சும சிருஷ்டி அனைத்துமே நம்மை புனிதப்படுத்திக் கொண்டே இருக்கிறது! இதனை ஒருமுறை மான்ட்ரீலை சேர்ந்த சமய ஒப்பியல் பேராசிரியரான பாதிரியார் ரோஸ்னர் பாபாவின் சிருஷ்டியைப் பற்றிக் கூறுகையில்... "அது அவரது இதயத்திலிருந்து சிருஷ்டி ஆகுபவை!" என்கிறார்!
இதயமும் இதயம் சார்ந்த இறைவனே பாபா! அந்த பேரிதயமே நம்மை மனதிடமிருந்து இதயத்தை நோக்கி நகர்த்துகிறது!
(ஆதாரம் : தீராத விளையாட்டு சாயி / பக்கம் : 51 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி & The Heart of Sai: Lowenberg, R)
நம் மனதின் எண்ண ஓட்டங்களை படித்துவிடும் பாபாவுக்கு நம் மொழிகள் தெரியாதா என்ன!? இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமே இல்லை.. மனிதனின் மொழிகளோ... அவன் உருவாக்கிய தொழில்நுட்பங்களோ பாபாவுக்கு பெரிய விஷயமே இல்லை! மனிதனை உருவாக்கி ஆளும் பாபாவே பிரபஞ்சத்தை கட்டிக் காக்கிறார்... அவரின் இதய அளவு வேறு பிரபஞ்ச அளவு வேறல்ல...! அப்பேர்ப்பட்ட கருணை இறைவனான பாபாவிடம் சரணடைவதைக் காட்டிலும் வேறென்ன வாழ்வில் சீரும் சிறப்பும் இருக்கிறது?
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக