பரம்பொருளின் பிரகடனம்:
"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
- இறைவன் ஸத்ய ஸாயி
ஸ்ரீ பகலபதி பாபா:
எவ்வாறு ஒரு சித்தபுருஷர் பாபாவை போற்றி வியக்கிறார்.. மனம் திறந்து பாபா யார்? என்பதை பகிர்கிறார் எனும் அனுபவப் பகிர்வில் இந்த சித்தபுருஷரோ மிகவும் வித்தியாசமானவர்.. கிரிஜன்ஸை அரவணைத்தவர்...அது யார் கிரிஜன்ஸ்? சுவாரஸ்யமாய் இதோ...
ஸ்ரீ தர்மராஜு வெங்கடராமையா எனும் பெயருடன் மூன்றாவது குழந்தையாக வெங்கம்மா தர்மராஜு கங்காராஜு தம்பதியினருக்கு பிறந்தவர் இந்த சித்தபுருஷர்... ஆந்திர பிரதேச கிழக்கு கோதாவரி கரையிலிருக்கும் ஈலூரு அருகே உள்ள உண்டூரு கிராமம் இவர் பிறந்தது! காரணத்திற்காக பிறந்த ஒரு சித்த புருஷர் இவர்... மகான்களுக்கான பிறவி ஒரு காரண பிறவி.. வேடிக்கை மனிதர் போல் ஏதோ பிறந்தோம் ஏதோ இறந்தோம் இதன் இடைவெளியில் ஏக்கப்பட்டு திரிந்தோம் என்பதாக அல்ல மகான்களின் பிறப்பு! ஒவ்வொரு மகானுக்கும் ஞானோதயம் ஒவ்வொரு வயதில் ஏற்படுகிறது..! இவருக்கோ சிறு வயதிலிருந்தே...! அவர் ஒரு ஆசிரமத்தில் அடிக்கடி தங்குவார்... அது நர்சிபட்டிணம் அருகே உள்ள பகலப்பாடு வனத்தில் அமைந்திருக்கிறது! ஆகவே தான் அவரை பகலபதி குரு - பாபா குரு என அழைக்கிறார்கள்... சித்தபுருஷர்களை பாபா என அழைப்பது பாரத கலாச்சாரம்... அந்த பெயரை தாங்கியே அவதாரங்களும் எழுகிறதெனில் அவதாரங்கள் மகான்களுக்கு கொடுக்கிற அங்கீகாரம் அது!
பகலபதி பாபாவோ இயற்கையை நேசிக்கிறவர்... கிரிஜன்ஸை ஆதரிக்கிறார்... ஹரிஜன்ஸ் என்றால் ஹரியின் குழந்தைகள்... கிரிஜன்ஸ் என்றால் கிரியின் குழந்தைகள்... ஆம் மலைவாழ் மக்களை இந்த மகான் பகலபதி பாபா அவ்வாறே அழைத்து மகிழ்கிறார்... எத்தனை அற்புதமான சொல்லாடல்! அவர் சிறுவயதிலிருந்தே ஏரி சார்ந்த மலைகளில் தியானம் செய்து வருகிறார்...அப்போது அவர் அருகே அவருக்கு காவலாக புலிகள் மற்றும் சில விலங்குகள் அமர்ந்திருப்பதை பலர் தரிசித்திருக்கின்றனர்... அவர் இமய மலை , விந்திய மலை, நேபால், டிபெட், ரங்கூன் , இலங்கையும் அதன் அடர்ந்த காடுகள் யாவற்றிலும் பயணப்படுகிறார்!
பலருக்கு விவசாயம், கட்டிடம் கட்டுவதற்கான செயல்திறன் போன்றவற்றை கற்றுத் தருகிறார்...
குறிப்பாக பலகபதி பாபா சேவை ஆற்றியது கிரிஜன்ஸ்'காகவே... அவர்களுக்கு வாழும் முறைமை, இறை ஒழுக்கம், வழிபாடு போன்றவற்றை கற்பிக்கிறார்... சிலர் அதில் மனிதனை வேட்டையாடுபவர்கள்... அந்தக் கொடூர போக்கினை தடுக்கிறார்... சிலர் மனித மாமிசம் தின்பவர்கள்... அதனை மாற்றுகிறார்... இறை ஆற்றல் பகலபதி பாபாவினுள் இயங்காமல் இவை எல்லாம் சாத்தியமா? உபதேசம் செய்கிறேன் எனச் சென்றால் நம்மையே வேட்டையாடி தின்றுவிடுவார்கள்... பிறகு அவரால் மட்டும் எப்படி சாத்தியப்பட்டது..? அதனால் தான் அவர் சித்த புருஷர்!
பல மலைவாழ் கிராமங்களில் ஸ்ரீசீதா ராமருக்கு கோவில் எழுப்பி அவர்களை வழிபட வைக்கிறார்... நீள குர்தாவும் கையில் கடிகாரமும் அணிந்திருப்பார்... உடையை வைத்தா? இல்லை-: ஒருவரின் நடவடிக்கையை வைத்தே அவர் மகானா ? மனிதனா? என உணர வேண்டும்! ஆனால் பேராசை உலகம் அப்படி அல்ல! தோற்றத்தில் என்ன? பலாப்பழத்தின் தோற்றம் என்ன? அதை உணர்வதற்கு முதலில் பக்குவ ஞானம் வேண்டும்!
தன்னுடைய யோக ஆற்றலால் பலரின் நோயை குணப்படுத்துகிறார்! அவரின் ஆசிரமமே மிகச் சிறியதாக ரிஷிகுடில் போலிருக்கும்! வெங்கடபுரம், கிடுமுலா, பீமசிங்கி போன்ற பல இடங்களில் அவர்களின் பக்தர்கள் ஆசிரமத்தை நிறுவி இருக்கிறார்கள்! ஜெய்ப்பூர் மகாராஜா படுத்த படுக்கையாக இருக்கும் பொழுது.. உங்களுக்கு ஒன்றுமே இல்லை என்கிறார்... அந்த சொல் மந்திரமாகி உடனே மகாராஜா குணமாகி எழுந்துவிடுகிறார்.. பகலபதி பாபாவின் ஆற்றல் அத்தகையது!
பாபா சிறுவயதில் பயின்ற உருவகொண்டா பள்ளியின் ஒரு ஆசிரியர்- அவர் பெயர் மஞ்சிராஜு திம்மராஜு... தனது வயதோய்விற்கு பிறகு துனி என்கிற ஊருக்கு குடிவருகிறார்! அங்கே உள்ள தங்குதலில் அவர் பகலபதி பாபாவின் ஆசிரமத்திற்கு அடிக்கடி செல்கிறார்... ஒருமுறை முன்னாள் ஆசிரியர் திம்மராஜுவின் மூத்த மகன் அஸ்வத் நாராயணனுக்கு உடல்நலம் சரியில்லாது போக.. அவர் வீட்டுக்கே வருகிறார் பகலபதி பாபா... அஷ்வத் தலையில் கைவைக்கிறார்... அவன் உடல்நிலை நிலையாகிறது... அந்த சமயத்தில் திம்மராஜு வீட்டில் இருக்கிற பர்த்தி பாபா படத்தை தரிசிக்கிறார் பகலபதி பாபா!அப்போது... ஒரு புன்முறுவல் பூக்கிறார்...
"உங்களுக்கு புட்டபர்த்தி சாயிபாபாவை பிடிக்கும் அல்லவா?" எனக் கேட்கிறார் பகலபதி பாபா... "பாபா... நான் இதுவரை அவருடைய நிழலிலேயே பணியாற்றினேன்... இன்றும் அவருடைய நிழலிலேயே உயிர் வாழ்கிறேன்!" என்கிறார் திம்மராஜு... என்ன ஒரு பதில்...!! பால பாபாவின் ஆசிரியர் எனில் எத்தகைய பேரனுபவம் அடைந்திருப்பார் திம்மராஜு...! அதுவே பக்குவ வார்த்தை மாலையாக வந்து விழுகிறது! அதற்கு பகலபதி பாபாவோ "சத்ய சாயி பாபாவே எல்லாம் வல்ல இறைவன் (Divine Almighty)..இன்றளவும் நீங்கள் அவருடைய தெய்வீகக் காவலிலேயே வயப்பட்டிருக்கிறீர்கள்! ஆகவே தான் உயர்ந்த பதவிகளை எல்லாம் வாழ்வில் அடைந்திருக்கிறீர்கள்! அவர் மேல் நம்பிக்கை இருந்தால் போதுமானது... எந்த குறையும் இல்லை வராது!" என்கிறார் பகலபதி பாபா... ஆச்சர்யப்பட்டு திம்மராஜு "நீங்கள் புட்டபர்த்திக்கு சென்றிருக்கிறீர்களா? பாபாவை தரிசித்திருக்கிறீர்களா?" என கேட்டதற்கு "ஒரு முறை சென்றிருக்கிறேன்... "நீ ஒரு சித்தபுருஷன்! ஒரு ஸித்தியை நீ கைவரப்பெற்றிருக்கிறாய்... சுவாமி நான் எட்டு ஸித்திகளுக்கும் அதிபதி!" என என்னிடம் சொன்னது இப்போதும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது!" என்கிறார் கிரிஜன்ஸுக்கு ஆன்ம முன்னேற்றம் அளித்த ஸ்ரீ பகலபதி பாபா!
எட்டு ஸித்தி என்பது அஷ்டமா ஸித்தி... தியான ஆற்றல் பேராற்றலாக பொங்கி வழிகிற போது பாபாவே அதனை மகான்களுக்கு அருள்கிறார்! லஹிமா, அனிமா போன்ற 8 ஸித்திகள் அவை! இதில் கூடுவிட்டுக் கூடு பாய்வதும் ஒரு ஸித்தியே! ஆதிசங்கரருக்கு இருந்தது போல்...!
(Proof : Sri SathyaSai and Yogis / Page no: 127) / Author : Jantyala Suman babu / Translation : pidatala Gopi Krishna/ in tamil : Kavingar VairaBharathi
Source: Pagalapati Gurucharitra, interview with ashwath narayana)
ஆக...கிரிஜன்ஸை கடைத்தேற்றியவர் பகலபதி பாபா.. பிரபஞ்சன்ஸையே கடைத்தேற்றி வருபவர் இறைவன் பாபா! மகான்கள் விநயரூபம்... இறைவன் பாபாவோ விஸ்வரூபம்! மகான்கள் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டுபவர்கள்... ஆனால் இறைவன் பாபாவோ அந்த வாழ்க்கையையே நமக்கு யாசகமாக தருபவர்...! இருவருக்கும் உள்ள வித்தியாசம் இதுவே!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக