தலைப்பு

வியாழன், 14 ஜூலை, 2022

ஸ்ரீமதி கர்ணம் சுப்பம்மா | புண்ணியாத்மாக்கள்

"புண்ணியாத்மாக்கள்" என்னும் தலைப்பு கொண்ட இந்தத் தொடரில், பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா அவர்களின் அனன்ய பக்தர்களாக, அணுக்கத் தொண்டர்களாக வாழ்ந்து நமக்கெல்லாம் உதாரண புருஷர்களாகத் திகழ்ந்தவர்களை பற்றிக் காணவிருக்கிறோம். அந்த வரிசையில் இந்தப் பகுதியில் நம் இதயங்களைப் பரவசப்படுத்த வருகிறார் ஶ்ரீகிருஷ்ணருக்கு யசோதை போல ஸ்ரீ சத்ய சாயிக்கு கலியுக யசோதையான ஸ்ரீீமதி கர்ணம் சுப்பம்மா இதோ...!


வாழ்க்கை முற்றுப்பெற்று உடலை நீங்கும் அந்த இறுதித்  தருணத்தில் இறைவனின் அணுக்கத்தை மனம் நாடுவது வெகு இயல்பே. மரணத்தறுவாய் என்பது, எந்த ஒரு பக்தரும் பகவானையே நினைவு கூர்ந்தவண்ணம் இருக்கும் புனிதத் தருணமாகும். அப்படிப்பட்ட தருணத்தில், சாக்ஷாத் பரப்பிரம்மமே மனிதவடிவில் அருகிலமர்ந்து, வாயில் நீரூற்றி ஷாந்தி அளிப்பதென்பது, வார்த்தைகளால் வருணிக்க முடியாத மாபெரும் பேறாகும்.  அப்படிப்பட்ட உன்னத நிலை அனுக்கிரகிக்கப்பட ஒருவர் எத்தகைய புண்ணியாத்மாவாக இருந்திருக்கவேண்டும்? அப்படி ஓர் உன்னதமான புண்ணியாத்மாதான் ஸ்ரீமதி. கர்ணம் சுப்பாம்மா. தெலுங்கு மொழியில் கரணம் அல்லது கர்ணம் என்பது ஒரு "குடும்பப் பெயர்" ஆகும். பொதுவாக கணக்கர் வம்சத்தை/இனத்தைக் குறிப்பதாகவும் அமைவது. பகவானே பிற்காலத்தில், தன்னுடைய பல சொற்பொழிவுகளில் கர்ணம் சுப்பம்மா அவர்களுடைய  பிரேமையையும், சேவையையும் மிகவும் சிலாகித்தது நினைவுகூர்ந்துள்ளார்.


🌷சாயிகிருஷ்ணரின் யசோதை:

கர்ணம் சுப்பம்மா ஒரு பணக்கார அந்தணப் பெண்மணி. கிராமத்தின் கணக்கரும் செல்வந்தருமான திரு. நாராயண ராவ் அவர்களின் தர்மபத்தினி ஆவார். அவளுக்கென்று எது கிடைத்தாலும், "கடவுள் கொடுத்த செல்வத்தை என் சக மனிதர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்" என்ற உணர்வுடன் தர்மம் செய்பவள்.  புனிதமான எண்ணங்களுடனும், அமைதியான உணர்வுகளுடனும் தன் நேரத்தை கழிப்பவள். சுப்பாம்மாவுக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தால், அவளது கணவர் இரண்டாம் திருமணம் செய்தார், ஆனால் இரண்டாவது மனைவிக்கும் பிள்ளைகள் இல்லை. பக்கத்து வீட்டு சிறுவனான நம் சுவாமியை (சத்ய நாராயண ராஜூவை) அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஒரு தாயைப்போல சத்தியாவைக் கண்காணித்து, கவனித்து அன்புபாராட்டி வந்தாள். சத்தியாவும் கர்ணம் சுப்பாம்மாவிடம் மிகுந்த அன்பைக் காட்டுவார்.


"சத்யா! நான் இன்று தோசை தயார் செய்துள்ளேன், நீங்கள் எங்கள் வீட்டிற்கு வந்து கொஞ்சம் சாப்பிடுங்கள்" என்று சுப்பம்மா கூப்பிட்டால், சுவாமியோ "இந்தக் குழந்தைகளையெல்லாம் விட்டுவிட்டு உங்கள் வீட்டில் தோசை சாப்பிட தனியாக வர முடியாது" என்பார்.  சுவாமியின் எண்ணத்தை மெச்சி சுப்பம்மா, பிறகு எல்லாக் குழந்தைகளுக்கும் தோசை தயார் செய்வார். சுவாமியின் கனிவையும் மேன்மையையும் நன்கு அறிந்து வைத்திருந்தார் சுப்பம்மா. எப்பொழுதும் மற்ற குழந்தைகளிடம் பின்வருமாறு அறிவுரை கூறுவார், "அனைவரும் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கும்போதுதான் ராஜு மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருப்பார். நீங்கள் சுயநலத்தை விட்டுவிட்டு, அன்பை வளர்த்து, ராஜுவைப் போல மற்றவர்களின் மகிழ்ச்சியை உங்கள் மகிழ்ச்சியாகக் கருத வேண்டும். அப்போதுதான் நீங்கள் செழிப்பீர்கள், உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும், உங்கள் வாழ்க்கை மற்றவர்களுக்கு இலட்சியமாக இருக்கும். உண்மையில், ராஜுவை உங்கள் நண்பராகக் கொண்டிருப்பதால்  நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்"

 

சுவாமியின் தந்தையிடம் சுப்பம்மா, "வெங்கப்பா! தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள், உங்கள் சிறிய வீட்டில் தரிசிக்க வருவதால் உங்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே சத்தியாவை எங்கள் வீட்டிற்கு அனுப்புங்கள், பக்தர்களின் தேவைகளையும் நான் கவனிப்பேன்."  என்று கூறுவார். மேலும் சுவாமியிடமும்,  "பக்தர்களுக்கு செய்யும் சேவையை நான் கடவுளுக்கு செய்யும் சேவையாகக் கருதுகிறேன். இங்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் நான் உணவு சமைத்து பரிமாறுவேன். தயவுசெய்து எங்கள் வீட்டில் இருங்கள்" என்று இறைஞ்சுவார்.

 

🌷சுவாமிக்காக சமூகத்தையே புறக்கணித்த புண்ணியவதி:

சுப்பம்மா பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர், சாய்பாபா க்ஷத்ரிய குலத்தைச் சேர்ந்தவர். எனவே, புட்டபர்த்தியில் உள்ள ஒட்டுமொத்த பிராமண சமூகமும், "இந்தப் பெண் ஒரு க்ஷத்ரியக் குழந்தையைத் தன் வீட்டில் அனுமதிக்கிறாள் ; எனவே நாம் அவள் வீட்டிற்குச் செல்லக்கூடாது, அவளையும் நம் வீடுகளுக்கு வர அனுமதிக்கக்கூடாது!" என்று முடிவெடுத்தனர். ஆனால் சுப்பம்மாவோ தன் சமூக மக்களிடம் "எனக்கு யாரும் தேவையில்லை. நான் யாருடைய வீட்டிற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்தப் பையனை எந்த சூழ்நிலையிலும் விட்டுவிட மாட்டேன்!" என உறுதியுடன் கூறினாள். உண்மையில், சுவாமியை விட்டு ஒரு கணம் கூட விலகி இருப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. சுவாமியைத்  தன் சொந்தப் பிள்ளையாகவே பாவித்து வந்தாள்.


 இதன் விளைவாக, ஒட்டுமொத்த பிராமண சமூகமும் அவள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டது. அவளுடைய சொந்த அம்மாவும் சகோதரனும் கூட விரோதமாக இருந்தனர். ஆனால், சுப்பம்மா ஒரு அங்குலம் கூட அசையவில்லை. ஆன்மிகம் தொடர்பான விஷயங்களில், தான் இத்தகு கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பதை அவள் நன்றாகவே அறிந்திருந்தாள்.

 

🌷சுவாமிக்கென தனியிடம் சமர்ப்பித்த புண்ணியவதி:

சில நாட்களிலேயே, பாபாவைத் தரிசிப்பவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கைத் தாண்டிச் சென்றது. சுப்பம்மாவின் பெரிய வீட்டிலும் கூட, பெருகி வரும் பக்தர்களுக்கு இடமளிக்க முடியவில்லை. எனவே சுவாமியின் தகப்பனார் பெத்த வெங்கமராஜு சுப்பம்மாவிடம் "அம்மா! நம் சத்யத்துக்காக நீ ஏன் சிரம்ப்படுகிறாய்? இனிமேல் அவனைத் தனி வீட்டில் வைக்கலாம்!" என்றார்.  சுப்பம்மா, வேணுகோபால சுவாமி  கோவிலை ஒட்டிய ஒரு நிலத்தை ஸ்வாமிக்கான இடம் அமைவதற்காக தந்தார். 

இதன் பத்திரப் பதிவு 20.7.1945 ல் புக்கப்பட்டினம்  பதிவு அலுவலகத்தில் (Doc.No.553 of 1945)பதிவு செய்யப்பட்டது. பதிவின் விவரம்: புட்டபர்த்தி கிராமத்திலுள்ள கர்னம் சுப்பம்மா, கமலம்மா ஆகிய எங்களுக்கு சொந்தமான, சர்வே எண் 310.6.0.11( 34 செண்ட்) பரப்பளவுள்ள ரூபாய் 50 மதிப்புள்ள நிலத்தை,  ரத்னாகரம் பெத்தவெங்கம ராஜுவின் குமாரர் சத்ய நாராயணாவுக்கு இந்த நன்கொடை பத்திரம் (Gift deed) மூலம் அளித்து பதிவு செய்கிறோம். இந்த இடத்தை ஸ்வாமியை தரிசிக்க வருபவர்கள் உபயோகத்திற்காக பயன் படுத்திதக் கொள்ளவும். அப்போது இருந்த பத்திரப்பதிவுக் கட்டணம் ரூ 0.12 . 

அங்கு சுவாமிக்கென ஒரு சிறிய அறை கட்டப்பட்டது. இன்று பழைய மந்திரம் என்ற திவ்ய கட்டிடம்  நிற்கும் இடம் அதுதான்.

அறியாமையினால் பொறாமை கொண்ட கிராமத்து அறிவிலிகள் சிலர், சுவாமி உள்ளே தூங்கிக் கொண்டிருக்கும்போது கதவை வெளியில் இருந்து பூட்டி, தீ வைத்தனர். ஓலைக்கூரை எளிதில் பற்றிக்கொண்டு மளமளவென எரிந்தது. இதற்கிடையில், சுவாமிக்கு என்ன நேர்ந்தது என்று பதறி  வெங்கம்மா, சுப்பம்மா, ஈஸ்வரம்மா மற்றும் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் அந்த இடத்திற்கு விரைந்தனர்.அதிசயிக்கும் வண்ணம்,  சில நொடிகளில் சாரல் மழை பெய்து தீ அணைந்தது!. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அந்தச் சிறிய குடிசையில் மட்டும்  மழை பெய்தது, அக்கம் பக்கத்தில் எந்த மழையும் இல்லை!

 

சுவாமியின் அறைக்குத் தீ வைத்ததற்குக் காரணமானவர்கள் யார் என்பதைக் கண்டறிய சுப்பம்மா விசாரணைக்கு ஏற்பாடு செய்தாள். ஐந்து அல்லது ஆறு பேர் அடையாளம் காணப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். "பொல்லாதவர்களே! நீங்கள் இந்த கிராமத்தில் இருக்க வேண்டாம். இந்த கிராமத்தை உடனடியாக விட்டு வெளியேறுங்கள்!" என்று கூறி அவர்களை கிராமத்திலிருந்து நீக்க எத்தனித்தாள். ஆனால் அந்த தீயவர்களையும் மன்னிக்கும்படி சுவாமி சுப்பம்மாவின் கைகளைப் பிடித்துக் கெஞ்சினார். அதனால் சுப்பம்மா ஒப்புக்கொண்டாள். ஆனால் அன்றிலிருந்து சுப்பம்மா சுவாமியை நீங்குவதில்லை. 60 வயதான சுப்பாம்மா தனது மூப்பையும் பொருட்படுத்தாது, மறுபடியும் சுவாமியை தன் வீட்டில் இருக்கும்படி செய்து தன் சேவையைத் தொடர்ந்தாள். அவள் எப்போதும் 'சத்யா! சத்யா!' என்று சொன்ன வண்ணம் அருகிலேயே இருப்பாள். சுவாமி இருக்குமிடம் குறித்துத் தெரியாது போனால் அவளால் நிம்மதியாகத் தூங்கவியலாது.

 

🌷பொறாமை விஷம் கொண்ட வடைகள்:

புட்டபர்த்தி கிராமத்தின் ஒரு முக்கியஸ்தரின்  மனைவிக்கு சுப்பம்மாவைப் பிடிக்கவில்லை. சுவாமி சுப்பம்மாவின் வீட்டிற்கு தவறாமல் வருகை செய்வதைக் கண்டு பொறாமையினால், இந்தப் பையனை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என்று முடிவு செய்தாள். அந்த நாட்களில் சுவாமி, காராமணி பருப்பு வடைகளை விரும்பி உண்பதாக அறிந்து "என் கண்ணே! நீங்கள் இன்று காலை உணவுக்கு எங்கள் வீட்டிற்கு வர வேண்டும். தனியாக வரவேண்டும், உனக்காக வடை தயார் செய்கிறேன்!' என்றால் அந்தப் பெண்மணி வஞ்சகத்துடன்.

சுப்பம்மாவுக்கு அந்த யோசனை பிடிக்கவில்லை, ஏனென்றால் அந்தப் பெண்மணியின் எண்ணம் அவளுக்குத் தெரியும்.  "சத்யா! ஏதோ தீய எண்ணத்துடன் உன்னை அவள் வீட்டிற்கு அழைக்கிறாள். தயவு செய்து போகாதே!"  என்று மன்றாடினாள்.  சுவாமியோ அவளிடம் "என்ன வந்தாலும் பரவாயில்லை, அவள் ஆசையை நிறைவேற்ற வேண்டும்!" என்று சொல்லிவிட்டுச் சென்றார். அவள்  தயாரித்த வடைகளில் விஷம் கலந்திருப்பதை சுவாமி அறிந்திருந்தும் உண்டார். ஐந்து நிமிடங்களில், சுவாமி உடல் முழுவதும் நீல நிறமாக மாறியது.

 

இதனைக் கண்ட சிலர் சுப்பம்மா மற்றும் ஈஸ்வரம்மாவிடம் தகவல் தெரிவித்தனர். அவர்களும் ஓடி வந்தார்கள். ஆனால் சுவாமியோ, "நீங்கள் கவலைப்படாதீர்கள். அவள் விரும்பியதை அவள் செய்தாள். இப்போது நான் செய்ய வேண்டியதைச் செய்வேன்." என்று சொல்லி, ஒரு டம்ளரில் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார். சுவாமி கைகளில் டம்ளரைப் பிடித்தபோது, டம்ளரில் இருந்த தண்ணீரின் அளவு முழுவதும் நீல நிறமாக மாறியது!  இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் அந்த பெண்ணின் வீட்டை தாக்கினர். அவளுக்கு பாடம் புகட்ட நினைத்தார்கள். ஆனால், அவளுக்கு எந்தத் தீங்கும் செய்யாதபடி சுவாமி அவர்களைத் தடுத்தார்.




🌷சாயி நாகேஸ்வரர்:

சுவாமி பழைய மந்திரில் வசித்தபோது, தினமும் சித்ராவதி ஆற்றுக்குச் செல்வது வழக்கம். சித்ராவதி மணற்பரப்பில் பஜனைகள், சுவாமியின் மகிமை வெளிப்பாடுகள் மற்றும் தெய்வீக லீலைகள் எனப்பலவும் சாயி பக்தர்கள் அறிந்ததே. அப்படி ஒரு நாள் சித்ராவதி நிகழ்வெல்லாம் முடிந்தபின், ஆற்றிலிருந்து மந்திருக்குத் அனைவரும் ஒன்றாகத் திரும்பிக் கொண்டிருந்தனர். சுவாமி சுப்பம்மாவை அழைத்து, "நீ  மந்திருக்கு முன்கூட்டியே சென்று ஹாரத்திக்கு ஏற்பாடு செய்" என்றார். சுவாமியின் சொல்லுக்கு உடனே கட்டுப்பட்டு, சுப்பம்மா வேகமாக நடந்து மந்திரின் நுழைவாயிலை அடைந்தபோது, அங்கே ஒரு பெரிய பாம்பு இருப்பதைக் கண்டாள். அவள் பாம்புக்கு எந்தவிதத்த்திலும் பயப்படவில்லை. மாறாக அதற்க்கு எந்தப் பாதிப்பும் வரக்கூடாது என்ற அதனை  ‘சாயி நாகேஸ்வரா!' என்றும் சொல்லியழைத்த வண்ணம்  அதைத் தன் கைகளால் பிடித்தாள். உடனே அது அவள் கையைச் சுற்றிக் கொண்டது. அதற்குள் சுவாமி மந்திரின் வாசலை  வந்தடைந்தார். சுப்பாம்மாவை சுவாமி சற்றே  கிண்டல் செய்யவும் முயன்றார், "என்ன சுப்பம்மா! பாம்புடன் விளையாடுகிறாயா?" . அதற்கு சுப்பம்மாவோ, "சுவாமி! மற்றவர்களை காப்பாற்றுவதற்காக அல்லவா என்னை இங்கு முன்கூட்டியே அனுப்பி வைத்தீர்கள்?" என்று மென்மையாக பதிலளித்தாள். இந்த நிகழ்ச்சியை சுவாமி தன்னுடைய தெய்வீகப்ப பேருரையில் குறிப்பிடும்போது, "சுப்பம்மா  உன்னதமானவள்பக்தியுள்ளவள்என் லீலைகள்  (அற்புதங்கள் ) பலவற்றைக் கண்ட அதிஷ்டசாலி" என்று சொல்கிறார்.

 

🌷சுப்பம்மாவின் கோரிக்கை:

கணவர் இறந்த பிறகு, சுப்பம்மா தனது முழு வாழ்க்கையையும் சுவாமிக்கே  அர்ப்பணித்தார். கடைசி மூச்சு வரை தன் வாழ்நாள் முழுவதையும் சுவாமியின் சேவையிலேயே கழித்தார். உண்மையில், அவளுடைய பக்தி மற்றும் சரணாகதியைப் பற்றி மற்றவர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று சுவாமியே குறிப்பிடுவதுண்டு. சுவாமியை தரிசிக்கும் பக்தர்கள் அனைவருக்கும் இலவச உணவு வழங்கி வந்தார். 

ஒரு நாள், ஒரு மாட்டு வண்டிப் பயணத்தின் போது சுவாமி அவளிடம் "சுப்பம்மா! உனக்கு என்ன வேண்டும்?" என்று மெதுவாகக் கேட்டார். யாரும் இல்லை என்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, "சுவாமி! எனக்கு எதுவும் வேண்டாம். எனினும்நான் இவ்வுலகை விட்டுப் பிரியும் நேரத்தில்தயவு செய்து உமது தெய்வீகக் கரங்களால் என் வாயில் சில துளிகள் தண்ணீரை ஊற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கோரினாள். அவளுடைய கோரிக்கையை நிச்சயமாக நிறைவேற்றுவதாக சுவாமி உறுதியளித்தார்.

 

🌷தேடித்தேடி சோறூட்டிய அன்புத் தாய்:

பல்வேறு காரணங்களால், ஆரம்ப காலங்களில் சுவாமி புட்டபர்த்தி கிராமத்திலிருந்து தனித்திருக்க வேண்டியிருந்தது. சில நாட்கள் குன்றுகளில், சில நாட்கள் குகைகளில், சில நாட்கள் ஊருக்கு வெளியே உள்ள பிரதேசங்களில் என சுவாமி வெவேறு இடங்களில் தங்குவது வழக்கம். அந்த காலகட்டங்களில், சுவாமி சரியாக உணவு உட்கொண்டாரா என்ற கவலை சுப்பாம்மாவை பிடித்துக் கொள்ளும். சுவாமிக்கென விதவிதமான உணவு வகைகளைத் தயாரித்து, அதை சுமந்துகொண்டு ஒவ்வொரு இடமாகத் தேடிச் செல்வது சுப்பாம்மாவின் வாடிக்கை. எங்காவது ஓரிடத்தில் அவரைக் கண்டு பிடித்து பரிமாறி, சாப்பிடவைத்து மகிழ்வார் சுப்பம்மா. 


 அப்படி நடந்த ஒருநாள் சுப்பம்மா சுவாமியிடம், "சுவாமி! நீங்கள் எந்த உணவை எடுத்தாலும் எனக்கும் கொஞ்சம் பரிமாறுங்கள்!" என்றாள். சுவாமியும் ஒரு சிறிய இட்லியை எடுத்து, சட்னியில் தோய்த்து அவளுக்கு உன்னக் கொடுத்தார். அவளுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அந்த சிறு துண்டு இட்லியை மிகுந்த திருப்தியோடும் மகிழ்ச்சியோடும் சாப்பிட்டாள். இந்த சம்பவத்தைப் பல வருடங்கள் கடந்தும் கூட, சுவாமி மிகவும் சிலாகித்து தன்னுடைய தெய்வீகப் பேருரையின்போது நினைவு கூர்ந்தார்.

சுவாமி கிராமத்தில் உள்ள ஹரிஜனங்கள் மீது அதீத பாசம் வைத்திருந்தார். எனவே ஆங்காங்கே அவர்கள் சுவாமியை தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். ஜாதிக் கட்டுப்பாடுகள் அதிகமிருந்த அந்த காலகட்டத்தில் கூட, பிராமனாப் பெண்மணியான சுப்பம்மா சுவாமியுடன் ஹரிஜன வீடுகளுக்கும் செல்வார். ஒரு பிராமணப் பெண் தன் வீட்டிற்கு மதிய உணவுக்கு வந்திருக்கிறாள் என்று அவர்களே கூட  மிகவும் பயந்து விடுவர். இருப்பினும் சுப்பம்மா, சுவாமியின் பாதையைப் பின்தொடர்ந்து எந்த தயக்கமும் இன்றி செல்வார்.

 

🌷இறந்த கணவர் மீண்டும் பார்த்த  சம்பவம்:

தன் உறவினர்கள் அனைவரும் அவளைக் கைவிட்டபோதும், சுப்பம்மா சுவாமிக்கு அளப்பரிய சேவை செய்தார். "என்னை யாரும் கவனிக்கத் தேவையில்லை. சுவாமி மட்டும் என்னுடன் இருந்தால் போதும். அவர் என்ன சொன்னாலும் நான் கீழ்ப்படிவேன்" என்று உறுதியாகச் சொன்னாள். சுவாமி மீது அவளுக்கு இருந்த நம்பிக்கை அப்படிப்பட்டது.  ஒரு நாள் சுவாமி, "சுப்பம்மா! மறைந்த உங்கள் கணவரை ஒருமுறை பார்க்க விரும்புகிறீர்களா?" என்றார் விளையாட்டாக. அதற்கு அவள் "சுவாமி! எனக்கு அப்படியொரு ஆசை இல்லை. இல்லாத ஒருவருடன் எனக்கு என்ன தொடர்புஉமது மகிமையைக் காண அவருக்கு விதிக்கப்படவில்லைஅதனால் இறந்தார். எனக்கு அந்த அதிர்ஷ்டம் உள்ளதுஅதனால் நான் உங்களுக்குச் சேவை செய்ய முடிகிறது" என்று பதிலளித்தாள்.  ஆனால் சுவாமியோ சுப்பம்மாவிடம் கொஞ்சம் குறும்பாக, "ஒரு முறை உங்கள் புறத்தே சென்று யார் இருக்கிறார்கள் என்று பாருங்கள்!" என்றார். அவர்களது வீட்டு முற்றத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது. சுப்பம்மாவின் கணவர் மறைந்த நாராயண ராவ் மரத்தடியில் அமர்ந்து சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தார்! அந்தக் காட்சியைக் கண்ட அவளால் அவன் மீதான அவமதிப்பை அடக்க முடியவில்லை. "இவர் எப்படி இறந்த பிறகும் இப்படிப்பட்ட கெட்ட பழக்கங்களை விட்டுவிடவில்லை?" என்று சுப்பாம்மா சொல்ல ஆரம்பித்து விட்டாள். "எனக்கு உன் முகத்தைப் பார்க்கப் பிடிக்கவில்லை" என்று கோபமாகத் திரும்பினாள்.  வேறெவரையும் அணுகாது சுப்பம்மா எப்போதும் சுவாமியையே நினைத்துக் கொண்டிருந்தாள். சுவாமியுடன் அவளுக்கு இரத்த உறவு இல்லையென்றாலும், மனதளவிலும் ஆன்மீக அளவிலும் அவருடன் நெருக்கமாகப் பிணைந்திருந்தாள். தன் இறுதி மூச்சு வரை சுவாமியின் சேவையிலேயே ஈடுபட்டு வந்தார்.


🌷பிரகலாதனை விஞ்சிய பக்தி:  

ஒருமுறை சுவாமி, தொடர்ந்து பத்து நாட்கள் சென்னையிலேயே தங்க வேண்டியிருந்தது. இரண்டாம் உலகப் போர் நடந்த நாட்கள் அவை; அந்த சமயத்தில் சுப்பம்மா  தன் இறுதி மூச்சை விட்டாள். அவரது தாயும் உறவினர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர். "அவளுடைய கடைசி நேரத்தில் அவளுக்கு தரிசனம் தருவதாகவாயில் நீர் துளிகள் வார்ப்பதாக சாய்பாபா வாக்கு கொடுத்தார். ஆனால்  அவள் ஏற்கனவே இறந்துவிட்டாள்இப்போது சாயிபாபா அவள் இறந்த உடலைக் கூட பார்க்க வரவில்லை" என்று பேசினர்.

சுவாமி வந்து சேர்ந்தபோது, "சுவாமி! கர்ணம் சுப்பம்மா நேற்று இரவு தன் உடலை  விட்டுச் சென்றுவிட்டார்;  அவள் 'சாய்ராம்! சாய்ராம்! என்று சொல்லிக் கொண்டிருந்தாள்” என்றனர். அதோடு, உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். சுப்பம்மாவின் தாயும், சகோதரிகளும், சுவாமியைப் பார்த்து, “பாபா! நீங்கள் வந்து தன் வாயில் சில துளிகள் தண்ணீர் ஊற்றுவீர்கள் என்று சுப்பம்மாவுக்கு தன் கடைசி நிமிடம் வரை பெரும் நம்பிக்கை இருந்தது. இறுதியில் ஏமாற்றத்துடன் இறுதி மூச்சை விட்டாள். இவ்வளவு காலம் உமக்கு சேவை செய்த ஒரு பக்தையின் கடைசி ஆசையை உங்களால் நிறைவேற்ற முடியவில்லையாஇது அவளுடைய விசுவாசமான சேவைக்கான வெகுமதியா?" என்றனர். சுவாமி  அவர்களிடம் உறுதியாகச் சொன்னார், "அவளுக்கு எதுவும் நடக்கவில்லை. நீங்கள் அமைதியாக இருங்கள்". அவர்கள் ஆச்சரியப்பட்டனர் "எப்படிஏற்கனவே அவள் உடல் முழுவதும் எறும்புகள் உலவ ஆரம்பித்துவிட்டன. அவளுக்குள் உயிர் இல்லை!" என்றனர். சுவாமியோ, "அவள் உடலை விட்டு வெளியேறும் நேரத்தில் அவள் வாயில் சில துளிகள் தண்ணீரை ஊற்றுவேன் என்று நான் அவளுக்குச் சொன்னேன்நான் சொன்னதைத் திரும்பப் பெறமாட்டேன்" என்று தன வாக்குறுதியை தெரிவித்து அமைதிப்படுத்தினார். 

சுப்பம்மாவின் சடலத்தை மூடியிருந்த துணியைக் கழற்றி, சுவாமி "சுப்பம்மா! சுப்பம்மா!" என்றார். கண்களைத் திறந்து சுவாமியின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள் சுப்பம்மா. ஆனந்தக் கண்ணீரும் நன்றியுணர்வும் பெருகின. அந்தக் காட்சியைப் பார்த்த ஒவ்வொருவரும் வியந்து போனார்கள். "சுப்பம்மா மீண்டும் உயிர் பெற்றாள்!" என்று கூச்சலிட்டார்கள்.

ஆனால்  உண்மையில் நடந்தது என்னவென்றால், சுப்பம்மா சுவாமியின் பொருட்டு மீண்டும் உயிர் பெற்றிருந்தாள்.   நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் சுவாமியின் கையைப் பிடித்துக் கொண்டு "சுவாமி! பல வருடங்களுக்கு முன்பு எனக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக நீங்கள் வந்திருப்பது எவ்வளவு மகிழ்ச்சி! அந்த வாக்குறுதி இன்னும் நினைவிருக்கிறதா ஸ்வாமிநீங்கள் எவ்வளவு இரக்கமுள்ளவர்!' என்றாள். சுவாமி விபூதி வரவழைத்து அவள் நெற்றியில் பூசியபடி, "சுப்பம்மா! இதுவரை இருந்த கவலையெல்லாம் நீங்கி விட்டது அல்லவா? கடைசி நேரத்தில் சுவாமி உங்கள் பக்கத்தில் இல்லையே என்று கவலைப்பட்டீர்கள். இப்போது சுவாமியைப் பார்த்தீர்கள்அவருடைய வார்த்தைகளைக் கேட்டீர்கள்கைகளையும் பற்றிக்கொண்டீர்கள். இப்போது நிம்மதியாக கண்களை மூடுங்கள்"என்றார். மேலும் சுவாமி சுப்பம்மாவின் வாயில் சில சொட்டுகள் துளசி நீரை ஊற்றினார். சுப்பம்மா நிறைவுடன், "இன்னும் என்ன வேண்டும் சுவாமி! நான் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் உடலை விட்டுச் செல்கிறேன். சாய்ராம்! சாய்ராம்!" என்றபடி  முக்தி அடைந்தாள். சுவாமி மீது சுப்பம்மாவின் பக்தியும் சரணாகதியும், அவ்வாறே அவள் மீதான ஸ்வாமியின் கருணையும், விவரிக்க முடியாதவை.  சுப்பம்மாவின் பக்தி நாராயணனின் மீது பிரஹலாதன் வைத்திருந்த பக்தியையும் மிஞ்சியது.

சுப்பம்மாவின் மறைவுக்குப் பிறகு ஏறக்குறைய நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, சுவாமியின் பிறந்தநாளை முன்னிட்டு புட்டபர்த்தியில் 'கர்ணம் சுப்பம்மா நகர்' என்ற பெயரில் 60 வீடுகள் கொண்ட ஏழைகளுக்கான குடியிருப்பு வளாகத்தை கட்ட ஏற்பாடு செய்தார் சுவாமி. பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் அவதார வரலாற்றில் சுப்பம்மாவின் பெயர் என்றென்றும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.

 

மூலம் : சாயி இலக்கியங்கள் மற்றும் இணையம்

✍🏻 கவிஞர் சாய்புஷ்கர்

 


புனிதஸ்தலமாகிய புட்டபர்த்தியல், பகவான் ஶ்ரீ சத்யசாயி பாபா பிறந்த வீடு இன்று சிவன்கோவிலாக அமைக்கப்பட்டுள்ளதை அனைவரும் அறிவோம். அதேபோல, ஶ்ரீமதி. கர்ணம் சுப்பம்மா அவர்களுடைய இல்லம் எப்படி இருந்தது என்று சிலர் வியந்தருக்கலாம்

சில ஆண்டுகளுக்கு முன்புவரை அந்த வீடு கம்பீரமான தூண்களைக் கொண்ட ஒரு மாளிகைபோல சுவாமியின் (பிறந்த) இல்லத்திற்கு அருகிலேயே இருந்தது. ஆனால் தற்போது அது இல்லை, நிலமாக்கப்பட்டு விட்டது.  

இருப்பினும், யாரோ சில பயணிகள் “ஶ்ரீமதி. சுப்பம்மா அவர்களின் இல்லத்தற்குள் சென்று அங்குள்ள புகைப்படங்களை எல்லாம் கண்டு வியப்பதான ஒரு வீடியோ யூட்டியூப்பில் காணமுடிந்தது. 
அனைவரும் அதைக் கண்டுமகிழ இங்கே பகிர்கிறோம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக