தலைப்பு

வெள்ளி, 29 ஜூலை, 2022

பாபாவின் தரிசனம் பெற்ற போது ஏற்பட்ட பேராச்சரியங்கள்!! - மனம் திறக்கிறார் ஆவியியல் நிபுணர் ரிவால்டோ

எவ்வாறு ஒரு அமானுஷ்ய சக்திகளின் ஆராய்ச்சியாளர் பாபாவை தரிசித்து அந்த தரிசன அனுபவத்தையும்... சாதாரண மனிதர் தனது புறக்கண்களால் காண முடியாத சூட்சுமங்களையும் கண்டு அதனை துல்லியமாக வெளிப்படுத்தி பாபா யார்? என்பதை உலகிற்கு எடுத்துரைத்த ஓர் அரிய பதிவு சுவாரஸ்யமாக இதோ...


ஒரு ஆன்மீக நிறுவனம் இருக்கிறது... அதன் பெயர் ஆவியியல் (Spiritism).. அமானுஷ்ய இயல் என்று சற்று ஆழமாக அதை மொழி பெயர்க்கலாம்... "இறந்த பிறகு என்ன நேர்கிறது? ஆன்மா எங்கே செல்கிறது? அது மீண்டும் பிறக்கிறதா? அந்த ஆன்மாவின் விடுதி மற்றும் அதனை தொடர்பு கொள்ள முடியுமா? போன்றவற்றை ஆராய்ச்சி செய்கிறார்கள் 1850 களிலேயே ஃபிரெஞ்சுகாரர்கள்... அந்த இயக்கம் அப்படியே நீண்டு பிரேசிலிலும் கிளை பரப்புகிறது... 

உடம்பிற்கு அப்பால் நிகழ்வதை புறக்கண்களால் காண முடியாத காட்சிகளை நாம் உடம்பைக் கடந்தால் மட்டுமே காணவோ அனுபவிக்கவோ முடியும்... உடம்பை கடப்பதற்கு தியானமே விமானம்‌...! இதில் அமினுஷ்ய சக்தி பெற்று விளங்குகிறவர் பிரேசிலை சேர்ந்த ரிவால்டோ... பிரேசிலிலும் பாபாவின் சேவா நிறுவனம் இயங்கிவருகிறது! 

அதன் உண்மையையும் பரவிவருகிற தன்மையையும் உணர்ந்து அமானுஷ்ய இயல் நிறுவனத்திலிருந்து இருவர் புட்டபர்த்திக்கு வருகிறார்கள்...

பிரேசிலிலிருந்து புட்டபர்த்திக்கு ஒரு பயணம்... அந்த நிறுவனத்தினர் அங்கே பெரிதாக என்ன பாபா புரிந்துவிடுவார்? அவை எல்லாம் ஏமாற்று வேலை என கற்பனை செய்து கொள்கிறார்கள்! 


ஆன்ம ஞானம் அடைகிற வரை மனிதனை ஆட்டிப் படைப்பது வெறும் அவனது கற்பனைகளே! ஆனால் ரிவால்டோ கற்பனை செய்யாமல் பிரசாந்தி நிலையத்தில் என்ன தான் நடக்கிறது என்பதை நேரடியாக காண வேண்டும் என்பதால் கற்பனை வலைகளில் சிக்காமல் கடல் கடந்து பயணிக்கிறார்! பொதுவாக மனிதன் கற்பனை செய்வதும் எதார்த்த சத்தியமும் வேறு வேறு! ரிவால்டோ சத்தியத்தைத் தான் தரிசிக்கப் போகிறோம் என்பதையே உணராமல் சத்தியத்தை தரிசிக்க வருகிறார்!

தரிசனத்தில் அமர்ந்து கொள்கிறார் பிரசாந்தி நிலையத்தில்... தான் பெரியவன்.. அமானுஷ்ய சக்தி பெற்றவன் என்றெல்லாம் வெளிப்படுத்தித் தனி சலுகை எதிர்ப்பார்க்காமல் அகந்தை அற்று பக்தரோடு பக்தராக அமர்ந்து காத்திருக்கிறார் ரிவால்டோ.. முதலில் அவர் கண்களில் கவர்வது பிரசாந்தி நிலைய வளாகத் தூய்மை... சர்வ அமைதியாக சூழ்நிலை உயிர்ப்போடிருப்பது! பக்தர் பரவசமுடன் பாபாவின் வழி மீது விழி வைத்து காத்திருக்கும் ஆன்மப் பொறுமை... இவற்றை எல்லாம் உற்று கவனிக்கும் ரிவால்டோ ஆச்சர்யப்படுகிறார்! அவர் காண்கிற பாபாவின் பக்தர்கள் பல்வேறு மத/ இன/மொழி/தேசக்காரர்களாக இருப்பதை கவனித்தும்... அனைவரும் சாதாரண தரையில் அமர்ந்திருப்பதையும் கவனிக்கிறார்! அதுதான் ஆன்மீகம் என்பதெல்லாம்‌... உயிர்கள் அனைத்தும் ஒன்றே எனும் ஞான சமத்துவம் அது!


பாபா தரிசனத்திற்காக வெளியே வருகிறார்.. மெதுமெதுவாக உதடுகளில் புன்னகையைச் சிந்தி மேலும் சூழ்நிலையை புனிதப் படுத்தி நடந்து வருவதை நேருக்கு நேராக தரிசிக்கிறார் ரிவால்டோ! அவர் ஏற்கனவே அமானுஷ்ய சக்தி பெற்றவர் மற்றும் புறக்கண்களுக்கு புலப்படாத காட்சிகள் எல்லாம் காண்பதற்கு ஆன்மீக அகப்பயிற்சி பெற்றவர் என்பதால் அவருக்கான தரிசனம் அவரை புல்லரிக்கப் செய்கிறது ! ஒன்றை நாம் கவனிக்க வேண்டும்... அவர் பாபா பக்தரே அல்ல.. என்ன தான் நடக்கிறது என பார்க்க வந்தவரே... தான் என்ன பார்க்கிறோமே அதனை அவ்வாறே அவரது நிறுவனத்திற்கு பகிர வேண்டிய "அமானுஷ்ய இயல்" நிறுவன தூதுவரே! பாபாவின் தெய்வீகப் பேரழகை தரிசித்து பாபா இந்த உலகத்தவர் இல்லை என்பதை உடனே உணர்ந்து கொள்கிறார்! வேறு உலகத்தில் இருந்து இறங்கி வந்தவர் என்பதை ரிவால்டோ கண்டுணர்கிறார்! எங்கெல்லாம் பாபா நடக்கிறாரோ... திரும்புகிறாரோ அங்கெல்லாம் தேவதைகள் அவர் கூட இருப்பதை நேருக்கு நேராக காண்கிறார்... இதை அவர் எதிர்பார்க்கவே இல்லை... இவரை அனுப்பிய நிறுவனமோ அங்கே எதுவும் இல்லை..‌பாபா வெறும் பித்தலாட்டக்காரர் என்பதாகத்தான் நமக்கு செய்தியே வரப்போகிறது என்பதாக கற்பனை செய்தபடி காத்திருக்கிறார்கள்... 


ஆனால் ரிவால்டோ அனுபவம் வேறுவிதமானதாக இருக்கிறது! பாபா பக்தர்கள் முன் நடக்கிறார்... புன்னகை செய்கிறார்.. சில கடிதங்களை வாங்குகிறார்... பாபாவிடம் இருந்து ஊதா நிற ஒளிக்கதிர்களை ஸ்ரீ ரிவால்டோ கண்ணுக்கு முன் காண்கிறார்... இதனை ஒரு அதி நவீன காமெரா வழியாக ஒரு விஞ்ஞானி காணொளி எடுத்ததை இன்றளவும் நாம் சைதன்ய ஜோதியில் திரையிடப்பட கண்டுவருகிறோம் (யுகத்திலும் பகிர்ந்திருக்கிறோம்)! ஆனால் ரிவால்டோ அதே அனுபவத்தை நேருக்கு நேராக காண்கிறார்... அந்த ஊதா நிற ஒளிக்கதிர்களை பாபா பக்தர்களோடு பரவவிட்டு அவர்களின் தீய எண்ணங்களை அழித்துவருவதை ரிவால்டோ காண திகைத்துப் போய்விடுகிறார்...! பேச்சற்று உறைகிறார்! பிரசாந்தி நிலையம் வந்து இதனை தரிசனம் செய்ததே பாபாவின் பேரன்பும் கருணையாலும் தான் என அவர் தெள்ளத்தெளிவாக உணர்கிறார்! 

தன் வாழ்வே நிறைந்துவிட்டதாக உணர்கிறார்...

ஆவியியல் ஆராய்ச்சியிலும் நிறையாத அவர் நன்நெஞ்சு பாபாவின் அத்தகைய தரிசன அனுபவங்களில் நிறைந்துவிடுகிறது!


அப்படியே பிரேசிலுக்கு சென்று தான் அனுபவித்த ஒவ்வொன்றையும் அவர்களோடு மனம் திறந்து பகிர்ந்து கொள்கிறார்! பாபாவின் தெய்வீக தரிசனம் மனித இனத்தையே உயர்த்திக் கொண்டிருக்கிறது என்பதை திறந்த மனதோடு தன் நிறுவன அங்கத்தினரிடம் அறிவிக்கிறார்... எதிர்மறை சிந்தனையோடு ரிவால்டோ உடன் பிரசாந்தி நிலையம் சென்ற இன்னொருவரும் தானும் ஆச்சர்யமே அடைந்தேன் என்பதை ஒப்புக் கொள்கிறார்! இறுதியில் ஒன்றை அறிவிக்கிறார் ரிவால்டோ... அதுதான் மிகவும் முக்கியமானது.. பாபா யார்? என்பதற்கான ஒருவரி பதில்... அதில் ஒரு பிரபஞ்சமே ஒளிந்திருக்கிறது...

"பாபா.. கடவுளரின் கடவுள் " (The God Of Gods) எனும் அவரது உயிர்ப்பான வரி... அது சாதாரண வரியே அல்ல ஸ்ரீ ஷிர்டி பாபா மலராய்த் தவழ்ந்த கோதாவரி! 


(Proof : Sri SathyaSai and Yogis / Page no: 167) / Author : Jantyala Suman babu / Eng Translation : pidatala Gopi Krishna/ in tamil : Kavingar VairaBharathi | Source: Article Written By Leonardo Gattar for Sanadana Sarathi ) 


பாபா யார்? என்பதை கண்டுணர நமக்கு அக விரிவடைதல் அவசியப்படுகிறது! கடல் எப்படிப்பட்டது? அதன் ஆழம் எத்தகையது? என்பதை கிணற்றிலிருந்தபடி கற்பனை செய்வதா நியாயமானது? நீச்சல் கற்க தண்ணீரில் குதித்தே ஆக வேண்டும்... நீச்சல் பற்றிய புத்தகம் மட்டும் பயின்று.. தான் படித்தவற்றை பாடம் எடுப்பதால் மட்டும் அனுபவம் வாய்ப்பதில்லை... அப்படியே பாபாவிடம் மூழ்கியே பாபாவை உணர முடியும்! அகமாற்றம் அடைவதே மூழ்குவதற்கு முன்பான முழுகுதல்... அது ஒன்றே ஞானஸ்நானம்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக