தலைப்பு

திங்கள், 4 ஜூலை, 2022

மூன்றாம் உலக மாநாட்டிற்கு அமெரிக்க கல்வியாளரை கனவில் அழைத்த பாபா!

பாபா தன்னோடு சேர்த்துக் கொள்ள மனித சேவையில் ஈடுபடுத்திக் கொள்ள எவரையும் எந்த நேரத்திலும் எப்படியும் அழைத்துக் கொள்வார் என்பதையும் பாபா பக்தர்களுக்கு அளிக்கும் கருணையையும் அன்பு தோய்ந்த அக்கறையையும் உணர்த்தும் சம்பவங்கள் சுவாரஸ்யமாக இதோ...


சுவாமியின் 55வது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்புகளின் மூன்றாம் உலக மாநாடு பிரசாந்தி நிலையத்தில் 1980ல் நடக்கிறது.  அப்பொழுது கர்நாடக மாநில ஆளுநர் கோவிந்த் நாராயணன் லட்சக்கணக்காக கூடியிருக்கும் பக்தர்களின் முன் மனம் திறக்கிறார் "தந்தையின் வளர்ப்புத் திறமையையும், தாயின் அன்பையும் பாபா நம்மிடம் காட்டுகிறார்" என திருக்குறள் போல் சுருங்கச் சொல்லி பாபாவின் சர்வ லட்சணத்தையே அடக்கிவிடுகிறார்! சொல்லுக்குச் சொல் அத்தனை சத்தியம்!


அதே திருக்கூட்டத்தில் அமெரிக்க ஒகையோ ஸ்டேட் யுனிவர்சிட்டி துணைதலைவர் டாக்டர் வெனிட்டோர்ரே என்பவர் மேடையில் மனம் திறக்கிறார்.. 

"நான் வருவேன் என கனவிலும் நினைக்கவில்லை... என் மனைவிக்கே முதன்முதலில் அழைப்பு விடுத்தார்...அதுவும் கனவில்.. சுவாமியின் கனவை பகிர்ந்து என்னையும் என் மனைவி அழைக்கிறாள்... அழைப்பிதழ் இல்லாமல் எப்படி செல்வது? என அவளிடம் எனக்கான தயக்கத்தைச் சொல்கிறேன்! ஒரு வாரத்துக்கு பிறகு சுவாமி என் கனவிலேயே தோன்றி "உலக சம்மேனத்துக்கு நீ என்று வருகிறாய்? எனக் கேட்கிறார்.. "சுவாமி எனக்கு அழைப்புக் கடிதம் கிடைக்கவில்லையே... சம்மேளனத்திற்கு என்னால் கலந்து கொள்ள இயலுமா?" எனக் கேட்கிறேன்... நாலைந்து நாட்களில் அழைப்புக் கடிதம் வீடு தேடியே வந்துவிட்டது! இங்கு வந்த பிறகு தான் தெரிந்தது சுவாமி என்னை இங்கே அழைக்க உத்தரவிட்டிருக்கிறார் என..." என்று மெய் சிலிர்த்துப் பேசுகிறார்! அந்த மேடையில் பேசுகிற போது அவரால் தன்னையே நம்பமுடியவில்லை...‌ பாபாவின் கருணையில் சொல் மறந்த சுகானுபவ நிலையை எய்துகிறார்!


"இன்றைய கல்வியில் உலக விஷயங்களே இருக்கின்றன... தர்மத்துக்கும் மனிதத்தன்மைக்கும் அதில் இடம் இல்லை... அமெரிக்கா போக நமக்கு வழி தெரியும்... ஆனால் காசிக்கு போக வழி தெரியாது! நன்றாக உடற்பயிற்சி செய்வார்கள்.. ஆனால் பத்மாசனம் இடத்தெரியாது! தாவர இயல் தெரியும் ஆனால் துளசியின் பெருமை தெரியாது! இது இன்றைய கல்வி கற்பிக்கும் சீர் அற்ற நிலை!" என்கிறார் மாநாட்டில் பாபா! பாபாவை தவிர யாராலும் வலிக்காத சம்மட்டி அடியை வழங்க முடியாது! 

ஒருமுறை இப்படிப் பயிற்சி வந்த மாணவர்கள் இரவில் சினிமா பார்க்க செல்லலாம் என திட்டம் தீட்டி விட்டு ஒரு சிலர் தீர்த்தமும் அருந்திவிட்டு பாதி ராத்திரி படை எடுக்கிறார்கள்... அடுத்த நாள் காலை அந்த மாணவர்களின் இரவில் நிகழ்ந்த நிகழ்ச்சி நிரலை ஒவ்வொன்றாக... எங்கே சென்றனர் எப்படி சென்றனர்.. எந்த இடம் சென்றனர்.. என்ன செய்தனர் என ஒவ்வொன்றாக பாபா விவரிக்க... அவர்களுக்கு ஏற்பட்ட படபடப்பிலும் பயத்திலும் பாபாவின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டு... அதுமுதல் பாபா இல்லாத இடமே இல்லை... எங்கு இருந்தாலும்... நாம் என்ன செய்தாலும் நம்மை அவர் கவனிக்கிறார் எனும் ஓர் ஆன்மத்தெளிவை அடைந்து விடுகிறார்கள்!


கோழிக்கோட்டில் அரசு ஊழியர் ஒருவரை வேலைக்கு வராதபடி தற்கால தடை ஒன்று விதித்திருக்கிறார்கள்... தன்மேல் வீண்பழி சுமத்தி இவ்வாறு செய்ததால் மிகுந்த வருத்தமுடன் பாபாவுக்கு கடிதம் எழுதுகிறார்... பதில் கடிதம் வருகிறது.. தினமும் 108 முறை ராமநாமம் எழுதச் சொல்கிறார் பாபா..‌அவரும்  அவ்வாறே தொடர்ந்து எழுத... 6 ஆவது நாளே அவரது தற்காலிக பணிநீக்கம் ரத்து செய்யப்படுகிறது...! பாபா தன் நாமத்தை எழுதச் சொல்லவே இல்லை.. ராம நாமத்தையே எழுதச் சொல்கிறார்.. ஏன்? காரணம்- ராமநாமமும் சாயிநாமமும் வேறு வேறு அல்ல...! இரண்டும் ஒன்றே என்பதன் ஆழமானப் புரிதலே இந்த அனுபவம்! 


திருவனந்தபுரத்தில் நடுத்தரவயதினரான ஒரு பெண்மணி.. அதுவரை அவர் பாபாவை தரிசித்ததே இல்லை... அவருடைய மகளும் மருமகனும் பாபா பக்தர்கள்...‌இப்படி இருக்க அந்த பெண்மணிக்கு புற்று நோய் ஏற்படுகிறது... பாபாவுக்கு கடிதம் எழுதுகிறார் உருக்கமாக... பாபா பதிலுக்கு விபூதி பொட்டலம் அனுப்புகிறார்... கவரைப் பிரித்த உடனேயே கண் கலங்குகிறார்... அந்த விபூதி பிரசாதத்தினை உண்கிறார்... புற்று நோய் பாபாவின் விபூதிப் பேராற்றலை தாக்குபிடிக்க முடியாமல் தோற்றுப் போய் ஓடிவிடுகிறது!


நேர்காணல் அறையில் நிகழும் சில வைபவங்களை நூலாசிரியர் விவரிக்கிறார்...ஒரு பக்தையின் வேண்டுகோளுக்கு இணங்க குழந்தைக்குப் பெயர் சூட்டுகிறார்... பெயர் சூட்டியதும் அந்த பெயரின் பொருளையும் விளக்குகிறார்...பிறகு சகோதர பகை கூடாது! என ஒரு இளைஞனுக்கு அறிவுறுத்துகிறார்... குடும்பங்களில் சாந்தி நிலவ வேண்டும் முதலில்... அப்போது தான் சமுதாயம் அமைதியாக இருக்கும் என்கிறார்! அவரவர்களிடம் அவரவர் தாய்மொழியிலேயே உரையாடுகிறார்! 

     காண வந்த காஷ்மீர் குடும்பத்துடன் ஹிந்தியில் உரையாடி மகிழ்ச்சியை அவர்களுக்கு ஏற்படுத்துகிறார்! அந்தத் தாயின் குழந்தையின் பெயர் சூட்டி அதன் பொருள் விளக்கி.. சற்று நேரம் கடந்து பெயர் நினைவிருக்கிறதா? என அக்கறையோடு விசாரிக்கிறார்... சிருஷ்டிக்காக கைகளை அசைக்கிறார்... பாபாவின் திருவுருவம் பதித்த டாலரோடு கூடிய தங்கச் சங்கிலி பேரன்போடு தருகிறார்... அந்த காஷ்மீரி தாயோ உணர்ச்சி மிகுதியில் பாபாவின் பாதத்தை தனது கரங்களால் பற்றுகிறார்... ஓரிரு துளிகள்... பாதத்தை குளிப்பாட்டுகிறது.. மழை விட்டபின் தூறும் தூவானமாய் நேர்காணல் அறையில் அதைக் கண்டவர் கண்களும் கசிகின்றன...


(ஆதாரம் : கருணை பொழியும் ஸ்ரீ சத்ய சாயி / பக்கம் : 136 - 143 / ஆசிரியர் : பி.எஸ் ஆச்சார்யா ) 


ஒரு தாய் சமைத்துத் தருவது போல் நமது பிரபஞ்சத் தாயான பாபா நமக்கு சிருஷ்டித்துத் தருகிறார்... அதில் பாசம் கலந்திருக்கிறது.. இதில் பாசம் கடந்த பேரன்பு ததும்புகிறது! நமக்குள் இருக்கும் பற்றை களைவதற்கே பாபா நம் மீது பேரன்பு வைக்கிறார்! பாபாவின் அக்கறை ஒன்று மட்டுமே நம்மை உலக பந்தங்கள் எனும் அக்கரையில் இருந்து மறுகரை எனும் முக்தியில் சேர்க்கிறது! பாபாவின் பாதங்கள் ஒன்றே பாதுகாப்பான தோணி... மற்ற அனைத்தும் ஓட்டைத் தோணிகளே... "

முக்தியூர் போய்ச் சேருவதற்கு இறைவன் பாபா ஒருவரே நமக்கான ஒரே பிரபஞ்ச வழிகாட்டி!


   பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக