தலைப்பு

வியாழன், 7 ஜூலை, 2022

ஸ்ரீ வெங்கடகிரி ராஜா | புண்ணியாத்மாக்கள்

புண்ணியாத்மாக்கள்" என்னும் தலைப்பு கொண்ட இந்தப் புதிய தொடரில், பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா அவர்களின் அனன்ய பக்தர்களாக, அணுக்கத் தொண்டர்களாக வாழ்ந்து நமக்கெல்லாம் உதாரண புருஷர்களாகத் திகழ்ந்தவர்களை பற்றிக் காணவிருக்கிறோம்.  அந்த வரிசையில் இந்தப் பகுதியில் நம் இதயங்களைப் பரவசப்படுத்த வருகிறார் வெங்கடகிரி ராஜா இதோ..


பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் இளம் பிராயத்திலேயே (இருபதுகளில்) அவரிடம் வந்த வெகுசில அதிர்ஷ்டசாலிகளில் ஸ்ரீ வெங்கடகிரி ராஜாவும் ஒருவர். 


வெங்கடகிரி அரண்மனை 

வெங்கடகிரி சமஸ்தானத்தைப் பற்றி சொல்லவேண்டுமானால்,  1964ம் ஆண்டு சுவாமி ஒரு சொற்பொழிவில் பின்வருமாறு பேசியதைக் குறிப்பிடலாம், "வெங்கடகிரி பல நூற்றாண்டுகளாக, தர்மத்தை ஆதரிக்கவும், பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அரச குடும்பத்தின் தலமாக இருந்து வருகிறது. பல கோவில்கள் கட்டப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. எண்ணற்ற வேத பண்டிதர்கள் ஆதரித்து மேம்படுத்தப் பட்டுள்ளனர். ஆன்மிக ஆர்வலர்களின் நலனுக்காக ஏராளமான புத்தகங்கள்  அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். கோயில்கள் மற்றும் மடங்களின் (மத ஸ்தாபனங்கள்) மேம்பாட்டில், இப்போதும் கூட அரச குடும்பம் ஆர்வமாக உள்ளது. இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் புயலால் இந்த சமஸ்தானத்தின் நிலையும் அந்தஸ்தும் மூழ்கடிக்கப்பட்டுள்ளது"








🌷முதல் சந்திப்பு:

வெங்கடகிரி ராஜா ஸ்ரீ சர்வக்ஞ குமார கிருஷ்ண யச்சேந்திரா அவர்கள், கம்பீரமான உடலமைப்பு கொண்டவர், 

அவர் கிழக்கு மற்றும் மேற்கத்திய கலாச்சாரங்களின் சுவாரஸ்யமான கலவையாக இருந்தார். அவர் இங்கிலாந்தில் கல்வி கற்றவர், சர்வதேச சமூகங்களுடன் கலந்து வாழ்ந்தவர், ஆங்கிலேயரின் உச்சரிப்புடன் ஆங்கிலம் பேசும் திறன் வாய்ந்தவர், உயர்ந்த ஆளுமைத் தன்மையைக் கொண்டிருந்தவர். நடத்தையில் இளவரசர் ஆயினும்கூட, அவர் மத விஷயங்களில் ஒரு மரபுவழி இந்துவாகவே இருந்தார். அவர் சனாதன தர்மத்தின் மீது முழு நம்பிக்கை கொண்டிருந்தார். ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை தன் இஷ்டதெய்வமாக வணங்கி வந்தார்.

அவர் 1948ம் ஆண்டு, சுவாமியைப் பற்றி முதன்முறையாகத் தெரிந்து கொண்டார். அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் (சுமார் 100 பேர்) பெங்களூர் சென்று, சுவாமியின் அழைப்பை எதிர்பார்த்து ஆவலுடன் திருமதி.சாகம்மாவின் வீட்டிற்கு வெளியே காத்திருந்தனர். அவர்கள் வருகையைப் பற்றியும் அவர்கள் வெளியே காத்திருப்பது பற்றியும், சுவாமிக்கு சொல்லி அனுப்பினர். அதைக் கேள்வியுற்ற சுவாமி, "என்ன? அவர் தலையில் ஏதேனும் கொம்புகள் உள்ளதா? அவர் காத்திருக்கட்டும்; நான் அவரைப் பிறகு பார்க்கிறேன். என்றார். ஐந்து நாட்கள், காலை முதல் மாலை வரை காத்திருந்தும் சுவாமி தரிசனம் தரவில்லை. ஆனால் மறுபுறம், அவர்களின் வேலையாட்களுக்கு தரிசனமும் நேர்காணலும் கொடுத்தார். சுவாமி தங்களை ஒரு சோதனைக்கு உட்படுத்துகிறார் என்பது அரச குடும்பத்திற்கு தெளிவாகத் தெரிந்தது. இறுதியாக, பக்திமிக்க ராஜாவின் நம்பிக்கை மற்றும் ஆர்வத்துடனான காத்திருப்பு `பலனளித்தது, அரச குடும்பம் சுவாமியை சந்திக்க அழைக்கப்பட்டனர்.

அந்த சமயம், ஒரு தெய்வீக அதிசயம் நடந்தது. வெங்கடகிரி ராஜாவின் மகன் சில நாட்களாக அரிக்கும் தோலழற்சியால் பாதிக்கப்பட்டிருந்தான், தோலில் இருந்து துர்நாற்றத்துடன் திரவம் வெளியேறும். சிறுவனை உடல் முழுவதும் தொட்டு, குணமாக்கியதே சுவாமி  செய்த முதல் காரியம். அன்றிலிருந்து எக்ஸிமா காணாமற்போனது,  மிகுந்த அன்புடனும் கருணையுடனும் சிறுவனின் மோசமான நோயை உடனடியாகக் குணப்படுத்தினார் பகவான்.

 

🌷இறந்த தாய் தந்த புனித எச்சரிக்கை:

1950 ஆம் ஆண்டு, பகவான் முதன்முறையாக வெங்கடகிரி சமஸ்தானத்திற்கு விஜயம் செய்தார். 

அந்த சந்தர்ப்பத்தில் ராஜா சுவாமியிடம், தனது மறைந்த தாயாரை தரிசனம் செய்ய விரும்புவதாக கேட்டுக்கொண்டார். உடனே சுவாமி 'ரத்னம்மா! வா!' என்றழைக்க (சில வருடங்களுக்கு முன்பு இறந்துபோயிருந்த) ராஜாவின் தாய் ரத்னம்மா, அங்கிருந்த சுவரொன்றிலிருந்து ஸ்தூல சரீரத்துடன்  வெளிப்பட்டாள்!. சகஜமாக  ஒரு  உயிருள்ள மனுஷியாக வந்த தாயார்,  தன் மகனான வெங்கடகிரி ராஜாவிடம், "சுவாமி (பகவான் பாபா) நீ எப்பொழுதும் வழிபடும் ஸ்ரீராமனே ஆவார். குணாதிசயங்களில், ஸ்ரீ கிருஷ்ணரைப் போன்றவர். மாயையினால் உன் பார்வையில் இருந்து தப்பிக்கப் பார்ப்பார் .. . ஜாக்கிரதையாக இருந்து  அவரை ஒருபோதும் விட்டுவிடாதே" என்று உறுதியுடன் பேசினாள். சில நிமிடங்களுக்குப் பிறகு ராணியார் அங்கிருந்து மறைந்து விட்டார். இந்த தெய்வீகப் பேரதிசய அனுபவம் ராஜாவின் மனத்தில் சுவாமியின் மீதான பேரபிமானத்தை உருவாக்கியது.

 

🌷நாத்திகவாதியான இளவரசனுக்கு நாதனான சாயி:

1950 ஆம் ஆண்டு சுவாமியை வெங்கடகிரிக்கு வருமாறு வேண்டினார் ராஜா. சுவாமி அவருடைய வேண்டுகோளுக்கு இணங்கி "நீங்கள் கார் அனுப்புங்கள், நான் வருகிறேன்!" என்றார்.  அந்தக் காலகட்டத்தில் சுவாமியிடம் கார் இல்லை. சுவாமியை வெங்கடகிரிக்கு அழைத்து வரும் பணியை வேறு பணியாள் யாரிடமும் கொடுக்காமல், ராஜா தனது இளைய மகனிடமே (இளவரசரிடமே) கொடுக்க விரும்பினார்.  இருப்பினும், இளவரசர் அப்போது நாத்திகராக இருந்ததால், அவர் அந்தப்பணியை விரும்பவில்லை; அவருக்கு பாபா  மீது நம்பிக்கை இல்லை! எனவே, சுவாமியை  அழைத்து வர ராஜா வேறொருவரைத் தேட வேண்டியிருந்தது.


இதற்கிடையில், அதே நாள் நள்ளிரவில் இளவரசரின் கனவில் பகவான் பாபா தோன்றி, அவருக்கு சில மாம்பழங்களை அளித்து உண்ணும்படி கூறினார். அந்த மாம்பழங்களைச் சாப்பிட்ட கணத்தில், ஸ்வாமியை உரிய மரியாதையோடு உடனே வெங்கடகிரிக்குக் கொண்டு வர வேண்டும் என்ற ஆவல் அவருக்குள் உருவானது. இதெல்லாம் இளவரசர் கனவில் தான் நடந்தது. இருப்பினும், அவரிடம் மனமாற்றம் உடனடியாக ஏற்பட்டிருந்தது.

ஸ்வாமியை வெங்கடகிரிக்கு அழைத்து வருவதற்காக, தந்தையிடம் கூறிவிட்டு நல்லிரவு இரண்டு மணிக்கே புட்டபர்த்தி நோக்கிக் கிளம்பினார் இளவரசர். ஒவ்வொரு  முக்கியமான நகரத்தைக் கடக்கும்போதும், அவர்களின் பயணத்தின் விவரங்களைத் தந்தி அனுப்புமாறு தந்தை தனது மகனிடம் கூறினார். ஏனென்றால் அப்போது தான் சுவாமிக்கான  பூர்ணகும்பம், கவசம் அணிந்த யானைகள் மற்றும் பிற உபகரணங்களுடன் வரவேற்பு ஏற்பாடு செய்ய ஏதுவாக இருக்கும் என்பது தந்தையாராகிய ராஜாவின் கணக்கு. இளம் இளவரசர் புட்டபர்த்தியை அடைந்த நேரத்தில், ஸ்ரீ கிருஷ்ணாஷ்டமி விழாவைக் கொண்டாட ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருந்தன. அப்போது சுவாமி பழைய மந்திரியில் தங்கியிருந்தார். சுவாமியை தரிசனம் செய்ய பழைய மந்திருக்கு சென்றபோது, நீல நிறத்தில் கிருஷ்ணராகநெற்றியில் கஸ்தூரி திலகம், மயில் தோகை, கிரீடத்துடன் சுவாமி இளவரசருக்கு அற்புத தரிசனம் தந்தார்! இளவரசர் பக்தியிலும் ஆனந்தத்திலும்  திளைத்தார். அதிகாலையில் இளவரசர் கொண்டு வந்த காரில் பகவான் வெங்கடகிரிக்கு புறப்பட்டார்.

பயணத்தின் போது காரை நிறுத்திவிட்டு இளவரசர் தந்தி கொடுக்க முயன்றபோது, சுவாமி, "தேவையில்லை; நீங்கள் ஏன் இந்த சிரமம் எடுத்துக்கொள்ள  வேண்டும்?" என்றார். சுவாமியும் இளவரசரும் தந்தி கொடுக்காமலேயே பயணத்தைத் தொடர்ந்தனர். மேலும் அந்தக் கார் பயணத்தின்போது பலமுறை அவர்களுக்கு சுடச்சுட ரகரகமான உணவு வகைகளையும் பழங்களையும் சுவாமி ஸ்ருஷ்டிசெய்து கொடுத்தார்கள். இறுதியாக சுவாமியும் அவரது குழுவினரும் வெங்கடகிரியை அடைந்ததும், ராஜா அவரை தனது கட்டளையின்படி அனைத்து ராஜ அலங்காரங்களுடன் பாரம்பரிய பூர்ணகும்பம், யானைகள் மற்றும் பிற உபகரணங்களுடன் வரவேற்றார். சுவாமி ஊர்வலமாக ராஜ்பவனுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பிரத்யேகமாக அமைக்கப்பட்ட அறையில் தங்கவைக்கப்பட்டார். (பகவான் தங்கியதால் புனிதமான அந்த அறை தெய்வீக நினைவாக, இன்றுவரை அதே நிலையில் வைக்கப்பட்டுள்ளது.) சுவாமியின் அறிவுறுத்தலின்படி, வெங்கடகிரிக்கு செல்லும் வழியில் எந்த தந்தியும் அனுப்பவில்லை என்று இளம் இளவரசர் தனது தந்தையிடம் தெரிவித்தார்.

மகாராஜா ஆச்சரியப்பட்டு, 'கதிரி வழியாகச் செல்கிறோம்’, 'மதனப்பள்ளியைக் கடக்கிறோம்' போன்ற பல தந்திகளைக் கொண்டுவந்து, தன் மகனுக்குக் காட்டினார். அந்தத் தந்திகள் தெய்வீக போஸ்ட் மாஸ்டர் சாயி தேவரிடமிருந்து வந்தவை என்பதைப்  பின்னர் விசாரித்தறிந்து களிப்புற்றனர்.

  







சுவாமி வெங்கடகிரியில் நிகழ்த்திய மகிமை நிறைந்த நிகழ்வுகள், தனியாக ஒரு புத்தகமே பதிப்பிக்குமளவு எத்தனையோ உண்டு. பி வி ராமன் மற்றும் பி வி லக்ஷ்மணன் போன்ற உன்னதமான பாடகர்களுடன் சுவாமியும் சேர்ந்துகொண்டு உச்ச ஸ்தாயியில் கீர்த்தனைகளைப் பாடி அனைவரையும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்த அற்புத வைபவங்கள் நடந்தேறும் புண்ணிய சேத்திரம்.

"ஓம் ஜெய் ஜெகதீச ஹரே" எனும் ஆராத்திப் பாடலை இயற்றியவர் பி வி ராமன் என்பது இங்கே குறிப்பிடத் தகுந்தது.


அதுமட்டுமல்ல, ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் சமாதி  மற்றும் கோவிலைப் பெரிதளவில் நிர்மாணித்த சேவையைச் செய்த பெங்களூர் நாகரத்தினம் அம்மையார் கனவில் ஒருநாள் சங்கீத மும்மூர்த்தியான ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் பின்வருமாறு சொல்லியிருக்கிறார் "கலியுகத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி அவதரித்திருக்கிறார்...அவர் வெங்கட கிரி செல்லும் வேளையில் அவரை தரிசித்து அனுகிரகம் பெற்று வா!". 1951ம் ஆண்டு வெங்கடகிரியில் தான்  பாபா அந்த அம்மையாருக்கு ஸ்ரீ ராம தரிசனமும், கை அசைப்பில் ஸ்ரீ ராம விக்ரகமும் தந்தருள்கிறார்.


ஒருமுறை சுவாமி வெங்கடகிரியின் ராமர் கோவிலுக்கு விஜயம் செய்ய விருப்பம் தெரிவித்தார். ஆனால் கோவிலுக்குள் பிரவேசம் செய்யமுனைந்த சுவாமி வாசலோடு திரும்பி விட்டார். அந்த சமயத்தில் யாருக்கும் புரியாத புதிராக இருந்த அச்சம்பவம் பின்னாளில் அனைவருக்கும் விளங்கியது. அதே ஆண்டு பெரியதொரு மழை வெள்ளம் வந்து ஊரே வெள்ளைக்க்காடாய் ஆனபோது, வெள்ளமானது ராமர் கோவில் வாசல் வரை வந்ததே ஒழிய கோவிலுக்குள் புகவில்லை. மக்களும் விலங்குகளும் அந்தக் கோவிலிலேயே தஞ்சமடைந்தனர். இதயப்பூர்வமாக சுவாமியின் மகிமையை நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்தனர். வெங்கடகிரி குறித்த மற்றொரு சுவாரஸ்யமான தகவல்; பரம்பொருள் மனித உருத்தாங்கி வந்து, மனிதர்களோடு  சகஜமாக டேபிள் டென்னிஸ் ஆடிய இடமென்றால், அது உண்மையில் ஒரு புண்ணிய ஸ்தலமே ஆகும் அல்லவா?

 
🌷 ஸ்ரீ ராமதரிசனமும் சமாதி அனுபவமும்:

ஒருமுறை வெங்கடகிரி அரண்மனையில் சுவாமி தங்கியிருந்தபோது, பஜனை நிகழ்விலே வெங்கடகிரி ராஜா (ஸ்ரீ சர்வக்ஞ குமார கிருஷ்ண யச்சேந்திரா அவர்கள்) வழக்கமாக அமரும் இடமானது காலியாக இருந்தது. இதனைக் கண்ணுற்ற சுவாமி, அவர் எங்கே என்று வினவினார். ராஜா தனியாக பூஜையறையில், பூஜை செய்வதாகப் பதில் வந்தது. 

இதைக்கேட்டுப் புன்முறுவல் பூத்த சுவாமி, " அவன் பூஜை செய்யும் நானே இங்கிருக்கும்போது அந்த அறையில் அவனென்ன செய்து கொண்டிருக்கிறான்?" என்றார் வேடிக்கையாக. பின்னர் சுவாமி மட்டும் அந்த பூஜை அறைக்குள் நுழைந்து கதவை உள்ளிருந்து சாத்தினார். சிலநேரம் கழித்து சுவாமி திரும்பி வந்து பஜனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  அதற்குப் பல மணி நேரம் பின்னரே, அந்த பூஜை அறையிலிருந்து வெளிவந்தார் ராஜா. தன் குடும்பத்தாரிடம், சுவாமி தனக்கு ஸ்ரீராம தரிசனம் கொடுத்ததை பற்றியும் அதனைத் தொடர்ந்து பல மணி நேரம் அந்த ஆனந்த நிலையில் அவர் பூஜை அறையிலேயே அமர்ந்து விட்டதையும் குறித்து விளக்கி ஆனந்தித்தார்.


🌷 சாதாரண சந்நியாசி என்று எண்ணப்பட்ட பரப்பிரம்ம ஸ்வரூபம்:

1957ஆம் ஆண்டு வெங்கடகிரியில் நடைபெற்ற 9வது அகில இந்திய தெய்வீக வாழ்வு மாநாடு சுவாமியின் தர்மப் பிரச்சாரத்தில் ஒரு மைல்கல்லாக இருந்தது. 


மாபெரும் சந்நியாசிகளும் பண்டிதர்களும் தபஸ்விகளும் மற்றும் உயர்ந்த ஆசிரம நிர்வாகிகளும் கலந்து கொண்ட சம்மேளனம் அது. ஆனால் வெங்கடகிரி ராஜா அறிந்துவைத்திருந்த அளவு சுவாமியின் மகிமைகளை வெகு சிலரே அறிந்திருந்தனர்.  பலரும் சுவாமியை ஒரு சாதாரண சந்நியாசி என்று கருதினர். அவர்களின் மனோபாவத்திற்கு ஏற்ப சுவாமியும் கூட, தனக்கென ஏற்பாடு செய்திருந்த பல்லக்கையும், உயர் ஆசனத்தையும் கூடத் தவிர்த்தார். இருப்பினும் முதல்நாள் சுவாமி அரங்கில் நுழைந்த கணமே அனைவரும் எழுந்து பணிவுடன் நமஸ்காரங்களைச் சமர்ப்பித்தனர். சுவாமி அங்கே நிகழ்ந்த கலந்துரையாடல்களுக்கு தலைமை தாங்கினார். சுவாமியின் தெய்வீகப் பேருரைகளிலே, சுவாமி தந்த உதாரணங்கள், வேத வியாக்கியானங்களைக் கேட்டு அனைவரும் பிரம்மித்து விட்டனர். தெய்வீக சாதனா மற்றும் ஆன்மீக மீளுருவாக்கம் பற்றிய தெளிவான அழைப்பை விடுத்தார். இந்த மாநாட்டில் சிவானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த இரண்டு சன்யாசி அறிஞர்கள் ஸ்ரீ சச்சிதானந்தா மற்றும் ஸ்ரீ சதானந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.  சுவாமி புட்டபர்த்திக்கு திரும்பும்போது அவர்கள் இருவரும் சுவாமியுடனே பர்த்திக்கு வந்தனர்.


🌷சாலையில் படுத்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்த ராஜா: 

ராஜாவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் பல ஆண்டுகளாக பாபாவின் அற்புதங்களை அனுபவித்திருக்கிறார்கள். தன் முதல் தரிசனத்திலேயேஸ்வாமிதான் தனது பிரியமான ராமர் என்பதை உணர்ந்தார் ராஜா. அந்நாட்களில் சுவாமி, வெங்கடகிரிக்கு அடிக்கடி செல்வதுண்டு. வேத பண்டிதர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் நிறைந்திருந்ததால், மிகவும் இணக்கமாகவும், சுவாமிக்கு விருப்பமான வகையிலும் இருந்தது.


ஒவ்வொரு முறையும் வெங்கடகிரியிலிருந்து புட்டபர்த்திக்கு சுவாமியின் கார் கிளம்பும்போதுராஜா சாலையில் நெடுஞ்சாணாகப் படுத்துக் கொள்வார். அந்தக் காலத்தில் நவீன சாலைகள் போடப்படாததால், நிறைய தூசியைக் கார் எழுப்பும். பக்தியுள்ள ராஜாஅந்தப் புனித தூசி தன்னைக்  குளிப்பாட்ட வேண்டும் என்று விரும்பினார்.  மற்ற வாகனங்களின் தூசியால், ஸ்வாமியின் கார் எழுப்பும் புனித தூசி 'அசுத்தம்' ஆகாமல் இருக்க,  சுவாமி செல்லும்  அந்த சமயத்தில் மற்ற வாகனங்கள் செல்ல அரசரால் தடை விதிக்கப்பட்டிருந்தது! அத்தகைய அபார  பக்தி வெளிப்பாடு அவருடையது.


🌷அனுமனுக்கு அடுத்தபடியான பக்தர்:


அந்தக் காலகட்டத்தில், புட்டபர்த்தியில் நடைபெறும் திருவிழாக்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய அனுமதிக்கப்பட்டவர் வெங்கடகிரி ராஜா மட்டுமே. பெரிய அளவில் நடைபெறும் திருவிழாக்களை அவர் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டு ஏற்பாடு செய்வார். சுவாமி அடிக்கடி அந்தப் பொன்னான நாட்களை நினைவு கூர்ந்து அனுமனுக்கு அடுத்தபடியாக வெங்கடகிரி ராஜா மிகவும் விசுவாசமான பக்தர் என்று போற்றி இருக்கிறார்! இது பகவானால் ஒரு பக்தருக்கு அளிக்கப்பட்ட அசாதாரணமான உயர்ந்த பாராட்டாகும்.

மூலம் : சாயி இலக்கியங்கள் மற்றும் இணையம்

✍🏻 கவிஞர் சாய்புஷ்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக