இரு பாபாவையும் தரிசித்து உரையாடி சில காலம் தங்கி இரு பாபாவும் ஒருவரே என உணர்ந்த ஸ்ரீ காயத்ரி சுவாமிகளின் சுவாரஸ்ய சாயி அனுபவம் இதோ...
ஸ்ரீ காயத்ரி சுவாமிகளை பற்றி நிறைய பூர்வ வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கவில்லை ஆயினும் அவர் ஸ்ரீ சங்கராந்த சுவாமிகள் மற்றும் சிருங்கேரி பீடம் ஸ்ரீ நரசிம்ம பாரதி சுவாமிகளின் சீடர் ஆவார்... சில கடவுள் உருவ சிருஷ்டியையும் இவர் புரிந்திருக்கிறார்... பெயரை வைத்து இவர் சாக்த வழிபாடு மிகுந்தவர் என உணரப்படுகிறது! ஸ்ரீவித்யா உபாசனையில் அந்தர்முகம் பஹிர்முகம் என இருவகை உண்டு... பஹிர்முகம் என்பது வெளியே மகாமேரு வைத்து ஆராதிப்பது... அந்தர்முகம் முழுவதும் சாக்த தியானமே... அந்தர்முகம் மிகவும் சக்தி வாய்ந்தது... இந்தியாவின் முதல் கோள்ஞானி பாஸ்கராயர் அந்தர்முக உபாசகர்... காயத்ரி சுவாமிகள் பஹிர்முகம்...
சுவாமிகள் 1906ரில் முதன்முறையாக ஷிர்டிக்கு சென்று பாபாவை தரிசிக்கிறார்... அவரை தன் ஆன்ம குருவாக உணர்கிறார்... 1906 முதல் 1918 வரை பாபாவை அடிக்கடி தரிசிப்பது உரையாடுவது சிலநாள் தங்குவது என எல்லா பாக்கியமும் பெறுகிறார்! 40 வருடங்கள் கடந்து 1950 ஆம் ஆண்டு இறைவன் ஸ்ரீ சத்ய சாயியை பற்றி கேள்விப்பட்டு புட்டபர்த்தி வருகிறார்! அந்த காலக்கட்டத்தில் பாபா பழைய மந்திரம் விட்டு பிரசாந்தியில் குடி அமர்ந்த நேரம்... பாபாவை தரிசிக்கிறார்... பேசுகிறார்.. சிலநாள் தங்குகிறார்... பாபாவிடம் பேசும் போதெல்லாம் அவர் ஷிர்டி பாபாவிடம் பேசியதை போலவே உணர்கிறார்... பர்த்தி பாபாவை கண்காணிக்கிறார்... அதே ஷிர்டி பாபாவின் வாழ்க்கை முறையையே இந்த பாபாவும் பின்பற்றுவதை உணர்கிறார்.. இரு பாபாவின் அன்றாட வாழ்க்கையும் மிக எளிமையாக இருப்பதை கவனிக்கிறார்...ஆன்மீகத் தலைப்புகளில் பாபாவிடம் கலந்துரையாடிய போது அந்த பாபா சொன்ன அதே பதிலை இந்த பாபாவும் சொல்ல ஆச்சர்யப்படுகிறார்... ஒருவேளை பக்தர்கள் சொல்வது போல் அந்த பாபா தான் இவராக இருக்குமோ? எனும் எண்ணம் வலுவடைகிறது...
இடி இடித்தால் மழை பெய்தாக வேண்டும் என்ற எந்தவொரு கட்டாயமும் இல்லை.. ஆனால் பாபா ஆகாயத்தை விட அகண்ட பரிபூரணர்... எதைச் சொல்கிறாரோ அதை துல்லியமாகச் செய்பவர்! அதை உணரும் வேளையை நெருங்கிக் கொண்டிருக்கிறார் சுவாமிகள்...
தன்னுடைய ஆன்ம குருவான ஷிர்டி பாபா தான் பர்த்தி பாபாவா? என்ற சந்தேகம் தீவிரமடைகிறது... சுவாமிகளோ அடுத்தநாள் பிரசாந்தியிலிருந்து விடை பெற்றாக வேண்டும்... பிரசாந்தியில் இருந்து கொண்டே அவருக்கு பிரசாந்தி வரவில்லை என்றால் எப்படி? அன்றிரவு தூக்கத்தில் ஷிர்டி பாபா கனவில் வருகிறார்...வந்து "காயத்ரி.. சமாதிக்கு பிறகு நான் எட்டு வருடம் கடந்து உடம்பை எடுத்தேன்... 15 ஆவது வருடத்தில் இந்த உடம்பை வெளிப்படுத்தினேன்!" என்கிறார்... கனவு கலைகிறது...தூக்கமும் கலைகிறது.. தெளிவடைகிறார் சுவாமிகள்.. அப்போது தான் 8 வருடம் கடந்து ஷிர்டி பாபா மீண்டும் அவதரித்திருக்கிறார் என்பதையே உணர்ந்து கொள்கிறார்! ஆனால் அது என்ன 15 ஆவது வருடம் ? என்பது புரியவில்லை.. அதிகாலை சுவாமிகளுக்காகவே விடிகிறது... அந்த நாளில் பக்தர்களோடு பேசிக் கொண்டிருக்கும் காயத்ரி சுவாமிகளிடம் "பாபா தனது 14 ஆவது வயது நிரம்பிய பிறகுதான் "தான் சாயிபாபா" என்பதை உலகிற்கு அறிவிக்கிறார்... உங்களின் கனவு உண்மையே!" என்பதை தெளிவுப்படுத்த... இரண்டு பாபாவோடு பேசி, தங்கி இருவரின் அணுகுமுறையையும் நன்கு உணர்ந்த காயத்ரி சுவாமிகள் கனவு தரிசன உரையாடலினாலும் மேலும் தெளிவாகிறார்! ஓம் பூர்வ புவ ஸுவ எனும் ஜபத்தோடு விடைபெறுகிறார்!
(Proof : Sri SathyaSai and Yogis / Page no: 18 / Author : Jantyala Suman babu / Translation : pidatala Gopi Krishna/ in tamil : Kavingar VairaBharathi )
இரு அவதாரத்தின் அணுக்கம் கிடைப்பது.. அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல... அந்த பாக்கியத்தை கலியுகம் தந்தருளி இருக்கிறது... இரு அவதாரமும் ஒரு ஆன்மாவை ஏற்றுக் கொள்வது என்பது அந்த ஆன்ம பெற்ற புண்ணிய பலனே! அது காயத்ரி சுவாமிகளுக்கும் கிட்டி இருப்பது பெரிய விஷயமே! *நேர்ந்த அவதார அனுபவத்தை அகத்தில் தாங்கி.. பிரகடனப்படுத்தப் போகிற அவதாரத்திற்காக பிரார்த்தனையோடு காத்திருப்பதே ஒவ்வொரு பக்தி ஆன்மாக்களின் அதிமுக்கிய அன்றாடக் கடமை...!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக