தலைப்பு

வியாழன், 28 ஜூலை, 2022

ஷிர்டி பாபாவோடு தொடர்புடைய ஸ்ரீ சரணானந்தா!!

எவ்வாறு ஷிர்டி பாபாவோடு தொடர்புடைய ஒரு தூய துறவி இரு பாபாவும் ஒன்றே என உணர்ந்து கொண்டார் எனும் ஓர் உன்னத அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...


80 வயது தூய துறவி... அவர் பெயர் சுவாமி ஸ்ரீ சரணானந்தா! அஹமதாபாதில் ஆசிரமம் ஏற்படுத்தி அங்கே வருகிறவர்களுக்கு ஆன்மீக வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறார்... பற்றின்மையும் எந்த சூழ்நிலையையும் ஏற்றுக்கொள்ளும் குணமுமே ஆன்மீக வாழ்க்கைக்கு அவசியப்படுகிறது... அதனை துறவிகள் தானே அவ்வகை இறை குணங்களை வாழ்ந்து போதிக்கிறார்கள்... அப்படி அவர்கள் போதிப்பதாலேயே நம்மாலும் அவர்களை ஒரு முன்னாதாரணமாகக் கொண்டு வாழ முடிகிறது.. அப்படி போதிக்கிறவர் சுவாமி ஸ்ரீ சரணானந்தா! சிலருக்கு பெயர்ப் பொருத்தம் அப்படி அமைந்துவிடும்.. அப்படியே இவருக்கும்... அது எப்படி என? பதிவின் இறுதியில் உங்களுக்கே புரியும்!


சுவாமி சரணானந்தா அவர்களோ தனது பத்து வயதில் ஷிர்டி பாபாவை பௌதீக திருவுடம்போடு இருக்கையிலேயே ஷிர்டியில் தரிசிக்கிறார்... ஆன்மீக அனுபவம் பெறுகிறார்...

‌அதுமுதல் அவர் ஷிர்டி பாபா பக்தராகிறார்! சாயி ஸ்மரண் புத்தகம் எழுதியவரும்... ஸ்ரீ பிரேமாவதாரத்திற்கும் சேவை செய்யப் போகிறவருமான பழுத்த பாபா பக்தர் டாக்டர் காடியாவை சுவாமி சரணானந்தா தெய்வாதீனமாய் சந்திக்கிறார்! அப்போது தான் ஸ்ரீ சத்ய சாயியே ஸ்ரீ ஷிர்டி சாயியின் மறு அவதாரம்... புட்டபர்த்தியில் அவதரித்திருக்கிறார் என்பதை எல்லாம் அவர் டாக்டர் காடியா மூலம் கேள்விப்படுகிறார்.. சிலர் போல் அதனை அவர் கேள்விப்பட்ட மாத்திரத்திலேயே சந்தேகப்படவில்லை... தூய்மை எப்போதுமே எது தூய்மை? எது அசுத்தம்? என்பதை கண்டுணர்ந்துவிடும்! தூய துறவிகள் மெய்மையை எளிதாக கண்டுணர்ந்துவிடும் இதயம் படைத்தவர்கள்! சில இரண்டு கெட்டான்கள் தான் சத்தியத்தை சந்தேகப்படுவார்கள்! ஆக டாக்டர் காடியா பகிர்ந்தது முதல் பாபாவை தரிசிக்க ஆவல் மேற்கொள்கிறார் சுவாமிஜி...


ஒருமுறை பம்பாய்க்கு பாபா தரிசனம் தர இருப்பதை அறிந்து நினைவில் வைத்துக் கொண்டு சுவாமி சரணானந்தாவிடம் டாக்டர் காடியா தெரிவிக்கிறார்... அமைச்சர் டாக்டர் பி.கே சவந்த் அவர்களின் இடத்தில் மலபார் ஹில்ஸ்'சில் தான் தங்குவார்... அங்கே சென்று தரிசனம் செய்து கொள்ளுங்கள் என அறிவுறுத்துகிறார்! டாக்டர் காடியா போலவே பாபா பற்றி மற்றவரிடம் அறிவுறுத்துவதும்...தனது அனுபவத்தை மறைக்காமல் மனம் திறந்து பேசுவதும்... அவர்களுக்கு நம்பிக்கை அளித்து அறவழியில் நடப்பிப்பதும் கூட நம்மால் இயலும் இன்றியமையாத சேவையே என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்! ஏற்கனவே அமைச்சர் சாவந்த் அவர்கள் ஸ்ரீ ஷிர்டி சாயி சன்ஸ்தான் டிரஸ்ட் அறங்காவலர் என்பதால் சுவாமி சரணானந்தாவுக்கு அறிமுகமானவர் என்பதால் அவரோடு தொடர்பு கொள்கிறார் சுவாமிஜி... திரு சாவந்த் அவர்களே பாபாவிடம் அழைத்துப் போகிறார்... ஷிர்டி பாபாவை ஸ்தூல உடம்பில் தனது சின்னஞ்சிறு வயதிலேயே தரிசித்து நிரம்ப அனுபவம் பெற்ற அந்த பழுத்தத் துறவி பர்த்தி பாபாவை தரிசிக்கிறார்... நான்கு கண்களும் ஒன்றை ஒன்று சந்திக்கின்றன... மனக்கப்பல் பக்தி நங்கூரத்தால் அப்படியே நின்றுபோய்விடுதிறது... அப்போது...


"ஆமாம்.. நான்தான் ஷிர்டி பாபா... அதில் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்... நன்றாக என்னைப் பாருங்கள்.. நான் யார்?" என பாபா சுவாமிகளை நேருக்கு நேராக உற்றுப் பார்த்து தீர்க்கமாகப் பேசுகிறார்... சுவாமிகள் பாபாவை பார்க்கிறார்.. பாபா அவருக்கு ஷிர்டி பாபா உருவில் தரிசனம் அளிக்கிறார்... பரவசப்படுகிறார்... தான் 10 வயதில் பார்த்த அதே பாபா ரூபம்..‌அவருக்கெப்படி மறக்கும் அது! சிலிர்த்துப் போகிறார்.. கையெடுத்து வணங்குகிறார்... சுவாமிகளுக்கு தனது வணக்கத்தில் திருப்தியில்லை.. உடனே அந்த 80 வயது தூய துறவி பாபாவின் காலடிகளில் சாஷ்டாங்கமாக (நெடுஞ்சாண்கிடையாக) விழுந்து வணங்குகிறார்! இப்போது புரிந்திருக்கும் ஏன் அவருக்கு சுவாமி சரணாநந்தா எனும் பெயர் எவ்வளவு பொருத்தமானது என்பது...! அப்போது அவரிடம் பாபா "எல்லையில்லா இறை சக்தி சடங்குகளாலோ , ஆராய்ச்சியாலோ, கலந்துரையாடுவதாலோ , கல்வி மேதமையாலோ நிகழ்வதில்லை... தூய அன்பினாலேயே அது அரங்கேறுகிறது!" என்கிறார்! 


கண்கலங்கிய விழியோடும்... ஈரம் தோய்ந்த இதயத்தோடும் கீழிறங்குகிறார்... தன்னோடு வந்தவர்களிடம் பாபா தனக்கு வழங்கிய பரவச அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்...அதை அங்கிருந்த சாயி சுமன் எனும் குஜராத்தி தினசரி பத்திரிகை ஆசிரியர் தனது தலையங்கத்திலேயே பதிவு செய்து பிரசுரிக்கிறார்! அந்தப் பகிர்விலிருந்து பல ஷிர்டி சாயி பக்தர்கள் பாபா ஸ்ரீ சத்ய சாயியாக மறு அவதாரம் புரிந்திருக்கிறார் என்பதை அறிந்து உணர்கிறார்கள்! 

"எனது இந்த பௌதீக உருவம் என்பது வேறொன்றுமில்லை... மனிதர்கள் இறை வடிவங்களுக்கு பல்வேறு பெயர் தந்திருப்பது போலவே இதுவும் ஒன்று! உங்களுக்கு இதில் சந்தேகமும் வேண்டாம்! மாயையிலும் சிக்க வேண்டாம்! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் இதய ஓரங்களில் ஒரு சிறு இடம் ஒதுக்கி... எனது இந்த சத்தியமான தெய்வீகத்தையும்.. எனது பேரிருப்பையும் அனுபவிப்பதே! எல்லா இறை ரூபமும் ஒன்றிணைந்த எனது இந்த ரூபத்தை தரிசிக்க உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்திருக்கிறீர்கள்! ஆகவே நன்றாக உளமாற அனுபவியுங்கள்!" என்கிறார் எல்லாம் வல்ல இறைவன் பாபா!


(Proof : Sri SathyaSai and Yogis / Page no: 66 / Author : Jantyala Suman babu / Translation : pidatala Gopi Krishna/ in tamil : Kavingar VairaBharathi )


தூய துறவிகள் நம்மை உத்வேகப்படுத்துபவர்கள்! இல்லறத்திலேயே இருப்பவர்க்கும் அகத்துறவு அவசியம்..‌ அந்த இறை குணமே இல்லறத்தையும் நல்லறமாக நடத்த வழிவகை புரிகிறது... செலவு என்பதில் சிக்கனமான செலவு ஆடம்பரமான செலவு என இருவகை இருப்பது போல் இல்லறம் நல்லறமாவதற்கும் அறமற்று சிதைந்து போவதற்கும் அகத்துறவு இருக்கிறதா? இல்லையா? எனும் பரிபக்குவத்தை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது! அத்தகைய துறவு அகிலத்திற்கே இப்போது அத்தியாவசியப்படுகிறது!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக