தலைப்பு

வெள்ளி, 1 ஜூலை, 2022

மங்களம் அளிக்கும் மங்கள ஆரத்தி! 

பிரசாந்தி நிலையத்தில் ஒவ்வொரு தரிசனத்தின்/பஜனின் முடிவிலும் பகவானுக்கு மங்கள ஆரத்தி பாடல் பாடி, கற்பூர ஆரத்தி காட்டப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள அனைத்து சத்ய சாயி ஆன்மிக/சேவை மையங்களில் இந்த ஆரத்தியானது பகவானுக்கு அர்பணிக்கப்படுகிறது. ஆரத்தி என்னும் இந்த தெய்வீக சடங்கானது பாரத கலாச்சாரத்தில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. ஹிந்து மதத்தை பின்பற்றும் அனைத்து மக்களும் பூஜை மற்றும் ஆன்மிக செயல்களின் நிறைவில் இறைவனுக்கு ஆரத்தி எடுப்பர்.



இந்த ஆரத்தியின் முக்கியத்துவத்தை பற்றி நம் ஸ்வமியின்  விளக்கத்தை சிறிது காண்போம்:


"பஜனை அமர்வுகளின் முடிவில் கற்பூரச் சுடரை சுழற்றி காட்டுவது, உங்கள் சிற்றின்ப வேட்கைகள் எந்த தடயமும் இல்லாமல் எரிக்கப்பட வேண்டும் என்பதை உங்களுக்கு நினைவூட்டுவதாகும், மேலும் நீங்கள் இறைவனின் இணையில்லா மகிமையுடன் இணைவதற்காக உங்களை அர்ப்பணித்து கொள்ள வேண்டும்."
- ஸ்ரீ சத்ய சாயி பாபா, செப்டம்பர் 8, 1966.


"வெளி செயல்கள் முக்கியமில்லை. பக்தி என்பது வழிபாட்டிற்காக ஒரு புகைப்படத்தை வைத்திருப்பதும், அதற்கு தினமும் ஆரத்தி எடுப்பதும் அல்லது பாபா, பாபா என்று புலம்புவதும் இல்லை.  உண்மையான பக்தி என்பது உங்கள் நடத்தையில் மாற்றம் ஏற்படுவதாகும். கடவுள் உங்களுக்குள்ளும், உங்களைச் சுற்றிலும், உங்களுக்குள்ளும் இருக்கிறார். அவர் எங்கும் நிறைந்தவர். இந்த உண்மையை உணர்ந்து, நீங்களும் கடவுளும் ஒன்று என்ற முடிவை அடைய வேண்டும்."


- ஸ்ரீ சத்ய சாயி பாபா, கோடை மழை 1978


கற்பூரத்தை ஏற்றினால், மிச்சம் மீதி இல்லாமல் முற்றிலும் எரிந்து விடும். கற்பூரம் நமது உள்ளார்ந்த பல ஜன்ம வாசனைகளை பிரதிபலிக்கிறது. ஞானம் எனும் நெருப்பினால் இதனை ஏற்றினால் இறைவனை (உண்மையை) நமக்கு காட்டும்! அதன்பின், இறைவனிடமிருந்து நம்மைப் பிரித்து வைத்திருக்கும் தனித்துவ உணர்வின் (EGO)  அடையாளத்தை சிறிதும் மிச்சம் வைக்காமல், நம் அனைத்து வாசனைகளையும் முழுவதுமாக எரித்துவிடும்.

அதுமட்டுமன்றி, இறைவனின் மகிமையை வெளிப்படுத்த கற்பூரம் எரியும் போது, ​​அது தன்னை தியாகம் செய்துகொண்டே இனிமையான நறுமணத்தையும் வெளியிடுகிறது. அதுபோன்று, நமது ஆன்மீக வாழ்வில், நாம் இறைவனுக்கும், சமுதாயத்திற்கும் சேவை செய்யும்போது, நம்மையும் நம்மிடம் உள்ள அனைத்தையும் விருப்பத்துடன் தியாகம் செய்து, அன்பெனும் 'நறுமணத்தை' அனைவருக்கும் பரப்ப வேண்டும்.

இவ்வாறான மனோபாவத்துடன் ஆரத்தி எடுக்க பழக வேண்டும்.

இப்படியான உன்னத ஆரத்தியின் போது பகவானை புகழ்ந்து, அவரது மகிமைகளை கூறும் ஆரத்தி பாடலின் அர்த்தத்தை அறிந்து பாடினால், மனம் லயித்து ஆனந்தம் கூடும்..வாருங்கள், அர்த்தம் அறிந்து பாடுவோம்!


ஓம் ஜெய் ஜெகதீஸ ஹரே
ஸ்வாமி ஸத்ய ஸாயி ஹரே
பக்த ஜன ஸம்ரக்ஷ்க
பக்த ஜன ஸம்ரக்ஷ்க
பர்த்தி மஹேஸ்வரா
ஓம் ஜெய் ஜெகதீஸ ஹரே

(பிரபஞ்ச நாயகனுக்கு, ஸத்ய ஸாயி நாதனுக்கு ஜெயம் உண்டாகட்டும். எவர் பக்தர்களை துன்பங்களில் இருந்தும் தீமைகளில் இருந்தும் காக்கிறாரோ, அந்த பர்த்தி மஹேஸ்வரனுக்கு ஜெயம் உண்டாகட்டும்.)


ஸஸி வதனா ஸ்ரீ கரா ஸர்வா ப்ராண பதே,
ஸ்வாமி ஸர்வா ப்ராண பதே
ஆஸ்ரித கல்ப லதீகா
ஆஸ்ரித கல்ப லதீகா
ஆபத் பாந்தவா
ஓம் ஜெய் ஜெகதீஸ ஹரே

(முழு மதி முகனே, மங்களம் அருள்ளவனே, ஸ்வாமி, அனைத்துயிரின் உயிர் மூச்சானவனே, உன்னை சரணடைந்தவர்க்கு விரும்பியதை வழங்கும் கல்ப கொடியே, ஆபத்துக் காலங்களில் உடன் இருந்து காக்கும் தோழனே, அகில லோக நாயகனே உமக்கு ஜெயம் உண்டாகட்டும்.)


மாத பிதா குரு தெய்வமு மரி அந்தயு நீவே
ஸ்வாமி மரி அந்தயு நீவே
நாத ப்ரம்ஹ ஜகந்நாதா
நாத ப்ரம்ஹ ஜகந்நாதா
நாகேந்த்ரா ஸயனா
ஓம் ஜெய் ஜெகதீஸ ஹரே

(ஓ ஸாயி, நீரே எம் அன்னை, தந்தை, ஆசான், தெய்வம் மற்றும் எங்கள் அனைத்தும் நீரே. ஜகந்நாதரே, பிரபஞ்ச ஒலி வடிவானவர், பாம்பனை மேல் துயில்பவரே, ஸமஸ்த லோக நாதனே உமக்கு ஜெயம் உண்டாகட்டும்.)


ஓம்கார ரூப ஓஜஸ்வி ஓ ஸாயி மஹாதேவா
ஸத்ய ஸாயி மஹாதேவா
மங்கள ஆரத்தி அந்துகோ
மங்கள ஆரத்தி அந்துகோ
மந்தர கிரிதாரி
ஓம் ஜெய் ஜெகதீஸ ஹரே

(ஓ தெய்வீக ஒளி பொருந்தியவரே! தேவர்களின் தேவா, ஸாயி தேவா! அறியாமை எனும் இருள் நீக்கும் -  மங்களமான ஒளி சுடரை (ஆரத்தியை) ஏற்றுக்கொள்ள வேண்டுகிறோம்! மந்தர மலை தாங்கியவரே! உமக்கு ஜெயம் உண்டாகட்டும்.)


[கீழ்கண்ட பகுதியை 3 முறை பாடவும், ஒவ்வொரு முறை பாடும்போதும் முந்தைய முறை பாடிய வேகத்தை காட்டிலும் சிறிதளவு கூட்டி பாடவும்]

நாராயண நாராயண ஓம்
ஸத்ய நாராயண நாராயண நாராயண ஓம்
நாராயண நாராயண ஓம்
ஸத்ய நாராயண நாராயண ஓம்
ஸத்ய நாராயண நாராயண ஓம்
ஓம் ஜெய் ஸத்குரு தேவா

(பிரணவ வடிவான ஸத்ய ஸாயி நாராயணனின் தெய்வீக திருநாமத்தை மீண்டும் மீண்டும் உச்சரிப்போம். உன்னத போதகரும் தெய்வீக வழிகாட்டியுமான ஸ்ரீ ஸத்ய ஸாயி பகவானுக்கு ஜெயம் உண்டாகட்டும்!)

🙏🙏🙏🙏🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக