தேசத்திற்கு சுதந்திரம் வருவதற்கு முன்பே (15 டிசம்பர் 1932 ) பிறந்து தேர்தலுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த திருநெல்வேலி நாராயண ஐயர் சேஷன் எனும் சுருக்கமே டி.என்.சேஷன்! பாலக்காட்டில் பிறந்து காடாய் இருந்த வாக்குச்சாவடிகளை சீர்படுத்தி பாதை அமைத்தவர்... வாக்காளர் அட்டையும் , தேர்தலுக்கு வேட்பாளர்கள் செலவழிக்கிற தொகைக்கு ஒரு நிர்ணய கட்டுப்பாடும் இவர் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோதே இவரால் திண்மையாகக் கொண்டுவரப்பட்டது என்பதை விட பாபா இவரை தன் கருவியாக வைத்து சங்கல்பித்த தேர்தல் ஒழுக்கம் அவை! இப்படி வானுயர நேர்மையாய் லஞ்சமற்ற நெஞ்சமோடு நிமிர்ந்து நடந்ததால் இவர் உயிருக்கே ஆபத்தான பல இன்னல்களை வாழ்வில் இவர் சந்தித்து பாபாவின் காவலால் பலமுறை தப்பி இருக்கிறார்... இதோ அந்த கடமை செய்த கண்ணிய உயரத்தின் சாயி அனுபவங்கள் இதோ..
நேர்மையை குழந்தைப் பருவத்திலிருந்து ஊட்டி வளர்க்கிறார் சேஷனின் தாய்! நேர்மைப் பாடம் பயின்றவர் ஆன்மீகப் பாடம் பயில ஆதிசேஷன் குடை கீழ் சயனிக்கும் பாபாவிடம் சேஷன் வருகிறார்! அது 1965 . முதன்முதலாக பாபாவை தரிசிக்கிறார் அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த சேஷன் மதுரையில்...மறுநாளும் பாபா அழைக்கிறார்... ஆனால் வேலை மிகுதியால் அவரால் செல்ல இயலவில்லை...! அப்படியே கனவு போல் பல வருடங்கள் கடந்துவிடுகின்றன...
பெங்களூரில் ஒரு சமயம் "ஸ்பிரிட் ஆஃப் யூனிட்டி (Spirit of Unity) நடந்த சமயம்... அப்போது சேஷன் தலைமைத் தேர்தல் ஆணையராக பாபாவை வரவேற்கும் கமிட்டியில் அவர் பெயரும் இருக்கிறது!
அவரைப் பார்த்த உடனே பாபா "என்ன சேஷு உன்னைப் பார்த்து எவ்வளவு வருஷமாச்சு?" எனக் கேட்கிறார்! "30 வருஷம் இருக்கும்!" என்கிறார் சேஷன்... "இல்லை சேஷு 28 1/2 வருஷம் ஆச்சு!" என பாபா தெளிவுபடுத்த... "நீங்க என்ன கூப்டலையே சுவாமி?" என சேஷன் வருத்தப்பட... "இப்ப தான் சுவாமி கூப்ட்டாச்சே... இனி அடிக்கடி வா!" என்கிறார் கருணையோடு பாபா!
பர்த்தியிலும் அதே போல் "ஸ்பிரிட் ஆஃப் யூனிட்டி"விழா நடைபெறுகிறது... சேஷனுக்கு அனந்தப்பூரில் பேச அழைப்பு வருகிறது... 70 மைல் தள்ளியிருக்கும் அனந்தப்பூரில் 10,000 பேர் சூழ சேஷன் பேசிவிட்டு அவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறார்! "நீங்கள் ஏன் பாபாவிடம் வந்தீர்கள்?" என அப்போது கூட்டத்தில் ஒருவர் கேட்கிறார்... எல்லோரும் சேஷன் என்ன சொல்லப் போகிறார்? என மிகுந்த ஆர்வமோடு காத்துக் கொண்டிருந்தனர்... சற்றும் தாமதிக்காமல் உடனே "நான் விபீஷணன் மாதிரி எங்கு தர்மம் இருக்கிறதோ அங்கே செல்கிறேன்...!" எனச் சொல்லிவிட்டு... வேலையில் பல பிரச்சனைகள் வரும்போது... "பொதுவாக நான் பீஷ்மர் மாதிரி நானாக தீர்மானம் செய்த பிறகு தான் வேலையை விடுவேன்! என்று கூறுவது வழக்கம்... நீங்கள் கேட்டதால் இந்த உண்மையைச் சொல்கிறேன்! என மேடையில் ஓங்கி ஒலிக்கிறார்!
விழா முடிந்து சேஷன் பர்த்தி வந்து பூர்ணசந்திரா ஹாலில் பாபாவை தரிசிக்க... "இன்னிக்கு அனந்தப்பூரில் மிகவும் நன்றாகப் பேசினாய்... இதுவரை பீஷ்மர் என உன்னைச் சொல்லிக் கொண்டிருந்த நீ இன்று விபிஷேணன் எனச் சொல்லி இருக்கிறாய்! மிகவும் நன்றாக இருந்தது!" என பாபா சொல்லியதைக் கேட்டு ஆச்சர்யப்படுகிறார் சேஷன்... "உங்களுக்கு எப்படி நான் என்ன பேசினேன் எனத் தெரியும் சுவாமி?" என பிரம்மிப்போடு கேட்கிறார்! "சுவாமி தான் எப்போதும் உன் கூடவே இருக்கிறேனே! அப்படியே நீ பேசியதையும் கேட்டேன்" என இறைவன் பாபா பதில்மொழிகிறார்!
பாபா சர்வாந்தர்யாமி என்பது எத்தனை சத்தியம்!
ஒருமுறை சேஷன் தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றிய போது எம்.எஸ் அம்மா மேடையில் பாடிய "ஸ்பிரிட் ஆஃப் யூனிட்டி" நிகழ்வில் பாபாவின் அருகே அமர்ந்திருக்கிறார்.. அவரின் நண்பர் அளித்த பாபா உருவ அச்சு பதித்த ஒரு வெள்ளி மோதிரத்தை வலது கை நடுவிரலில் கைபிடித்து பார்ப்பவர்க்கு நேராகத் தெரியும்படி அணிந்து கொண்டிருப்பதை பாபா கவனிக்க... "ஏன் இப்படி வெள்ளி மோதிரம் அணிந்து கொண்டிருக்கிறாய்?" என பாபா கேட்க... "இது தான் கிடைத்தது சுவாமி!" என்கிறார் சேஷன்... "இல்லை இல்லை இதனை சரி செய்தாக வேண்டும்!" என்கிறார் பாபா! விழா நிறைவு பெறுகிறது! பிரபல வித்வான் பீம்சென் ஜோஷி தம்பதியினருக்கும் டி.என்.சேஷன் தம்பதியினருக்கும் பாபா நேர்காணல் தர... சேஷனின் வெள்ளி மோதிரத்தைக் கழட்டி அனைவருக்கும் காட்டி "சேஷன் இப்படி வெள்ளி மோதிரம் போட்டுக் கொள்ளலாமா ?" எனக் கேட்டு அதை தனது தாமரையே தோற்கும் மிருதுவான மகோன்னத உதடுகளால் மெல்ல ஊதுகிறார்... மோதிரத்தின் தலைப்பகுதி மட்டும் தங்கமாக மாறுகிறது... "இது என்ன பாதி தங்கம் பாதி வெள்ளி" எனக்கூறியபடி மீண்டும் ஊதுகிறார்.. இப்போது முழுவதும் தங்க மோதிரமாக மாறிவிடுகிறது... வெள்ளியை தங்கமாக மாற்ற இதுவரை எந்த விஞ்ஞான ஆராய்ச்சியும் எந்தவிதமான வேதியலையும் கண்டுபிடிக்கவில்லை! ஆக பாபாவே அதை சேஷனுக்கு மோதிரவிரலில் அணிவிக்கிறார்... நடுவிரல் அளவு பெருத்த மோதிரம் மோதிரவிரல் அளவுக்குச் சுருங்குகிறது! அப்போது அந்த வெள்ளி மோதிரம் தந்த பழைய நண்பர் சொன்னது சேஷனின் நினைவுக்கு வர... "சுவாமி தலைகீழா போடறேள்!" என்கிறார்... அதற்கு பாபா "எனக்கேதப்பா டைரக்ஷன்?" என பிரபஞ்சத்தை டைரக்ட் செய்யும் பாபா கேட்கிறார்! அது மிகச் சரியாக மோதிர விரலில் அமர்ந்தது! அதோடு பாபா நிறுத்தவில்லை... சேஷனின் மனைவியைப் பார்த்து "இவன் என் பக்தன் என மோதிரத்தை பார்த்தா அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்?" எனச் சொல்லியபடி சேஷனின் கைவிரல் மோதிரத்தைக் கழட்டி மீண்டும் ஊதுகிறார்... அது நவரத்தின மோதிரமாக உருமாறுகிறது! இதை எப்படி அணிவித்தாலும் சரியே என பாபா சேஷன் கைபிடித்து அணிவிக்கிறார்! மறுநாள் காலை...
"நீ உன் கணவருக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ எனக் கவலைப்படுகிறாய் அல்லவா?" எனச் சொல்லியபடி ஒரு சிருஷ்டி கருக மணிமாலையை தனது திருக்கர அசைப்பினால் கொடுத்து... "இது தாலி இல்லை ... கவசம் இதை எப்போதும் அணிந்து கொண்டே இரு! கழட்டாதே!" என பாபா சேஷன் மனைவிக்கு அனுகிரகம் புரிகிறார்!
அடுத்தமுறை வந்திருந்த சேஷன் மனைவியை பார்த்தபடி "நீ அந்த நெக்லஸை போட்டிருக்கியா?" எனக் கேட்கிறார் பாபா...முதலில் ஆமாம் என்றவர் குளியலறையில் கழட்டி வைத்தது நினைவுக்குவர அதுமுதல் பாபா அறிவுறுத்தியபடி அதனை அதற்குப்பின் அவிழ்க்கவே இல்லை... பாபாவின் இத்தகைய சிருஷ்டிகளே டி.என்.சேஷன் அவர்கள் எதிர்கொண்ட உயிருக்கே ஆபத்தான பல்வேறு சூழ்நிலையை தாங்குவதற்கான தைரியமும்... உயிர்ப்பாதுகாப்புக்கான காவலையும் அரணாக இருந்து காப்பாற்றி வந்திருக்கிறது!
மறுநாள் சேஷன் அவரது தங்கையின் சம்பந்தியோடு தரிசனத்திற்குச் செல்ல... பாபா நெருங்குகிறார்... சேஷனை பார்த்தவண்ணம் "உனக்கு ஏதாவது கொடுக்கணுமே!" என கருணை கசியக்கசிய மொழிகிறார் பாபா! "சுவாமி எனக்கு உங்க அனுகிரகம் தான் வேண்டும்!" என்கிறார்... உடனே பாபா ஒரு தங்க சிருஷ்டி பிரேஸ்லெட்டை வரவழைத்து சேஷனின் கையில் தானே வைக்கிறார்.. சிறியதாக இருக்கிறதே! எனச் சொல்லியபடி தங்கை சம்பந்தியின் கைகளில் வைக்கிறார்... இவருக்கும் சிறியதாக இருக்கிறதே என மீண்டும் சேஷன் கைக்கு வருகிறார்... வருகிறார் இல்லை விளையாடுகிறார்..
அலகிலா விளையாட்டுடையார் என கம்பர் சுவாமியை விளக்கி எப்போதோ தீர்க்க தரிசியாகிவிட்டார்! இப்போது சேஷன் கரங்களில் அவ்வரங்கள் சரியாகப் பொருந்துகின்றன... "உன் கையின் சைஸுக்கு இது சிறியது!" என மீண்டும் இன்னொரு தடிமனான பிரேஸ்லெட் சிருஷ்டித்து அணிவிக்கிறார்... *தேவாமிர்தத்தை மானசரோவர் அன்னப்பறவையின் பட்டிறகால் நாவில் தடவியது போன்ற அருட்சுவை அவை!*
"இந்த இரண்டு பிரேஸ்லெட் மற்றும் நவரத்தின மோதிரத்தோடு நீ எதை எழுதினாலும் அது நடக்கும்!"என பாபா உறுதி கூற... பொதுமக்களுக்காகவே அவ்வரத்தை பயன்படுத்துகிறார்... தனக்காக சேஷன் எதையுமே எழுதியதில்லை!
பணி காரணமாக நிறைய கஷ்டங்களை சேஷன் சந்திக்கிற போது "கரும்பை நன்றாகப் பிழிந்தால் தானே சர்க்கரையை எடுக்க முடியும்! இத்தனை கஷ்டம் வந்தால் தான் உனக்கு நல்லது!" என சத்திய ஞான மொழியை பாபா வீசுகிறார்..
அது சேஷனுக்கு புதிய தெம்பையே தருகிறது!
மற்றொரு முறை சேஷன் ஊரில் இல்லாத சமயத்தில் அவரின் அலுவலகத்தில் அவருக்கே தெரியாமல் சில முடிவுகள் எடுக்கப்படுகின்றன... சேஷன் மிகவும் வருத்தப்பட்டு திருப்பதிக்கு செல்கிறார்... தரிசனமான பிறகு வெளியே வரும் அவரை சந்தித்த பெருமாள் பக்தர்கள் பலர் சேஷனின் கால்களில் விழுந்து அவருக்கு பிரம்மிப்பையே ஏற்படுத்துகிறார்கள்! மறுநாள் பர்த்தி வந்து தனது மனதின் சங்கடங்களை பாபாவிடம் சேஷன் கொட்டுகையில்...
பாபா சொல்கிற வார்த்தை... வார்த்தை அல்ல வேத மந்திரம்!
"சேஷு விட்டுத்தள்ளு... அவர்கள் வெறும் சீப் (cheap) ஆஃபீஸர்ஸ்... நீதான் சீஃப் (cheif) ஆஃபீஸர்... சுவாமி தான் இந்த பதிவியையே உனக்குக் கொடுத்தது!" எனச் சொல்லியபடி பாபா சிருஷ்டி விபூதியை 10 நிமிடம் சேஷனின் இதயப்பகுதியில் தடவுகிறார்!
"சுவாமி இருக்கிறபோது உன்னை ஒருவராலும் ஒன்றும் செய்ய இயலாது! நேற்று பார்த்தாய் அல்லவா திருப்பதியில்... மக்கள் உன் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று...!" என பாபா சொல்லியதில் உடனே சமாதானம் அடைகிறார்... தானத்தில் சிறந்த தானம் நிதானமும் சமாதானமும் என சேஷன் உணர்ந்து கொள்கிறார்!
1966ம் வருடம் சேஷன் அவர்கள் பர்த்தி சென்றிருந்தபோது பாபா தரிசனத்திற்கு சற்று காலதாமதமாக 7.45 க்கு வருகிறார்... தரிசனம் முடிந்து காரில் செல்கிற போது சேஷன் அவர்களையும் அழைத்து காரில் ஏறச் சொல்கிறார்... பயணிக்கற போது.. "சுவாமி ஏன் இன்று தாமதமாக தரிசனத்திற்கு வந்தேன் தெரியுமா? சுவாமி இந்தூர் சென்றிருந்தேன்... அங்கே எனது பக்தனுக்கு மாரடைப்பு... நேற்று இரவு முழுதும் அவன் அருகிலேயே இருந்துவிட்டு தற்போது தான் வந்தேன்... ஆகவே தான் சுவாமி தரிசனம் தாமதமானது" என்று சொன்னவுடன்... எந்த இந்தூரை சொல்கிறார்.. புட்டபர்த்தியை சுற்றி அப்படி ஏதேனும் சிற்றூர் இருக்கிறதா?" என சேஷன் யோசிக்கிற போதே... பாபா "போபால் பக்கத்துல இருக்கே அந்த இந்தூருக்கு தான்! உடம்பு மட்டும் இங்கே இருந்து ஆன்மா கிளம்பிப் போனால்... அதற்கு என்ன பெயர்?" என்று பாபா கேட்க... பாபா அருகே இருந்த ஒரு மாணவர் "transcendental meditation" என்று சொல்ல... இல்லை என மறுத்த பாபா... சிறிது மௌனம் காக்கிறார்... உடனே சேஷன் அவர்கள் "transmigration of the soul" எனச் சொல்ல... அவர் கூடு விட்டு கூடு பாய்தலைக் குறிப்பிட... அதை ஆமோதிக்கிறார் பாபா... புட்டபர்த்தி எங்கே இருக்கிறார் போபால் எங்கே இருக்கிறது என வியக்கிறார் திரு சேஷன்...! மின்னல் பொழுதில் போபால் செல்வதெல்லாம் சாயி கோபாலுக்கு சர்வ சாதாரணமே!
ஒரு பாபா பக்தையின் மகள் கல்யாணம் நிச்சயமாகி அந்த மாப்பிள்ளை பையனை அழைத்து 2005 ல் சேஷன் அவர்கள் பாபாவை தரிசிக்க... அந்த மாப்பிள்ளைப் பையனிடம் "சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை இவைகள் தான் இந்த உலகிற்கு ஆதாரம்!" என்று பாபா சொல்லிவிட்டு... "இவர் தர்மத்தின் பிரதிநிதி!" என சேஷனை சுட்டிக் காட்டுகிறார் பாபா... இறைவன் அளித்த அங்கீகாரத்தால் கண்கலங்கிக் கரைந்து போகிறது நேர்மையால் நிமிர்ந்த அந்த வைராக்கிய மலை... ஒரு முறை சேஷன் அவர்களின் மனைவிக்கும் பட்டாபிஷேக ராமர் டாலருடன் ஒரு செயின் சிருஷ்டித்து... "இனிமேல் உன் வாழ்வில் பட்டாபிஷேகம் தான்" என பாபா ஆசீர்வதிக்கிறார்!
(ஆதாரம் : இறைவனுடன் இனிய அனுபவங்கள் / பக்கம் : 98 / நேரடிப் பகிர்வு: திரு டி.என் சேஷன், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் & கல்கி வார இதழ்)
நேஷனை உயர்த்த முன்னோக்கிய திரு சேஷன் அவர்களின் அனுபவம் ரேஷனாக இன்றி கடலாகப் பரந்து விரிந்திருக்கிறது! அந்த நேர்மைக்கு பாபா அளித்த பரிசுகளும்... அந்த தர்மத்திற்கு பாபா காட்டிய கருணையும்... நேர்மையோடு தர்மவானாக வாழ்ந்தால் இறைவன் பாபா நம்மையும் மடிமேல் அமர்த்தி கருணை காட்டுவார் என்பதை உணரமுடிகிறது!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக