தலைப்பு

புதன், 20 ஜூலை, 2022

பாபா அன்போடு அளித்த கம்பளியை வீசி எறிந்த ஒரு மூதாட்டி!

எப்படி எல்லாம் பரம பக்தி செயல்பட்டிருக்கிறது என்பதை சுவாரஸ்யமாய் வாசிக்கப் போகிறோம்! பாபா தரும் பொருட்களை அல்ல பாபாவே போதும் என்றிருக்கிற ஞான நிறைவு இருக்கிறதே... அந்த நிறைவு அடைந்தவரான மூதாட்டி சரஸ்வதி பாயின் பரவச சுவாமி அனுபவங்கள் இதோ...


திருமதி பத்மாவதி குப்புசுவாமி என்பவர் முதலில் சுவாமியை அவதூறாக கேள்விப்பட்டு பிறகு சுவாமியே தனது குலதெய்வமான திருப்பதி பெருமாள் என இதயத்தில் பக்தியெனும் வேள்விப்பட்டு உணர்ந்தவர். மிகுந்த சாது, வெகுளி... அவரின் தாயாரே மூதாட்டி சரஸ்வதி பாய்... 

அந்த வீரதீர வைராக்கிய மூதாட்டியை சந்தித்து பேட்டி எடுக்கக் கூடிய பாக்கியம் பெறுகிறார் நூலாசிரியர்... சரஸ்வதி பாயின் மகளான பத்மாவதி ஒரு கடிதம் எழுதுகிறார்... "நான் சரியான இடத்திற்கு வந்துள்ளேன்... கடவுளையே நேரில் காண்கிறேன்... நீயும் அந்த பாக்கியம் பெற வேண்டுமென்றால் உடனே புட்டபர்த்தி வரவேண்டும்!" எனும் சத்தியம் பேசிய கடிதம் படித்தபின் சரஸ்வதிபாய்க்கு வீட்டில் இருப்பே கொள்ளவில்லை... உடனே கிளம்பி புட்டபர்த்தி வருகிறார்...மகளே வெகுளியே தவிர தாய்க்கு உறுதியான நெஞ்சமும் , அறிவுக் கூர்மை... சரியாக எடைபோடும் தன்மை என கெட்டிக்காரத் தாயவள்... மகள் சொல்கிறாளே என தன் பேரனை துணைக்கு அழைத்துக் கொண்டு விரைந்து வருகிறார்... மறுநாள் காலை விஸ்வரூப பால்கனி சுவாமி தரிசனத்தில் 


       "ஏய்... கண்ணா... இவ்வளவு நாட்களும் உன்னை எங்கெல்லாம் தேடினேன்... இந்த காட்டிற்குள் வந்தா ஒளிந்து கொண்டிருக்கிறாய்... உன்னை கண்டுபிடித்து விட்டேன்... இனி என்னை ஒருநாளும் கைவிடாதே அப்பா!" என கண்கலங்கி உருகுகிறார்... கண்ணா கண்ணா என பரவசப்படுகிறார்... அது முதல் தரிசனம்... கற்பூரத்திற்கு ஒரு சிறு தீப்பொறி போதும்... அதைப் பற்றவைக்க தீப்பந்தம் தேவையில்லை...அப்படி பக்தியால் பற்றி எரிகிறார் சரஸ்வதிபாய்! பிறகு தனது கும்பகோண பேட்டை தெருவில் சாயி பஜனை என அமர்க்களப்படுகிறது அவரது வீடு... சுவாமியின் திருப்படத்திலிருந்து பொங்கி வழிகிற விபூதியால் பலருக்கு நோய் நீங்கி/ வேலை கிடைத்து/ வீடு அமைந்து/ மணம் நிகழ்ந்து/ குழந்தைப் பேறும் கிடைக்கிறது.. பிறகு மூதாட்டி  சரஸ்வதிபாய் புட்டபர்த்திக்கே வந்து நிரந்தரமாக தங்கிவிடுகிறார்!


எத்தனை நாள் தாமரை சேற்றிலேயே மலர்ந்திருக்க முடியும்...குடும்பச் சகதியை உதறித்தள்ளி பாபாவின் பாதாரவிந்தம் வந்து சேர்கிறது அந்த பக்திக் தாமரை... 60 ரூபாய் வாடகையில் ஆசிரமத்திற்கு வெளியே எளிமையாய் வாழ்கிறது! பக்தி எளிமையாகவே இருக்கும்... பக்தி இல்லாதது தான் தன்னை ஊதிப்பெரிதாகக் காட்டிக் கொள்ளும்... சோப்பு நுரைகளில் குமிழிகள் தான் உருவாகும்... முத்துக்கள் அல்ல! நான் உங்களைப் பார்க்க பழம் கூட வாங்கிவரவில்லை என்கிறார் நூலாசிரியர்... நீ வாங்கி வந்திருந்தாலும் என் கையால் தொட்டிருக்க மாட்டேன்" என்கிறார் சரஸ்வதி பாய்... என்ன ஒரு பக்தி வைராக்கியம்... 


75 வயதான சரஸ்வதி பாய் தனது அடுத்த முறை பர்த்தி விஜயத்தின் போது நேர்ந்த சுவாமி அனுபவத்தைப் பகிர்கிறார்...அது பரவசம் மிகுந்தது...அன்றைய காலக்கட்டத்தில் கூட்டம் அவ்வளவாக இராது என்கிறார்... பூர்ண சந்திர வளாகத்தில் கூட கால்வாசியே நிரம்பும் என்கிறார்... அப்போது இரண்டு குடும்பம் வருகிறது... ஒருத்தி தனது தேரை போல் அதாவது தவளை வடிவ முதுகு போல் உடலமைப்பு கொண்டு அமர்ந்திருக்கும் மகனையும் அழைத்து வருகிறார்... கண்பார்வையற்று சக்கரநாற்காலியில் அமர்ந்திருந்து கழுத்தெங்கும் நகை அணிந்த ஒரு சீமாட்டியும் வருகிறார்... ஒரு மாதம் இரண்டு பேரையும் சுவாமி கண்டுகொள்ளவே இல்லை...! சரஸ்வதி பாயும் தினசரி அவர்களோடு தரிசனம் செய்து திரும்புவார்... இப்படியே நாட்கள் போய்க் கொண்டிருந்தது...அப்படி ஒருநாள் அந்த தேரை (தவளை) போல் உடம்பு கொண்ட சிறுவனிடம் பாபா நேராக வந்து அவனை தூக்குகிறார்... எங்கே அவன் விழுந்துவிடுவானோ என தாய் பதறுகிறார்... தாய்மைப் பதற்றம் அது! சுவாமி கை அசைத்து தாயை நிறுத்துகிறார்... தேரை மகனின் உடம்பு முழுக்க தூசி தட்டுவது போல் தட்டுகிறார்... அவன் நிற்கிறான்... போ போ என நடக்கச் சொல்கிறார்... அதுவரை தவளை போல் முதுகு வளைந்து நிமிரவே முடியாமல் அமர்ந்திருக்கும் அவன் நிமிர்ந்து நடக்கிறான்...! பாரதி சொன்னது போல் நிமிர்ந்த நன்னடை அது! கூடி இருப்பவர்கள் "சாயி ராம் சாயிராம்" எனப் பரவசப்படுகிறார்கள்... மூதாட்டி சரஸ்வதி பாயோ 'கண்ணா கண்ணா' என தேம்பித் தேம்பி அழுகிறார்!! நேரடியாக பார்த்த அவருக்கு எப்படி இருந்திருக்கும்! பாபா அதோடு நிற்கவில்லை...

         நேராக நகையணி பெண்மணியிடம் வருகிறார்... அவரை உற்றுப் பார்த்து சுவாமி "பெத்தராணிகாரு (பெரிய ராணி)" என தோள்பட்டையை தூக்கி நிறுத்துகிறார்... எழுந்து நடக்கவே முடியாத அவர் நிற்கிறார்... நின்றபடி இருக்க.. பாபா சிருஷ்டி விபூதியை அவர் கண்ணிமை மேல் தடவ... "சுவாமி!" என கண்கலங்கி கைகூப்பித் தொழுகிறார்... அவரின் நின்ற கோலமும்... பாபாவை பார்த்த பார்வையும் அவருக்கு பார்வை திரும்பிவிட்டது என கூடி இருந்தவர்களுக்குப் புரிகிறது... முட்டியில் வலுவிழந்த அந்த பெரிய ராணியம்மா பாபாவின் கருணையால் தனது கர்ம வினையிலிருந்து மீண்டு வருகிறார்!


ஒருமுறை சுவாமி மூதாட்டி சரஸ்வதி பாய்க்கு பாத நமஸ்காரம் வழங்கிவிட்டு சுவாமி தனது திருப்பாதங்களை தூக்குகிற அதே நொடியில் அவர் பாத அடியில் இருந்து ஒரு துளிசிக் கொத்து இவர் கைகளில் விழுகிறது.. கண்ணா கண்ணா என கைகளில் ஒற்றிக் கொள்கிறார் மூதாட்டி சரஸ்வதி பாய். பிறகு பலருக்கு பாபா பாதநமஸ்காரம் அளித்துவிட்டு அந்த மூதாட்டியிடம் சிருஷ்டி லிங்கம் அளித்து விட்டு "இதை நீ அதிகாலை 4.30 முதல் 5.30 க்குள் அபிஷேக ஆராதனை செய்தால் அது எனக்கு... அதற்குப் பிறகான நேரத்தில் செய்தால் அது உனக்கு!" என்கிறார்... ஆக பிரம்ம முகூர்த்தத்தில் செய்யப்படுகிற வழிபாடு ஆராதனை ஜப தியான தவங்கள் அனைத்தும் சுவாமிக்கு நேரடியாக சென்று சேர்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது!! அன்றிலிருந்து விடியாத பொழுதில் ஆன்மீக விடியலாய் 4.30 க்கெல்லாம் தனது ஆராதனையை தினசரி நிகழ்த்துகிறார் அந்த அற்புத மூதாட்டி!


 பெங்களூரில் சுவாமி தரிசனம் தருகிற போது.. அங்கேயும் செல்கிறார்.. குளிர் தாங்கமுடியவில்லை... சுவாமியோ உள் வளாகத்தில் இரண்டு வாலன்டியர்ஸை அழைத்து வெளியே இருக்கும் மூதாட்டியின் அடையாளம் சொல்லி சிரித்தபடி ஒரு கம்பளி கோர்ட் தருகிறார்... அவர்களோ சரஸ்வதிபாயை கண்டுபிடித்து கம்பளியை அணிவிக்க முற்படுகையில்... "எனக்கு சுவாமியை தவிர எதுவும் தேவையில்லை" என அதை வீசி எறிகிறார்... எவ்வளவு அனன்ய பக்தி..! சுவாமி தன் பக்தர்களுக்கு எவ்வளவோ கருணை காட்டியபோதும் இன்னமும் குறைபட்டுக் கொள்ளும் ஒரு சில பக்குவமில்லாதவர்களின் மத்தியில் திட வைராக்கிய பக்தியோடு அகத்துறவில் அந்த மூதாட்டி வாழ்ந்திருப்பது நம்மை பரவசப்படுத்துகிறது! வைராக்கிய பக்தி அகத்துறவை நோக்கித் தான் அழைத்துப் போகும்.. அது தான் உண்மையான பக்தியின் லட்சணம்! பக்தி நுனிப்புல் மேய்வதில்லை... அது ஆழந்தகன்று ஆன்மாவில் நிறைந்து பூரண திருப்தியின் நிறைவை அடைந்துவிடுகிறது! வேண்டாம் வேண்டாம் என தடுத்தும் மறுத்தும் பாபா இவருக்கு கையில் புடவையை திணித்திருக்கிறார்!


 வயதானவர்களிடம் குறும்பு பாபா ஜரிகை புடவைகளை நீட்டுவாராம்... அவர்கள் முழிப்பார்களாம்...பிறகு அலங்காரமில்லா புடவைகளை எடுத்துவந்து பாபா அளிப்பாராம்... இது உங்களுக்கு நன்றாக இருக்கும் என பாபாவே ஒவ்வொருவர் கையில் வழங்கி ஆனந்தப்படுவாராம்... ஒருமுறை சட்டைத்துணிகள் விநியோகம்... ஒருவரே பாபாவிடமிருந்து நிறைய வாங்கிக் குவிக்க.. பலரின் கைகளில் ஐந்தாறு சட்டைத் துணிகள்... அப்போது 

"சுவாமிக்கு எல்லாம் தெரியும்! உண்மை நேர்மை என்பதில் நாம் சிறிது கூட தவறக்கூடாது! பொய்யின் கலப்படமே இல்லாமல் இருப்பதே சத்தியம்!! பேராசைப் படாதீர்கள்!" என்றெல்லாம் சரஸ்வதி பாய் எச்சரித்தும் கிழவி ஏதோ சொல்கிறாள் என அசட்டையாக சட்டையை அள்ளிப் போட்டபடி செல்ல.. வீட்டிற்கு வந்து பையைப் பிரித்தால் ஒரே ஒரு சட்டைத்துணி தான் அள்ளிப்போட்டவர்களின் பைகளில் இருக்கிறது...!!!


(ஆதாரம் : அற்புதமும் ஆன்மீகமும் - 1 / பக்கம் : 88 - 95 / ஆசிரியர் : திருமதி சரோஜினி பழனிவேலு) 


சுவாமிக்கு நேர்மை,  உண்மையே பிடிக்கும்.. நேர்மையோடு வாழும் மனிதர்களையே பாபா நேசிக்கிறார்! தனது நடவடிக்கைகளை மனிதன் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய காலகட்டம் இது! பாபா சமாதி ஆகிவிட்டார்.. அவருக்கு நாம் செய்வது எதுவும் தெரியாது.. அவர் எங்கே வரப் போகிறார்...? எப்படி நம்மை தட்டிக் கேட்கப் போகிறார் என நாம் நினைத்தால் அது நம் அறியாமையே!! பாபா எங்கேயும் செல்லவில்லை! அவர் அனைத்தையும் கவனிக்கிறார்! இது நடைமுறை அனுபவ நிதர்சனமும் கூட... பாபாவின் கருணையை நாம் தவறாகப் பயன்படுத்த முயற்சிப்பது  என்பது பளபளக்கும் தங்க ஊசியை எடுத்து நம் கண்களை நாமே குத்துவதற்குச் சமம்! 


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக