தலைப்பு

செவ்வாய், 12 ஜூலை, 2022

இரு சாயியையும் தரிசித்த மாதாஜி ஸ்ரீ கிருஷ்ண பிரியா!

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தின் மேல் கோபிகா பக்தியும் அதற்கு அடுத்த அவதாரமான ஷிர்டி பாபாவை தரிசித்து பக்தி செலுத்தும் பாக்கியமும் பெற்ற சுவாமினி கிருஷ்ண பிரியா மாதாஜி எவ்வாறு அதற்கு அடுத்த அவதாரமான ஸ்ரீ சத்ய சாயியால் ஆட்கொள்ளப்பட்டார்...? அவரின் அனுபவம் யாது? சுவாரஸ்யமாய் இதோ...


ஆந்திரா கிழக்கு கோதாவரி மாவட்ட ராமச்சந்திர புரத்தை தனது பூர்வீகமாகக் கொண்டவர் மாதாஜி... அவரது தாய் ஜக்குபாய் 18 முறை பாகவதபுராணம் பாராயணம் செய்தபிறகு பிறந்த குழந்தை ஆகையால் கிருஷ்ண பிரியா எனப் பெயர் சூட்டுகிறார்! குழந்தைக்கு 8 வயது இருக்கிற போது ஷிர்டி பாபா தரிசனம் கொடுத்து "என்னை நினைவிருக்கிறதா?" எனக் கேட்கிறார்! இல்லையே என குழந்தை சொல்கிற போது..‌ "நான் பல ஜென்மங்களாக உன் குரு!" என்கிறார் ஷிர்டி பாபா! ஆம் "கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்" அல்லவா! "ஓம் ஸ்ரீ சாயி நாதாய" நமஹ எனும் மந்திரத்தை தொடர்ந்து ஜபித்து வா என்று கூறி மறைந்துவிடுகிறார்... பாபா தனது ஸ்தூல உடம்போடு ஷிர்டியில் இருக்கையில் நிகழ்ந்த நிகழ்விது! 


கார்த்திகை பௌர்ணமிதோறும் ஸ்ரீ கிருஷ்ண கானத்தை காற்றுக்கு தானம் அளித்து... கேட்கிற செவிகளுக்கு ஞானம் அளித்து சிறுவயதிலிருந்தே தன்னை மறப்பார் மாதா ஜி... அந்த சத்சங்கங்களில் எல்லாம் அவரது உள்ளங்கைகளில் இருந்து சுகந்தம் பரவி தெய்வீக அதிர்வலைகளை பரப்பி கொண்டிருக்கிறது... பிறகு கணேஷ்புரி சென்று பகவான் நித்யானந்தாவை தரிசிக்கிறார்...பிறகு பூரியில் கிரிநார் பாபாவை தரிசிக்கிறார்.. ஷிர்டி பாபா சொல்லியதற்கு இணங்க 40 நாள் ஷிர்டியில் மௌன விரதம் அனுஷ்டிக்கிறார்(கடைபிடிக்கிறார்)... மத்திய பிரதேச கவர்னர் போகராஜு பட்டாபி சீதாராமையா மாதா ஜியை நாக்பூருக்கு வரவேற்று கௌரவிக்கிறார்... "ஷியாம் விஹார்" என ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் பெயரில் மத்திய பிரதேச நாக்பூர் மகாதேவ் மலைகளில் ஆசிரமம் நிறுவுகிறார்! 

எவர் ஷிர்டி பாபா சமாதி கோவிலை கட்டினரோ அந்த பூட்டி வம்சத்தினரே மாதா ஜி ஆசிரமம் கட்ட வழிவகை செய்கின்றனர்! 


மாதாஜி ஷிர்டிக்கு அவ்வப்போது சென்று வருகிறார்... ஆர்த்தியை தரிசிக்கிறார்.. பாபா அவரோடு பேசுகிறார்.. புராண உபநிஷத்களுக்கு விளக்கம் அளித்து தெளிவுபடுத்துகிறார்... ஒருமுறை பூரி ஜெகன்நாத ஷேத்திரத்தில் கடல் ஸ்நானம் (குளியல்) புரிகிற போது நான்கு அங்குலத்திற்கு ஸ்ரீ கிருஷ்ண விக்ரகம் கிடைக்கிறது... பரவசப்படுகிறார் மாதா ஜி... "நான் தான் உனக்கு அதை அளித்தேன்! நீ இந்த விக்ரகத்தை பல ஜென்மங்களாக பூஜை செய்து வந்திருக்கிறாய்!" என்கிறார்! 

ஷிர்டி பாபா ஷிரடியில் தனது பௌதீக முதுமையை பெறுகிற போது மாதா ஜி நாக்பூரில் இருந்து சிம்லாவில் நிரந்தரமாய் தங்கிவிடுகிறார்... ஷிர்டி பாபா ஷிர்டியில் மதியம் 2 மணிக்கு 1918 ல் விஜயதசமி அன்று சமாதி ஆகிறார்... அதை அடுத்த நாள் கேள்விப்பட்டு அழுது குளமாகிறார் மாதா ஜி...!


அக்டோபர் 6 - 1992' பர்த்தி பாபா தனது தெய்வீக உரையில் அதற்கு பிறகு நிகழ்ந்தவற்றை தெளிவுபடுத்துகிறார்... "என்னுடைய (ஷிர்டி பாபா) சமாதிக்கு அடுத்த நாள் சிம்லா பனி பெய்து கொண்டிருந்தது... அப்போது நான் (ஷிர்டி பாபா) அங்கே ஒரு பெண்மணியின் வீட்டு வாசலைத் தட்டி இங்கே கிருஷ்ணபிரியா வீடு எங்கே எனக் கேட்கிறேன்.. எனக்கு முகவரி தெரியாது என்பதல்ல.. அவளைப் பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக.. பிறகு அவள் வீட்டிற்குச் செல்கிறேன்... அவள் என்னைக் (ஷிர்டி பாபா) கண்டு உறைந்து போய்விடுகிறாள்... "எப்படி என் வீடு தெரியும்?" எனக் கேட்கிறாள்... "நான் எல்லா இடங்களிலும் இருக்கிறேன்! என்ன பார்க்கிறாய்... வெளியே பனி பெய்கிறது... சூடாக ஒரு டீ கொடு!" எனக் கேட்கிறேன்... அவளும் தேநீர் தருகிறாள்.. இந்த உடம்பிற்கு உடனே ஜீரணமாகிவிட்டது... எனக்கு பசிக்கிறது என்கிறேன்.. உடனே சப்பாத்தியும் கத்திரிக்காய் கறியும் கொடுத்தாள்... "கத்திரிக்காய் கறி ருசியாக இருந்தது" என்றேன்! கைகளை கழுவி ஒரு டவலில் துடைத்து கிளம்புகிறேன்.. 

நீ என்னை 8 வருடம் கடந்து பார்க்க வா என்று மட்டும் சொல்லி கிளம்பிவிட்டேன்! போகிற போது செவ்வந்திப் பூங்கொத்து கொடுத்துவிட்டுச் சென்றேன்!" என மிகத் தெளிவாக பாபா எடுத்துரைக்கிறார்!

பாபா அப்படியே செல்வதை வழி மீது விழி வைத்து நீர் தெளிக்கப் பார்க்கிறார் மாதா ஜி... செல்கிற பாபா ஒரு குட்டையில் தவறி விழுவது போல் காட்சிக்குப் பட... அப்படியே மறைந்து போகிறார்! பாபா கொடுத்த செவ்வந்தி மலர் ஸ்ரீ கிருஷ்ண விக்ரகத்திற்கு சாற்றுகிறார் மாதா ஜி... அது அப்படியே மறைந்து போய்.. ஷிர்டியில் காட்சியளிக்கிறது... பாபா தந்த அந்த மலர்கள் பாபாவின் சமாதியில் வைத்த மலர்களே! ஷிர்டி பாபா சமாதியாகிவிட்டார் எனும் தந்தியும் மாதாஜிக்கு வருகிறது!


50 வருடங்கள் கடந்து போகிறது‌... பர்த்தி பாபா 1977 ல் சிம்லாவுலுக்கு செல்கிறார்... தள்ளாடிய வயோதிகத்தில் கிருஷ்ண பிரியா மாதாஜி..."நீங்கள் எனக்கு செய்த சத்தியத்தை மறந்துவிட்டீர்களா பாபா?" எனக் கேட்கிறார் மாதா ஜி... உடனே பாபா "இல்லை கிருஷ்ணா... நீ தான் மறந்துவிட்டாய்!" "நான் உன் வீட்டிற்கு வந்தபோது சொன்னேனே... ஏன் என்னை இத்தனை வருடம் வந்து பார்க்கவே இல்லை கிருஷ்ணா?" என பர்த்தி பாபா கேட்க... கண்கலங்கி பாபாவின் காலடியில் விழுகிறார் மாதா ஜி... டிசம்பர் 5 1987 ஆம் ஆண்டு ஸ்ரீ தத்த ஜெயந்தியில் பாபாவின் காலாடியிலேயே தனது தெய்வீக ஆன்மாவை கலந்து கொள்கிறார் கோபிகா பக்தி கொண்ட மாதா ஜி! பூக்களோடு கலந்து போவதை விட கண்ணனின் புல்லாங்குழலோடு கலந்து போவதே காற்றுக்கு மோட்சம்! இந்த ஆன்மீகக் காற்று அப்படியே இணைந்து போகிறது!


(Proof : Sri SathyaSai and Yogis / Page no: 20 / Author : Jantyala Suman babu / Translation : pidatala Gopi Krishna/ in tamil : Kavingar VairaBharathi ) 


ஒரு நீண்ட நெடிய வெப் சீரியஸ் போன்றது மனித வாழ்க்கை! அதில் வருகிற ஒவ்வொரு சீசன் போல் ஒவ்வொரு ஜென்மமும்...  சீசன் முடிவது என்பது நமது பற்று முடிவதிலேயே இருக்கிறது... பாபா மீதான நிஜபக்தி நம்மை பற்று அற்றவர்களாய் ஆன்மீக வாழ்வை வாழ வைத்து சீக்கிரம் சீசன்கள் சுவாரஸ்யமான ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறது! அது அகத்துறவால் மட்டுமே ஏற்படுகிறது! அகத்துறவே ஆன்மீகம் என்பதெல்லாம்... மற்றதனைத்தும் நேர விரயமும் ஆன்ம நஷ்டமும்...! 


 பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக