தலைப்பு

ஞாயிறு, 31 ஜூலை, 2022

ஸ்ரீ பிரகலாத சுவாமி | சாயி அவதாரம் பற்றி மகான்கள்

பரம்பொருளின் பிரகடனம்:

"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
                           - இறைவன் ஸத்ய ஸாயி


ஸ்ரீ பிரகலாத சுவாமி:

சக்திகள் பல நிறைந்த மகான் ஒருவர் பாபாவை பற்றி எவ்வாறு தன் அடியார்களிடம் சொல்கிறார்...? பிரசாந்தி நிலையத்தில் ஷெட்'டில் தங்கிய இருவர் அந்த மகானிடம் வந்திருந்த போது அவர்கள் என்ன சொன்னார்கள்...? திரும்பிச் செல்கையில் என்ன கண்டார்கள்? மிக சுவாரஸ்யமாக இதோ...


கோமரகிரி பட்டிணம் என்ற கிராமம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமலாபுரத்தில் இருக்கிறது... அங்கே கனிந்த இதயத்தோடு இருக்கிற மகானின் பெயர் ஸ்ரீ பிரகலாத சுவாமி... ஒரு அடியார் அவரிடம் வந்து ஏன் நீங்கள் இன்னும் சன்யாசம் வாங்கிக் கொள்ளவில்லை என கேட்கிற போது "சன்யாசம் என்பதே கேட்ட உடனே வருவது அல்ல.. அது புறத்தை சார்ந்ததல்ல அகத்தை சார்ந்ததே!" என அகத்து துறவை பற்றி ஆழமாகப் பேசுகிறார் ! ஞான ஜோதி பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியை தரிசிக்க திருவண்ணாமலைக்கு வருகிறார்...பகவானோ "நீ இமயம் செல்ல வேண்டாம்... அங்கேயே (கோதாவரி நதிக்கரை) ஆசிரமம் நிறுவி அடியார்களுக்கு வழிகாட்டு!" என்கிறார்... ஆகவே அங்கே ஆசிரமம் நிறுவுகிறார்... கோமரகிரியில் சாயி புகழ் பரவியிருந்தது! மகான் பிரகலாத சுவாமியோ ஒருமுறை கூட புட்டபர்த்தியையோ பாபாவையோ நேரில் தரிசித்ததே இல்லை ஆனால் தனது அடியாரை பாபாவிடம் அனுப்ப அவர் தவறியதே இல்லை! சதா தியானத்தில் இருப்பவர் இந்த பிரகலாத மகான்... ஆகவே அவர் தருகின்ற தண்ணீர் தீர்த்தம் கூட பலபேரின் நோய்களை குணப்படுத்தி இருக்கிறது! பாபாவே விபூதி தருகிறார் என விபூதி வழங்கியும் நோய்களை தீர்க்கிறார்! சில சமயங்களில் அவரின் பூஜை அறையில் லட்டு சிருஷ்டியாகி இருக்கிறது! பிரகலாத சுவாமி தனது தாடியை தொடுகிற போது கற்கண்டுகள் சிருஷ்டியாக அதனையும் 50/60 அடியவர்களுக்கு பிரசாதமாக வழங்கி இருக்கிறார்! 


அவரின் தெய்வீக இருப்பே அமைதியானதாகவும் புனிதமானதாகவும் இருக்கிறது! வருகின்ற அடியவர்களை எப்போதும் பேரன்போடு ஆசீர்வதிக்கிறார்... ஒருமுறை பண்டரிபுரம் செல்கிற போது இறைவன் பாண்டுரங்கன் அவருக்கு கருவறையில் தரிசனம் தர.. பூஜை முடிந்து பூட்டிய கதவிலிருந்து வெளியே வருகிறார் பிரகலாத சுவாமி! அதுமுதல் இன்றும் அவரது ஆசிரமத்தில் ஏகாதசி விரதம் கடைபிடிக்கப்படுகிறது! அவரை "தோட்டல பண்டாரி பாபா" (தோட்டம் பாபா) என அழைக்கிறார்கள் அடியவர்கள்... காரணம் அவரது ஆசிரமம் சுற்றி தோட்டமாகவே திகழ்வதால் அந்தப் பெயர்!


ஹரித்வாரிலிருந்து வருகிற ஒரு யோகி ஆசிரமத்தின் வெளியே "இங்கு வரம் வழங்கப்படும்!" என ஒரு போர்ட் வைக்கலாமே எனச் சொல்கையில் மகானோ "வரம் எப்போதும் நல்ல செயல்களால் வருபவையே யோகிகளின் தபோ சக்தியால் மட்டும் வரம் என்பது நிகழ்பவை அல்ல!" என அகம் திறந்து சத்தியம் மொழிகிறார்! ஷேத்ராடனம் (ஆன்மீக உலா) செல்கிற போது காவேரி ஆற்றிற்கு வருகிறார் பிரகலாத சுவாமி.. நீரே இல்லை ... "நீர் இறங்கினால் நீர் வரும்!" என்கிறார் ஒரு அடியவர்! மகான் இறங்குகிறார்.. நீர் பூமியை விட்டு எம்பிக்குதிக்கிறது.. நீராடுகிறார்... கரைக்கு வருகிறார்... காவிரி நீரும் தரைக்குள் போய்விடுகிறது...! பிரகலாத மகான் காசிக்கு வருகிறார் அங்கே ஒரு பாண்டா (பூஜாரி) மனைவிக்கு தொண்டையில் புற்றுநோய் ... சரி அவ்வளவு தான் அவள் ஆயுள் என கங்கைக் கரையில் எமனின் காலடியில் வைப்பதான திட்டத்தை முறியடித்து தனது ஆசிரமத்திற்கு அழைக்கிறார் பிரகலாத மகான்... பஜனை பேரானந்தத்தில் அவர் ஆடிக் குதிக்க தனது காலால் பாண்டா மனைவியின் தொண்டையை எட்டி உதைக்கிறார்... சடார் என சரிகிறாள்.. அந்த அதிர்வு அவளது தொண்டைப் புற்று நோயை குணமாக்கிவிடுகிறது! மகிழ்கிறார் காசி பூஜாரி..‌மகானுக்கு கனகாபிஷேகம் செய்ய வேண்டும் என அவரிடம் முறையிடுகிறார்.. மீண்டும் அந்தப் புற்றுநோயை கொண்டு வா.. அப்போது செய்யலாம் எனச் சொல்ல... ஏன் அவ்வாறு சொல்கிறார் என பூஜாரி அதிர. "எதற்கு கனகாபிஷேகம்? இந்த நோய் தணிப்பை நான் செய்யவில்லை பிரபஞ்ச இறைவன் செய்தது!" என விளக்குகிறார்.. ஆகவே தான் பாபா மகான்கள் எனது கைக்கருவிகள் என்கிறார்! தியானப் பேரரசர் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி சமாதி ஆக.. அதே நேரத்தில் தனது அடியவர்களோடு ஆசிரமத்தில் அந்த ஜோதி செய்தியைப் பகிர்ந்து கொள்கிறார்! 


கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இரு பெண்மணிகள்... பெயர் சரஸ்வதி, மீனாட்சி. சிறுவயதிலிருந்து ஆன்மீக தாகத்தால் தனித்தவர்கள்.. ஆன்மீக ஷேத்ராடனம் புரிகிறார்கள்.. அப்படி பிரகலாத மகானின் ஆசிரமம் வந்து ஆசிரம‌ யாகத்தில் கலந்து கொள்கிறார்கள்! இரவில் ஒரு கனவு... அதில் ஒரு ஆசிரமம்... ஷிர்டி சாயி நடுவில் கிருஷ்ண விக்ரஹம் பர்த்தி சாயி என பெரிய பூஜையறை தரிசிக்கிறார்கள்... பஜனிலும் கலந்து கொள்கிறார்கள்... அதிகாலை பிரகலாத மகான் அவர்களிடம் "நீங்கள் மகாபுருஷரோடு ஆன்மத் தொடர்பு கொண்டவர்கள்... அவரே ஸ்ரீ சத்ய சாயி.. அவர் சாட்சாத் இறைவனே...மனித வடிவில் வந்த இறைவன்... ஆகவே அங்கேயே செல்லுங்கள்!" என வழிகாட்டுகிறார்.. அவர்களும் புட்டபர்த்தி பிரசாந்தி நிலையம் வருகிறார்கள்... பாபா பேரன்போடு வரவேற்கிறார்... "பிரகலாதர் அனுப்பினாரா...? அவர் எப்போதுமே ஆன்மீகப் பொறுப்புகளை என்னிடம் தள்ளிவிடுபவர்!" என புன்னகை செய்கிறார் பாபா! அவர்கள் தங்கள் வாழ்வில் நிகழ்ந்த பல்வேறு துயர சம்பவங்களை பகிரும்போது "சுவாமி நான் தான் உங்களை இங்கே அழைத்தது! இன்று முதல் புட்டபர்த்தி உங்கள் இல்லம்.. இங்கேயே வாழ்நாள் முழுக்க தங்குங்கள்!" என பேரன்போடு அனுமதி வழங்குகிறார் கருணையே வடிவான பாபா!

     

ஒரு கடுங்கோடைப் பொழுதில் அந்த இரு பெண்மணிகளும் பிரகலாத மகானின் ஆசிரமத்திற்கு வந்துவிடுகிறார்கள்... "இங்கே ஏன் வந்தீர்கள்?" என மகான் கேட்க... "கோடை வெய்யில் தகிக்கிறது.. ஷெட்'டில் காலம் தள்ள கடினமாக இருக்கிறது.. !" என பரிதாபகரமாகப் பகிர.. "ஓ கட்டிடத்தில் தங்க இடம் வேண்டுமா?" என மகான் கேட்க.. மீண்டும் அவர்கள் பிரசாந்தி நிலையத்திற்குத் திரும்புவதற்கு முன்பே அவர்களின் துணிமணி படுக்கை கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.. திரும்பி வந்து திகைத்துப் போகிறார்கள்... தனது வாழ்நாள் முழுதும் பாபா ஆசிரமத்திலேயே தங்கி பூமாலை கோர்க்கும் சேவையை செய்து வருகிறார்கள்! 


(Proof : Sri SathyaSai and Yogis / Page no: 163) / Author : Jantyala Suman babu / Eng Translation : pidatala Gopi Krishna | Source: Sri Sathya Sai Divya Leelamrutham/ 2nd Ch/ Pg: 16) 


"யோகிகளும் துறவிகளும் இறைவனை அழைக்கும் அவதாரம் நிகழ்கிறது! எத்தனையோ மகான்கள் என் திருவரவிற்காக பிரார்த்தனை செய்தார்கள்...ஆகவே தான் அதன் பொருட்டே சுவாமி நான் அவதாரம் எடுத்திருக்கிறேன்!" என்கிறார் இறைவன் பாபா! 

பூமியில் நிகழ்கிற ஓர் அபூர்வ விழா பாபா எனில் அந்த விழா நுழைவுக்கான வரவேற்புத் தோரணங்களே மகான்கள்! ஆம் பாபா எனும் விழா சாதாரண விழா அல்ல ஸ்ரீ ஷிர்டி சாயி ஸ்ரீ சத்ய சாயி ஸ்ரீ பிரேம சாயி ஆகிய முப்பெரும் விழாவே!


பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக