தலைப்பு

செவ்வாய், 26 ஜூலை, 2022

மகான் ஸ்ரீ ரங்காவதூதர் | சாயி அவதாரம் பற்றி மகான்கள்



பரம்பொருளின் பிரகடனம்:

"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
                           - இறைவன் ஸத்ய ஸாயி


மகான் ஸ்ரீ ரங்காவதூதர்:

அவதூதர்கள் ஆடைகள் கூட துறந்தவர்கள்... மக்களின் அபிப்ராயங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்! அப்பேர்ப்பட்ட ஓர் அரிய அவதூத மகான் பாபாவை பற்றி பகிர்ந்த சத்திய திருவாய்மொழி சுவாரஸ்யமாக இதோ...

பாபாவின் அத்யந்த (நெருங்கிய) பக்தரான டாக்டர் காடியா ரயிலில் பம்பாயிலிருந்து ஜாம்நகர் சென்று கொண்டிருக்கிறார்... அந்த ரயில் பரோடாவில் இறங்கும் என ஒரு சக பயணி அறிவிக்க... இங்கே தான் ஸ்ரீ ரங்காவதூதர் தங்கி இருக்கிறார் எனும் ஓர் அரிய செய்தியையும் பகிர்ந்தவுடன் ஆச்சர்யமுடன் ஆர்வப்படுகிறார் டாக்டர் காடியா.. மகான்களை மதித்து துதிப்பவர் காடியா... அதுவே சரியான ஆன்மீக வழிமுறையும்... உடனே தானும் தன் மனைவியும் ஸ்ரீ ரங்காவதூதரை நேசித்து வழிபடுபவர்கள் என அவரிடம் அறிவித்துக் கொண்டே ரயிலில் இருந்து அவரோடு இறங்கிவிடுகிறார்!

 

பரோடாவில் இறங்கி அங்கே ஒரு விடுதியில் தங்கி அங்கே வரவேற்பரையில் உள்ள ஒரு நபரை கேட்க.. தானும் பாபுஜி (ஸ்ரீ ரங்காவதூதர்) பக்தரே என தெரிவித்து ரங்க மகான் தங்கிய இடத்திற்கு இப்போது கூட்டமாக இருக்கும் நாளை அதிகாலை 6 மணிக்கு சென்று தரிசித்தால் கூட்டம் குறைவாக இருக்கும் என்கிறார்... அடுத்த நாள் அதிகாலை... விரைவாக எழுந்து விரைகிறார்கள்... ஆயினும் 500 பக்தர்கள் அங்கே திரண்டிருக்கிறார்கள்... பக்தர்களோடு பக்தராக அமர்கிறார் டாக்டர் காடியா! 

அப்படி அதிகாலையிலேயே கூட்டம் திரளுமளவுக்கு என்ன விசேஷம்? அவ்வளவு சக்தி வாய்ந்தவரா அவர்?  ஸ்ரீ ரங்காவதூதர் யார்?


இந்த அவதூத மகானின் இயற்பெயர் பாண்டுரங்கா... விட்டலபண்டா-ருக்மணி தம்பதியினருக்கு அந்தணர் வகுப்பில் குஜராத் கோத்ராவில் பிறக்கிறார்! 5 வயதில் தந்தை பிளேக் நோயால் இறக்கிறார்! பூநூல் வைபவமும் இவர் தம்பி நாராயணனோடு சேர்ந்து இவருக்கு நிகழ்கிறது! அதிலிருந்து ஸ்ரீ ராம ஜெபம் புரிகிறார்! ஸ்ரீ வாசுதேவானந்த சரஸ்வதியை சந்தித்து ஆன்மீக தீட்சை பெறுகிறார்... அவரே இவரது குரு! மகாத்மா காந்தியின் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறார்! மேல்படிப்பு முடித்து சமஸ்கிருத இலக்கணத்திற்கு இரு நூலே எழுதுகிறார்! சமஸ்கிருத இலக்கணம் கற்க மிகவும் கடினமானது... அதற்கே நூலெழுதிய இவரது அறிவுக்கூர்மை அபாரமானது! பல மகான்களை வாழ்க்கையில் தரிசித்து ஆசி பெறுகிறார்! பிறகு நர்மதா நதிக்கரையில் நரேஷ்வரில் ஒரு ஆசிரமம் அமைக்கிறார்.. அதிகாலையே எழுவது.. நர்மதை நீரில் குளிப்பது... ஆழ்ந்த தியானம்... ஆன்மீகம் வாசித்தல்.. இரவில் நட்சத்திரங்களோடு பேசுதல்.. இதுவே இவரது அன்றாட ஆன்மீக வாழ்வு! பாபுஜி என அனைவராலும் அழைக்கப்படுகிறார்.. அங்கே ஒரு வேப்பமரத்தடியில் தான் அவர் தியானம் புரிவது வழக்கம்! மற்ற நேரங்களில் கசக்கும் வேப்ப இலைகள் இவர் தியானக்கிற சமயத்தில் மட்டும் இனிக்கும்.. தியான மகத்துவம் அது!


இவ்வாறு அவதூதரின் மகிமையை இப்படி டாக்டர் அசைபோட... அவர் கவனத்தை கலைக்கிறது ஒரு குரல் "இங்கே யாரேனும் டாக்டர் இருக்கிறீர்களா? பாபுஜி அழைக்கிறார்!" என... காடியாவோ தான் டாக்டர் தான் எனவும் தன்னைத்தான் பாபுஜி அழைக்கிறாரா? என இன்னொரு முறை கேட்க.. "ஆஃப்ரிக்கா டாக்டரை பாபுஜி அழைக்கிறார்!" என அந்த உதவியாளர் தெரிவிக்க.. எழுந்து கொண்டு மகான் அவதூதரின் அறைக்குச் செல்கிறார் காடியா... பாபுஜியின் ஆன்மீக சன்னதியில் பரவசமாகிறார்.. ஆழ்ந்த அமைதியை அனுபவிக்கிறார்! "நீங்கள் என்னை முதலில் நரேஷ்வரில் சந்திப்பதாகத் தானே நினைத்திருந்தீர்கள்?" என பாபுஜி தெரிவித்ததுமே...தன் மனதில் உள்ளதை அவ்வாறே சொல்கிறாரே என வியந்து போகிறார்! பேச்சு பாபா பக்கம் திரும்புகிறது... "நீங்கள் கலியுக அவதாரத்தோடு உங்கள் வாழ்க்கைப் பயணத்தை மேற் கொள்ள எத்தனை பாக்கியம் பெற்றிருக்கிறீர்கள்!!" என பாபுஜி அறிவிக்க.. வியந்து போகிறார் காடியா ஜி! "உங்கள் சட்டைப் பாக்கெட்டில் பாபா படம் வைத்திருக்கிறீர்களே.. அதை நான் பார்க்க முடியுமா?" எனக் கேட்கிறார்.. வியந்து காடியாவும் தன் சட்டையிலிருந்து பாபா படத்தை எடுத்துக் கொடுக்க.. அதை வாங்கிய வண்ணம் பாபுஜி "பகவான் பகவான்" என பாபாவை பரவசத்தோடு அழைக்கிறார்! காடியா அதைக் கேட்டு ஆனந்தப்படுகிறார்!

"தாங்கள் நன்றாகப் பாடுவீர்களே! ஒரு பஜன் பாடல் பாடுங்களேன்!" என பாபுஜி தெரிவித்ததும்.. உடனே தபலாவும் ஆர்மோனியப் பெட்டியும் வந்து சேர்கிறது...


"சத்யம் சிவம் சுந்தரம் ஏ ஹை சாயி கா நாம்!" எனும் பஜன் பாடலை காடியா பாடி முடிப்பதற்கும் பாபுஜி லயிப்பதற்கும்  சரியாக இருந்தது! இவ்வாறே காடியா சந்திப்பு பரவசப்படுத்துகிறது.. இதை தனது நூலான சாயி ஸ்மரணிலும் டாக்டர் காடியா பதிவு செய்திருக்கிறார்! அவர் பாபாவை பற்றி பாபுஜி என்ன சொல்கிறார்? எனக் கேட்பதற்காக செல்லவே இல்லை... ஆனால் அங்கே சுவாமியின் சங்கல்பம் வெகுசிறப்பாக அரங்கேறியது.. பிறகு பாபுஜி  ஹரித்வாரில் 1968 ல் சமாதி ஆகியதை காடியா கேள்விப்படுகிறார்! 

"எல்லா தலைசிறந்த குருமார்களின் வடிவமும் நானே! மனித வடிவங்களும் நானே! எல்லா இறைவன் இறைவி பெயரும் எனதே! நானே நல்லவற்றின் அதன் நன்மையின் சிறந்த உதாரணம்! சத் சித் ஆனந்த வடிவம் நானே! நானே சத்யம் சிவம் சுந்தரமும்...!" என பாபா பிரகடனப்படுத்தியவை எவ்வளவு சத்தியம் என மகான்கள் பகிர்கையிலே நம்மால் அணு அணுவாக உணர்ந்து கொள்ள முடிகிறது!


(Proof : Sri SathyaSai and Yogis / Page no: 68 / Author : Jantyala Suman babu / Translation : pidatala Gopi Krishna/ in tamil : Kavingar VairaBharathi )


மனிதர்கள் சாப்பிடும் மாத்திரைகளின் சேர்மானத்தை மருந்து தயாரிப்பவர்களாலேயே தெளிவாக சொல்ல முடியும்! அப்படியே பாபா தன்னைப் பற்றி பிரகடனப்படுத்தி நம்மை உணர வைப்பது.. மருந்தைப் பற்றி மருத்துவர்கள் தெரிவிப்பார்கள்.. அப்படியே மகான்கள் பாபாவை பற்றி தெரிவிப்பது..‌ மருந்தைப் பற்றி மருந்துக் கடைக்காரரும் தெரிவிப்பார் அப்படியே துறவிகள் தெரிவிப்பது... ஆன்மீகத்தில் அந்த ஒரே மருந்து பரப்பிரம்மமே... அது கலியில் மூன்று வடிவம் எடுத்திருக்கிறது! அந்த மூன்று மருந்துகளுமே ஒரே வேலையைத்தான் செய்கிறது... அதுவே அறியாமை எனும் நோயை அழித்து ஞான ஆரோக்கியம் தருவது!


பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக