பாபா பக்தர்களுக்கு "சத்தியம் சிவம் சுந்தரமே" வால்மீகி ராமாயணம்... பாபா சரிதத்தின் மூல நூல்.. அதை பீடமாக வைத்தே பாபாவின் பிற சரித நூல்கள் எழுந்தன... அத்தகைய ஆழந்தகன்று 7 பாகங்களாக விரிந்த தெய்வத்திரு நூலை முதன்முதலாக எழுதும் பேறு பெற்ற சேவைத் திலகம் ஸ்ரீ கஸ்தூரி.. அத்திருநூல் தோன்றிய வரலாறு இதோ...
முதல் 16 வருடங்கள் பால லீலைகள்.. இரண்டாம் 16 வருடங்கள் மகிமா லீலைகள் என தன் அவதாரத்தை வகுத்த பாபா... 1953ல் தனது முதல் ஞானப் பொழிவை மேடையில் பொழிந்தார்! அதில் நான்கு வேதங்களே எளிமையாக நாம் உணர்ந்து கொள்ளும் வகையில் அடங்கி இருக்கின்றன... புரியாத வேதாந்தங்களை எல்லாம் மிக எதார்த்த வாழ்வியல் உதாரணங்களோடு இணைத்து பாபா வழங்குவதில் அதை விழிப்புணர்வோடு கிரகிப்பவர்களுக்கு ஞான வாழ்க்கை எளிதில் நிகழ்ந்துவிடுகிறது!
1958ல் சனாதன சாரதி எனும் பாபா பத்திரிகையின் முதல் நூல் வெளிவருகிறது... கிழக்கிலிருந்து ஒளி வருவது போல்.. கூண்டிலிருந்து கிளி வருவதைப் போல் சனாதன சாரதி வெளி வருகிறது... அதில் பாபா மாதந்தோறும் வாஹினி'களை எழுத ஆரம்பிக்கிறார்... ஹிந்தி , சிந்தி, மராத்தி, நேபாளி, ஒரியா, அஸாமி, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு , ஆங்கிலம் என பிரம்மாண்டச் சிறகுகளை சனாதன சாரதி விரித்த சமயம்...
ஒரு நாள் மதியம் பத்திரிகை அடிக்கும் பிரஸ் வராந்தாவில் ஒருவர் வந்து "சுவாமியை பற்றிய பிரசுரம் அல்லது புத்தகம் ஏதாவது இருக்கிறதா?" எனக் கேட்கிறார்!
அதற்கு சேவைத் திலகம் கஸ்தூரியோ "இல்லை! சனாதன சாரதி எனும் சுவாமியின் பத்திரிகையே இருக்கிறது!" என்கிறார்.. அதைக் கேட்டவுடன் பாபாவை பற்றி தெரிந்து கொள்ள வந்த அந்த நபர் ஏமாற்றத்தோடு வெளியே செல்கிறார்! இந்த சம்பவத்தை எட்ட இருந்து கவனித்த பாபா சேவைத் திலகம் அருகே வந்து "அவர் என்ன கேட்டார்?" எனக் கேட்கிறார்...!
"உங்களைப் பற்றிய புத்தகம் ஏதேனும் இருக்கிறதா என கேட்டார் சுவாமி!" என்கிறார்!
"சரி! அதற்கு நீ என்ன சொன்னாய்?" எனக் கேட்கிறார் அனைத்தும் அறிந்த இறைவன் பாபா!
"புத்தகங்கள் இல்லை... சனாதன சாரதி மட்டுமே இருக்கிறேன் என்றேன் சுவாமி" என்கிறார் சேவைத் திலகம்!
"இல்லை அது சரியான பதில் இல்லை... சுவாமியை வெறும் புத்தகங்களில் இருந்து நாம் உணர்ந்து கொள்ள முடியாது என்று தான் நீ பதில் சொல்லி இருக்க வேண்டும்!" என்கிறார் சுவாமி..
சர்வ சத்தியமான வாசகம்... ஸ்ரீ சத்ய சாயி வாசகம்! திலகம் மௌனமானாய் பிரபஞ்ச நெற்றியோ மெதுவாக நகர்கிறது.. ஆழ்ந்து யோசிக்கலானார் சேவைத் திலகம்!
இதற்குப் பின்னர் பாபா சென்னையிலும் வேங்கடகிரியிலும் சில நாட்கள் தங்கி இருந்து மீண்டும் பர்த்தி வருகிறார்...ஒரு வியாழக்கிழமை பர்த்தியில் திடீரென பாபா சேவைத் திலகம் ஸ்ரீ கஸ்தூரியை அழைக்கிறார்...
"சென்னையிலும் வேங்கடகிரியிலும் சுவாமியை பற்றி ஏதேனும் பிரசுரங்கள் உள்ளனவா? என பேரார்வமுடன் கேட்கிறார்கள்... நீ என்ன தான் செய்து கொண்டிருக்கிறாய்?" எனக் கேட்டுவிட்டு... தன்னைப் பற்றிய நூல் வெளிவரும் வேளை வந்துவிட்டதென அறிவித்துவிட்டு... "நீயே அந்த சேவையைச் செய்!" என ஆச்சர்யப் பூச்சொரிந்தார் சேவைத் திலகத்தின் இதயத்தின் மேல்... அதற்குப் பிறகு நிகழ்ந்ததெல்லாம் இதிகாசம்... ஸ்ரீமான் கஸ்தூரியின் பிரம்மாண்ட உழைப்பும் பாபாவின் பேரற்புத கருணையுமே "சத்தியம் சிவம் சுந்தரம்!"..அது பலரை பாபாவின் காலடியில் விழ வைத்தது.. விழுந்து அழ வைத்தது.. அழுது தொழ வைத்தது.. தொழுது வாழ்வில் கடைத்தேற வைத்த உலகிலேயே ஒப்புயர்வற்ற ஒரே திருநூல் அது! அதற்குப் பெயர் வைத்ததும் பாபாவே! இல்லை எனில் இப்படியொரு பெயரை எல்லாம் மனிதரால் சூட்டவே முடியாது! மனித சிந்தனைகளை கடந்தது இறைவன் பாபாவின் சங்கல்பம்!
இதன் முதல் பாகம் 1960'களிலும் இரண்டாம் பாகம் 68'லும் , மூன்றாம் பாகம் 74'லும் நான்காம் பாகம் 80'லும் சேவைத் திலகம் எழுதி வெளியாகிறது! தொடர்ந்து இதனை திரு நரசிம்ம மூர்த்தி சாயிராமை பாபா எழுதச் சொல்லி ஏழு பாகங்களாக பூர்த்தியாகிறது!
பாபா எனும் பாற்கடலை ஒரு துளி உணர்வதற்கான ஏழு தேக்கரண்டிகளே இந்த ஏழு பாகங்களும்...!
(ஆதாரம் : அற்புத அவதாரம் ஸ்ரீ சத்ய சாயி பாபா / பக்கம் : 105 / ஆசிரியர் : க.நாகராஜன்)
வாசிப்பது குறைந்து போன இந்த காணொளி காலத்தில் வாசிப்பதும் தவம் எனும் உண்மையை நாம் உணர வேண்டி இருக்கிறது! டன் கணக்கான பஞ்சு மூட்டையை எரிக்க ஒரு மரத்தையே யாரும் எரிப்பதில்லை.. சிறு தீக்குச்சியே போதுமானது... அதுபோல் சிறிது ஞான புத்தக வாசிப்பே நம்மை அறியாமையிலிருந்து விலக்குவதற்கு பெரியதொரு ஏணியாக... தோணியாகப் பயன்படுகிறது...ஞானிகளின் வாழ்க்கை நமக்கு ஞான வாழ்க்கை வாழ உத்வேகம் அளிக்கிறது... இறைவன் பாபாவின் சரித இதிகாசம் வாசிப்பதோ நமக்கு அவர் மேலான பக்தியை ஒரு மடங்கு உயர்த்தும் என்பதில் சந்தேகமே இல்லை!
பக்தியுடன்
வைரபாரதி
ஓம் சாய்ராம்
பதிலளிநீக்கு